என் மலர்tooltip icon

    கடலூர்

    தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்களுக்கு மாற்று வாழ்வாதார திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்திடவும், தமிழக கடற்பகுதியில் மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் மீன்வளத்தை அழிக்கக் கூடிய தடைசெய்யப்பட்ட சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளின் பயன்பாட்டை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    தமிழகத்தின் கடல்மீன்வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் அதை கைவிட்டு மாற்று வாழ்வாதாரமாக கீழ்கண்ட திட்டங்களில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அதன்படி, 40 சதவீத மானியத்துடன் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கும் திட்டம், 50 சதவீத மானியத்துடன் ரூ.60 லட்சம் மதிப்பில் மாநில அரசு திட்டத்தின் கீழ் செவுள்வலை மற்றும் தூண்டில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கும் திட்டம், தற்போது பயன்பாட்டில் உள்ள இழுவலை படகுகளை ரூ.15 லட்சம் மானியத்துடன் செவுள் வலை படகுகளாக மாற்றும் திட்டம்.மேற்கண்ட திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் மீனவர்கள் சம்பந்தப்படட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    நெல்லிக்குப்பத்தில் வேறொரு பெண்ணை அழைத்து வந்ததால் கணவருடன் தகராறில் ஈடுபட்ட பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பம் வைடிப்பாக்கத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 45). இவரது மனைவி பாப்பாத்தி(40). கருணாநிதி தனது மனைவி பாப்பாத்தியுடன் பாலூரில் வசித்து வந்தார். மேலும் அவர் கரும்பு வெட்டும் பணிக்காக அடிக்கடி வெளியூர் சென்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வழக்கம் போல் வேலைக்காக வெளியூர் சென்றிருந்த கருணாநிதி, நேற்று முன்தினம் நெல்லிக்குப்பத்திற்கு ஒரு பெண்ணுடன் வந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அறிந்த பாப்பாத்தி, தனது உறவினர்களுடன் நெல்லிக்குப்பத்திற்கு சென்று கருணாநிதியிடம் அந்த பெண் யார் என்பது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் பாப்பாத்தி தனியாக கருணாநிதியை பார்க்க சென்றுள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை பாப்பாத்தி, நெல்லிக்குப்பத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக நெல்லிக்குப்பம்போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா, தவசெல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கருணாநிதி மற்றும் அவரது உறவினர்கள் யாரும் வீட்டில் இல்லை. தொடர்ந்து பாப்பாத்தியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாப்பாத்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை மற்றும் புதுப்பேட்டை கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை மற்றும் புதுப்பேட்டை கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    முழு ஊரடங்கு காரணமாக நேற்று மாவட்டம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
    கடலூர்:

    தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பஸ், ரெயில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


    இந்த நிலையில் ஜூலை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி இந்த மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி கடலூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் லாரன்ஸ் சாலையில் கடைகள் பூட்டி இருந்ததால் அங்கு ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. நகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலைகளை சுத்தம் செய்தனர். மேலும் வாகனங்கள் மூலம் சாலைகள் மற்றும் தெருக்களில் கிருமிநாசினி தெளித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தினர்.

    அதேபோல் கடலூர்-சிதம்பரம் சாலை, மஞ்சக்குப்பம் மைதானம், கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி மற்றும் பழக்கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் மருந்துகடைகள், பால் கடைகள் ஆகியவை மட்டும் திறந்து இருந்தன. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்ததால் நகரின் பிரதான சாலைகளில் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. விரல்விட்டு எண்ணும் வகையில் ஒரு சில வாகனங்கள் சென்று வந்ததை பார்க்க முடிந்தது.

    முழு ஊரடங்கையொட்டி தேவையில்லாமல் சுற்றி திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டத்தில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனை நடைபெற்றது.

    கடலூரில் மஞ்சக்குப்பம் ரவுண்டானா, திருப்பாதிரிபுலியூர், நான்கு முனை சந்திப்பு, கம்மியம்பேட்டை, ஆல்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிந்த வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்தனர். சில பிரதானசாலைகளின் குறுக்கே தடுப்பு வேலிகள் அமைத்து பாதையை போலீசார் அடைத்து இருந்தனர்.

    அதேபோல் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், தொழுதூர், ராமநத்தம், வேப்பூர், புதுப்பேட்டை என மாவட்டம் முழுவதிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்து இல்லாததால் பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

    மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உத்தரவின்பேரில் போலீசார் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வாகனங்களில் சுற்றி வந்தவர்களை எச்சரித்தும், சிலரது மீது வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் ஊரடங்கு சரியான முறையில் கடைபிடிக்கப்படுகிறதா? அத்தியாவசிய தேவையின்றி யாரேனும் வாகனங்களில் சுற்றித்திரிகிறார்களா? என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வருவாய்த்துறை, காவல்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கிருமிநாசினி தெளித்து, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொண்டு நோய் பரவாத வகையில் பராமரிக்க வேண்டும். இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமாக அமர்ந்து பேசுவதை தவிர்த்து முககவசம் அணிந்து நோய்தொற்றை கட்டுப்பாட்டில் வைக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்கள் நோய்தொற்று பரவலை தடுக்கும் வகையில் தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் காக்கும் வகையில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசு அறிவித்த ஞாயிற்றுகிழமைகள் மட்டுமின்றி பிற நாட்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    பிறமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தாங்களே முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக மருத்துவ தகவல்களை பெற மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா டெலிபோன் எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களை பெற்றுக்கொண்டு மருத்துவம் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    கிராம கண்காணிப்புகுழு மற்றும் வருவாய்துறை, வளர்ச்சித்துறை பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடலூர் நகர பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்றது.
    கடலூர்:

    கடலூர் நகர பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் கே.பி.டி. இளஞ்செழியன், மாவட்ட தலைவர் விநாயகம், கிழக்கு மாவட்ட பார்வையாளர்கள் சரவணன், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய உணவு கழக இயக்குனரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான டாக்டர் எஸ்.பி. சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் நகர, ஒன்றியங்களில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களிடையே கட்சியினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு மக்களுக்கு செய்த விரிவான தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கி கூற வேண்டும். 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் தாமரையை மலர செய்ய பாடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கடலூர் தெற்கு ஒன்றிய தலைவர் பில்லாலி ரமேஷ், வடக்கு ஒன்றிய தலைவர் அருள், குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், பா.ஜ.க. நிர்வாகிகள் பந்தல் பரசுராமன், மணிஇந்திரஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கடலூர் நகர தலைவர் வேலு வெங்கடேசன் செய்திருந்தார். முடிவில் நகர ஊடகப்பிரிவு இளையராஜா நன்றி கூறினார்.
    நெய்வேலி என்.எல்.சி. பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
    கடலூர்:

    நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 2-ம் அனல் மின்நிலையத்தில் கடந்த 1-ந்தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜூலை 05 -ம் தேதி மேலும் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து 16 பேர் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அடுத்தடுத்து 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் இளநிலை பொறியாளர்கள், 9 ஒப்பந்த ஊழியர்கள், 2 பேர் நிரந்தர ஊழியர்கள் ஆவார்கள்.

    இந்நிலையில், இந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது. சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் என்ற ஊழியர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், நெய்வேலி என்எல்சி-க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    கடலூர் மாவட்டத்தில் எஸ்.பி.ஐ. வங்கி கிளை பெயரில் போலியாக வங்கி கிளையை நடத்தி வந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மற்றும் அவரது மகன் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
    கடலூர்:

    கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.  இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நபர் போலியாக ஒரு வங்கி கிளையையே உருவாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் விபரம் வருமாறு

    கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கமல் பாபு (வயது 19).  கமல் பாபுவின் தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.  இவரது தாயார்  எஸ்.பி.ஐ. வங்கியில் பணியாற்றி வந்துள்ளார்.   இந்நிலையில் தாய் லட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.   

    இந்நிலையில் வேலையில்லாமல் சுற்றி திரிந்த கமல் பாபுவுக்கு ஊரடங்கு நேரத்தில் ஒரு யோசனை வந்துள்ளது.   அதன்படி போலியாக  எஸ்.பி.ஐ. வங்கி ஆரம்பிக்கும் எண்ணம் ஏற்பட்டது.   அதனைத்தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போலி வங்கியை தொடங்கியுள்ளார்.

    இந்நிலையில் பன்ருட்டியில் உள்ள ஒரு கிளையை ஒரு எஸ்பிஐ வாடிக்கையாளர் கவனித்தபோது, ​​ அவருக்க சந்தேகம் எழுந்துள்ளது.  உடனே அவர் அப்பகுதியில் உள்ள கிளை மேலாளரிடம் இந்த விஷயத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

    அதை தொடர்ந்து கிளை மேலாளர் விசாரணை மேற்கொண்டதில் பன்ருட்டியில் எஸ்பிஐயின் இரண்டு கிளைகள் மட்டுமே செயல்படுவதாகவும், மூன்றாவது கிளை திறக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

    மேற்படி தகவலைத் தொடர்ந்து, எஸ்பிஐ அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று, எஸ்பிஐ வங்கியைப் போலவே தோற்றமளிக்கும் முழு அமைப்பும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து  போலியாக எஸ்பிஐ வங்கி கிளை நடத்தி வந்த கமல் பாபு உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் நிறுவனத்தை வைத்திருக்கும் மணிக்கம் (52), அச்சகத்தின் உரிமையாளரான குமார் (42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்த காட்சி


    போலியாக ஆரம்பிக்கப்பட்ட கிளையில் இருந்து எழுதுபொருள் பொருட்கள் மற்றும் போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து கட்டிடம் சீல் வைக்கப்பட்டது.

    கிளையில் எந்த பரிவர்த்தனைகளும் நடக்கவில்லை என்றும் இதுவரை யாரும் வங்கியால் ஏமாற்றப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
    சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி கடலூர் மற்றும் நாகையில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
    கடலூர்:

    தமிழகத்தில் கடலோர மீனவர்கள் சுருக்குமடி வலைகள் மற்றும் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட இந்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்கிறது.

    இந்த வலைகளுக்கான தடையை நீக்க வேண்டும் என சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த வலையை பயன்படுத்தாத மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடலூரில் சுருக்குமடி வலை தொடர்பாக இருதரப்பு மீனவர் குழுக்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுருக்குமடி வலையில் பிடித்த மீன்களை கடலூர் மீனவர்கள் 7 வாகனம் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு எடுத்துச்சென்றனர். புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அந்த வாகனங்களை போலீசார் உதவியுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து, மீன்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், சுருக்குமடி வலைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் எம்.ஜி.ஆர் திட்டு மீனவ கிராமப் பெண்கள் திடீரென கடலில் இறங்கி போராடியதோடு, தலையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மாவட்ட நிர்வாகம், மீன்வளத்துறை அலுவலகம் சுருக்குமடி வலைக்கு தடை விதித்ததற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், படகுகளில் கருப்பு கொடிகளை கட்டி, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல் கடலூர் சில்வர்பீச்சில் திரண்ட மீனவர்கள், தர்ணாவில் ஈடுபட்டனர். கடலில் அனைத்து படகுகளையும் நிறுத்தி, அதில் கருப்பு கொடி கட்டி, எதிர்ப்பை தெரிவித்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    இதேபோல் நாகை மாவட்டத்தில், சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க கோரியும், எதிர்ப்பு தெரிவித்தும் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

    சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடர்பாக நம்பியார் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிடிக்கப்பட்ட மீன்களை பறிமுதல் செய்யக் கூடாது என தெரிவித்த மீனவர்கள்,  உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    கடலூர் முதுநகரில் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர் முதுநகர்:

    கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் கடந்த 1-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள், அவர்களது படகுகளுக்கு ‘சீல்’ வைத்தனர். அப்போது கடலூர் துறைமுகத்தில் அதிகாரிகள் வந்த வாகனத்தை சிறைபிடித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து படகுகளில் இருந்த சீல் அகற்றப்பட்டது.

    பின்னர் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சுருக்குமடி வலைக்கான தடை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் கடலூர் துறைமுகத்தில் இருந்து பல மீனவர்கள் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் படகுகளுடன் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த கடலூர் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் மற்றும் அதிகாரிகள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனைக்காக எடுத்து சென்ற லாரிகளை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்று முன்தினம் மட்டும் 20-க்கும் மேற்பட்ட லாரிகள் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீன்வளத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதை கண்டு ஆத்திரமடைந்த மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் நேற்று முன்தினம் இரவு, கடலூர் முதுநகர் மீன் வளத்துறை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள், மீன்வளத்துறை சார்பில் ஏலம் விடப்படும் என தகவல் வெளியானது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை மீண்டும் கடலூர் முதுநகர் மீன்வளத்துறை அதிகாரி அலுவலகத்தை மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையிலான போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் மற்றும் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் போலீசாருக்கும் மீனவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.

    இதன் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் பேச்சுவார்த்தையின் முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட பெரிய லாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், சிறிய லாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் கட்ட வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

    இதனை ஏற்று மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது லாரிகளை மீன் வளத்துறை அதிகாரி அலுவலகத்தில் இருந்து எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் முதுநகரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
    காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நேற்று பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் ஜி.கே.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியின் சார்பில் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழக அரசு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களும், ஊழியர்களும் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஜி.கே.கல்வி குழுமத்தின் தலைவரும்,பள்ளியின் தாளாளருமான ஜி.குமாரராஜா தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் ஜி.கே.அருண் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    இதே கோரிக்கைகள் மற்றும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்கிற நிர்பந்தத்தை தளர்த்தி, 3 ஆண்டுகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி தொடர அங்கீகாரம் வழங்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி, இருக்கை வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் புனிதவள்ளி தலைமையில் பட்டினி போராட்டம் நடைபெற்றது.

    இதேபோல் ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ்.ஜெயின் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில், பள்ளியின் ஆலோசகர் அபிராமி மகாவீர் தலைமையில் பட்டினி போராட்டம் நடைபெற்றது.

    இதேபோல் புவனகிரியில் தமிழ்நாடு அரசு நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ.பள்ளிகள் சங்கம் சார்பில் அருணாச்சல வித்யாலயா பள்ளி வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளியின் புதிய உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பள்ளியின் நிறுவனர் வீரமுத்துக்குமரன் தலைமை தாங்கினார். தாளாளர் அரிமா பரணிதரன் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
    விருத்தாசலம் அருகே துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ராஜேந்திரபட்டினம் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பெரிதும் அவதியடைந்து வந்தனர். மேலும் குடிநீர் தட்டுப்பாட்டாலும் சிரமமடைந்து வந்தனர்.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் நேற்று துணைமின் நிலைய அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்துள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு முறையான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் தலைமையில் துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு அமர்ந்து மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசார், தொடர் மின்வெட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் கூறி, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ×