என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியில் 106 அடி நீர்மட்டம் எட்டி உள்ளது.
    • மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.

    தருமபுரி:

    கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளவான 84 அடியில் 83.43 அடி வரை நீர் நிரம்பி உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியில் 106 அடி நீர்மட்டம் எட்டி உள்ளது.

    கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 556 கன அடி உபரி நீர் என 2 அணைகளில் இருந்து மொத்தம் 25 ஆயிரத்து 556 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் நேற்று மாலை நேரத்தில் இருந்து கர்நாடகா- தமிழக எல்லையான பிலிக்குண்டுலு பகுதிக்கு வரத் தொடங்கியது.


    இதனைத்தொடர்ந்து பிலிக்குண்டுலு பகுதி வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக வந்த கொண்டிருந்தது.

    இந்த நிலையில் கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டதால் ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து இன்று காலை படிப்படியாக மேலும் அதிகரித்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்ட இந்நிலையில் இன்று நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடி அளவில் அதிக ரித்து வந்து கொண்டிருப்பதால், அருவிகளிலும் மற்றும் ஆற்றுப்பகுதியிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்லு முடியாமல், அருவிகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

    கர்நாடகா அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், காவிரி ஆற்றிற்கு வரும் நீர் வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • தருமபுரி சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவக்குமார் பணியிட மாற்றம்.
    • காரிமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகம் பணியிட மாற்றம்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தாராக பணியாற்றி வந்த சரவணன், தருமபுரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், தருமபுரியில் தாசில்தார் ஜெய செல்வன் பாப்பிரெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சண்முக சுந்தரம் தருமபுரி தாசில்தாராகவும், தருமபுரி சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவக்குமார், நல்லம்பள்ளி தாசில்தாராகவும், தருமபுரி ஆலய நிலங்கள் தனி தாசில்தார் லட்சுமி பென்னாகரம் தாசில்தாராகவும்,

    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணியாற்றி வந்த ரஜினி பாலக்கோடு தாசில்தாராகவும், காரிமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோவிந்தராஜ் காரிமங்கலம் தாசில்தாராகவும், தருமபுரி ஆதிதிராவிட நல தனி தாசில்தாராக வள்ளி பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தாராகவும், நல்லம்பள்ளி தாசில்தார் பார்வதி, தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தில் தனி தாசில்தராகவும், பென்னாகரம் தாசில்தார் சுகுமார் , காரிமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகம்,

    பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், காரிமங்கலம் தாசில்தார் ரமேஷ் தருமபுரி ஆதிதிராவிட நல தனித் தாசில்தாராகவும், பாப்பிரெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மில்லர் , தருமபுரி தனி தாசில்தாராகவும் அங்கு பணியாற்றி வந்த பிரசன்ன மூர்த்தி, தருமபுரி ஆலய நிலங்கள் தனி தாசில்தாராகவும் பணியிடமாற்றம்செய்து இவர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.
    • ஒகேனக்கல்லுக்கு நாளை வந்தடையும் என்பதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    தருமபுரி:

    தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான வயநாடு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    இந்த நிலையில் கிருஷ்ணராஜ சாகர், கபினி இரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 20 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை அதே அளவில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நீரானது ஒகேனக்கல்லுக்கு நாளை வந்தடையும் என்பதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • 2 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஓசூர்:

    ஓசூர் பாகலூர் சாலையில சமத்துபுரம் பகுதியில் ஆர்.டி.ஓ சோதனை சாவடி உள்ளது. தமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக கர்நாடகா மற்றும் ஆந்திர உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கும் அதேபோல வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் வாகனங்களுக்கும் இந்த சோதனை சாவடியில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆர்டிஓ சோதனை சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டிஎஸ்பி வடிவேல் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.


    இன்று காலை 6 மணி முதல் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இச்சோதனையில் அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்த கணக்கில் வராத, 2 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழா நடைபெற்றது.
    • பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.7.2024) தருமபுரி, பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மகளிர் விடியல் பயணத் திட்டப் பயன்பாட்டிற்காக 20 புதிய நகரப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • “அரூர் பேரூராட்சி”, “நகராட்சியாக” தரம் உயர்த்தப்படும்.
    • பஞ்சப்பள்ளி, ராஜ பாளையம் அணைக்கட்டுகள் புனரமைக்கப்படும்.

    சென்னை:

    தருமபுரி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 15 புதிய அறிவிப்புகள்.

    1. 51 கோடி ரூபாய் செலவில் அரூர் அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

    2. தருமபுரி வெண்ணம் பட்டி சாலையில், புதிய ரெயில் மேம்பாலம் 38 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    3. "அரூர் பேரூராட்சி", "நகராட்சியாக" தரம் உயர்த்தப்படும்.

    4. பஞ்சப்பள்ளி, ராஜ பாளையம் அணைக்கட்டுகள் புனரமைக்கப்படும்.

    5. சிட்லிங், அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் ராகி, சாமை, வரகு ஆகியவற்றை மதிப்புக் கூட்டுப் பொருளாக்க கிடங்கு மற்றும் பொதுச் செயலாக்க மையம் அமைக்கப்படும்.

    6. தீர்த்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும்.

    7. பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பழுதடைந்த 4 வகுப்பறைகள், புதுப்பிக்கப்படும்.

    8. பெரியபட்டி வெள்ளாளப்பட்டி ஊராட்சிகளில், 2.54 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அரூர் ஒன்றியத்தில் சிட்லிங் கிராமம், அம்மாப்பேட்டை, மருதிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 3.82 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சமுதாயக் கூடங்கள் கட்டப்படும்.

    9. மொரப்பூர் மற்றும் அரூர் பகுதிகளில் 7 குழந்தைகள் மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

    10. இருமத்தூர் தென் பெண்ணை ஆறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு அருகில் புதியதாக திறந்த வெளி கிணறு அமைத்து, நீரேற்று குழாய் அமைக்கப்படும். மேலும் பேருந்து நிலையம் அருகில், கூடுதலாக 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி, 4.1 கி.மீ நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய் அமைத்து, 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இக்குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படும்.

    11. அரூர் ஊராட்சி ஒன்றியம், பறையப்பட்டி புதூர் முதல் பறையப்பட்டி காலனி வரை, கணபதிப்பட்டி தார்சாலை மற்றும் வீரப்பநாயக்கன் பட்டி தார்ச் சாலைப் பணிகள் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், போளையம்பள்ளி முதல் கோபிநாதம்பட்டி செல்லும் தார்ச் சாலை ஆகியவை 60 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் புதுப்பிக்கப்படும்.

    12. கெளாப்பறை ஆதிதிராவிடர் காலனி மயானம் செல்லும் சாலையில், வரட்டாறு ஓடையின் குறுக்கே பாலம் கட்டப்படும்.

    13. சிட்லிங் ஊராட்சி, நாட்டான்வளவு முதல் கம்பாளை சாலைக்கு இடையே, காட்டாற்று ஓடையின் குறுக்கே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்படும்.

    14. பறையப் பட்டி புதூர் ஊராட்சி ஜி.கே.ரோடு கிராமத்தில் ஒரு புதிய 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், இருமத்தூர் ஊராட்சி, போளையம்பள்ளி ஊராட்சி, மொரப்பூர் ஊராட்சிகளில் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் கட்டப்படும்.

    15. பாளையம்புதூர் ஊராட்சியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோம்பை, மூலக்கோம்பை, ராஜீவ்காந்தி நகர் மற்றும் நாயக்கனேரி பகுதிகளில் இணைப்புச் சாலைகளைப் புதுப்பிக்கவும், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேர்ச்சாலை மற்றும் மூலக்கம்பை கிராமச் சாலைகளை சிமெண்ட் சாலைகளாக மாற்றவும்; தொம்பரகாம்பட்டி மேற்கு வன்னியர்தெருவில்

    10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்துளைக்கிணறு மற்றும் மின்மோட்டார் ஆகியவை அமைக்கவும் ஆக மொத்தம் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்குறிப்பிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

    • மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
    • மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள். இதுதான் எங்களுடைய வெற்றியின் ரகசியம்.

    தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் ஊராட்சி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களை நான் நேரடியாக சந்தித்தேன். அந்த நிகழ்ச்சிக்கு 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்று பெயர் வைத்தோம். கொளத்தூர் மட்டுமல்ல, அதாவது என்னுடைய தொகுதி கொளத்தூர் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தொகுதிகளும் என்னுடைய தொகுதிகள் தான் என்ற எண்ணத்துடன் அந்த பயணத்தை தொடங்கினேன். மேடையில் எனக்கு அருகில் ஒரு பெரிய பெட்டி வைத்து, அதில், பொதுமக்கள் தங்களுடைய தொகுதிக்கான தேவைகளை, கோரிக்கைகளை எழுதி போட வைத்தோம்.

    ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் அதில் சாத்தியமாக இருக்கக்கூடிய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி காட்டுவேன் என்று சொன்னேன்.

    ஆட்சிக்கு வந்ததும், உங்களுடைய மனுக்களை கவனிப்பதற்காகவே புதியதாக ஒரு துறையை உருவாக்கினேன். அந்த துறையின் பெயர் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்னிடம் கொடுக்கப்பட்ட மனுக்களை துறைவாரியாக பிரித்தோம். அதிலிருந்து, நடைமுறை சாத்தியம் உள்ள 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டோம். மக்கள் வைத்த கோரிக்கைகளில் சாத்தியம் உள்ள அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தலுக்கு முன்னால் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டவுடன், எங்களுடைய கடமை முடிந்துவிட்டது என்று நாங்கள் நினைக்கவில்லை. இனிமேல்தான், கடமை தொடங்குகிறது என்று நினைத்து, உழைப்பைக் கொடுத்தோம். அதனால்தான், தொடர்ந்து மனுக்களை பெற்றோம். அதை முறைப்படுத்தினோம். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, "முதல்வரின் முகவரி" என்று புதியதாக ஒரு துறையை உருவாக்கினோம்.

    மக்களால் தரப்படும் எல்லா மனுக்களையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்தோம். அனைத்து மக்களின் கோரிக்கைகளும் தலைமைச் செயலகத்திற்கு வந்துவிடுகிறது.

    நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், முதல்வரின் முகவரி துறையின்கீழ் தற்போது வரைக்கும் பெறப்பட்ட, 68 லட்சத்து 30 ஆயிரத்து 281 மனுக்களில் 66 லட்சத்து 25 ஆயிரத்து 304 மனுக்களுக்கு உரிய முறையில் தீர்வு கண்டிருக்கிறோம். அதிலும், இந்த தருமபுரி மாவட்டத்தில் மட்டும், 72 ஆயிரத்து 438 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

    30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் உருவானதுதான் இந்த மக்களுடன் முதல்வர் திட்டம்.

    முதற்கட்டமாக, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியிருக்கும் கிராம ஊராட்சிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்கள் வாயிலாகப் பெறப்பட்ட சுமார் 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்களுக்கு இதுவரைக்கும் தீர்வு கண்டிருக்கிறோம். இந்த தருமபுரி மாவட்டத்தில் நகரப் பகுதிகளில், 3 ஆயிரத்து 107 மனுக்கள் பெறப்பட்டு, 30 நாட்களில் 1,868 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

    ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

    எடுத்துக்காட்டாக, உங்களிடம் ஒன்றிரண்டு கடிதத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூரணி என்பவர், தன்னுடைய வீட்டு வாசல் முன்பு கழிவுநீர் தேங்குவது தொடர்பாக எழுதியிருந்த மனுவுக்கு, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் தீர்வு கண்டோம். அதற்கு நன்றி தெரிவித்து அவர்கள் எழுதிய கடிதத்தில், என்ன சொல்லியிருந்தார்கள் என்றால், இதய நோயாளியான அவர்களுக்கு தேவையான மருந்துகள், அரசு மருத்துவமனையிலேயே கிடைத்து விடுவதாகவும், ஆனால், ஒரே ஒரு மாத்திரையை மட்டும் வெளியே வாங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் சொல்லியிருந்தார். அந்த மாத்திரையின் விலை, ஒரு அட்டை 215 ரூபாய். ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரை என்று, ஒரு மாதத்திற்கு 60 மாத்திரை சாப்பிடவேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் இதற்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும், கடந்த எட்டு மாதமாக, இந்தத் தொகையில்தான் மருந்து வாங்குவதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் சொல்லியிருந்தார்.

    அடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீனி வேதமுத்து என்பவர் எழுதிய கடிதத்தில், கடந்த இருபது ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் இருந்த கைலாசபுரம் செட்டியூரனி சாலையை சீரமைத்து கொடுத்ததற்கு நன்றி சொல்லியிருந்தார்.

    பொதுமக்களின் தனிப்பட்ட கோரிக்கைகளையும் கேட்டு, செயல்படுத்தி கொடுப்பது மூலமாக, எல்லோரும் மனநிறைவு அடையும் ஆட்சியாக நம்முடைய கழக அரசு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கும், ஏதாவது ஒரு பயன்கிடைக்க அதில் அவர்கள் பயனடைந்து கொண்டு வருகிறார்கள். அதேபோன்று 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூலமாக 'யாருக்கும் எந்தக் குறையும் இல்லை' என்ற நிலையை உருவாக்க நாங்கள் இப்போது பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

    இப்படி மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அதனால்தான், அவதூறுகள் பொய்ப் பிரச்சாரங்கள் மூலமாக இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள். வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம். ஆனால், இதே பெருந்தன்மையை மற்றவர்களிடம் பார்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் தொடர் தோல்வி, படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து மத்திய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் மெட்ரோ ரெயில் போன்ற திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை. நல்ல குணமில்லை. பாடம் கற்றுக்கொள்வதற்கு நினைப்பும் இல்லை. தங்களின் பத்து வருட காலத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய திட்டமும் செய்யவில்லை.

    ஒன்றிய அரசு என்பது, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என்பதை இனியாவது அவர்கள் உணர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்

    தி.மு.க.வைப் பொருத்தவரைக்கும் நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள். இதுதான் எங்களுடைய வெற்றியின் ரகசியம். இதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ரகசியம். மக்களுக்கு உண்மையாக இருந்து, உண்மையான வளர்ச்சியை உருவாக்குவோம். இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டை உன்னதமான சிறந்த மாநிலமாக உருவாக்கிக் காட்டுவோம்,

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • எங்களை கேலி செய்த எதிர்க்கட்சியினர் முன்னிலையில் எங்களுக்கு வெற்றி தந்தீர்கள்.
    • தனித்துறையை உருவாக்கி மக்களின் கோரிக்கையில் சாத்தியமுள்ள அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூரில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான விழா தர்மபுரி நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் புதூர் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    * ஆட்சிக்கு வந்தவுடன் துறைவாரியாக மனுக்கள் பிரிக்கப்பட்டு 2.29 லட்சம் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    * கொளத்தூர் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து தொகுதியும் என்னுடையது என்ற நோக்கில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம்.

    * புகார் பெட்டியில் பெற்ற மனுக்களுக்கு ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்கு தீர்வு காணப்படும் என கூறினேன்.

    * எங்களை கேலி செய்த எதிர்க்கட்சியினர் முன்னிலையில் எங்களுக்கு வெற்றி தந்தீர்கள்.

    * தனித்துறையை உருவாக்கி மக்களின் கோரிக்கையில் சாத்தியமுள்ள அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * ஆட்சிக்கு முன் மட்டுமல்ல, ஆட்சிக்கு பின்னரும் முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்டவை மூலம் மனு பெற்றோம்.

    * முதல்வரின் முகவரியின் கீழ் பெற்ற 68 லட்சம் மனுக்களில் 66 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    * மக்களின் கோரிக்கை எங்கள் பார்வையில் இருந்து தவறக்கூடாது என்று செயல்பட்டோம்.

    * தர்மபுரி மாவட்டத்தில் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன.

    * அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து மக்கள் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி வருகின்றனர்.

    * ஒவ்வொரு வீட்டிற்கும் ஏதாவது ஒரு அரசு திட்டம் பயன்படுகிறது.

    * ரூ.51 கோடி செலவில் அரூர் அரசு மருத்துவமனை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

    * தர்மபுரி வெண்ணம்பட்டி சாலையில், ரூ.38 கோடியில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

    * தீர்த்தமலையில் துணை விரிவாக்க வேளாண் மையம் அமைக்கப்படும்.

    * பாளையம்புதூர் அரசு பள்ளி வகுப்பறையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

    * பேரூராட்சியாக உள்ள அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    * மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தி தருகிறோம்.

    * மக்களுடன் முதல்வர்.. யாருக்கும் எந்த குறையும் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

    * தமிழ்நாட்டில் தொடர் தோல்வி அடைந்த பிறகும் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

    * 10 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.க தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் ஊரக பகுதிகளில் இந்த விரிவாக்கத் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
    • விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்றதால் அங்கு மட்டும் இந்த திட்டம் இன்று தொடங்கப்படவில்லை.

    தமிழ்நாட்டில் அன்றாடம் அரசுத் துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் எளிதாக சென்று சேருவதற்காக தீட்டப்பட்ட திட்டம் மக்களுடன் முதல்வர் திட்டமாகும்.

    இத்திட்டம் முதற்கட்டமாக நகரப் பகுதிகளில் அமல்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி மக்களுடன் முதல்வர் திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கொண்டு உள்ளூர் அளவிலேயே முகாம்களை நடத்தி அங்கு அளிக்கப்படும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தி 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்களுக்கு இதில் தீர்வு காணப்பட்டது. இதன்படி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு கிடைத்த தீர்வினால் மக்கள் பலர் திருப்தி அடைந்தனர்.

    வெற்றிகரமாக நகரப் பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டம் தற்போது ஊரக பகுதிகளிலும் விரிவுப்படுத்தப்படுகிறது.

    மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி மாவட்டம் சென்று தொடங்கி வைத்தார்.

    இதற்கான விழா தர்மபுரி நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் புதூர் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஊரக பகுதிகளில் இந்த விரிவாக்கத் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்றதால் அங்கு மட்டும் இந்த திட்டம் இன்று தொடங்கப்படவில்லை.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழாவில் பேசும் போது, இந்த திட்டத்தால் மக்கள் பயனடையும் விதம் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

    கிராமப்புற மக்கள் அதிகம் அணுகும் 15 அரசு துறைகள் அடையாளம் காணப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 முகாம்களை நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர் சாந்தி, எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • போலீசார் ராஜியை கைது செய்து அவரிடம் 5 லிட்டர் கள்ளசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் செம்மேடு காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிக்கு சென்றபோது சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகம்படும்படி கையில் வெள்ளை நிற கேனுடன் நின்று கொண்டிருந்தார். அவர் போலீசார் வருவதை கண்டதும் கேனை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார்.

    உடனே போலீசார் சுதாரித்து கொண்டு அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், பென்னாகரம் அருகே மஞ்சாரஅள்ளியை அடுத்த டி.சோளப்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜி (வயது51) என்பவர் 10 லிட்டர் கேனில் கள்ளச்சாரயம் விற்பனை செய்தது தெரியவந்தது.

    உடனே போலீசார் ராஜியை கைது செய்து அவரிடம் 5 லிட்டர் கள்ளசாராயத்தை பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே கீழே கொட்டி அழித்தனர்.

    • மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்த குறும்படமும் திரையிடப்படுகிறது.
    • பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் வழங்குகிறார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டத்தை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    நகரப்பகுதிகளில் இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினையடுத்து, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 12,500 ஊராட்சிகளில், 2500 முகாம்கள் மூலம் 15 அரசு துறைகளின் 44 சேவைகளுக்காக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது.

    இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திட தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (11-ந்தேதி) ஊரக பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் மாவட்டம், ஓமலூர் விமான நிலையத்திற்கு 10 மணிக்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் அவர் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழா, மனுக்கள் பெறுதல் மற்றும் துறை சார்ந்த அரங்குகளை பார்வையிடுகிறார்.

    இதை தொடர்ந்து 20 புதிய நகர பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் விழா மேடை வந்தடைகிறார்.

    இதனை அடுத்து கலெக்டர் சாந்தி வரவேற்புரையாற்றுகிறார்.

    காலை 11 மணிக்கு முதலமைச்சர், அமைச்சர்களுக்கு கலெக்டர் சாந்தி நினைவு பரிசுகளை வழங்குகிறார். விழா அரங்கில் திட்டப்பணிகளின் குறும்படம் திரையிடப்படுகிறது. தொடர்ந்து 11.10 மணிக்கு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார்.

    இதையடுத்து மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்த குறும்படமும் திரையிடப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11.20 மணிக்கு பேரூரை ஆற்றுகிறார். இதை தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் வழங்குகிறார்.

    முதலமைச்சர் வருகையையொட்டி சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் விமான நிலையத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் வரை சாலையில் வழிநெடுங்கிலும் தொண்டர்கள் தி.மு.க. கட்சி கொடியை கட்டி வருகின்றனர்.

    • முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் இன்று நேரில் ஆய்வு
    • புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி அன்று தருமபுரிக்கு வருகை தருகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாளையம் புதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் வருகிற 11-ந் தேதி காலை தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

    பாடு பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் இன்று ஆய்வு செய்தார்.

    ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெரும் துறைகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளையும், மேடை அமைய உள்ள இடத்தினையும், பயனாளிகளை அழைத்து வரும் வாகனங்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகளையும், பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் குறித்தும் அமைச்சர், துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் 3 முறை வருகை புரிந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தருமபுரி மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார்.

    குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் மற்றும் வத்தல்மலை மலை வாழ்மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான பஸ் வசதி, சாலை வசதி மற்றும் அரசு தலைமை மருத்துவ மனையில் கூடுதல் கட்டிடங்கள் என பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில் வருகிற 11-ந் தேதியன்று ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மக்களை நாடிச் செல்லும் தமிழக அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தருமபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த விழாவில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய பஸ்களை தொடங்கி வைத்தல், விவசாயிகள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×