என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுராந்தகம் அருகே ஆசிரியை வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளை
மதுராந்தகம்:
மதுராந்தகம் அடுத்த சித்தாமூரில் உள்ள ஓம் சக்தி நகர் 3 வது தெருவை சேர்ந்தவர் சங்கர்ராவ் (வயது 60).
இவரது மனைவி நளினிபாய் (வயது 52). சங்கர்ராவ் சோத்துப்பாக்கத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். நளினிபாய் சித்தாமூர் அருகே முதுகரையில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை இருவரும் 9 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். நளினிபாய் தாம்பரத்தில் தேர்தல் பணிக்காக சென்று விட்டார். சங்கர்ராவ், சோத்துப் பாக்கத்தில் பணியாற்றும் தனது கடைக்கு சென்றுவிட்டு மாலையில் வேலை முடிந்த பின்னர் திருப்பத்தூர் சென்றுவிட்டார்.
திருப்பத்தூரில் இருந்து நேற்று மாலை வீடு திரும்பிய அவர் இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன், ரூ.50 ஆயிரம் பணம், 4 ஜோடி வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நளினிபாய் சித்தாமூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






