என் மலர்tooltip icon

    அரியலூர்

    • வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
    • அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை கிராமத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் தனது மகளுடன் குடியிருந்து வருகிறார். இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வீட்டின் அருகே இருந்த கல்யாண முருங்கை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் ஒரு பக்க சுவற்றின் சிறு பகுதியும், வீட்டின் மேல் இருந்த ஓடுகளும் உடைந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் வீட்டிற்குள் இருந்த மோகன்தாஸ் மற்றும் அவரது மகள் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    • தீராத வயிற்றுவலியால் அவதிபட்டு வந்தவர் தற்கொலை செய்து கொண்டார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்,

    வி.கைகாட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முருகேசன் மகள் நிஷா (எ) பிரேமா (19). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முருகேசன் மனைவியுடன் அஸ்தினாபுரம் கிராமத்திற்கு வளையல் வியாபாரத்திற்கு சென்று உள்ளார். அப்போது பிரேமாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விக்கிரமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ரோட்டில் நடந்து சென்றவர் மீது பஸ் மோதியதில் உயிரிழப்பு
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    அரியலூர்.

    உடையார்பாளையம் அருகே நாச்சியார்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி லெட்சுமி (வயது 80). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் லெட்சுமி வீட்டை விட்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை கடந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக லெட்சுமி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • அரியலூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது
    • அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பேசினார்

    அரியலூர்,

    அரியலூர் அண்ணாசிலை அருகே நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.நகர செயலாளர் முருகேசன் தலைமைதாங்கினார். நகர தலைவர் மாலாதமிழரசன் முன்னிலை வகித்தார். நகர் மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், துணைதலைவர் கலியமூர்த்தி, இளைஞரணிதுணை அமைப்பாளர் லூயிகதிரவன், மாவட்ட வக்கில் அணி அமைப்பாளர் சின்னதம்பி, பொறியாளர் அணி தங்கை எழில்மாறன், மகளிரணி காந்திமதி, மாவட்டதொழிலாளர் அணி மகேந்திரன், மாணவரணி சக்திவேல், ஒன்றியசெயலாளர் அன்பழகன், நகரபொருளாளர் ராஜேந்திரன், நகரதுணைசெயலாளர் செல்வராணி ரவீந்தர், உதயநிதிஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவர் லோகுசரவணன் உட்பட அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-மக்களின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக பிற மாநில முதல்வர்கள், தமிழக முதல்வரை பாராட்டி வருகின்றனர். கொரோனா நிதி, மகளிர் இலவச பயணத்திட்டம் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டம். ஆனால், புதுமைப் பெண் திட்டம் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்படாத திட்டம். இத்திட்டம் கிராமபுற மாணவிகள் உயர்கல்வி பெற வழிவகை செய்துள்ளது. பெண் கல்வி வளர்ந்தால், நாடு வளர்ச்சி அடையும் என்பதே முதல்வரின் திட்டமாகும்.தமிழகத்தில் நடைபெற்று வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை இந்தியாவே திரும்பி பார்க்கிறது.இவ்வாறு அமைச்சர் கூறினார். கூட்டமுடிவில் நகரதுணை செயலாளர் வக்கில் விஜயகுமார் நன்றி கூறினார்.

    • அரியலூரில் 3 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது
    • கடும் சோதனைக்கு பின்னர் தேர்வெழுத அனுமதி

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூர் விநாயகா பப்ளிக் பள்ளி, அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் பள்ளி, தாமரைக்குளம் ராம்கோ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி என 3 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. மாணவிகள் அணிருந்த காதணி, தங்க சங்கிலி வளையல் உள்ளிட்ட அனைத்து அணிகலன்களையும் கழற்றி பெற்றோரிடம் ஒப்படைத்த பின்னர், வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இத்தேர்வை எழுத 2,078 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 2039 பேர் எழுதினர். 11 மாணவர்கள், 28 மாணவிகள் என 39 பேர் தேர்வெழுத வரவில்லை.

    • கணவரை பிரிந்து தந்தை வீட்டில் இருந்த பெண் குழந்தைகளுடன் மாயம்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    உடையார்பாளையம்,

    வெண்மான்கொண்டான் நாச்சியார் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மனைவி சண்முகப்பிரியா (23). இவர்களுக்கு 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சர்பேஸ்வரன் (4) சங்கமேஸ்வரன் (2) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக சண்முகபிரியா அவரது தந்தை வீடான கீழ விளாங்குடியில் வசித்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் இருந்த அவர் தனது குழந்தைகளுடன் திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை செந்தில் கயர்லாபாத் காவல நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்கு பதிந்து குழந்தைகளுடன் மாயமான சண்முகப்பிரியாவை தேடி வருகிறார்.

    • 17ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது
    • பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தொடரும் என கலெக்டர் அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் நகராட்சியில் உள்ள தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் தற்பொழுது நகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. 17-ந்தேதி வரை இம் முகாம் நடைபெறுகிறது. இதுவரை அரியலூர் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சுமார் 120 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு வாகனத்தின் மூலம் பாதுகாப்பாக கீழப்பழுவூரில் உள்ள நகராட்சி உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்குள்ள நாய்கள் கருத்தடை செய்வதற்கான மையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சையும் மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்துதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அரியலூர் நகராட்சியில் மீதமுள்ள அனைத்து தெரு நாய்களும், முகாம் நடைபெறும் மற்ற நாட்களில் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றம் வெறிநோய் தடுப்பூசி செலுத்தவும் அரியலூர் நகராட்சியின் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அரியலூர் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் இதுபோன்ற பிற நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.

    • பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை
    • கோரிக்கை நிறைவேறாவிட்டால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட தேர்தல் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு என முப்பெரும் விழா ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவர் ராஜாவும், மாவட்ட செயலாளர் பாக்கியராஜும், மாவட்ட பொருளாளர் துரை.நந்தகுமார், மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் புதிதாக பதவியேற்றனர். கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், கிராம நிர்வாக ஊழியர்களுக்கு பணி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், ஐந்தாண்டுகள் பணி முடித்து பயிற்சி முடித்தும் தகுதிக்கான பருவம் முடிக்காத கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் உள்ளனர். இதனால் உரிய பணப்பயன்கள் பெற முடியாமல் உள்ளனர். இரண்டு வார காலத்திற்குள் அனைத்து பணப்பயன்களையும் பெற மாவட்ட வட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அனைத்து வட்ட தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில பிரச்சார செயலாளர் பொய்யாமொழி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கட்டுமான தொழிலுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் தனி அமைச்சகம் ஏற்படுத்த கோரிக்கை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பாக தனியார் கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் மார்டீன் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் வியாபாரிகள் சங்க தலைவர் சுந்தர், அரியலூர் மாவட்டப் பொருளாளர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அரியலூர் மாவட்ட செயலாளர் அறிவழகன் வரவேற்று பேசினார்.தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார், பின்னர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:- எந்த நாட்டில் கட்டுமான தொழில் சரியாக இருக்கிறதோ? அந்த நாட்டில் தொழில் வளம், வேலை வாய்ப்பு, பணப்புழக்கம் பெருகும். பொருளாதார வளர்ச்சி அடைய இந்த தொழிலை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு உள்ளது.

    கட்டுமான தொழிலுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும், கட்டுமான தொழிலை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும், ஜி.எஸ்.டி. வரி கட்டுமான தொழிலை பெருமளவில் பாதிக்கிறது, நகை உள்ளிட்ட ஆடம்பர பொருளுக்கு குறைந்த ஜி.எஸ்.டி. உள்ள நிலையில் கட்டுமான பொருட்களுக்கு 28 சதவீதம் வரை ஜி.எஸ்.டி. உள்ளது. நாட்டில் பெருவாரியான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய தொழிலாக கட்டுமான தொழில் உள்ளது.எனவே ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது ஐந்து சதவீதத்திற்கு வரியை குறைக்க வேண்டும். காலவதியான சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும், தமிழக அரசிடம் கட்டுமான தொழில் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தியுள்ளோம் என்று பேசினார். கூட்டத்தில் பொருளாளர் ஜெகதீசன், திருச்சி மண்டல செயலாளர் புருஷோத்தமன், பெரம்பலூர் மண்டல தலைவர் ராஜாராம், இணை செயலாளர்கள் ஜெயமுருகன், தென்னரசு, சிவகுமார், திருச்சி மண்டல தலைவர் சிவக்குமார், பெரம்பலூர் மாவட்ட தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதில் அரியலூர் மாவட்ட தலைவராக மார்டீனும், மாவட்ட செயலாளராக அறிவழகனும், மாவட்ட பொருளாளராக சுந்தரியையும் மற்றும் புதிய நிர்வாகிகள் பலரும் தேர்வு செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மார்டீனுக்கு பொறியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • இருசக்கர வாகனத்தில் சென்றபோது 2 மர்ம நபர்கள் சங்கிலியை பறித்து சென்றனர்
    • சிசிடிவி கேமிரா உதவியுடன் போலீசார் விசாரணை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழசெங்கல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சூர்யா (வயது 30). இவர்களது 2 வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் சூர்யா தனது இரு சக்கர வாகனத்தில் தாய் வசந்தா மற்றும் குழந்தை இருவருடன் ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு மீண்டும் கீழச்செங்கமேடு கிராமத்திற்கு திரும்பி பொன்னேரி அருகே வந்து கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக பின் தொடர்ந்து இரண்டு சக்கர வாகனத்தில் முகத்தை கர்சிப்பால் மூடிய நிலையில் வந்த 2 மர்ம நபர்கள் சூர்யாவை முந்தி சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். அதிர்ச்சியடைந்த சூர்யா வண்டியை நிறுத்திவிட்டு சத்தமிட்டார். அவரது சத்தம் கேட்டு அங்வழியாக வந்தவர்கள் அவர்களை பிடிக்க முயற்சித்தனர். இருப்பினும் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டனர்.இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத், சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் கங்கைகொண்ட சோழபுரம், குருவாலப்பர் கோயில், ஆமணக்கந்தோண்டி பகுதி கடைகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கண்காணித்து மர்ம நபர்களை தேடி விசாரித்து வருகின்றனர்.பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 150க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது
    • சிகிச்சைக்காக 25 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை நடத்தும் ரத்ததான குழு, சிறுநீரக நோய் மற்றும் பொது அறுவை சிகிச்சைக்கான மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒருங்கிணைப்பு நிறுவன தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ் முருகன், துணை ஆசிரியர் ஏசுதாஸ் மற்றும் பள்ளி சாரணர் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். அதில் மேல் சிகிச்சைக்காக 25 நபர் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில் ஆண், பெண் இருவருக்கும் சிறுநீரக கற்களால் ஏற்படும் வயிற்று வலி, வாந்தி, நீர் கடுப்பு, சிறுநீரக வீக்கம், சிறுநீரக பாதையில் அடைப்பு மற்றும் பொது அறுவை சிகிச்சையாக பித்தப்பை கல்லுக்கான அறுவை சிகிச்சை, மார்பக கட்டி அறுவை சிகிச்சை, தைராய்டு கட்டி அறுவை சிகிச்சை, குடல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, தீக்காயத்திற்கான அறுவை சிகிச்சை, மூலத்திற்கான அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானது
    • வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்ப்பு

    உடையார் பாளையம்,

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து ஒரு லாரி நிலக்கரி ஏற்றிக்கொண்டு அரியலூரில் உள்ள ஒரு சிமெண்டு ஆலைக்கு சென்றது. அரியலூர் மாவட்டம், தா.பழூர் அம்பேத்கர் நகர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது, அந்த லாரியின் அச்சு உடைந்து அதில் இணைக்கப்பட்டிருந்த சக்கரங்கள் தனியாக கழன்று ஓடின. இதனால் பாரம் தாங்காமல் லாரியின் அச்சுப்பகுதி சாலையில் உரசியபடி நின்றது. லாரியில் இருந்து கழன்று ஓடிய சக்கரங்களில் இருந்தும், அச்சு உடைந்த பகுதியில் இருந்தும் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் லாரியின் பின்னால் வந்த வாகனங்கள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக நின்றுவிட்டன. அந்த நேரத்தில் எதிர்திசையில் வேறு வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இந்நிலையில் அக்கம், பக்கத்தில் இருந்த மக்கள் சக்கரங்களின் மீதும் லாரியின் அச்சுப்பகுதி மீதும் தங்கள் வீடுகளில் இருந்து எடுத்து வந்த தண்ணீரை ஊற்றி புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த வாலிபர்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டனர். லாரியில் அளவுக்கு அதிகமான சுமை ஏற்றப்பட்டு வந்திருக்கலாம் என்றும், நீண்ட தூரம் ஓய்வு இல்லாமல் லாரி இயக்கப்பட்டிருக்கலாம் என்றும், இதனால் இவ்வாறு அச்சு உடைந்து சக்கரங்கள் கழன்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே தொடர்ந்து இது போன்ற சுமையை ஏற்றி வரும் லாரிகள் குறிப்பிட்ட அளவு பயணத்திற்கு பிறகு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, பின்னர் இயக்கப்படுவது மிகவும் அவசியம். இல்லையென்றால் இது போன்ற திடீர் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சில டிரைவர்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×