என் மலர்
செங்கல்பட்டு
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சங்குதீர்த்த குளம் கோவில் அருகே உள்ளது.
726 அடி நீளமும், 546அடி அகலமும் கொண்ட சுமார் 12 ஏக்கரில் உள்ளது. 3 ஆயிரத்து 400 லட்சம் லிட்டர் நீர் கொள்ளளவு கொண்டது.
12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் சங்கு பிறப்பது அதிசயம். இக்குளத்தில் குளித்தால் காசி, கங்கை, ராமேஸ்வரம் கடலில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஆன்மீக பக்தர்களின் நம்பிக்கை.
இந்த குளம் மாசுபட்டு பாசி படர்ந்து கிடக்கிறது. இதனை கண்ட பக்தர்கள் குளத்தில் படர்ந்திருந்த பாசி-செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் லாரி டியூப் மூலமாக நடுக்குளத்திற்கு சென்று அதனை அகற்றி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
திருமால்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள யார்டுக்கு செல்லும் தண்டவாளத்தில் இன்று காலை ஆண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்றவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தாம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன், செங்கல்பட்டு ரெயில்வே சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
உடல் முழுவதும் எரிந்த நிலையில் காணப்படுவதால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மர்ம நபர்கள் அவரை கடத்தி வந்து கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வைத்து எரித்து இருப்பது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையை திசை திருப்புவதற்காக கொலைக்கும்பல் உடலை தண்டவாளத்தில் வீசி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து அரக்கோணம், திருமால்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாயமானவர்களின் விவரத்தை சேகரித்து வருகிறார்கள்.
கொலையுண்டவரின் விவரம் தெரிந்த பின்னரே கொலையாளிகள் பற்றி தெரியவரும். ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அடுத்த சித்தாமூரில் உள்ள ஓம் சக்தி நகர் 3 வது தெருவை சேர்ந்தவர் சங்கர்ராவ் (வயது 60).
இவரது மனைவி நளினிபாய் (வயது 52). சங்கர்ராவ் சோத்துப்பாக்கத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். நளினிபாய் சித்தாமூர் அருகே முதுகரையில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை இருவரும் 9 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். நளினிபாய் தாம்பரத்தில் தேர்தல் பணிக்காக சென்று விட்டார். சங்கர்ராவ், சோத்துப் பாக்கத்தில் பணியாற்றும் தனது கடைக்கு சென்றுவிட்டு மாலையில் வேலை முடிந்த பின்னர் திருப்பத்தூர் சென்றுவிட்டார்.
திருப்பத்தூரில் இருந்து நேற்று மாலை வீடு திரும்பிய அவர் இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன், ரூ.50 ஆயிரம் பணம், 4 ஜோடி வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நளினிபாய் சித்தாமூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம், கடப்பேரி பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தி.மு.க. கூட்டணியே வெற்றிபெறும். தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை தி.மு.க. கூட்டணியே கைப்பற்றும்.
தி.மு.க.வினர் எதுவும் செய்யவில்லை என்று அ.தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்கின்றனர். ஆட்சிக்கு வந்து 8 மாத காலங்கள் தான் ஆகிறது. இதற்குள்ளாகவே இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்று மு.க.ஸ்டாலின் பெயர் பெற்று உள்ளார். அ.தி.மு.க.வின் பொய் பிரசாரம் எடுபடாது.
சட்டமன்ற தேர்தலில் எப்படி கூட்டணியோடு ஒற்றுமையாக சேர்ந்து வெற்றி பெற்றோமோ அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.
தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேயர் பதவியை பெறுவது குறித்து தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல்-அமைச்சருடன் பேசப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருணகிரி. இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பாண்டிச்சேரிக்கு காரில் புறப்பட்டார்.
மாமல்லபுரம் அரசு மருத்துவமனை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பஸ் திடீரென திரும்பியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக அருணகிரி மற்றும் அவரது மனைவி உள்பட 4 பேரும் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர்.
இதேபோல் மாமல்லபுரம் அடுத்த புலிக்குகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த மற்றொரு கார் விபத்தில் இரண்டு வக்கீல்கள் உட்பட 5பேர் காயத்துடன் தப்பினர்.
இந்த விபத்துக்கள் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வடக்கு மாமல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரை வடகடம்பாடியை சேர்ந்த ஒருவரை ரூ. 5 லட்சம் கேட்டு கடத்திய வழக்கில் மாமல்லபுரம் போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இந்த நிலையில் சரவணனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டர் ராகுல் நாத்துக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து சரவணனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ரிசார்ட் அருகே கடற்கரையில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. பிணமாக கிடந்தவருக்கு சுமார் 55 வயது இருக்கும்.
அவரை யாரேனும் கடத்தி கொலை செய்து வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மாயமானவர்கள் பற்றிய விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
மாமல்லபுரத்தில் இருளர்களின் பாரம்பரிய “மாசிமகம்“ திருவிழா இன்று காலை தொடங்கியது.
இதற்காக நேற்று இரவே ஆயிரக்கணக்கான இருளர்கள் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக மாமல்லபுரத்திற்கு வந்தனர்.
பின்னர் கடற்கரை ஓரத்தில் சேலைகளால் குடில்கள் அமைத்து அங்கு தங்கினர்.
இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் அவர்களது குலதெய்வமான பச்சையம்மன், கன்னியம்மனை கடற்கரை பிடி மண்ணில் செய்து, படையலிட்டு அரிசி மாவில் விளக்கு செய்து, அதில் தீபமேற்றி வழிபட்டனர்.
பின்னர் குழந்தைகளுக்கு மொட்டை போடுவது, சாமி ஆடுவது, திருமணம் நிச்சயிப்பது, திருமணம் நடத்துவது, குறி சொல்லுவது, குறி கேட்பது போன்ற அவர்களது பாரம்பரிய வழிபாட்டு முறைகளை செய்தனர். 25க்கும் மேற்பட்ட திருமணங்களும் நடந்தது.
பின்னர் அப்பகுதிகளில் உள்ள ஏரி, கம்மாய், குளம், குட்டை பகுதிகளுக்கு சென்று மீன் வேட்டையாடியும், மாமல்லபுரம் மார்க்கெட்டில் கறி, மீன் வாங்கியும் திறந்த வெளியில் சமைத்து குடும்பம், குடும்பமாக குடில்களில் அமர்ந்து விருந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
இவர்களின் போக்குவரத்து வசதிக்காக செங்கல்பட்டில் இருந்து சிறப்பு அரசு பேருந்துகள் இன்றும் நாளையும் இயக்கப்படுகிறது.
இரவு பகலாக போலீசார் கடற்கரை அருகாமையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே உயரமான பகுதியில் நின்று கூட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
இவர்களின் மாசிமகம் திருவிழா வருகையால் உள்ளூர் பாத்திரம், விறகு, மளிகை, உணவு, காய்கறி, சாலையோர கடைகள் என அனைத்து வியாபாரமும் களைகட்டுகிறது.






