என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • ஜம்போடு பகுதி வளைவில் ஓட்டு னரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத வித மாக பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
    • அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னா கரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

     பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே போடூர் போயர்தெரு பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்களை வேனில் ஏற்றி கொண்டு முதுகம்பட்டி பகுதியை நோக்கி சென்று கொண்டி ருந்தது. அப்போது ஜம்போடு பகுதி வளைவில் ஓட்டு னரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத வித மாக பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னா கரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
    • விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டி பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அரூர் சரக அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

    பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.

    விழாவிற்கு கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் மோகன்ராசு தலைமை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சாமிக்கண்ணு, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளி தாளாளர் சந்திரசேகர், மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் பொன் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் ஆனந்த் வரவேற்று பேசினார்.

    விழாவில் அரூர் சரக அளவில் நடைபெற்ற கபாடி, கோ கோ, எரிப்பந்து, கூடைப்பந்து, கேரம், இறகுப்பந்து உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பல்வேறு போட்டிகளில் மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

    விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டி பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.

    இவ்விழாவில் கொங்கு கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள் தமிழரசு, பரமசிவம், குணசீலன், நாகராஜ், ராமு, கணேசன், வெற்றிச்செல்வன், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மோகன்தாஸ், சி.பி.எஸ்.சி.பள்ளி முதல்வர் சர்மிளா தேவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரி யர் விக்னேஷ் நன்றி கூறினார்.

    • இதனை தட்டி கேட்ட வெங்கடேஷனை, ஆத்திர மடைந்த 7 பேரும் கத்தி, கட்டையால் தாக்கி யதில் பலத்த காயமடைந்தார்.
    • போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாைணை நடத்தி வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 58). விவசாயி.

    இவருக்கும் இவரது மாமியார் குப்பம்மாளின் தங்கை வாரிசுகளான குப்பன், மாதம்மாள் மற்றும் ஜெயராணி ஆகியோருக்கும், நிலம் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.

    இந்நிலையில் இவரது மாமியார் குடும்பத்தினர் வெங்கடேசனுக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு நிலத்தை விற்க விலை பேசி ஒப்பந்தம் செய்து, நிலத்தை சுவாதீனம் கொடுப்பதற்காக நேற்று செல்வம் (வயது42), குப்பம் மாள்(55), மாதம்மாள்(52), ஜெயராணி( 50), மாதேஷ்(40), ரவி( 60), மாதேஷ்( 31), ஆகியோர் நிலத்திற்கு சென்று டிராக்டர் மூலம் நிலத்தை உழுதுள்ளனர்.

    இதனை தட்டி கேட்ட வெங்கடேஷனை, ஆத்திர மடைந்த 7 பேரும் கத்தி, கட்டையால் தாக்கி யதில் பலத்த காயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து வெங்கடேசன் மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாைணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த நவீன எந்திரங்களின் மூலம் 50 அடி ஆழமுள்ள கிணற்றை தோண்ட ரூ.1 லட்சம் மட்டுமே செலவாகிறது.
    • மூன்று அல்லது நான்கு நாட்களில் 40 முதல் 50 அடி வரை கிணற்றை தோண்டி விடுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக மானாவாரி நிலங்களில் அதிக அளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாய பணிகள் மேற்கொள்வது தற்போது கடினமாக மாறி உள்ளது. தண்ணீர் இல்லாததால் நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து அதன் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், காய்ந்து கருகும் பயிர்களை, பாதுகாக்க விவசாயிகள் கிணறு தோண்டி அதன் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் மேற்கொள்ளும் முறைகளுக்கு மாறி வருகின்றனர். கடந்த காலங்களில் ஒரு கிணறு தோண்டுவதற்கு பல மாதங்கள் ஆகும். அதன் பின்னர் கிணற்றில் ஊற்று தண்ணீர் தேங்கி அந்த கிணற்றிலிருந்து நீரேற்றும் முறை மூலம் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படும்.

    ஒரு கிணறு தோண்டு வதற்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதற்கு அதிகளவிலான நாட்களும் பணமும் செலவாகும். அதன்பிறகு ஆயில் என்ஜின் வைத்து, கிணறு வெட்டும் பணியை மேற்கொண்டனர். இதில் நாட்கள் மட்டுமே குறைந்தது. தற்போதைய சூழலில் கிணறு தோண்டுவது போன்ற கடினமான பணிகளுக்கு கடும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தருமபுரி மாவட்ட விவசாயிகள் சிறிய ரக பொக்லைன் மற்றும் கிரேன் என நவீன எந்திரங்களின் உதவியால் விரைவாகவும், குறைந்த செலவில் விவசாய கிணறு ளை தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக பழைய கிணறுகளிலும் இந்த சிறிய ரக பொக்லைன் எந்திரங்களை இறக்கிவிட்டு கிணறுகளை ஆழப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்கின்றனர். இதற்கு இரண்டு இயந்திரங்கள், இரண்டு ஆட்கள் இருந்தால் போதுமானது.

    ஆட்கள் பற்றாக்குறையை ஈடு செய்ய இந்த எந்திரங்கள் பெரிதும் உதவி வருவதாகவும், ஆட்கள் மூலம் ஒரு கிணறு வெட்டும் போது ஒரு நாளைக்கு இரண்டு அடி மட்டுமே வெட்ட முடியும்.

    மேலும் 40 முதல் 50 அடி ஆழம் வரை கிணறு வெட்டுவதற்கு சுமார் 1 மாதத்திற்கு மேலாகும். அதேப்போல் பணம் ரூ.5 முதல் 6 லட்சம் வரை செலவாகிறது.

    ஆனால் இந்த நவீன சிறிய ரக பொக்லின் எந்திரத்தில் ஒரு நாளைக்கு 6 அடி முதல் 10 அடி வரை கிணறு வெட்ட முடியும். மூன்று அல்லது நான்கு நாட்களில் 40 முதல் 50 அடி வரை கிணற்றை தோண்டி விடுகிறது.

    இந்த எந்திரங்களுக்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு தலா ரூ.7000 ஆகிறது. இந்த இரண்டு வாகனங்களுக்கும் ரூ.14,000 செலவாகிறது. இந்த நவீன எந்திரங்களின் மூலம் 50 அடி ஆழமுள்ள கிணற்றை தோண்ட ரூ.1 லட்சம் மட்டுமே செலவாகிறது.

    மேல் மட்டத்தில் உள்ள மண்ணை தோண்டுவதில் இருந்து அடிமட்டம் வரை மண் பறிக்கும் நவீன எந்திரம் தனது பணியை செய்ய, மேலே ஒரு எந்திரம் இயக்கப்பட்டு கீழ் இருக்கும் மண் மற்றும் கற்களை மேலே எடுத்து வந்து கொட்டுகிறது.

    இந்த முறையில் கிணறு வெட்டுவதால், பணம், நேரம் குறைவாகிறது. மேலும் கூலியாட்கள் தேவை இல்லை என்பதால், தற்போது தருமபுரி மாவட்ட த்தில் தருமபுரி அரூர், மொரப்பூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிகமாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் மத்தியிலும் இந்த எந்திரம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    மேலும் சாலை அமைப்பது, பெரிய பாலங்கள் கட்டுவது, பெரிய தொழிற்சாலைகள் அமைப்பது எனஅனைத் திலும் நவீன எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் விவசாயிகளுக்கு பயன் தரும் கிணறுகள் வெட்டுவதிலும் இந்த எந்திரங்களை பயன்பாடு பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

    மேலும் வறட்சி காரணமாக பல்வேறு இடங்களில் கிணறு வெட்டும் பணி கிடைப்பதால், எந்திர உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

    • தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
    • நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் சிவன் கோவில்களிலும் நேற்று ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அதன்படி தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதையொட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி சனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோன்று தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சாலையில் உள்ள சித்தி லிங்கேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி ஆதிலிங் கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் ஆவணி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

    இதேபோன்று மாவட்டத்தின் முக்கிய கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், காரி மங்கலம் அருணேஸ்வ ரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் பிர தோஷத்தை யொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் அடிவாரத்தில் உள்ள அமிர்தேஸ்வரர், அமிர்தாம்பிகை கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை யொட்டி நந்திக்கு, பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர் உள்ளிட்ட பொருட் களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில் களிலும் ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    • அங்காடிக்கு நேற்று 2,555 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன.
    • மொத்தம் ரூ.13 லட்சத்து 10 ஆயிரத்து 398-க்கு பட்டு கூடுகள் விற்பனையானது.

    தருமபுரி,  

    தருமபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு கூடு களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இந்த அங்காடிக்கு நேற்று 2,555 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிக பட்சமாக ரூ.650-க்கும், குறைந்தபட்சமாக ரூ.250-க்கும், சராசரியாக ரூ.512.81-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.13 லட்சத்து 10 ஆயிரத்து 398-க்கு பட்டு கூடுகள் விற்பனையானது.

    • மேள தாளங்கள் முழங்க சிவசுப்பிர மணியசாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.
    • விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தருமபுரி நகரம், குமாரசாமிப்பேட்டை சிவ சுப்பிரமணிய சாமி கோவிலில் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

    தருமபுரி, 

    விழாவையொட்டி கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிவ சுப்பிரமணிய சாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள ஆனந்த நடராஜர், சென்னகேசவ பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க சிவசுப்பிர மணியசாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.

    • சிறிது தூரம் சென்ற பிறகு சாக்கம்மாள் பின்னால் வந்த மர்ம நபர் அவர் கையில் இருந்த பணப்பையை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினான்.
    • சாக்கம்மாள் திருடன், திருடன் என்று அலறினார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சூடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாக்கம்மாள் (வயது35). இவர் மகளிர் சுயஉதவிக்குழு நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று மகளிர் சுயஉதவிக்குழுவில் உறுப்பினர்களிடையே வசூல் செய்த பணத்தை வங்கியில் செலுத்து வதற்காக சாக்கம்மாள் பாலக்கோட்டிற்கு பஸ்சில் வந்தார். அப்போது பாலக்கோடு பஸ் நிலையம் வந்த அவர் கையில் பணப்பையுடன் அங்குள்ள வங்கிக்கு பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றார்.

    சிறிது தூரம் சென்ற பிறகு சாக்கம்மாள் பின்னால் வந்த மர்ம நபர் அவர் கையில் இருந்த பணப்பையை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினான். உடனே சாக்கம்மாள் திருடன், திருடன் என்று அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் உடனே அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சாக்கம்மாள் மற்றும் பொதுமக்கள் பிடிப்பட்ட மர்ம நபரை பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், திருப்பத்தூர் மாவட்டம் தென்றல் நகரைச் சேர்ந்த ராஜேஸ் கண்ணன் (46) என்பவர் சாக்கம்மாளிடம் பணத்தை திருடினார் என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    பாலக்கோடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பணத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிறிது நேரம் கழித்து முனியப்பன் மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது, கடையின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.
    • வண்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சமும், ஒரு பவுன் நகையையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சின்னப்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது37). விவசாயியான இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு வங்கியில் நகையை அடமானம் வைத்து ரூ.1 லட்சத்தையும், ஒரு பவுன் நகையையும் தான் வந்த மோட்டார் சைக்கிளின் சீட்டின் அடியில் வைத்து எடுத்து வந்தார்.

    பின்னர் அவர் பழைய தபால் நிலையம் அருகே உள்ள ஒரு பிரிண்டிங் கடைக்கு செல்வதற்காக வண்டியை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து முனியப்பன் மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது, கடையின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தில் தேடிபார்த்தபோது, சிறிதுதூர தொலைவில் வண்டியின் சீட்டு பகுதி உடைந்த நிலையில் காணப்பட்டது. அப்போது வண்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சமும், ஒரு பவுன் நகையையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து முனியப்பன் பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் முதற்கட்ட விசாரணை செய்ததில், முனியப்பன் நகையை அடமானம் வைத்து பணத்தை வாங்கி வந்ததையும், வண்டியை ஒரு கடையின் முன்பு நிறுத்தியிருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வண்டியை சிறிது தூரம் எடுத்து சென்று அதில் இருந்த பணத்தையும், நகையையும் திருடி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 300 பேரும் தலா 50 ரூபாய் வழங்க வேண்டும், அவ்வாறு வழங்காவிட்டால் தகாத வார்த்தைகளால் திட்டி உங்களுக்கு பணி இல்லை என்று அனுப்பிவிடுகிறார்.
    • இது சம்பந்தமாக 1077 எண்ணிற்கு புகார் அளித்ததால் எங்களை 100 நாள் வேலை திட்டத்திலிருந்து நீக்கி விட்டனர்.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம், பெரும்பாலை கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பென்னாகரம் வட்டம், பெரும்பாலையில் நாங்கள் வசித்துவருகிறோம்.இக்கிராமத்தில் உள்ள பெண்கள் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். நூறு நாள் வேலை திட்ட பணி மேற்பார்வையாளராக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் இந்த திட்டத்தில் வேலை வேண்டும் என்றால் ஒருவருக்கு தினம் 50 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறுகிறார்.

    ஒரு நாளைக்கு 300 பேர் வேலை செய்கின்றனர். 300 பேரும் தலா 50 ரூபாய் வழங்க வேண்டும், அவ்வாறு வழங்காவிட்டால் தகாத வார்த்தைகளால் திட்டி உங்களுக்கு பணி இல்லை என்று அனுப்பிவிடுகிறார். இது சம்பந்தமாக 1077 எண்ணிற்கு புகார் அளித்ததால் எங்களை 100 நாள் வேலை திட்டத்திலிருந்து நீக்கி விட்டனர். வேலை இன்றி ஒரு வார காலமாக வீட்டிலிருந்து வருகிறோம். அதனால் எங்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீதமுள்ள 48.88 ஏக்கர் பரப்பில் பழச்செடிகள் சாகுபடி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் ரூ.52.33 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு, இதன் மூலம் 59 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 57 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டு 81.64 ஏக்கர் பரப்பளவில் பழ செடிகள் சாகுபடி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    முதல்-அமைச்சர் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண்வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். இத்திட்டத்தின்கீழ் முக்கிய இனமாக தரிசு நில தொகுப்பு மேம்பாடு செயல்படுத்தப்படுகிறது. 10 முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியாக உள்ள தரிசு நிலங்களை தேர்வு செய்து நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு, தரிசு நில தொகுப்புகளாக பதிவு செய்யப்படுகின்றன.

    தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசு நில தொகுப்பில் ஆழ்துளை, திறந்தவெளி கிணறு அமைத்து நுண்ணீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படும் பழ மரங்களின் நீர் தேவைக்கு ஏற்றவாறும், விவசாயிகளின் பாசனபரப்பிற்கு ஏற்றவாறும் நீர் பங்கீடு செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 57 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல் படுத்தப்பட்டது.

    தேர்வு செய்யப்பட்ட 57 கிராமங்களில் ஏரியூர் வட்டாரம், தொண்ண குட்டஅள்ளி கிராமம் மற்றும் நாகமரை கிராமம், பென்னாகரம் வட்டாரம், வட்டுவனஅள்ளி கிராமம், நல்லம்பள்ளி வட்டாரம், மானியதஅள்ளி கிராமம், காரிமங்கலம் வட்டாரம், பிக்கனஅள்ளி கிராமம் ஆகிய கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் உள்ளடக்கிய விவசாயிகளை ஒருங்கி ணைத்து 5 தரிசு நிலத் தொகுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேளாண்வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றது.

    தரிசு நிலங்களை மேம்படுத்த அனைத்து தொகுப்புகளிலும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு நுண்ணீர் பாசன கருவிகள் நிறுவப்பட்டு தோட்டக்கலைத்துறை மூலம் பழச்செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் தேர்வு செய்யப்பட்டுள்ள 81.64 ஏக்கர் பரப்பளவில் தற்பொழுது வரை 32.76 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு மீதமுள்ள 48.88 ஏக்கர் பரப்பில் பழச்செடிகள் சாகுபடி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    மொத்தம் ரூ.52.33 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு, இதன் மூலம் 59 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வரும் இதர வேளாண் தொடர்பான திட்டங்கள் குறித்து விவசா யிகள் தொடர் புடைய வேளாண் விரிவாக்க மையங்களிலோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தினையோ அணுகி பயன்பெற கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தனிநபர் ஒருவர் அங்கிருந்த மலைக்குன்றுகள் மற்றும் பாறைகளை உடைத்துள்ளார்.
    • கட்டுமான பணிகள் மேற்கொள்ளபோதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    காரிமங்கலம்,  

    தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் கோடாள அம்மன் கோவிலுக்கு சொந்தமாக கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ள நிலையில் அந்த சொத்துக்கள் பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு உள்ளன.இந்நிலையில் கோடாள அம்மன் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் தனிநபர் ஒருவர் அங்கிருந்த மலைக்குன்றுகள் மற்றும் பாறைகளை உடைத்துள்ளார்.

    அப்போது பொதுமக்கள் தடுத்து நிறுத்த முற்பட்டபோது இந்த நிலத்தை தான் வாங்கியதாக கூறியுள்ளார். இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமாக கருதப்படுவதாகும், இந்த நிலத்தை வாங்கியது செல்லாது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மோதல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கோடாள அம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக நேற்று முன்தினம் 12 கிராம ஊர் பொதுமக்கள் மற்றும் கவுண்டர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில்கோடாள அம்மன் கோவில் நிலத்தை மீட்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, விழா நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில் நிலத்தை வாங்கியதாக கூறப்படும் நபர் இந்த நிலம் தனக்கு சொந்தம் என்பதை குறித்தும் அப்பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளபோதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.இதை அடுத்து இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, சபி ஆகியோர் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.12 கிராம ஊர்க்கவுண்டர்கள் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் திரளாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×