என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலத்தில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் ஆலடி சாலை எம்.ஆர்.கே. நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் அபிநயா(வயது 19). இவர், விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அபிநயா, பெற்றோருடன் தூங்கினார். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது அபிநயாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. 

    இது குறித்து முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிநயாவை தேடி வருகின்றனர்.
    விருத்தாசலம் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் சிவசக்தி(வயது 16). வீட்டில் தனியாக இருந்த சிறுமி, திடீரென விஷத்தை எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவசக்தி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி அருகே வரதட்சணை கொடுக்காததால் பெண்ணை வீட்டை விட்டு துரத்திய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் ராஜாராம்(வயது 34). இவருடைய மனைவி அனிதா(29). இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜாராம், வேறொரு பெண்ணிடம் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ராஜாராமும், அவரது தாய் ராஜேஸ்வரியும் சேர்ந்து அனிதாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். மேலும் வரதட்சணை கொடுக்காத அனிதாவை இருவரும் வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இது குறித்து அனிதா பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனஜா வழக்குப்பதிவு செய்து ராஜாராமை கைது செய்தார்.மேலும் தலைமறைவான ராஜேஸ்வரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

    புதிதாக 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இது தவிர ஒரே நாளில் 190 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 23 ஆயிரத்து 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 48 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து என்.எல்.சி. வந்த ஒருவர், நோய் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 15 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 32 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 162 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 190 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 22 ஆயிரத்து 611 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் வரை 269 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று முதியவர் ஒருவர் பலியானார். இதன் விவரம் வருமாறு:-

    குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 63 வயது முதியவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோய் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது.

    கொரோனா பாதித்த 218 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 63 பேர் வெளி மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 417 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
    பெண்ணாடம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் பகுதியில் கடந்த மாதம் 10-க்கும் மேற்பட்ட கோவில்களின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணாடம் சோழநகரை சேர்ந்த நாகராஜன் மகன் அகிலன்(வயது 18), ராஜேந்திரன் மகன் கதிர்(19), சீனிவாசன் மகன் கார்த்திகேயன்(25), கணேசன் மகன் கார்த்திக்(18), தாதன் குட்டை தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்குமார்(19), சூரியமூர்த்தி ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அகிலன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சூரியமூர்த்தி தலைமறைவாக இருந்து வந்தார்.

    அவரை பிடிக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில், விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் விருத்தாசலம் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சூரியமூர்த்தியை(25) நேற்று தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    குறைந்த விலைக்கு தரமான பெரிய வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசுகையில், வெங்காயம் விளையும் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டிய மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால், வெங்காயத்தின் வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது.

    எனவே சந்தை குறுக்கீட்டு நடவடிக்கையாக, வெளிச்சந்தையில் நிலவும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாகவும், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் கூட்டுறவு துறையின் சார்பாக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து தமிழ்நாடு முழுவதும் செயல்படும் கூட்டுறவு அங்காடிகள், சுயசேவை பிரிவுகள், சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மூலம் விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சரவணபவ பல்பொருள் அங்காடி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 21 அம்மா சிறு பல்பொருள் அங்காடிகளில் ஒரு கிலோ தரமான பெரிய வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதனை வாங்கி பயன் பெறலாம். மேலும் தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் தரமான பெரிய வெங்காயம் கிடைக்க கூட்டுறவுத்துறையினர் முனைப்புடன் செயல்படவேண்டும் என்றார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மண்டல மேலாளர் சண்முகம், துணைப்பதிவாளர் (பொது வினியோகத்திட்டம்) ஜெகத்ரட்சகன், கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கடலூர் மாவட்ட கூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் ரூ.45-க்கு வெங்காயம் விற்பனை தொடங்கியது.
    கடலூர்:

    தமிழகத்திற்கு தேவையான வெங்காயம் மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தற்போது அந்த மாநிலங்களில் பெய்து வரும் மழையால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர அறுவடை செய்த வெங்காயமும் அழுகி வீணாகி வருகிறது.

    இதன் காரணமாக தமிழகத்திற்கு வர வேண்டிய வெங்காயம் வரத்து குறைந்து விட்டது. இதனால் வெங்காயம் விலை கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பெரிய வெங்காயம் ரூ.80 முதல் ரூ.90 வரையும், சாம்பார் வெங்காயம் ரூ.120 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்பு 1 கிலோ வெங்காயம் வாங்கிய பொதுமக்கள் தற்போது ½ கிலோ மட்டுமே வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. வெங்காயத்தை உறித்தால் தான் கண்ணீர் வரும், ஆனால் தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலைக்கு அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.அதன்படி வெளிமாநிலங்களில் இருந்து மொத்தமாக வெங்காயத்தை வாங்கி, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னையில் முதல் கட்டமாக இந்த வெங்காயம் விற்பனை தொடங்கியது.

    ஆனால் கடலூர் மாவட்டத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் கிடையாது என்பதால் கடலூர் சரவணபவ கூட்டுறவு அங்காடி, சாவடி அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி, பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய கூட்டுறவு சிறப்பு அங்காடிகளிலும் வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர் சரவணபவ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வெங்காயத்தை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. ஆனால் ஒரு நபர் அதிக அளவில் வெங்காயத்தை வாங்கி சென்று விடக்கூடாது என்பதற்காக ஒரு நபருக்கு, அதாவது குடும்ப அட்டைதாரருக்கு ஒரு கிலோ மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

    இது பற்றி கூட்டுறவு அதிகாரி ஒருவர் கூறுகையில், வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு அறிவித்தபடி வெங்காயம் ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்து வருகிறோம். மாவட்டத்திற்கு 5 டன் வெங்காயம் கொண்டு வரப்பட்டு அதை அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் மூலம் விற்பனை செய்து வருகிறோம். இதன் தேவையை பொறுத்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.
    மிலாது நபியையொட்டி கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மிலாது நபி பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை டாஸ்மாக் கடைகளையும், மதுபானம் அருந்தும் கூடங்களையும் நாளை திறக்கக்கூடாது. எனவே மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், மிலாது நபி அன்று எல்லா டாஸ்மாக் கடைகளும், மது அருந்தும் கூடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.3 ஓட்டல் பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். இதனை மீறி யாரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ, கடைகளை திறந்து வைத்திருந்தாலோ, கடை மேற்பார்வையாளர் மீதும், எப்.எல்.3 பார் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும்போதே கீழ்தாடையில் 2 பற்கள், மேல் தாடையில் 1 பல் என 3 பற்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே மா.கொளக்குடி எல்.இ.பி.நகரை சேர்ந்தவர் பாலமுருகன். கூலி தொழிலாளி. அவரது மனைவி நிவேதா.

    இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் 2-வதாக கர்ப்பமான நிவேதாவுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு காட்டுமன்னார் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சுகபிரசவம் நடந்தது.

    அப்போது 2-வதும் பெண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தை அழும்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிறக்கும்போதே கீழ்தாடையில் 2 பற்கள், மேல் தாடையில் 1 பல் என 3 பற்களுடன் பிறந்துள்ளது. தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை உருவாகி விட்டதா? என்பதற்கு சுகாதாரத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
    கடலூர்:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை விட பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. நேற்று முன்தினம் வரை கொரோனாவால் 22 ஆயிரத்து 997 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 267 பேர் பலியாகி உள்ளனர்.

    கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். தேவையின்றி வெளியே சுற்றித்திரிவதை தடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். அரசு தளர்வுகளை தான் அறிவித்து உள்ளது. ஆனால் கொரோனா நோய் தொற்று குறைந்து விட்டதாக நினைத்து பொதுமக்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.

    திருமணம், பிறந்த நாள் விழா, துக்க நிகழ்ச்சிகளில் அதிக அளவில் கூட்டம் கூடுவதை பார்க்க முடிகிறது. இதன் மூலம் மேலும் தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் கொரோனா 2-வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இது பற்றி சுகாதாரத்துறையினர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆரம்ப காலத்தில் அதிக பாதிப்பு இருந்தது. தற்போது 50-க்கும் குறைவான பாதிப்பு தான் உள்ளது. இருப்பினும் இது நிரந்தரம் இல்லை. தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந்தேதி வருகிறது. இதனால் தற்போதே கடைகளில் கூட்டம் அதிகமாக கூடுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஏ.சி. பயன்பாடும் அதிகமாக உள்ளதால் நோய் தொற்று அதிகம் ஏற்பட்டு, கொரோனா 2-வது அலைக்கு வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    மருந்து கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதை தவிர்க்க வேண்டும். வணிக நிறுவனங்களில் நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே வர வேண்டும் என்று அறிவிக்க வேண்டும். பெரிய வர்த்தக நிறுவனங்கள் முன்பு அரசு சார்பில் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். வாடிக்கையாளர்களுக்கு துணி பை, முக கவசங்களை கட்டாயம் வணிக நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

    அதேபோல் கொரோனா 2-வது அலை உருவாதை தடுக்கும் பொறுப்பு பொதுமக்களிடமும் உள்ளது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பிறந்த நாள், துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு தான் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. ஆகவே இது போன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை முடிவுகளை அறிவித்து வருகிறோம் என்றனர்.
    இன்ஸ்டாகிராம் மூலம் ஆசிரியையின் மகளிடம் அறிமுகமான என்ஜினீயரிங் மாணவர், அவரை வீடு புகுந்து பலாத்காரம் செய்தார். அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டல் விடுத்து வந்த நிலையில் தற்போது போலீசில் சிக்கிக் கொண்டார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியை. இவரது மகள் 15 வயது சிறுமி. இவர் தற்போது 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஆசிரியை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது மகள் மட்டும் தனியாக இருந்தார். சிறிது நேரத்துக்கு பின்னர் ஆசிரியை வீட்டுக்கு திரும்பினார். அப்போது கதவை திறந்த அவரது மகள், பதற்றத்துடன் காணப்பட்டார்.

    மகளை பார்த்து என்ன நடந்தது? என்று கேட்ட போது, அவர் படுக்கை அறைக்குள் ஒருவர் இருப்பதாக கைகாட்டியுள்ளார். அதில் படுக்கை அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. மகள் வெளியே இருக்க, அந்த அறைக்குள் இருப்பது யார்? என்ற அச்சத்துடனும், குழப்பத்துடனும் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார் ஆசிரியை.

    இதற்கிடையே சிதம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நகர போலீசார் அங்கு விரைந்து வந்தனர். படுக்கை அறை கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே நுழைந்த போது, அங்கிருந்த நபர் குளியலறைக்குள் சென்று உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் குளியலறையில் பதுங்கிருந்த அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் விருத்தாசலம் பெரியவடவாடி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 20) என்பதும், இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. ஆசிரியையின் வீட்டுக்குள் நுழைந்ததற்கான காரணம் குறித்து கேட்ட போது, திடுக்கிடும் தகவல் வெளியானது.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    ஆசிரியையின் மகள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். இவருடன் ஜெயக்குமார் அறிமுகமாகி உள்ளார். தொடக்கத்தில் நட்பு ரீதியாக இருவரும் பேசி வந்துள்ளனர். இதை தொடர்ந்து ஜெயக்குமார், காதல் ஆசை காட்டி அவரை தனது வலையில் விழ வைக்க திட்டமிட்டார். இதை தொடர்ந்து நேரில் சந்தித்து பேச வருவதாக கூறி ஆசை வார்த்தைகளை அடுக்கடுக்காக அள்ளி விட்டுள்ளார். இதில் தன்னையே மறந்த மாணவி, நேரில் சந்திக்கவும் இசைவு தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி ஜெயக்குமார் மாணவியின் வீட்டுக்கே நேரடியாக வந்துள்ளார். அப்போது அவர்களது வீட்டில் யாரும் இல்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜெயக்குமார், மாணவியை பலாத்காரம் செய்தார். மேலும் அதை தனது செல்போனிலும் வீடியோ எடுத்துக் கொண்டார்.

    இதை தொடர்ந்து, இந்த வீடியோவை வைத்து மிரட்டி, மாணவியை தன்னுடைய ஆசைக்கு மீண்டும் இணங்க வற்புறுத்தியுள்ளார். அப்போது, தான் நேற்று முன்தினம் மாணவியின் தாய் வீட்டில் இல்லாததை அறிந்த ஜெயக்குமார் மீண்டும் தனது ஆசையை நிறைவேற்ற வீட்டுக்குள் புகுந்துள்ளார்.

    ஜெயக்குமாரின் மிரட்டலுக்கு அஞ்சிய மாணவியும், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து இருந்துள்ளார். அப்போது தான் அதிர்ஷ்டவசமாக மாணவியின் தாய் பள்ளியில் இருந்து வீடு திரும்பினார். இதையடுத்து ஜெயக்குமார் கையும் களவுமாக அவர்களிடம் சிக்கினார்.

    தனது மகளுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து கதறி அழுத தாய், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

    மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திரண்டு வந்த பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களை அந்தந்த பகுதியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.பெண்களை பற்றி இழிவாக பேசியதாக கூறி பா.ஜனதாவினர், இந்து முன்னணியினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இன்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதை தொடர்ந்து திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை கோரி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இருகட்சியினரும் ஒரே நாளில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சிதம்பரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்த இரு கட்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

    போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கபட்ட போதிலும் அறிவித்தபடி போராட்டம்,ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இருகட்சிகள் சார்பிலும் அறிவிக்கபட்டது.

    இதையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர். சிதம்பரம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    சிதம்பரத்தில் இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் இளஞ்செழியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சேத்தியோதோப்பில் இருந்து சிதம்பரத்துக்கு ஒரு வேனில் புறப்பட்டனர்.

    அவர்களை சேத்தியாதோப்பு பகுதியிலேயே துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்கிருந்து அழைத்து சென்று சேத்தியாத்தோப்பு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிதம்பரம் பகுதிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திரண்டு வந்த பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களை அந்தந்த பகுதியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    தடையை மீறி சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இன்று காலை சிதம்பரம் காந்தி சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பால அறவாழி, பாராளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், ராஜேஷ் ஆகியோர் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.

    அவர்களை சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையிலான போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    ×