என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்து 901 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 738 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,534 பேர் உயிரிழந்துள்ளனர். 629 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 74 ஆயிரத்து 169 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,264 பேர் உயிரிழந்துள்ளனர். 205 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த கோரி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கொரோனா நோய்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தள்ளி செல்கிறது. 

    இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 100 சதவீதம் டாக்டர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 65 சதவீதம் டாக்டர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலை உள்ளது.

    இதனால் தங்களுக்கு பணிச்சுமை அதிக அளவில் உள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு அரசு கல்லூரியில் உடனடியாக மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலின் முறையை துரிதப்படுத்த கோரியும் வகுப்பை புறக்கணித்து முதுநிலை மாணவர்கள் 30-க்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ‘நீட்’ தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் மத்திய அரசு உடனடியாக கவுன்சிலிங் முறையில் மாணவர்களை தேர்வு செய்து வகுப்புகளை தொடங்க வேண்டுமென கண்டன கோஷங்கள் எழுப்பினர்
    சிங்கப்பெருமாள் கோவில் அருகே வெள்ளத்தில் சிக்கி மாயமான 8-ம் வகுப்பு மாணவி பிணமாக மீட்கப்பட்டார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த வெங்கிடாபுரம் ஊராட்சிக்குட்ட சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியனருக்கு யூட்டிகா (வயது 13) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். யூட்டிகா செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் வீட்டிலிருந்த யூட்டிகா உள்ளிட்ட 3 பேரும் மழைநீர் வெளியேறுவதை வேடிக்கை பார்க்க நேற்று முன்தினம் மாலை சிங்கப்பெருமாள் கோவில் அருகே சாஸ்திரம்பாக்கம் மதகுக்கு சென்றனர். அங்கு ரெட்டிப்பாளையம் மதகில் இருந்து வெளியேறிய வெள்ளம் விவசாய நிலையத்தில் பாய்ந்து சென்ற போது, யூட்டிகா வெள்ளத்தில் சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

    இதனையறிந்த மறைமலைநகர் தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவியை இரவு முழுவதும் தேடினர்.

    இதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணியளவில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு பனைமரத்தின் கீழேயுள்ள பறாங்கல்லின் இடையே யூட்டிகா சிக்கி பிணமாக கிடந்தார்.

    பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
    இதையடுத்து வெள்ளத்தில் மூழ்கி பலியான மாணவியின் உடலுக்கு செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலஷ்மி மதுசூதனன் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    மாணவி பலியான சம்பவம் சாஸ்திரம்பாக்கம் கிராமத்திலும், அவர் படித்து வந்த பள்ளி மாணவ, மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்பத்தியது.
    ஊரப்பாக்கத்தில் வீட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டு அதன் வழியாக வெள்ளம் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. அதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் தொடர்ந்து வெளியேறி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நந்திவரம் ஊரப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி தேங்கி நிற்கிறது.

    மேலும் ஜெகதீஷ் நகர் 2-வது குறுக்கு தெரு அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் அடையாறு கால்வாய் செல்கிறது.

    இந்த கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி கொண்டிருப்பதன் காரணமாக அடையாறு கால்வாய் அருகில் உள்ள குணசேகரன் என்பவரது வீட்டின் அறையில் திடீரென 10 அடி அகலத்துக்கு உள்வாங்கி திடீர் பள்ளம் ஏற்பட்டது.

    அந்த பள்ளத்தில் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்துக்கு வெள்ளம் ஓடுவதை பார்த்த வீட்டில் இருந்த குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தரை உள்வாங்கிய போது குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றொரு அறையில் இருந்ததால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் தப்பினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கிளாம்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி மெக்கானிக் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    சென்னை தியாகராயநகர் டாக்டர் தாமஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 22). மெக்கானிக். இவர் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சென்றார். பின்னர் தனது நண்பர்களுடன் கிளாம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளித்துகொண்டிருக்கும் போது திடீரென கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கூடுவாஞ்சேரி சாலையில் முதலை வந்ததாக பரவும் வீடியோ குறித்து செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விளக்கம் அளித்துள்ளார்.
    செங்கல்பட்டு:

    தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று காலை முதலே செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் மழை நீர் சூழந்து காணப்படுகிறது. நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன.

    இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் முதலை வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. வீடியோ ஒன்றும், புகைப்படம் ஒன்றும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பலரும் அது குறித்து பேசி இருந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட  கலெக்டர்  ராகுல் நாத் முதலை வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில்,

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சாலையில் முதலை வந்ததாக வெளியான வீடியோ தவறானது. சாலையில் தண்ணீர் போகும் கால்வாயில் சுழற்சி காரணமாக மரக்கட்டை ஒன்று மிதந்தை முதலை என சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர் என்றார்.

    கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    ஐதராபாத்:

    தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர்(வயது 72). கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. அவரது நுரையீரல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அவரது மூத்த மகனும் கொரானாவால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இளைய மகன் அஜய் உடனிருந்து கவனித்து வந்தார்.

    இதற்கிடையே சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு தேவையான பணத்தை கட்டமுடியாமல் அவரது குடும்பம் கஷ்டப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து நடிகர்கள் சிரஞ்சீவி, தனுஷ், சோனு சூட் ஆகியோர் உதவி செய்தனர்.

    சிவசங்கர் மாஸ்டர்

    இந்நிலையில், டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் சிவசங்கர் மாஸ்டரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சிரஞ்சீவி, பாகுபலி இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிவசங்கர் மாஸ்டரின் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவசங்கர் மாஸ்டர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.
    சென்னை பெருநகர பகுதி விரிவாக்கம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி கூட்ட அரங்கத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினரும், செயலாளருமான அன்ஷீல் மிஷ்ரா தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சென்னை பெருநகரப்பகுதி விரிவாக்கம் தொடர்பான பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பேசிய அன்ஷீல் மிஷ்ரா தெரிவித்ததாவது:-

    வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னைப் பெருநகர எல்லை விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய, சென்னை பெருநகரப் பகுதி 1975-ஆம் ஆண்டு 1,189 ச.கி.மீ பரப்பளவில் வரையறுக்கப்பட்டது. இதில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள் 10 ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது.

    இந்திய அளவில் டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களுரூ ஆகிய பெருநகரப் பகுதிகள் முறையே 3,180 சதுர கி.மீ 6,355 சதுர கி.மீ 7,100 சதுர கி.மீ மற்றும் 8,022 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. ஆனால் சென்னைப் பெருநகர பகுதியானது இதுவரை விரிவடையாமல் தொடக்க காலத்தில் இருந்து 1,189 சதுர கி.மீ அளவிலேயே இன்றும் நீடித்து வருகி்றது.

    சென்னை பெருநகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 20 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளை கவனிக்கும் போது சென்னை பெருநகரபகுதிக்குள் ஏற்பட்டுள்ள அதே வளர்ச்சி விரிவாக்க பகுதியிலும் காணப்படுகிறது. ஆனால் சென்னையில் உள்ள அளவு பெரிய கட்டமைப்பு வசதிகள் இந்த பகுதியில் இல்லை இந்த பகுதியின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான திட்டம் எதுவும் தயாரிக்கப்படவில்லை.

    சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம், தற்போதைய பெருநகரப் பகுதிக்குள் பல பெரிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியுள்ளது. அதில் சாலை வசதிகளில் உள் வட்டச்சாலை, வெளி வட்டச்சாலை, நெடுஞ்சாலை, ரெயில் பகுதிகளில் துரித ரெயில் போக்குவரத்து திட்டம், மெட்ரோ ரெயில் திட்டம், பெரிய பஸ் நிலையங்களில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம், புது நகர உருவாக்கத்தில் மறைமலை நகர் மற்றும் மணலி, அங்காடிகளில் கோயம்பேடு பூ, காய்கறி, கனி அங்காடி, சாத்தாங்காடு இரும்பு அங்காடி போன்ற பெரிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. விரிவாக்க பகுதியில் வளர்ச்சி திட்டத்தின் வேகத்தை கருத்தில் கொண்டு, இந்த பகுதியில் சரியான திட்டத்தை செயல்படுத்தவும், பொதுமக்களுக்கான வசதிகளை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த பகுதிக்கான கட்டமைப்புகளை உருவாக்க தனி கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் சென்னை பெருநகர எல்லைபகுதியை விரிவாக்கம் செய்யலாம் என முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான கருத்துகளை பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள், வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகளை கேட்டு எல்லையை விரிவாக்கலாம் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

    ஏற்கனவே திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் சென்னை போன்ற இடங்களில் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி கருத்துகளை பெற்றது போல் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா போன்றவற்றில் பொது மக்களின் கருத்துகளை பெற வேண்டும என்ற நோக்கதோடு முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொதுமக்களின் கருத்துகளை பெற வேண்டும் என்ற நோக்கதோடு சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமம், மக்களின் கருத்துகளை பெற உத்தேசித்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு விரிவாக்கம் தொடர்பான தங்களின் கருத்துகளை ஆய்வு செய்து எல்லையை நிர்ணயிக்க அரசு முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலாஜி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும முதன்மை செயல் அதிகாரி எம்.லட்சுமி, மாவட்ட கலெக்டர் ஆ.ர்.ராகுல் நாத், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தலைமை திட்ட அமைப்பாளர், முழுமைத் திட்டப்பிரிவு சி.எஸ்.முருகன், சென்னை பெருநகர வளர்ச்சி குழும மூத்த திட்ட அமைப்பாளர், முழுமை திட்டபிரிவு காஞ்சனமாலா, மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆதார்ஸ் பச்சோரா, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் இதயவர்மன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள பாலாறு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
    ராணிப்பேட்டை:

    சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 26). இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில், சென்னையிலிருந்து, ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தார். ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள பாலாறு மேம்பாலத்தில் சென்றபோது அடையாளம் செய்த வாகனம் மோதி உள்ளது. 

    இதில் படுகாயமடைந்த வினோத் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீராபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    செங்கல்பட்டு:

    வீராபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பரனூர், வீராபுரம், மகேந்திரா சிட்டி, மருதேரி, சிங்கப்பெருமாள் கோவில், திருத்தேரி, பாரேரி, தென்மேல்பாக்கம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
    கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46).

    இவர் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மகள் ரிக்சிதா (6).

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ் மோட்டார் சைக்கிளில் தனது மகளை கல்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.

    கல்பாக்கம் அணுமின் நிலையம் எதிரே உள்ள ரவுண்டானா அருகே வந்தபோது முன்னால் நின்றுகொண்டிருந்த வேன் கதவை திடீரென திறந்துள்ளார். எதிர்பாராதவிதமாக ரமேஷ் வந்த மோட்டார் சைக்கிள் அந்த கதவில் மோதியது.

    இந்த விபத்தில் ரமேஷ் மற்றும் அவரது மகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பின்பு அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு கல்பாக்கத்தில் உள்ள அணுசக்திதுறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46,388 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,808 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 32 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.
    ×