என் மலர்
அரியலூர்
- அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டத்தில்பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- மாற்று திறனாளிகளுக்கு கலெக்டர் ஆனிமேரி சுவர்ணா வழங்கினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து 93 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு இம்மனுக்கள் மீது உரிய நடிவக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார். மேலும் இக்கூட்டதில் காது கேளாத மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து காதொலி கருவி வேண்டி பெறப்பட்ட ஆறு மனுதாரர்களுக்கு இக்கூட்டத்திலேயே உடனடியாக ரூ.24,000 (இருபத்தி நான்காயிரம்) மதிப்பீட்டில் காதொலி கருவிகள் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ.1,06,000 (ஒரு இலட்சத்து ஆறாயிரம்) மதிப்புள்ள பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஒன்றும் ஆகமொத்தம் ரூ.1,30,000 (ஒரு இலட்சத்து முப்பதாயிரம்) மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- அரியலூர் சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு
- அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி சுவர்ணா அறிவிப்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இருக்கும் சுற்றுலா சார்ந்த நிறுவனங்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்தது:உணவுடன் கூடிய உறைவிட வசதி, சாகச சுற்றுலா ஏற்பாடு, கேம்பிங் ஆப்ரேட்டர் மற்றும் கேரவன் ஆப்ரேட்டர் ஆகியவற்றை நடத்தும் நிறுவனங்கள் தமிழக அரசால் வெளியி டப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து அரசாணைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.எனவே அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மேற்கண்ட நிறு வனங்கள் சுற்றுலாத்துறை இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.மேலும், விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் 2 ஆவது தளத்தில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி 9787484754, 7397715685 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.
- அரியலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம், சூரியகாந்தி, வேப்பங்கொட்டை ஏலம் நடைபெற்றது
- ரூ.1.42 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது
அரியலூர்,
அரியலூர் ரயில் நிலையம் அருகேயுள்ள ஒழங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் மக்காச்சோளம், சூரியகாந்தி, வேப்பங்கொட்டை ஆகிய பொருள்கள் திங்கள்கிழமை ஏலம் போனது.அரியலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், திங்கள்கிழமை மறைமுக ஏலத்துக்கு வந்த 5 விவசாயிகளுடைய 3,102 கிலோ மக்காச்சோளம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.22.91}க்கும் குறைந்த பட்சமாக ரூ.22.81க்கும் ஏலம் கேட்கப்பட்டு மொத்தம் ரூ ரூ.70,907 விலைபோனது.அதனை தொடர்ந்து 2 விவசாயிகளுடைய 1,155 கிலோ சூரியகாந்தி அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.40.21}க்கும், குறைந்தபட்சமாக ரூ.32.09}க்கும் ஏலம் கேட்கப்பட்டு மொத்தம் ரூ.41,782}க்கு விலைபோனது .இதே போல் விவசாயி ஒருவருடைய 439 கிலோ வேப்ப வத்தல் கிலோ ஒன்றுக்கு ரூ.48.42 கேட்கப்பட்டு ரூ.21,256 விலைபோனது. மேலும் ஒரு விவசாயினுடைய 72 கிலோ வேப்பங்கொட்டை கிலோ ஒன்றுக்கு 120.2 விலை கேட்கப்பட்டு 8,654}க்கு விலைக்கு போனது. ஆக மொத்தம் ரூ.1,42,599க்கு வர்த்தகம் நடைபெற்றது.
- மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த லாரி ஓட்டுநரின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டம்
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சு வார்த்தை
அரியலூர்,
அரியலூர் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த லாரி ஓட்டுநரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி, அவரது உறவினர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.கா.அம்பாபூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் ஆனந்தராஜ்(28). முனியங்குறிச்சியிலுள்ள ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக் சுரங்கத்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர், ஞாயிற்றுக்கிழமை சுரங்கம் முன் லாரியை நிறுத்திய போது, பின்பக்க தானியங்கி கதவு மூடாமல் இருந்துள்ளது.இதை சரி செய்வதற்காக ஆனந்தராஜ், டிப்பரை தூக்கியபோது, மேலே சென்ற மின்கம்பி மீது உரசியதில், மின்சாரம் பாய்ந்து ஆனந்தராஜ் உயிரிழந்தார். இந்நிலையில், ஆனந்தராஜூன் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி கொல்லாபுரம் கிராமத்திலுள்ள தனியார் சிமென்ட் ஆலை முன்பு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற அரியலூர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
- அரியலூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் 384 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளது
- கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 384 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்துக்கு, ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- வீட்டில் இருந்த அடுப்பில் காகிதத்தை எரித்த பெண்ணின் உடலில் தீப்பிடித்து எரிந்ததால் உயிரிழந்தார்
- சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே முனியங்குறிச்சி கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. இவரது மனைவி வள்ளி(வயது 35). இவருக்கு கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று செல்வம் வேலைக்கு சென்று விட்டநிலையில், வீட்டில் தனியாக இருந்த வள்ளி விறகு அடுப்பில் காகிதங்களை போட்டு கொளுத்தியுள்ளார். அப்போது வள்ளியின் உடையில் தீப்பற்றி உடலில் பரவியது. இதனால் அவர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து வள்ளியை மீட்டு, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பிளஸ்-2 மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
- அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவின்பேரில் கைது
அரியலூர்,
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முருகேசனின் மகன் அன்பரசு(வயது 21). இவர் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி, அவரை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி அன்பரசுவை கைது செய்து, ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி நடத்திய விசாரணையில், அன்பரசு ஏற்கனவே இதேபோன்ற குற்றச்செயலில் ஈடுபட்டு, அவர் மீது தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்திலும் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு இன்ஸ்பெக்டர் சுமதி கேட்டுக்கொண்டதன்படி, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று அன்பரசுவை குண்டர் தடுப்பு சட்டத்தின்படி தடுப்புக்காவலில் அடைக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அன்பரசு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, உத்தரவு நகல்கள் திருச்சி மத்திய சிறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.
- சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது
- மேலாண்மை குழுவினர் பள்ளியில் ஆய்வு நடத்தினர்
அரியலூர்,
அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் அகிலா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதுடன், பள்ளியின் தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறையுடன் செயல்படுவது என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, குடிநீர், கழிவறை, வகுப்பறை, வளாக தூய்மை குறித்து பள்ளி மேலாண்மை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை வரவேற்றார். முடிவில் தனலட்சுமி நன்றி கூறினார்.
- அரியலூரில் புகையிலை பொருட்களை விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உடையார்பாளையம் ராஜவீதி தெருவை சேர்ந்த ராஜசேகர் (வயது 48), எல்லைக்கல் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (64), பரணம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் (35), தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்த மதியழகன் (61) ஆகியோர் தங்களது பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் கயர்லாபாத் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அஸ்தினாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த கந்தசாமி (52) என்பவர் தனது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- அரியலூரில் மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- அவரிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கீழவெளி காலனி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 63) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- மின்சாரம் பாய்ந்து டிப்பர் லாரி டிரைவர் பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே காவனூர் அம்பாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் ஆனந்த்ராஜ் (வயது 27). இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு அஜய் (1) என்ற மகன் உள்ளார். ஆனந்த்ராஜ், முனியங்குறிச்சி புத்தூர் அருகே உள்ள தனியார் சிமெண்டு ஆலை சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் டிப்பர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் பணியில் இருந்தபோது சுரங்க அலுவலகத்தின் முன்பு லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது டிப்பர் லாரியின் பின்பக்க கதவு சரியாக மூடாததால் டிப்பரை மேலே உயர்த்தி கதவை சரி செய்துள்ளார். அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியில் டிப்பர் பட்டுள்ளது.இதனை கவனிக்காத ஆனந்த்ராஜ் லாரியில் ஏறும் போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவரை சக தொழிலாளர்கள் மீட்டு விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆனந்த்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரியலூரில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
அரியலூர்,
குன்னம் அருகே உள்ள புதுவேட்டைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகன் தேவராஜ் (வயது 28). இவர் புதுவேட்டைக்குடி அருகே உள்ள காடூர் கிராமத்தை சேர்ந்த துரைராஜ்- முத்துலட்சுமியின் மகளான சத்யாவை (23) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் சஞ்சீவ் தேவ் என்ற மகன் உள்ளார். இந்தநிலையில் தேவராஜுக்கும், சத்யாவுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு குழந்தை சஞ்சீவ் தேவ் பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது சத்யாவின் பெற்றோர் குழந்தைக்கு தங்க சங்கிலி அணிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த சத்யா நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி கொக்கியில் சேலை மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சத்யாவின் தாயார் முத்துலட்சுமி குன்னம் போலீசில் தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்தார். அதன் பேரில் குன்னம் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






