என் மலர்
கடலூர்
தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்திய நிவர் புயல் கடந்த 25-ந் தேதி மரக்காணம் அருகே கரையை கடந்தது. இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டியது. இந்த காற்றினால் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. கால்நடைகளும் பலியாகின. விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல், வாழை, மணிலா, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் தண்ணீர் தேங்கியது.
சில இடங்களில் வாழை முறிந்து சேதமடைந்தன. இது தவிர பலத்த மழையால் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக புதுப்பாளையம், கோண்டூர், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், முதுநகர் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் இருந்த வீடுகளில் மழைநீர் புகுந்தது. இந்த தண்ணீரை பொதுமக்கள் வாளியை வைத்து இறைத்து வெளியேற்றினர்.
இதற்கிடையில் நேற்று முன்தினமும், நேற்றும் மழை ஓய்ந்து வெயில் அடித்து வருவதால் சாலைகளில் தேங்கி நின்ற மழைநீர் அனைத்தும் வடிந்து விட்டது. ஆனால் தாழ்வான இடங்களில் தேங்கி நின்ற மழைநீர் வடியவில்லை. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கவுசல்யாநகர், ஸ்ரீதேவிநகர், குமரன்நகர், முருகாலயா நகர், பொன்னுசாமிநகர், சக்திநகர், சிவாநகர், சிங்காரவேலன் நகர், முத்தையாநகர் உள்பட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதை மோட்டார் மூலம் இறைத்து நகராட்சி ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர். மேலும் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உத்தரவின்பேரில் உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் ஊழியர்கள் ஸ்ரீதேவிநகரை சுற்றியுள்ள தண்ணீரை வடிய வைக்க சாலையை குறுக்கே வெட்டி, அதில் குழாய் அமைத்து மழைநீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை. அந்த இடங்களில் மாற்று ஏற்பாடு செய்து வடிய வைக்க அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் தாழ்வான இடங்களில் தேங்கி உள்ள மழைநீரை வடிய வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பால்வாதூன்னான் காலனியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் மகாலட்சுமி (வயது 9). அதே பகுதியை சேர்ந்த ராயர் மகள் அனு என்கிற தார்நிஷா(11). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மகாலட்சுமி 4-ம் வகுப்பும், அனு 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அதே பகுதியில் உள்ள கழுதை வெட்டி வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதுபற்றி அறிந்த மகாலட்சுமியும், அனுவும் அதே பகுதியை சேர்ந்த தங்களது தோழிகள் 2 பேருடன் நேற்று மதியம் 1 மணி அளவில் கழுதை வெட்டி வாய்க்காலுக்கு சென்றனர். வாய்க்காலில் தண்ணீர் அதிகளவில் சென்றதால், அவர்கள் 4 பேரும் வாய்க்காலின் கரையோரம் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குளித்துக் கொண்டிருந்த மகாலட்சுமியும், அனுவும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர்கள் இருவரையும் தண்ணீர் அடித்துச் சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது தோழிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டனர்.
இந்த சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளை தேடினர்.
ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு மாணவிகள் இருவரையும் பிணமாக மீட்டனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவிகளின் உடல்களை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி 2 மாணவிகள் இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பர் முத்துக்குமாரின் தந்தை சுகிசந்திரன் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
2 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்ததாக எழுந்த புகாரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் செல்வமுருகன். இவர் நகை பறிப்பு வழக்கில் கைதாகி விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது செல்வமுருகன் மர்மமான முறையில் இறந்தார்.
செல்வமுருகனின் சாவுக்கு காரணமாக இருந்த போலீசார் மீது கொலை வழக்குபதிவு செய்யக்கோரியும், செல்வமுருகனின் உடலை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என செல்வ முருகனின் மனைவி பிரேமா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க விருத்தாசலம் நீதிமன்றத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து கணவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடகோரி கடந்த 19-ந் தேதி பிரேமா விருத்தாசலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த், மர்மமான முறையில் இறந்த செல்வமுருகனின் உடலை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இருந்து செல்வமுருகனின் உடல் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று அவரது உடல் மறுபிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனால் மாலை 4.45 மணிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டதாலும், மருத்துவ கண்காணிப்பாளர் இல்லாததாலும் பிரேத பரிசோதனை செய்யவில்லை. இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தை உலுக்கிய ‘நிவர்’ புயல் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வலுவிழந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கல்பாக்கம் பகுதியில் கரையை கடந்தது.
இதனால் பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. ‘நிவர்’ புயலால் கடலூர் மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், வழக்கத்துக்கு மாறாக மழை கொட்டி தீர்த்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
ஒரே நாளில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் 2,989.10 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது. இதனால் கடலூர் பகுதியில் ஓடும் தென்பெண்ணையாறு, கெடிலம் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கேப்பர்மலை-வண்டிப்பாளையம் சாலையில் தண்ணீர் ஆறாக கரைபுரண்டு ஓடியது.
இந்த மழை வெள்ளம் கடலூர் நகர் பகுதிகளில் உள்ள குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், செம்மண்டலம், கடலூர் முதுநகர் பனப்பாக்கம், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இன்று காலை வெயில் அடித்தது. ஆனால், குடியிருப்பு பகுதியில் உள்ள மழைநீர் வடியவில்லை. புயலால் கடலூர் மக்கள் தப்பினாலும் வீடுகளுக்குள் தண்ணீர் நிற்பதால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்துள்ளனர்.
முதுநகர் பனப்பாக்கம் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றால் படகு மூலம்தான் அங்குள்ளவர்கள் வருகின்றனர். எனவே வெள்ளத்தை வடிய வைக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் வற்புறுத்தியுள்ளனர்.
கடலூர்:
வங்க கடலில் உருவான ‘நிவர்’ புயல் வலுவிழந்து கரையை கடந்தது. பலத்த காற்று வீசியதால் கடலூர் மாவட்டத்தில் விளை நிலங்கள் சேதமடைந்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பார்வையிட்டு அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு எதிர் பார்த்ததை விட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பாதிப்பு குறைவாக காணப்பட்டது. மக்களுக்கு தேவையான உணவு வசதி, தங்குமிடம் அனைத்தையும் தமிழக அரசு செய்திருந்தது.
பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களும் புயலால் பாதித்த மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தனர்.
அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை நாங்கள் உறுதி படுத்தினோம். தமிழக அரசு புயல் பாதிப்பு குறித்து கேட்பதை வைத்து மத்திய அரசு நிதி ஒதுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பண்ருட்டி:
விழுப்புரம் அக்பர் நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டையில் புலவனூர் செல்லும் சாலையில் நகை கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு பாலமுருகன் வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர்.
கடையின் சுவரின் 1½ அடி அகலத்தில் துளை போட்டனர். பின்னர் கடைக்குள் சென்று அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
25-ந் தேதி நேற்று காலை கடைக்கு பாலமுருகன் வந்தார். அப்போது சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த டி.வி., கண்காணிப்பு கேமரா, வெள்ளி-தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து பாலமுருகன் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.






