என் மலர்
தர்மபுரி
- தருமபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறிகள் ரூ.15.54 லட்சத்துக்கு விற்பனை ஆனாது.
- 2000 பேர் வாங்கி சென்றனர்
தருமபுரி மாவட்டத்தில் உழவுத் தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகி றது. மாவட்டத்தில் கத்தரி, வெண்டை, அவரை, பூசணி, வெள்ளை பூசணி, முருங்கைக்காய், முள்ளங்கி, கோவைக்காய்,கேரட் பீன்ஸ், சுரைக்காய், புடலங் காய், பாகற்காய், கொத்த மல்லி இலை, புதினா, கருவேப்பிலை என அனைத்து வகை காய்கறிகள் மற்றும் பழ வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் தருமபுரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உழவர்கள் தினசரி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளுக்கும் தருமபுரி மாவட்ட வேளாண்துறை மூலம் காய்கறிகளை கொண்டு வந்து நேரடியாக நுகர்வோ ருக்கு விற்பனை செய்யப்ப டுகிறது.
தருமபுரி உழவர் சந்தையில் நாள் ஒன்றுக்கு 3 டன் முதல் 4 தன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. தினந்தோறும் 2000 க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். அந்த வகையில் பண்டிகை காலங்களில் கூடுதலாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இன்று புரட்டாசி மூன்றா வது சனிக்கிழமை என்ப தால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் பெருமா ளுக்கு உண்டியல் வைத்து படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று தருமபுரி உழவர் சந்தைக்கு ஏரளமா ன மக்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனர். இதில் 47 ஆயிரத்து 727 கிலோ காய்கறிகள் ரூ. 15, லட்சத்து 54 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள தாக வேளாண் துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.
- ஊத்தங்கரை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.
- அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம். ஊத்தங்கரை அருகே உள்ள வெங்கட தன்பட்டியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் சபரிநாதன் (வயது28). அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பரிட்சித்த ராஜன் (25). இருவரும் துணி வியாபாரம் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், பரிட்சித்த ராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து பரிட்சித்த ராஜன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். இதற்கு சபரிநாதன் அடைக்கலம் அளித்து உதவியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சபரிநாதன், பரிட்சித்த ராஜன் 2-பேர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அரூரில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் நனைபெற்றது.
- விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
பாப்பிரெட்டிபட்டி பகுதியில் வேளாண் நிலங்கள், வீட்டு மனைப் பட்டா உள்பட பல்வேறு வகையான நில அளவீடு செய்யக் கோரும் கோப்புகள் அதிகம் கிடப்பில் உள்ளன. எனவே, நில அளவீடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நில அளவீடு பணிகள் குறித்து அறிவிப்பு பலகையில் பட்டியல் வெளியிட வேண்டும். தக்காளி பழங்களை ரேஷன் கடைகள் வழியாக விற்பனை செய்ய வேண்டும்.
அரூரில் இருந்து காணாமல் போன மாவட்ட வன அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் திரும்ப செயல்பட வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியு றுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பெருமாள், துறை சார்ந்த அலுவலர்கள், முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், தருமபுரி சமூக சேவை மைய பணியாளர்கள் மற்றும் லயோலா சமூகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தருமபுரியில் போக்குவரத்து விதிகளை மீறும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- துண்டுப் பிரசுரங்களை வழங்கி எச்சரிக்கை விடுத்தனர்.
தருமபுரி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகிறது. இந்த ஆட்டோக்களை இயக்கும் டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறை களை மீறுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வருகிறது.
இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளு மாறு போக்குவரத்து போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் உத்தரவின் பேரில் தருமபுரியில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு நாகலிங்கம் அறிவு றுத்தலின்படி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி ஆலோசனையில் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சின்னசாமி, ரகுநாதன் மற்றும் போலீசார் தருமபுரி நகரில் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்ட னர்.
அப்போது போக்கு வரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆட்டோ டிரைவர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆட்டோ டிரைவர்கள் கண்டிப்பாக சீருடை அணிந்து வர வேண்டும்.
செல்போன் பேசிக்கொண்டும், ப்ளூடூத் காதில் அணிந்து கொண்டும் ஆட்டோ இயக்கக் கூடாது. தருமபுரி நகரில் பஸ் நிலையம் முன்பு மற்றும் ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் பயணிகளை ஏற்றக்கூடாது. டிரைவிங் லைசன்ஸ், ஆட்டோ பர்மிட், இன்சூரன்ஸ் மற்றும் புகைச்சான்று வைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஆட்டோக்களில் ஆடியோ பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட போக்கு வரத்து விதிமுறைகளை மீறும் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு நகரங்களிலும் இயங்கும் ஆட்டோ டிரைவர்களுக்கு அந்தந்த பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து போலீசார் விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி எச்சரிக்கை விடுத்தனர்.
- தப்பி ஓடிய மர்ம நபரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
- பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர்.
மொரப்பூர்:
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள ஆர்.கோபிநாதம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளிலும் மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோவில்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை பூட்டிய கோவிலுக்குள் இருந்து திடீரென்று சத்தம் வந்தது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கோவிலுக்கு சென்று பார்த்த போது மர்ம நபர்கள் 2 பேர் கோவிலுக்குள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடி சென்றனர்.
உடனே ஊர் பொது மக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
அப்போது கோட்டப்பட்டி அருகே உள்ள மலைத்தாங்கி பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 50) என்பவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
மேலும் அவருடன் வந்த மற்றொருவர் பணத்துடன் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஊர்பொதுமக்கள் மொரப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருடனை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலையில் கோவிலின் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் கணேசனும், அவரது கூட்டாளியும் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடியுள்ளனர்.
மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை சேதப்படுத்தியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் அங்குள்ள பள்ளியறையில் பூட்டை உடைத்து பொருட்களை திருட முயன்றுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கோவிலுக்குள் தங்க நகைகள் மற்றும் எவ்வளவு ரொக்கம் திருட்டுப் போய் உள்ளது? எனவும் வேறு ஏதேனும் பொருட்கள் திருடு போய் உள்ளதா? எனவும் போலீசார் பிடிப்பட்ட கணேசனி்டம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மர்ம நபரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதே கோவில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு இதேபோல் கொள்ளை முயற்சி திருடர்கள் ஈடுபட்டு உள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் காட்டு தீ போல பரவியதை அடுத்து இதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- 45 அடி ஆழ விவசாய கிணற்றின் வழியாக வந்தவர் கால் தவறி கிணற்றிற்கு உள்ளே விழுந்தார்.
- தீயணைப்பு துறையினர் வருவதற்க்குள் முதியவர் நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தெல்லனஅள்ளி கிராமத்தில் வசித்து வந்த விவசாயி சின்னசாமி (வயது.75) .
முதியவரான இவர் சம்பவத்தன்று மாலை அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்க்கு நடந்து வந்து கொண்டிருந்தர், வீட்டின் அருகே உள்ள நைனா கவுண்டர் என்பவரின் 45 அடி ஆழ விவசாய கிணற்றின் வழியாக வந்தவர் கால் தவறி கிணற்றிற்கு உள்ளே விழுந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாலக்கோடு தீயனணப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்க்குள் முதியவர் நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார்.
இறந்த முதியவரின் சடலத்தை மீட்ட தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோத–னைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தருமபுரியில் உரிமைத் தொகை பெற்ற மகளிருக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து மடல் அனுப்பும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.
- வருவாய்த்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் 15 ந்தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் உள்ள மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு மூன்று லட்சத்து 92 ஆயிரம் மனுக்கள் மகளிரிடத்தில் பெறப்பட்டது. இதில் தகுதி உள்ளவருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை பெற்ற மகளிருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து கடிதம் அவர்களது முகவரிக்கு அனுப்புவதாக அறிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள மகளிருக்கு முதலமைச்சர் கையொப்பமிட்ட வாழ்த்து மடல் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறையைச் சார்ந்த கிராம நிர்வாக உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மகளிருக்கு வாழ்த்து மடல் அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மகளிர் உரிமை தொகை பெற்றவர்களுக்கான வாழ்த்து மடல், தபால் மூலமாக அவர்களது முகவரிக்கு வீடுகளுக்கே அனுப்பும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.
- தருமபுரி அருகே சாலையின் இருபுறங்களிலும் வளர்ந்துள்ள முட்புதர்களால் விபத்துகள் நடந்து வருகிறது.
- வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் உள்ளது நாகாவதி அணையை அடுத்த ஏர்ரப்பட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு சாலை நல்லம்பள்ளி, கெங்க லாபுரம், ஏலகிரி வழியாக வனப்பகுதிக்கு இடையில் செல்கிறது. மேலும் இந்த சாலை எர்ரப்பட்டி அடுத்த அரகாசனைஅள்ளி, சின்னம்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று பென்னாகரம்-மேச்சேரி சாலையில் இணைகிறது. நாள்தோறும் அரசு பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என்று இச்சாலையின் வழியாக சென்று வருகிறது. இந்நிலையில் ஏலகிரியை அடுத்த எள்ளுகுழி என்னும் பகுதியில் வனப்பகுதியில் செல்லும் இச்சாலையின் இரு புறங்களிலும் முட்புதர்கள் வளர்ந்து போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
பஸ் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் இச்சாலையில் செல்லும் போது, இருசக்கர வாகனங்க ளில் செல்வோர் சாலை ஓரம் செல்ல முடியாமல் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்புகள் வரை நடைபெற்று வருகிறது. வனப்பகுதியில் இந்த சாலை உள்ளதால் வனத்துறையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தும், இதுவரை எழுத நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
ரோட்டில் இரு புறங்களிலும் முப்புதர்கள் உயர்ந்து வளர்ந்திருப்பதால் நாள் தோறும் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. மேலும் விலங்குகள் குறித்த அச்சம் நிலவுகிறது. சிறுத்தை, கரடி போன்றவை புதரில் பதுங்கி இருந்து தாக்க கூடும் என்று அந்த வழியாக செல்பவர்கள் அஞ்சுகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற குழந்தை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இப்பகுதியில் விபத்துக்கள் தொடர்கதையாகி வருகிறது. இனியாவது மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இந்த முட்புதர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர். கிராமப் பகுதிகளுக்கு தரமான சாலைகள் அமைத்தும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. தருமபுரி மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இனியாவது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாரண்டஅள்ளி பகுதியில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.
- 2 உணவகங்களுக்கும் தலா ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக உணவு பாதுகாப்பு துறையினர் சைவம், அசைவ, துரித உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் கிரில்டு சிக்கன், தந்தூரி சிக்கன், இறைச்சி மற்றும் சமையல் எண்ணெய், சட்டினி, மோர் உள்ளிட்டவை தரமாக உள்ளதா என ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் மேற்பார்வையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு ஒன்றியத்துக்குட்பட்ட மாரண்டஅள்ளி மற்றும் வெள்ளி சந்தை பகுதிகளில் உள்ள சைவ, அசைவ உணவகங்கள் மற்றும் துரித உணவு கடைகளில் திடீர் ஆய்வு செய்தார்.
ஆய்வில் ஒரு உணவகத்தில் சமைத்த சாதம் குளிர்பதன பெட்டியில் ஒரு சில்வர் வாளியில் வைத்திருந்தது கண்டு அவர்களை எச்சரித்து அப்புறப்படுத்தினார். மேலும் ஒரு உணவகத்தில் செயற்கை நிறம் ஏற்றப்பட்ட இறைச்சி, தரம் குறைவான மோர் பறிமுதல் செய்து அழிக்கப் பட்டது. 2 உணவகங்களுக்கும் தலா ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உரிமம் பெறாத இரண்டு புதிய உணவகங்களுக்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய நோட்டீஸ் வழங்கினார். ஒருமுறை பயன்படுத்தி மீதமாகும் எண்ணெயை உணவு பாதுகாப்புத்துறை அங்கீகாரம் பெற்ற, மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்திய சமையல் எண்ணெய் ரூகோ டீலரிடம் அளித்து உரிய தொகை பெற்றுக் கொள்ள விழிப்புணர்வு செய்தார்.
உணவகங்களில் சுத்தம், சுகாதாரம் கடைபிடிக்கவும் உணவு கையாளும் பணியாளர்கள் தன் சுத்தம் மற்றும் உரிய உடைகள், உரைகள் அணிந்திருத்தல் வேண்டும். உணவகங்களில் ஈக்கள், பூச்சிகள், எலிகள் வராமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் மற்றும் சமைத்த உணவுகள் மூடிய நிலையில் பராமரிக்கவும், தேவையற்ற செயற்கை நிறமூட்டிகள் சேர்ப்பதோ நாள் பட்ட இறைச்சி பயன்படுத்துவது தவிர்த்தல் அவசியம் எனவும் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றவும் தவறும் பட்சத்தில் சட்ட விதிகள் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. ஆய்வில் பெட்டி கடைகள் மற்றும் பலகார கடைகளிலும் ஆய்வு செய்தார்.
பலகார கடைகளில் அச்சிடப்பட்ட காகிதங்களில் எண்ணெய் பலகாரங்களை காட்சிப்படுத்துவதோ, விநியோகப்பதோ, பொட்டலமிடுதலோ கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கண்டறியப்பட்டால் உடனடி அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்.
- தருமபுரி உழவர் சந்தையில் வேளாண் துணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
- சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
தருமபுரி உழவர் சந்தைக்கு தினமும் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 100-க்கும் மேற்பட்ட விவசாயத்தில் வந்து செல்கின்றனர்.
இந்த உழவர் சந்தையில் பொதுமக்களின் செல்போன்கள் தொடர்ந்து திருட்டுப் போய் வந்தது.
இதனால் உழவர் சந்தை வளாகத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் வேளாண் விற்பனை வணிகத்துறை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் தருமபுரி உழவர் சந்தையில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களின் வசதிக்காக அமைக் கப்பட்டுள்ள சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் நிலையம், கழிப்பறைகள் மற்றும் உழவர் சந்தையில் உள்ள கடைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகள் வைத்திருக்கும் கம்ப்யூட்டர் தராசை ஆய்வு செய்த அவர் மாலை நேரத்தில் விற்பனை செய்யப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானிய உணவு வகைகளையும் பார்வையிட்டார்.
மேலும் மாலை நேரத்தில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் தரமானதாக உள்ளதா? என்பதையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் நிர்வாக அலு வலகத்தில் பதிவேடுகளை பார்வையிட்ட அவர் தருமபுரி உழவர் சந்தை யில் செல்போன் திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்களை கட்டுப்படுத்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி நிர்வாக அலுவலர் மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
- தருமபுரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் நடந்தன.
- அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 865 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டிகளை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கி ஒலிம்பிக் சுடர் ஏற்றியும், வண்ண வண்ண பலூன்கள் பறக்க விட்டும் போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சரக அளவில் போட்டியிடும் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலு வலர் மான்விழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, செல்வ மாளிகை நிர்வாகி மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் வரவேற்பு பேசினார்.
விழாவில் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓய்வு பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாக பணி புரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் நேதாஜி நன்றி கூறினார்.
865 மாணவ மாணவிகள்
வருவாய் மாவட்ட அளவில் ஓட்டம், தடை தாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு ஏறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் சரக அளவில் நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 80-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 865 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 2-வது நாளாக இன்று தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவி–களுக்கு இன்று மாலை பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடக்கிறது.
- ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் இரண்டு பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்படவுள்ளது.
- நேரடியாக ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களிடையே உடற் தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து வருகிற 7-ந் தேதி அன்று தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மாவட்டப் பிரிவு மூலமாக மாரத்தான் போட்டி தருமபுரி அரசுகலைக் கல்லூரியில் தொடங்கப்பட உள்ளது.
இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் இரண்டு பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்படவுள்ளது.
17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு அரசுகலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, தேவரசம்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு அரசுகலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டு, அதியமான் கோட்டம் வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும், 17 வயதுமுதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அரசு கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டு, ஒட்டப்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக் கல்லூரிக்கு வந்தடையுமாறும் மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது.
போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களது வயது சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரி (ஆதார்) சான்றிதழ்களை நாளை (6-ந் தேதி) மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, 2-ம் பரிசாக ரூ.3000, 3-ம் பரிசாக ரூ.2000, 4 முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலாரூ.1000, மற்றும் தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் எதிர்பாராமல் நேரும் விபத்துகளுக்கும், தனிப்பட்ட இழப்புகளுக்கும் பங்கு பெறும் பயனாளிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்.
எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியில் பங்கேற்று தங்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






