என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூரில் வீட்டில் இருந்த இளம்பெண் திடீர் மாயமானார்
    • புகாரின் பேரில் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஜூப்பிலி ரோட்டு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் சங்கீதா (வயது 24). வீட்டில் இருந்த சங்கீதாவை திடீரென காணவில்லை. இதனால் அவரை உறவினர்கள், தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து விஜயகுமார் அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கீதாவை தேடி வருகின்றனர்.

    • பெரம்பலூர் செஞ்சேரியில் சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • சாராய ஊறல்கள் அங்கேயே கொட்டி அழிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மாட்டு கொட்டகையில் சாராய ஊறல் போட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் பெரம்பலூர் எஸ்.ஐ. சண்முகம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கு 250 லிட்டர் அளவுள்ள சாராய ஊறல் போடப்பட்டிருந்ததும், அதனை செஞ்சேரி மேற்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் விஜய்(30) என்பவர் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார்சாராய ஊறலை அங்கேயே கொட்டி அழித்து விட்டனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து சாராயம் காய்ச்சிய விஜயை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
    • முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்று அறிவிப்பு

    அரியலூர், 

    அரியலூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய பகுதியிலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் இந்த நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.50-ம், சேர்க்கை கட்டணமாக ஒரு ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185-ம், இரண்டாண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195-ம் செலுத்த வேண்டும்.இணையதளம் வாயிலாக நேரடி சேர்க்கை வரும் 16-ந் தேி வரை நடைபெறுகிறது.

    • அரியலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது
    • சுய உதவிக் குழுக்கள் , பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் குறைந்த வட்டியில் கடன் பெற மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக் குழுக்கள், பெண்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அரியலூர் நகர கூட்டுறவு வங்கி மற்றும் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 9 கிளைகள் மூலமாக பயிர்கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டுக்க டன்(டாப்செட்கோ), சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கடன் (டாம்கோ )ஆதிதிராவிடர் நலக் கடன் (தாட்கோ), கைவினைக் கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த, அவர்கள் தம் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்கள், இயந்திரங்கள் வாங்க (டாம்கோ), சுயஉதவிக்குழு கடன் போன்ற கடன்கள் தனிநபர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நபர் ஒருவருக்க வீட்டுக் கடன் மற்றும் வீட்டு அடமான கடன், சுய உதவிக்குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரையிலும், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரையிலும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.இந்த திட்டங்களில் கடன் கோரும் பயனாளிகள், தங்கள் ஆதார், குடும்ப அட்டை நகல், வருமானச் சான்று, பிறப்பிடச் சான்று, ஜாதிச் சான்றிதழ், தொழில் வரி ரசீது மற்றும் இதர ஆவணங்களை சமர்ப்பித்து கடன்களை பெறலாம்.மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களுடன் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அட்டை சமர்ப்பித்து கடன் பெறலாம். மேலும், கடன் பெறுவது தொடர்பான விவரங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 9 கிளைகள் மூலமாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • அரியலூரில் எண்ணெய் பனை நடவு தொடங்கியது
    • மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழக்கொளத்தூர் கிராமத்தில் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய் பனை திட்டத்தின் கீழ் எண்ணெய் பனை நடவு நிகழ்வு நடைபெற்றது.அரியலூர் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா இதில் கலந்து கொண்டு தொடங்கி வைத்து, பனை மரக்கன்றுகளை நடத்து வைத்தார். அரியலூர் எம்.எல்.ஏ., சின்னப்பா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற, இந்த விழாவில் கலெக்டர் பேசும்போது, பாமாயில் மர சாகுபடியில் குறைவான சாகுபடி செலவு, வேலையாட்கள் தேவை குறைவு, மழை, வெள்ளம், களவு சேதம் இல்லை, நீர், உர நிர்வாகத்திற்கேற்ப மகத்தான மகசூல், தரமான கன்று விநியோகம், உயர் தொழில்நுட்ப ஆலோசனைகள், முத்தரப்பு அடிப்படையில் வங்கி கடன், இருதரப்பு ஒப்பந்த அடிப்படையில் உத்திரவாத கொள்முதல், பெரு விவசாயிகளின் பாதுகாப்பு தொழில்முறைகள் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு நிலையான மாத வருமானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்துள்ளது என்று அவர் பேசினார்.தொடர்ந்து வேளாண்மைத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர்ராமகிருஷ்ணன், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) இந்திரா, திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர்சுமதி அசோகசக்கரவர்த்தி, வட்டாட்சியர்கண்ணன், ஊராட்சிமன்றத் தலைவர்கள், விவசாயிகள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றம் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஆவேசத்துடன் கோஷங்களை எழுப்பினர்
    • சுரங்ப்பாதை கேட்டு போராடிய மக்களை தகாத வார்த்தையால் திட்டியதாக குற்றச்சாட்டு

    அரியலூர்,

    ஜெயங்கொண்டம் அருகேயுள்ள குறுக்குச் சாலையில், விக்கிரவாண்டி, தஞ்சாவூர் இடையே நான்கு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சுண்டிப்பள்ளத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளி அருகேயும், குறுக்குச் சாலையிலுள்ள ஹெலன் கெல்லர் பள்ளி அருகேயும் சுரங்கப் பாதையுடன் கூடிய அணுகுச் சாலை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர்.இதையடுத்து, வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின் போது, மேற்கண்ட கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்தார்.இந்நிலையில் மேற்கண்ட இடங்களில், தொடர்ந்து சாலைப் பணிகள் நடைபெற்று வருவதை அறிந்த அப்பகுதி மக்கள், குறுக்குச் சாலைப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர்(பொ)ஜெகன்நாத், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அநாகரிகமான வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், இன்ஸ்பெக்டருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் ஜெயங்கொண்டம் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலர் தமிழ்ச்செலவன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.மீனா, டி தியாகராஜன், பத்மாவதி ,சொக்கலிங்கம் பன்னீர்செல்வம், இந்திரா, ஞானசுந்தரி, கலைச்செல்வி ,சங்கீதா ,ரேவதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • ஆடி வெள்ளியை முன்னிட்டு அரியலூர் மேலத்தெரு பெரியநாயகி அம்மனுக்கு பண அலங்காரம்
    • 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயில் பண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது

    ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு அரியலூரில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம், பிரார்த்தனை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் மேலத்தெரு பெரியநாயகி அம்மனுக்கு பணத்தாள்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை கொண்டு பண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை கண்டு தரிசித்து சென்றனர். 

    • அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்றது
    • முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி போட்டிகளை தொடக்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிகளுக்கிடையே குறுவட்ட அளவிலான குடியரசு, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடக்கி வைத்தார். போட்டியில் 15 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், துணைத் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர், அரியலூர் நகர் மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர் ராஜேஷ், விளையாட்டு குழுத்தலைவர் அருண்ராஜ் எழில்மாறன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ப.தேகளீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேற்கண்ட போட்டிகளின் நடுவராக உடற்கல்வி ஆசிரியர்கள் ரவி , வீரபாண்டியன் , செல்வ பாண்டியன் , தினேஷ் குமார் , இளவரசன் ,வில்லாளன் , சம்பத் , ஜபருல்லா ஆகியோர் செயல்பட்டனர்.விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரவி , உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.
    • பள்ளி மேலாண்மை குழு, சிறந்த குழுவிற்கான விருதினை பெற வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் அகிலா தலைமை வகித்தார். கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது, பள்ளி மேலாண்மை குழு சிறந்த குழு காண விருதினை பெற வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை வரவேற்றார். முடிவில் ஆசிரியர் தனலட்சுமி நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தில்குமரன், கோகிலா.செவ்வேள், இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாளிகை மேடு, கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்
    • உட்க்கோட்டைப் பகுதியில் 7 மீ நீளம், 72 செ.மீ அகலமுடைய கல்தூண்னையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு ஆய்வு செய்தார்.கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியும் அமையவுள்ள இடத்தினை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம்.தென்னரசு, பின்னர், மாளிகைமேடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார்.அங்கு, பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருள்களின் விவரம் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து உட்க்கோட்டைப் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியையும், அங்கு கண்டெடுக்கப்பட்ட மதில் சுவருக்கு நிறுத்தப்பட்டதாக கருதப்படும் 7 மீ நீளம், 72 செ.மீ அகலமுடைய கல்தூண்னையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலர் க.மணிவாசன், மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அருங்காட்சியக ஆணையர் அரவிந்த், சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், அகழாய்வு பணிகள் இணை இயக்குநர் சென்னை சிவானந்தம், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கடலூர் பரணிதரன், அகழாய்வு பணிகள் இயக்குநர் பிரபாகரன், துணை இயக்குநர் பாக்கியலெட்சுமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • ஆண்டிமடத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
    • அனுமதி இல்லாமல் ஏரிகளில் மண் அள்ளுவதாக கூட்டத்தில் குற்றச்சாட்டு

     ஆண்டிமடம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் வைத்தி தென்மொழி வட்டார வளர்ச்சி அலுவலர் தேவி கிராம ஊராட்சி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் ஒன்றியங்கள் உறுப்பினர்கள் அனுமதி பெறாமல் ஏரிகளில் மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் மற்றும் நாகப்பந்தல் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் பெரிய கிருஷ்ணாபுரம் நியாய விலை கடை புதிதாக கட்டித் தர வேண்டும்.பின்னர் ஒன்றிய குழு தலைவர் கூறுகையில் ஒன்றிய குழுவிற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்று ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து பேசினார். மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு துறைசார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொன்பரப்பி அரசினர் மாணவியர் விடுதியில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட்டார்
    • குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் விடுதிக்கு தனது சொந்த செலவில் ஆழ்குழாய் கிணறு அமைத்துத் தரப்படும் என தெரிவித்தார்

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி மாணவியர் கோரிக்கையினை ஏற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொன்பரப்பி அரசினர் மாணவியர் விடுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அரியலூர் மாவட்டத்தில் செந்துறை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்கள்.

    அப்போது பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி விடுதி மாணவிகள் தங்களது விடுதிக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பழுதடைந்த சுற்றுச்சுவரினை சீரமைத்தல், கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை நிறைவேற்ற கோரி மனு வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் உடனடியாக பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதியினை நேரில் சென்று பார்வையிட்டு.

    குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர், மாணவிகளின் கோரிக்கையினை ஏற்று விடுதிக்கு உள்ளே குரங்குகள் வராமல் இருக்க உடனடியாக பாதுகாப்பு வலைகளை அடித்துத்தரவும், பழுதடைந்த சுவர்களை சீரமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் விடுதிக்கு தனது சொந்த செலவில் ஆழ்குழாய் கிணறு அமைத்துத் தரப்படும் என தெரிவித்தார். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு விடுதி மாணவிகள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    ×