என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்டலூர் பூங்காவில் திருடப்பட்ட 2 அணில் குரங்குகள் மீட்பு
வண்டலூர் பூங்காவில் திருடப்பட்ட 2 அணில் குரங்குகள் மீட்பு - ஊழியர் உள்பட 4 பேர் கைது
வண்டலூர் பூங்காவில் திருடப்பட்ட 2 அணில் குரங்குகள் கடத்தியது தொடர்பாக ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்காவில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்ட இருப்பிடத்தில் இரண்டு அரிய வகை 2 ஆண் அணில் குரங்குகள் பொதுமக்கள் பார்வைக்காக விடப்பட்டு இருந்தது.
கடந்த 7-ந் தேதி பூங்காவுக்குள் பார்வையாளர்கள் போல் நுழைந்த மர்ம நபர்கள் அணில் குரங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கூண்டில் உள்ள வேலியை வெட்டி அதிலிருந்த இரண்டு ஆண் அணில் குரங்குகளை திருடி சென்றுவிட்டனர்.
இது குறித்து வண்டலூர் பூங்காவின் வனச்சரகர் வாசு, ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அணில் குரங்குகள் திருடப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர்.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவின்படி துணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் பூங்காவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வன உயிரினங்களுக்கான ஆம்புலன்ஸ் டிரைவரான சிங்கபெருமாள்கோவிலை சேர்ந்த சத்தியவேல், அவரது நண்பரான கோவிந்தாபுரத்தை சேர்ந்த ஜானகிராமன் ஆகிய இரண்டு பேரும் திட்டமிட்டு 2 அணில் குரங்குகளையும் திருடியது தெரிந்தது.
கடந்த 7-ந் தேதி மாலை 3.30 மணி அளவில் ஜானகிராமன் பார்வையாளர் போல் பூங்காவிற்குள் வந்துள்ளார். மாலையில் பார்வையாளர் அனைவரும் செல்லும் போது அவர் மட்டும் அங்குள்ள மறைவான இடத்தில் பதுங்கிக் கொண்டார்.
பின்னர் பார்வையாளர், ஊழியர்கள் இல்லாத நேரத்தில் ஜானகிராமன் இரும்பு வேலியை துண்டித்து அணில் குரங்குகளை திருடி இருக்கிறார். இதைத் தொடர்ந்து பூங்காவில் உள்ள மதில் சுவரில் ஏறி குதித்து தப்பிச் சென்று விட்டார்.
இதன் பின்னர் ஜானகிராமனும், சத்தியவேலும் சேர்ந்து காரணபுதுச்சேரியை சேர்ந்த லோகநாதன் என்கிற சூரியாவிடம் கொடுத்து அவரது நண்பரான கொளத்தூரை சேர்ந்த வினோத்திடம் ரூ. 4 லட்சத்துக்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து வண்டலூர் பூங்கா ஒப்பந்த ஊழியர் சத்தியவேல், அவரது நண்பர் ஜானகிராமன், லோகநாதன், வினோத் ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் வினோத்திடம் இருந்த 2 அணில் குரங்குகளையும் மீட்டனர். பின்னர் அதனை பூங்காவில் ஒப்படைத்தனர். 2 அணில் குரங்குகளையும் ஊழியர்கள் கண்காணித்து பாதுகாத்து வருகிறார்கள்.
இந்த வழக்கில் திறமையாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை தாம்பரம் போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
Next Story






