search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காட்டுமன்னார்கோவில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பட்டினி போராட்டம்

    காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நேற்று பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் ஜி.கே.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியின் சார்பில் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழக அரசு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களும், ஊழியர்களும் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஜி.கே.கல்வி குழுமத்தின் தலைவரும்,பள்ளியின் தாளாளருமான ஜி.குமாரராஜா தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் ஜி.கே.அருண் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    இதே கோரிக்கைகள் மற்றும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்கிற நிர்பந்தத்தை தளர்த்தி, 3 ஆண்டுகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி தொடர அங்கீகாரம் வழங்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி, இருக்கை வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் புனிதவள்ளி தலைமையில் பட்டினி போராட்டம் நடைபெற்றது.

    இதேபோல் ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ்.ஜெயின் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில், பள்ளியின் ஆலோசகர் அபிராமி மகாவீர் தலைமையில் பட்டினி போராட்டம் நடைபெற்றது.

    இதேபோல் புவனகிரியில் தமிழ்நாடு அரசு நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ.பள்ளிகள் சங்கம் சார்பில் அருணாச்சல வித்யாலயா பள்ளி வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளியின் புதிய உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பள்ளியின் நிறுவனர் வீரமுத்துக்குமரன் தலைமை தாங்கினார். தாளாளர் அரிமா பரணிதரன் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
    Next Story
    ×