என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பழங்குடியின மக்களுக்கு தையல் மிஷின், பண உதவி ஆகியவைகள் 5 பேருக்கு வழங்கினார்.
    • வனத்துறை சார்பாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதியை ஆய்வு செய்தார்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். நேற்று மாலை அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் பழங்குடியின மக்களுக்கு தையல் மிஷின், பண உதவி ஆகியவைகள் 5 பேருக்கு வழங்கினார்.

    கீழ்புனாச்சி ஆதிவாசி பழங்குடியின மக்கள் வாழும் இடத்தில் வனப்பகுதிக்குள் புதர் போல் காணப்படும் உன்னி செடியிலிருந்து சேர், டேபிள், அழகு பொருட்கள் போன்ற கைவினைப் பொருட்கள் தயாரித்து வருகின்றனர்.

    அதை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டு அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பணம் மற்றும் பொருள் உதவி வழங்கினார். ஆதிவாசி பழங்குடியினர்களுக்கு தண்ணீர் வசதி, பொருள்கள் தயாரிக்கும் இடத்திற்கு செட், உன்னி செடிகளை கொண்டு வருவதற்கு வாகன வசதி ஆகியவைகளை வனத்துறை அமைச்சரிடம் ஆதிவாசி பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் கண்டிப்பாக செய்து தருவதாக உறுதி அளித்தார்.

    அதன் பின்பு சில தினங்களுக்கு முன்பு டாப்ஸ்லிப் மானாம்பள்ளி வனப்பகுதிக்குள் இரவில் அபூர்வமாக காணப்பட்ட மின்மினி பூச்சி காணொளியை பார்வையிட்டு அதை புகைப்படம் எடுத்த ஸ்ரீராம், ராமச்சந்திரன் ஆகியோர்களை வாழ்த்தினார். மேலும் வனத்துறை சார்பாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதியை ஆய்வு செய்தார்.

    ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தருவதாக கூறினார்.

    • மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
    • 2 பேர் குடிபோதையில் தண்ணீர் பாட்டில் வாங்கிய பின் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் சாலை வெல்ஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (30). இவர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீராம் இவரது மனைவியுடன் பெட்டி கடையில் இருந்துள்ளார்.

    அப்போது கடைக்கு வந்த ஜடையம்பாளையம் புதூர் குறிஞ்சி நகரை சேர்நத அருன்குமார் (25), சிறுமுகை சக்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த தீபக்(21) ஆகியோர் கடையில் இருந்த ஸ்ரீராம் மற்றும் இவரது மனைவி ஆகியோரிடம் குடிபோதையில் தண்ணீர் பாட்டில் வாங்கிய பின் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீராமையும் இவரது மனைவியையும் அருன்குமார், தீபக் ஆகியோர் தாக்கி உள்ளனர்.

    இதையடுத்து இவர்கள் இருவரும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அருன்குமார், தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சென்றார்.
    • ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் ஏகமூர்த்தி (வயது 47). கட்டிட காண்டிராக்டர். இவருக்கு யமுனா என்ற மனைவியும், ஹர்சிகா என்ற மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ஏக மூர்த்தி பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சென்றார். 1-வது மலையில் சென்ற போது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மருத்துவ குழுவினருடன் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

    டாக்டர்கள் ஏகமூர்த்தியை பரிசோதனை செய்த போது அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் டோலி மூலம் ஏகமூர்த்தியின் உடலை கீழே கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களும் மீட்கப்பட்டு வருகிறது.
    • ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 20 கடைகளை இடித்து அகற்றினர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களும் மீட்கப்பட்டு வருகிறது. காந்திபுரம் நகர பஸ் நிலையத்திற்கு உட்புறமும் வெளிப்புறமும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்த டீக்கடைகள், செல்போன் கடைகள், செருப்புக்கடைகள், குளிர்பானக்கடைகள் என பல்வேறு கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

    இருப்பினும் பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்ததை தொடர்ந்து இன்று மத்திய மண்டல மாநகராட்சி உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 20 கடைகளை இடித்து அகற்றினர். அப்போது கடையின் உரிமையாளர்கள் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர்.

    • வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டியளித்தார்
    • தெப்பக்காடு யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.7 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடவள்ளி,

    வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கோவையில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி கோவை குற்றாலம், சாடிவயல் யானைகள் முகாம், சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வனத்துறை அதிகாரிகளு டன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மலைவாழ் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    சாடிவயல் யானைகள் முகாமை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.8 கோடி அறிவித்துள்ளார். கோழிக்கமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்துவதற்கும் ரூ.5 கோடி தெப்பக்காடு யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.7 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு வந்து கண்டு களிக்கும்படியும் இவற்றைப்பற்றி தெரிந்து கொள்ளும்படியும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

    மேலும் முதுமலை யானைகள் முகாமில் யானை பாகன்களுக்கும் உதவியாளர்களுக்கும், வீடு கட்டுவதற்கு ரூ.10 லட்சம் தரப்பட்டுள்ளது, மேலும் ஊக்கத் தொகையாக ஒரு லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    வனத்துறையில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையையும் கூடிய விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    ேலும் தற்போது உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எவ்வாறு வனப்பகுதிகளை பாதுகாப்பது, வனவிலங்குகளை பாதுகாப்பது போன்றவற்றிற்காக தனி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறோம்.

    கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான பாதைகளை சீரமைத்து தேவையான கழிப்பறை வசதிகள் அனைத்தையும் மேற்கொள்வதற்கு ரூ.1 கோடி 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மக்களின் கோரிக்கை களுக்கு ஏற்ப வனப்பகுதிக்குள் எந்தெந்த சாலைகளை சரி செய்ய முடியுமா அவற்றை சரி செய்வோம், மேற்கொண்டு அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.

    • சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது.
    • வன ஆர்வலர்கள் பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கோவை குறிச்சி சக்தி நகர் பகுதியில் மிகவும் அரிதாக பார்க்கப்படும் வெள்ளை நிறமுடைய சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு மழை வெள்ளத்தில் எங்கிருந்தோ அடித்து வரப்பட்டுள்ளது.

    இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த வன ஆர்வலர்கள் பாம்பை பத்திரமாக மீட்டு மாங்கரை வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவித்தனர்.

    வெள்ளை நிறத்தில் காணப்படும் அந்த பாம்பை வெள்ளை நாகம் என பொதுமக்கள் பலரும் கூறிய நிலையில் வன ஆர்வலர் அது மரபணு பிரச்சனையால் தோல் நிறமி குறைபாடு காரணமாக இவ்வாறு தோற்றமளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்று தோல் நிறமி குறைபாடுடன் காணப்படும் வெள்ளை நாகபாம்புகள் மிகவும் அரிதானது எனவும் தெரிவிக்கின்றனர்.

    • 96-ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
    • பக்தர்கள் பறவை அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வடவள்ளி,

    கோவை சிறுவாணி சாலை ஆலந்துறையில் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினரின் கோவிலான இக்கோவிலில் 96-ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தத் திருவிழாவை வான வேடிக்கைகளுடன், மேளதாளங்கள் முழங்க பிரம்மாண்டமாக கொண்டாடினர்.

    இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கோவில் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

    நேற்று கோமாரி பூஜை செய்யப்பட்டு இரவு சத்தி கிரகம் எடுத்து அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான இன்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

    இதில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலையில் 501 பக்தர்கள் பூவோடு எடுத்தனர். மேலும் பறவை வாகனத்தில் அலகு குத்துதல், ஆணி கால் செருப்பு, பால்குடங்கள் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சிலர் காந்தாரா போன்ற காவல் தெய்வங்களின் அலங்காரத்துடன் ஊர்வலம் மேற்கொண்டனர். தொடர்ந்து வண்ணமிகு வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். நாளை மாவிளக்கு வழிபாடு, முளைப்பாரி வழிபாடு ஆகியவை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

    • இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் போலீசார் கருமத்தம்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
    • 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் போலீசார் கருமத்தம்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வினோபா நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்றிருப்பதை அறிந்து அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

    இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த அகிலன்(25), திருப்பூரை சேர்ந்த விஜய்(54) என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்காக 1 கிலோ 200 கிராம் கஞ்சா எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கேரளா நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை ஒத்தகால் மண்டபம் அருகே உள்ள அசோக் ரெசிடென்சியை சேர்ந்தவர் ரவி (வயது 48). இவர் மலுமிச்சம்பட்டியில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது கடையில் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ராமன் (50) என்பவர் வேலை பார்த்தார்.

    நேற்று நள்ளிரவு இவர்கள் கடையை மூடி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பழக்கடை உரிமையாளர் ரவி ஓட்டிச் சென்றார். ராமன் பின்னால் அமர்ந்து இருந்தார். மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் தனியார் கம்பெனி அருகே சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக கேரளா நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த ரவி, ராமன் ஆகியோரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தங்க நகை வியாபாரி பரத் க.க.சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை,

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்கள் ரோகித், பரத். தங்க நகை வியாபாரிகளான இவர்கள் 2 பேரும் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி 600 கிராம் தங்க நகைகளை கோவை ராஜவீதியை சேர்ந்த மொத்த நகை வியாபாரியிடம் விற்றனர்.

    இரவாகி விட்டதால் கோவையிலேயே தங்கி விட்டு மறுநாள் அதிகாலை நேரத்தில் தங்களது மோட்டார் சைக்கிளில் ரூ. 4 லட்சம் பணத்துடன் பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிள் க.க.சாவடி- வேலந்தாவளம் ரோட்டில் பிச்சனூர் அருகே சென்றபோது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம குப்பல் 2 பேரையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ.4 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தங்க நகை வியாபாரி பரத் க.க.சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்த பாலக்காட்டை சேர்ந்த மிதூன் (28), ரஞ்சித்(22) அபினேஸ்(27), ரஞ்சித்குமார் (32) ஆகிய 4 பேரை கடந்த 30-ந் தேதி கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தனிப்படை போலீசார கேரளாவில் முகாமிட்டு தேடி வந்தனர். இந்தநிலையில் தனிப்படை போலீசார் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாபாறையை சேர்ந்த பிரமோத் (34), சுனில் (46) ஆகிய 2 பேரையும் இன்று கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணை முடிந்தம் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சரவணகுமார் இந்து அறநிலையத்துறையில் வேலை இருப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • கலைச்செல்வி இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை அருகே உள்ள ராக்கிப்பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் கலைச்செல்வி (வயது 30). இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது கலைச் செல்விக்கு பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர் இளம்பெண்ணிடம் தான் சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறினார்.

    மேலும் இந்து அறநிலையத்துறையில் வேலை இருப்பதாக ஆசை வார்த்தை கூறினார். மேலும் தெரிந்த அதிகாரிகள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தார்.

    இதனை உண்மை என நம்பிய கலைச்செல்வி ரூ.23 லட்சம் பணத்தை தயார் செய்து சரவணகுமாரிடம கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட இவர் போலியான ஆவணங்களை தயார் செய்து பணி நியமன ஆணையை கலைச்செல்வியிடம் கொடுத்தார். அதனை இந்து அறநிலை யத்துறை அலுவலகத்துக்கு சென்று சரி பார்த்த போது அது போலியானது என்பது தெரியவந்தது.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கலைச்செல்வி இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இந்து அறநிலையத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்த சரவண குமார் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள்.

    • மதுக்கரை ரெயில்வே பாதையில் யானைகள் அடிபடுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
    • 22 சதவீதமாக இருக்கும் வனத்தை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கோவை,

    கோவை வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தினை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று பார்வையிட்டடார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மதுக்கரை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ துரிதமாக செயல்பட்டு அணைக்கப்பட்டது. வனத்தீயை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் யானைகள் இறப்பது இயற்கை. இருந்தாலும் இறப்பு குறித்தும், யானைகள் மரணத்தை தடுப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

    வால்பாறையில் சிறுத்தை தாக்கி ஒருவர் காயம் அடைந்தார். அவருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. தேவையான வசதிகள் மேற்கொள்ளவும், துறை சார்ந்த அதிகாரிகளுடன் கோவை,வால்பாறை, ஆனைமலை உள்பட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றோம்.

    சாடிவயல் உள்பட முகாம்களில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றது என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்.

    தமிழக யானை பாகன்களை பயிற்சிக்காக இந்தியாவிலேயே முதல்முறையாக தாய்லாந்து அழைத்து சென்றோம். பாகன்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளது.

    யானைகள் மின்கம்பங்களில் உரசுவதை தவிர்க்க முள்வேலி கட்டி வைத்து இருக்கின்றோம்.செயற்கை நுண்ணறிவு முறையில் மதுக்கரை பகுதியில் ரெயில்வே பாதையில் யானைகள் அடிபடுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வனத்துக்குள் சாலை அமைத்து இருப்பது தவறானது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். 22 சதவீதமாக இருக்கும் வனத்தை 33 சதவீதமாக உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுப்ரத் முகபத்ரா, கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் மற்றும் இயக்குநர் சேவா சிங், வன பாதுகாவலர் மற்றும் கலை இயக்குனர் (ஆனைமலை புலிகள் காப்பகம்) ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×