என் மலர்
செங்கல்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வடகாலனி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47). இவர் சென்னையில் ஒருவரை சந்திப்பதற்காக நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
செங்கல்பட்டு அருகே திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ராஜாகுளிப்பேட்டை அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென தாறுமாறாக ஓடி சாலையில் தடுப்பு சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
டாக்டர்கள் பரிசோதித்த போது வரும் வழியிலேயே ஆறுமுகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. இது குறித்து ஆறுமுகத்தின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யூடியூப் சேனல் ஒன்றில் இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
அவர் கடந்த 9-ந்தேதி இரவு 11 மணியளவில் பணி முடிந்து நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி அமர்ந்து பயணம் செய்தார்.
பெண்கள் பெட்டியில் வேறு பயணிகள் யாரும் இல்லை. இளம்பெண் மட்டும் இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் பெண்கள் பெட்டிக்குள் ஏறினார்.
இளம்பெண் மட்டும் பயணம் செய்வதை கண்ட அவர், திடீரென ஆபாச செய்கையில் ஈடுபட்டு, அநாகரீகமாக நடந்தார். இதனை இளம்பெண் கண்டித்தும், தொடர்ந்து அச்செயலில் ஈடுபட்டார்.
இதையடுத்து இளம்பெண் தனது செல்போனில் வாலிபரின் நடவடிக்கைகளை படம் பிடித்தார். உடனே அந்த வாலிபர் தனது முகத்தை மூடிக்கொண்டு குரோம்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் தப்பி ஓடிவிட்டார்.
இந்தநிலையில் அந்த இளம்பெண் வாலிபரின் அநாகரீக செயல் குறித்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவத் தொடங்கியது.
இது குறித்து அறிந்ததும் பரங்கிமலை, தாம்பரம் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பெண் பயணி முன்பு அநாகரீக செயலில் ஈடுபட்டது மீனம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 23) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட டிபன்ஸ்காலனி 4-வது தெருவில் வசிப்பவர் லட்சுமி (வயது 62).
இவர் தனது தாயான மறைந்த கன்னியம்மாளின் நினைவாக ரூ.20 லட்சம் செலவில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி உள்ளார். தனக்கு வரும் பென்ஷன் தொகையின் ஒரு பகுதியை இந்த கோவிலுக்கு பூஜை செய்ய பயன்படுத்தி வருகிறார்.
மூதாட்டி லட்சுமி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஸ்டெனோகிராபராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். கோவிலில் பூஜை செய்வதற்காக தனியாக பூசாரி ஒருவரையும் அவர் நியமித்து உள்ளார்.
கோவில்களில் நடப்பது போலவே தினசரி பூஜை, வழிபாடு நடக்கிறது. அங்கு கன்னியம்மாளுக்கு 4 அடி உயர சிலை வைக்கப்பட்டுள்ளது. லட்சுமியின் தாய் பாசகோவில் பற்றி அறிந்ததும் அப்பகுதிக்கு ஏராளமானோர் வந்து பார்த்து செல்கின்றனர்.
இதுதொடர்பாக லட்சுமி கூறியதாவது:-
எனது தந்தை ஆறுமுகம் தாய் கன்னியம்மாளிடம் சண்டையிட்டு எங்களை தனியாக விட்டு சென்று விட்டார். ஒரே மகளான என்னை எனது தாய் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார். பல வீடுகளில் பாத்திரம் தேய்த்து என்னை படிக்க வைத்தார்.
தாயை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் திருமணமே செய்து கொள்ளவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு எனது தாய் இறந்து விட்டார். அவர் மறைந்தாலும் அவரது நினைவாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தேன். தாயின் சிலையை மாமல்லபுரம் ஸ்தபதி ஒருவர் வடிவமைத்து கொடுத்தார்.
கோவிலுக்குள் பிள்ளையார், நாகதேவதை, பாலமுருகன், வைஷ்ணவி, பிராமி மற்றும் நவக்கிரகங்கள் சிலைகளையும் வைத்துள்ளேன். பொதுமக்களும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதேபோல் செய்யூர் அருகே உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் தேர்தல்களை கட்டி உள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பரிசு, பணம் கொடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு இடைக்கழிநாடு பேரூராட்சி 19-வது வார்டு கோட்டைக்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஒருவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க குக்கர் வைக்கபட்டு உள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பறக்கும் படை அலுவலர் வெங்கடேசன், உதவி ஆய்வாளர் பாபு, காவலர் சந்திரன் ஆகியோர் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் சோதனை செய்தனர்.
அங்கு வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 10 குக்கர்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை இடைக்கழிநாடு பேரூராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தா ஜெயலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
தாம்பரம்:
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவியது. இதையடுத்து இந்த நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் வாரநாட்களில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது.
இதனால் புறநகர் ரெயில் பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் மின்சார ரெயிலில் பயணிக்க அனுமதிக்ப்பட்டனர். மேலும் பயணிகள் பயணம் செய்ய நேரக்கட்டுப்பாடு, ஞாயிற்றுக்கிழமைகளில் ரெயில் சேவைகள் குறைப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதற்கிடையே தற்போது கெரோனா நோய்த்தொற்று குறைந்துவதுவதை தொடர்ந்து ஊரடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய இருந்த கட்டுப்பாடுகளும படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டது.
புறநகர் மின்சார ரெயில்களில் அனைத்து பயணிகளும் பிப்.1 -ந் தேதி முதல் மீண்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ரெயில் சேவையும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், கெரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு முன்பு இயக்கப்பட்டதைப் போல், இன்று முதல் மீண்டும் புறநகர் ரெயில் சேவை இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை வார நாட்களில் சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் 74 சேவைகளும், சென்னை- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 84 சேவைகளும், சென்னை- கடற்கரைவே ளச்சேரி மார்க்கத்தில் 80 சேவைகளும், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மார்க்கத்தில் 240 சேவைகளும் என மொத்தம் 658 நடையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டது.
சென்னையில் புறநகர் ரெயில் சேவை வழக்கமான நேரங்களில் இயக்கப்படுவதால் ரெயில் நிலையங்களில் பயணிகள் ரெயிலுக்காக காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது.
மேலும் அதிக அளவு ரெயில் சேவை உள்ளதால் மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசலும் இன்று குறைந்து காணப்பட்டது. ரெயில் சேவை அதிகரித்து இருப்பதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக ரெயில் பயணி படப்பையை சேர்ந்த செம்பகவல்லி என்பவர் கூறியதாவது:-
நான் தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். தினமும் நான் பஸ் மூலம் தாம்பரம் வந்து தாம்பரத்தில் இருந்து ரெயில் மூலமாக தி.நகர் செல்வேன்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக ரெயில் சேவை குறைக்கப்பட்டு இருந்தது. பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
இதனால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் ரெயிலுக்காக காத்திருக்கும் நிலை இருந்தது. எனவே நான் பஸ் மூலமாக தி.நகருக்கு சென்றேன். இதன் காரணமாக பயண நேரமும் கூடுதல் செலவும் ஏற்பட்டது.
தற்போது வழக்கமான ரெயில் சேவைகள் விடப்பட்டுள்ளதால் ரெயிலுக்காக இனி நீண்ட நேரம் காதிருக்க வேண்டியது இல்லை. குறித்த நேரத்தில் செல்ல முடியும். எனவே நான் மீண்டும் மின்சார ரெயிலில் செல்கிறேன். ரெயில் சேவை அதிகரித்தது வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன், செல்வம், சகாதேவன், ஏழுமலை. இவர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்குவாரியில் வேலை பார்த்து வருகின்றனர். இன்று காலை வேலைக்காக 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டு இருந்தனர்.
மறைமலை அருகே வந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென 2 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மணிகண்டன், செல்வம், சகாதேவன், ஏழுமலை ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் கடந்த 12, 13ந் தேதிகளில் நீர்நிலைகளில் வசிக்கின்ற பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
இதேபோல் மதுராந்தகம் ஏரி, வேடந்தாங்கல் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரி, குளம் நீர்நிலைப் பகுதிகளில் வசிக்கின்ற பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் வேடந்தாங்கல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 75 வகையான 40 ஆயிரம் பறவைகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டது. தற்பொழுது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் அனைத்து வகையான பறவை இனங்களும் வந்துள்ளன.
தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் பறவைகளை காண சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. தற்பொழுது, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறைந்து காணப்படுவதால் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்து வருவதால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது குறித்து வனச்சரக அலுவலர் லெஸ்லி கூறும்போது, வேடந்தாங்கல் மற்றும் அதனை சுற்றி உள்ள நீர் நிலைகளில் 2 நாட்கள் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 75 வகையான 40 ஆயிரம் பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
வேடந்தாங்கலில் சீசன் இந்த முறை ஜூன் முதம் வரை இருக்கும் என்று எதிர்பாக்கிறோம் என்றார்.
செங்கல்பட்டு:
மறைமலை நகராட்சி 12-வது வார்டில் தி.மு.க. சார்பில் மறைமலை நகர செயலாளர் ஜெ.சண்முகத்துக்கு ஆதரவாக வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ, காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆராமுதன் மற்றும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் எம்.டி.சண்முகம், ஏ.ஜெ.ஆறுகுகம், ஜெ.வி.எஸ்.ரங்கநாதன், கே.எஸ்.ரவி, டி.குணா மற்றும் கழக தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டனர்.
அப்போது தி.மு.க. வேட்பாளர் ஜெ.சண்முகம் 12-வது வார்டில் உள்ள வாக்காளர் மத்தியில், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற்றதும் மறைமலை நகராட்சி அனைத்து வார்டு பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன். கழிவு நீர் மறு சுழற்சி செய்யப்பட்டு நகராட்சி பூங்காக்களுக்கு பயன் படுத்தப்படும்.
அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் பொது உள் சுற்று போக்குவரத்து ஏற்படுத்தப்படும்.
பழவேளி பாலாறு குடிநீர் திட்டம் (நபர் ஒருவருக்கு 200 லிட்டர்) என்ற அளவில் மேம்படுத்தபட்ட சுகாதாரமான குடி நீர் ஒவ்வொரு வீட்டு இணைப்புக்கும் வழங்கப்படும்.
வார்டு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மறைமலை நகரில் நவீன அழகு பொருள் அங்காடிகள் உருவாக்கப்படும். மறைமலை நகர் மக்கள் நலன்காக்கும் வகையில் நகராட்சி சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு இரு கரம் கூப்பி கேட்டுக் கொண்டார். மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக் களிப்பதாக உறுதி கூறினர்.
செங்கல்பட்டு:
வ.உ.சி. மற்றும் பெரியார் ஆகியோரின் அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் பொது மக்களின் பார்வைக்கு காட்சி படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த அலங்கார ஊர்திகள் விரைவில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு வர உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 16-ந் தேதி அலங்கார ஊர்திகள் வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 17-ந் தேதி வருகை தர உள்ளன. அவை பொது மக்களின் பார்வைக்கு காட்சி படுத்தப்பட உள்ளன.
இதையடுத்து அலங்கார ஊர்திகள் வரும் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவேல்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அலங்கார ஊர்திகள் வரும் போது என்னென்ன வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த நிலையில் பூங்காவில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்ட இருப்பிடத்தில் 2 அரிய வகை ஆண் அணில் குரங்குகள் பொதுமக்கள் பார்வைக்காக விடப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் மர்ம நபர்கள் பூங்காவுக்குள் நுழைந்து அணில் குரங்குகள் அடைத்து வைக்கப்பட்ட இரும்பு கூண்டில் உள்ள இரும்பு வேலியை வெட்டி அகற்றிவிட்டு அதில் இருந்த 2 ஆண் அணில் குரங்குகளை திருடிச்சென்று விட்டனர்.
இது குறித்து பூங்கா ஊழியர், அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து பூங்கா வனசரக அலுவலர் வாசு ஓட்டேரி போலீசில் அரிய வகை ஆண் அணில் குரங்குகள் திருட்டு போனது குறித்து புகார் செய்தார்.
போலீசார் வண்டலூர் உயிரியல் பூங்காவில் அணில் குரங்குகள் பராமரிக்கப்பட்ட கூண்டை பார்வையிட்டனர். அப்போது போலீசார், பூங்கா ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நடந்த சம்பவத்தை பற்றி விசாரித்தனர்.
மேலும் பூங்காவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து உள்ளனர். இது குறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிய வகை 2 அணில் குரங்குகளை திருடிய மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் திருடிய அணில் குரங்குகளை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளதால் விமான நிலையம், துறைமுகம் போன்ற பகுதிகளில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
பூங்காவில் அரிய வகை அணில் குரங்குகள் திருட்டு சம்பவம் எதிரொலி காரணமாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் பூங்காவின் நுழைவுவாயில், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட 3 இடங்களில் பார்வையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் பூங்காவில் இருந்து 5 மணிக்குள் வெளியேற வேண்டும். தவறும் பட்சத்தில் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
தென் ஆப்பிரிக்கா பகுதியில் காணப்படும் அரிய வகையை சேர்ந்த 2 ஆண் அணில் குரங்குகள் கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டு வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு பராமரித்து வந்தோம், பார்ப்பதற்கு முகம் மட்டும் குரங்கு தோற்றத்திலும், வால் பகுதி முதல் கழுத்துவரை அணில் உடல் அமைப்பில் காணப்படும், இந்த அணில் குரங்கு அரிய வகை என்பதால் சர்வதேச சந்தையில் இதற்கு அதிக மதிப்பு உண்டு. அணில் குரங்குகள் திராட்சை, அன்னாசி, வெள்ளரிக்காய், கேரட் போன்றவைகளை உணவாக உட்கொள்ளும், மனிதர்களிடம் மிகவும் சாதுவாக பழக கூடியது. இந்த குரங்குகள் எப்படி திருட்டுபோனது என்பது குறித்து பூங்கா தரப்பிலும் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






