என் மலர்tooltip icon

    கடலூர்

    • 3 சுரங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் 150- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறோம்.
    • நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் வேலையை விட நாங்கள் கூடுதலாக செய்கிறோம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து நிறைவேற்ற வேண்டுமென அதிகாரியிடம் மனு அளித்தனர்.

    இன்று காலை 20-க்கும் மேற்பட்ட பேர் திரண்டு கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் 3 சுரங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் 150- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறோம். நாங்கள் அனைவரும் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலங்கள் மற்றும் குடியிருப்பு வழங்கி பாதிப்படைந்துள்ளோம்.

    இந்த நிலையில் எங்களுடைய வேலைநேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் வேலை பார்க்க சொல்கிறார்கள். அதற்கு எந்த சம்பளமும் வழங்க வில்லை. கூடுதலாக வேலை செய்ய நிர்பந்தம் விதித்து வரும் நிலையில் எங்களுக்கு சம்பள உயர்வு தரவில்லை . மேலும் நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் வேலையை விட நாங்கள் கூடுதலாக செய்கிறோம்.

    ஆகையால் எங்களுடைய வேலையை நிரந்தர படுத்தி சம்பளம் உயர்த்தி தர வேண்டும். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

    அப்போது போலீசார் உரிய முறையில் மனு அளித்து உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என தெரிவித்ததை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி, 5 பெண்களிடம், 30 சவரன் நகைகளை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
    • நகையை பறி கொடுத்த பெண்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

    சிதம்பரம்:

    கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர், முத்தையா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. பங்காரு அடிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

    விழாவில், புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில் மக்கள் குவிந்ததால், நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சரியான நடவடிக்கை எடுக்காததால், மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி திணறினர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி, 5 பெண்களிடம், 30 சவரன் நகைகளை மர்மநபர்கள் பறித்து சென்றனர். நகையை பறி கொடுத்த பெண்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக அண்ணாமலை நகர், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பண்ருட்டி சுற்றுவட்டாரத்தில் இடி, மின்னல், சூறைகாற்றுடன் கோடை மழை பெய்தது.
    • பண்ருட்டி ஒன்றியம் நடுக்குப்பம் பகுதியில் சூறைகாற்றுடன் மழை பெய்ததால் நூற்றுக்கணக்கான பலாமரங்கள் ஒடிந்து விழுந்தன.

    பண்ருட்டி:

    பண்ருட்டி சுற்றுவட்டாரத்தில் இடி, மின்னல், சூறைகாற்றுடன் கோடை மழை பெய்தது. பண்ருட்டி, புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், அண்ணா கிராமம், கண்டரக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டியது. அனல் காற்று வீசியது. வெயில் தாங்க முடியாமல் வீட்டிலேயே மக்கள் முடங்கினர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 8 மணி அளவில் இடி, மின்னல், சூறைகாற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர்வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பண்ருட்டி ஒன்றியம் நடுக்குப்பம் பகுதியில் சூறைகாற்றுடன் மழை பெய்ததால் நூற்றுக்கணக்கான பலாமரங்கள் ஒடிந்து விழுந்தன.

    இதேபோல தென்னை, வாழை, முந்திரி மரங்களும் காற்றில் சாய்ந்தன. காற்றுடன் மழைபெய்ததால் மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்தது. இதனால் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டு கிராமம் முழுவதும் இருளில் முழ்கியது. மின் ஊழியர்கள் இரவு முழுவதும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பரபரப்பான சூழ்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார்.
    • அவர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் பொதுதீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த கோவிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கோரி பக்தர்கள், சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    ஆனால், கொரோனா தொற்று காரணத்தை காட்டி கனகசபை மீது ஏறி நின்று பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை.

    இது தொடர்பாக பொதுமக்கள் சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. முடிவில் கனகசபை மீது பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள் அரசாணையை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தனர். என்றாலும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கணக்கு வழக்குகளை அறநிலையத்துறை ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவிடப்பட்டது.

    இந்த ஆய்வு நாளை முதல் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆய்வுக்கும், கோவில் பொதுதீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார்.

    அவர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் பொதுதீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தினார். கோவிலில் உள்ள கோ-சாலையையும் பார்வையிட்டார்.

    இது குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யவே வந்தேன். ஆய்வுக்கு வரவில்லை என்றார்.

    • உயிரிழந்தோரில் ஐந்து பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள்.
    • உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் இன்று 12.45 மணியளவில் குளிக்கச் சென்ற சங்கவி (வயது 18) த/பெ. சங்கர், பிரியா (வயது 19) த/பெ.குணாளன், மோனிஷா (வயது 16) த/பெ. அமர்நாத், நவநீதம் (வயது 20) த/பெ. மோகன், சுமிதா (வயது 18), த/பெ. முத்துராமன், காவியா (எ) திவ்யதர்ஷிணி (வயது 10), த/பெ. ராஜ்குரு, மற்றும் பிரியதர்ஷிணி (வயது 15), த/பெ. ராஜ்குரு ஆகிய 7 பேர் குளிக்கும் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருந்ததால், அந்தப் பள்ளப் பகுதியில் உள்ள ஆற்று மணலில் சிக்கி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    உயிரிழந்தோரில் ஐந்து பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்த ஏழுபேரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    • பண்ருட்டி எல்.என்.புரம் நைனார் நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன்கார்த்திக் என்ஜினீயர்.
    • பண்ருட்டியில் என்ஜினீயர் திடீர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

    பண்ருட்டி:

    பண்ருட்டி எல்.என்.புரம் நைனார் நகரை சேர்ந்தவர் ரவி.இவரது மகன்கார்த்திக்(வயது 29), என்ஜினீயர்.

    இவர் வெளி நாட்டில்வேலை பார்த்து விட்டு கடந்த 3 மாதமாக வீட்டில் இருந்து வருகிறார் வீட்டில் பெட்டிகடை நடத்திவந்தார்.வருமானம்போதவில்லை எனமன உளைச்சலில் இருந்து வந்தார்

    இவர் கடந்த 31-ந் தேதி எலிமருந்து சாப்பிட்டார். மயங்கிய நிலையில் இருந்த இவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில்சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை வருகின்றனர்.

    • வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த சம்பவம் அந்த பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    கடலூர், ஜூன்.5-

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் போலீஸ் சரகம் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

    தற்போது கோடை மழை பெய்ததால் இந்த தடுப்பணையில் ஓரளவு தண்ணீர் உள்ளது. எனவே இந்த தடுப்பணையில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் குளிப்பது வழக்கம்.

    அதன்படி இன்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதியில் இறங்கினர்.

    இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். உயிர் பிழைக்க அவர்கள் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்தனர். உடனடியாக ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டனர். அவர்கள் மயங்கிய நிலையில் காணப்பட்டனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது. அந்த வேனில் 7 பேரும் ஏற்றி செல்லப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோடைகால வெப்பம் காரணமாக கடந்த சில மாதங்களாக மின்நுகர்வு அதிகரித்து வருகிறது
    • அதிகளவில் நிலக்கரியை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நெய்வேலி:

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்எல்சியில், சுரங்கப் பணிகளை மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரலாத் ஜோஷி,நேற்று ஆய்வு செய்தார். 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் உஜாலா திட்டத்தின் கீழ் மக்களுக்கு இதுவரை 36.79 கோடி எல்இடி மின்விளக்குகள் விநியோகம் செய்யப்பட்டதன் விளைவாக நாடு முழுவதும் மின்நுகர்வின் அளவு கணிசமாக குறைந்துள்ளது என்றார்.

    எனினும் கோடைகால வெப்பம் காரணமாக கடந்த சில மாதங்களாக மின்நுகர்வு அதிகரித்து வருகிறது என்றும், இதை சமாளிக்க ஏதுவாக, தடையற்ற மின் உற்பத்தியை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

    2040-ம் ஆண்டில் நாட்டின் மின் உற்பத்தி சுமார் 3000 பில்லியன் யூனிட்டுகளாக இருக்கும் என்றும், அதே வேளையில், இந்தியாவின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, 2040 ஆண்டிற்குள் அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி தேவை, சுமார் 1500 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என்றும் கூறினார்.

    கடந்த 8 ஆண்டுகளில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின், மின் உற்பத்தித் திறன், 2740 மெகாவாட்டிலிருந்து 6061 மெகாவாட்டாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

    மேலும் என்எல்சி நிறுவனம், அதன் உற்பத்தித்தி திறனில் 45%-க்கும் மேலாக, அனல் மின்சக்தி மற்றும் முழு மரபுசாரா மின்சக்தி உற்பத்தியை தமிழகத்திற்கு வழங்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்தியாவில் 1-ஜிகாவாட் திறனுடைய, சூரிய மின் நிலையத்தை நிறுவிய முதல் மத்திய பொதுத்துறை நிறுவனம், என்கிற பெருமையை, என்எல்சி இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார்.

    ×