search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி
    X
    கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி

    கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்- கலெக்டர் வேண்டுகோள்

    கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் ஊரடங்கு சரியான முறையில் கடைபிடிக்கப்படுகிறதா? அத்தியாவசிய தேவையின்றி யாரேனும் வாகனங்களில் சுற்றித்திரிகிறார்களா? என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வருவாய்த்துறை, காவல்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கிருமிநாசினி தெளித்து, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொண்டு நோய் பரவாத வகையில் பராமரிக்க வேண்டும். இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமாக அமர்ந்து பேசுவதை தவிர்த்து முககவசம் அணிந்து நோய்தொற்றை கட்டுப்பாட்டில் வைக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்கள் நோய்தொற்று பரவலை தடுக்கும் வகையில் தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் காக்கும் வகையில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசு அறிவித்த ஞாயிற்றுகிழமைகள் மட்டுமின்றி பிற நாட்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    பிறமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தாங்களே முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக மருத்துவ தகவல்களை பெற மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா டெலிபோன் எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களை பெற்றுக்கொண்டு மருத்துவம் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    கிராம கண்காணிப்புகுழு மற்றும் வருவாய்துறை, வளர்ச்சித்துறை பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×