என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார்

    அரியலூர்,

    மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவை கண்டித்தும் உரிய விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஷேக்தாவூத் பங்கேற்று ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் காந்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க உறுப்பினர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
    • போலீசார் வழக்கு பதிந்து செல்போன் டவர் சிக்னலை வைத்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

    ஜெயங்கொண்டம்,

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் வினோத் (வயது 23). கட்டிட தொழிலாளியான இவர் பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அரியலூர் மாவட்டம் கரடி குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு 15 வயது சிறுமியை பேஸ்புக் மூலம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வினோத் பெங்களூருக்கு வருமாறு அழைத்துள்ளார்.

    இதனையடுத்து சிறுமி புறப்பட்டு பெங்களூருக்கு சென்று விட்டார். பின்னர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தன ச்செல்வன் தலைமை யிலான போலீசார் வழக்கு பதிந்து செல்போன் டவர் சிக்னலை வைத்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அரியலூரில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
    • தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.இதன்படி ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பொதுமக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) திரு.எஸ்.முருகண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


    • விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுப்பொருட்களை உழவன் செயலில் பதிய வேண்டும் என அரியலூர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
    • விவசாயிகள் இச்செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு வேளாண் துறையின் திட்டப்பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இடுப்பொருள்களை உழவன் செயலில் மூலம் பதிவு செய்து பயன் பெறலாம் என்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- அரியலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டங்களில் பயன்பெறுவதற்காகவும், விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், அவர்களது தேவையை முன்கூட்டியே வேளாண்மைத்துறைக்கு தெரிவித்து முன்னுரிமை அடிப்படையில் திட்டப் பலன்களை பெறுவதற்காகவும், உழவன் செயலியினை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் இச்செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு வேளாண் துறையின் திட்டப்பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர். அரியலூர் மாட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் கைபேசியில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து திட்டப் பலன்களை பெற்றிட உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். முன்பதிவு செய்வதினால் வழங்கப்படும் இடுபொருள்கள் மற்றும் திட்டப் பலன்களை உரிய காலத்தில் பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

    • அரியலூரில் சுண்ணாம்புக்கல் குவாரி தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது
    • இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதுப்பாளையம் சுண்ணாம்புக்கல் மற்றும் சுண்ணாம்பு கன்கர் குவாரிக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கும், நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கும் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் சில நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டம் நடக்கும் தேதி பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது செய்யபட்டார்
    • போலீசார்,அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தில் அரசு பானங்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சிலால் பகுதியில் சந்தேகத்துக்குரிய இடங்களில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சுனாமி தெற்கு தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் அழகுவேல் (44) என்பவர் வீட்டில் சோதனை இட்டபோது அவரது வீட்டில் 19 மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கோட்டியால் நல்ல தண்ணீர் ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன
    • இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோட்டியால் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நல்ல தண்ணி ஏரி, கிராமத்தின் பெரும்பகுதி தண்ணீர் தேவையை தீர்த்து வருகிறது. ஊராட்சி சார்பில் மேல்நிலைத் நிறுத்திய தொட்டி மூலம் தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. மேலும் கால்நடைகளுக்கான தண்ணீர் தேவைகள், மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு குளிப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு கோட்டியால் கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த ஏரியில் கடந்த சில மாதங்களாக மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதக்க துவங்கின. இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தினருக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி ஏரியை முழுவதும் தூர் வாரி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி நிறுத்தப்பட்டது.தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீன்கள் குவியல் குவியலாக செத்து கரை ஒதுங்கி மிதக்கிறது.

    இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஏரியிலிருந்து செத்து மிதக்கும் மீன்களை பறவைகள் ஏரியிலிருந்து கொத்தி சென்று அருகில் உள்ள வீடுகளின் கூரைகள் மொட்டை மாடி தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் போடுகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி கிராமத்தின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மண்ணின் தன்மை மாறியதால், தண்ணீரில் விஷத்தன்மை ஏற்பட்டதா? அல்லது ஏதாவது விஷமிகளின் செயலா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    • பாம்பு கடித்து தொழிலாளி இறந்தார்
    • சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி நடுத்தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் (வயது 47) என்பவர், இரவு நேரத்தில் கடைவீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது வழியில் இருட்டாக இருந்த பகுதியில் தெருவில் கிடந்த பாம்பை மிதித்து உள்ளார். இதனால் சிவக்குமாரின் காலை பாம்பு கடித்து உள்ளது. இது குறித்து சிவக்குமார் தனது மனைவி உஷாவிடம் கூறவே, அக்கம்பக்கத்தினர் உதவியுடன், சிவக்குமார் தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, பின்னர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து சிவகுமாரின் மனைவி உஷா தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆண்டிமடத்தில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
    • கூட்டம் ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டம் ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு துறை சார்ந்த துறை ரீதியான அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. இதனால் பொதுமக்களுடைய அடிப்படை பிரச்சனைகளை சொல்வதற்கு சிரமமாக உள்ளது. ஒன்றிய குழு கூட்டத்திற்கு அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும், மேலும் அங்கன்வாடி அலுவலகம் உடனடியாக கட்டித் தர வேண்டும், நெசவாளர் குடியிருப்பு கட்டிடம் வாடகை இடத்தில் உள்ளது.

    அதை உடனடியாக அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய கவுன்சிலர்கள் முன்வைத்து பேசினர். இதற்கு பதில் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் நீங்கள் கூறிய அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே பா.ஜ.க. பெண் நிர்வாகி வீட்டின் கொட்டகை அடித்து நொறுக்கப்பட்டது
    • அடித்து நொறுக்கிய மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(வயது 45). இவரது மனைவி பரமேஸ்வரி(35). பல் டாக்டரான இவர், பா.ஜ.க. மருத்துவர் அணி மாவட்ட தலைவராக உள்ளார். ஆனந்தராஜ், பரமேஸ்வரி ஆகியோர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் மற்றும் வயல்களை பரமேஸ்வரியின் தந்தை பாலசுப்பிரமணியன் பராமரித்து வருகிறார். இதில் நாகல்குழி சாலையில் ஆனந்தராஜுக்கு சொந்தமான வீடும், தோட்டமும் உள்ளது. அதனை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிற்கு முன்பு ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுடன் கூடிய 2 கொட்டகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை, அவரது மகன் ஹரிஹரசுதன், அவரது சம்பந்தி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கொண்ட கும்பல் சேர்ந்து, இடம் சம்பந்தமான முன்விரோதம் காரணமாக ஆனந்தராஜின் இடத்தில் அத்துமீறி புகுந்து வீட்டை சுற்றி இருந்த கம்பிவேலி, அருகில் இருந்த கம்பி வேலி, கொட்டகை ஆகியவற்றை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பரமேஸ்வரியின் தந்தை பாலசுப்பிரமணியன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரை, ஹரிஹரசுதன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமணமான பெண் மாயமாகி உள்ளார்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கூத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தனபால்(வயது 57). இவரது மகள் கவுசல்யா (33). இவரை காரைக்காட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வேலுசாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கவுசல்யா கூத்தங்குடியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்து விட்டார். கடந்த 3-ந் தேதி காலை தா.பழூர் அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து தா.பழூர் போலீசில் தனபால் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவை தேடி வருகிறார்.

    • அரியலூரில் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    • தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

    அரியலூர்,

    அரியலூர் நகர் பகுதியான பெரிய அரண்மனை தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 60). இவர் அப்பகுதி நாட்டாண்மையாக இருந்து வருகிறார். இவரது மகன் கார்த்திகேன் (38). இவருக்கு திருமணமாக ரேவதி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.கார்த்திகேன் அரியலூரை அடுத்த சிறுவளூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். முதலில் வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு இணங்க அதற்கான முன்னேற்பாடு பணிகளை கவனித்து வந்தார். அதேபோல் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவைகளையும் பள்ளிக்கு சென்று பார்த்துக்கொண்டார்.இதற்கிடையே நேற்று காலை முதல் கார்த்திகேயன் மிகுந்த விரக்தியில் இருந்தார். அவரது மனைவி காரணம் கேட்டபோது, எதுவும் இல்லை என்று கூறி மறுத்துவிட்டார். அப்போது வீட்டின் தனி அறைக்கு சென்ற அவர் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தவாறு திடீரென்று மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு அருகிலேயே பூச்சி மருந்து பாட்டில் கிடந்துள்ளது.இதையடுத்து அவரை அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் இன்று காலை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் கார்த்திகேயன் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 14-ந்தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×