என் மலர்tooltip icon

    அரியலூர்

    செந்துறை அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று கிராம மக்கள் பிடித்தனர். அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ராயம்புரம் கிராமத்தில் உள்ள புதிய ஏரிக்கரையில் மருதையன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மருதையன் கோவில் கதவின் பூட்டை உடைத்து உண்டியலில் உள்ள பணத்தை ஒருவர் திருடிக்கொண்டு வெளியே வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர், உண்டியல் உடைக்கப்படும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது, அந்த நபர் அங்கிருந்து ஓடினார்.

    இதனால் அந்த வாலிபர் சத்தம் போட்டதால், அங்கு வந்த கிராம மக்கள் சுமார் 2 கி.மீ. தூரம் விரட்டிச்சென்று, உண்டியலில் பணம் திருடிய நபரை பிடித்தனர். மேலும் இது பற்றி செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோரிடம் அந்த நபரை கிராம மக்கள் ஒப்படைத்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமர்(வயது 25) என்றும், அவர் கோவிலின் பூட்டை உடைத்து சாமி கும்பிட்டுவிட்டு உண்டியலில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு வெளியே வந்தபோது, கிராம மக்களிடம் பிடிபட்டதும், தெரியவந்தது. இதையடுத்து செந்துறை போலீசார், அந்த வாலிபரை செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    செந்துறை பகுதிகளில் வீடுகள் மற்றும் கோவில்களில் ஏற்கனவே நடந்த பல்வேறு திருட்டு சம்பவங்களில் இந்த வாலிபர் ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் செந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோவில் பூசாரி ஆரான் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, ராமரை கைது செய்து செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், ஏற்கனவே வெங்கட்டரமணபுரம் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற வாலிபரை கிராம மக்கள் பிடித்து, தர்ம அடி கொடுத்து அரியலூர் போலீசில் ஒப்படைத்தனர். 

    இந்நிலையில் செந்துறை பகுதியில் உள்ள கோவிலில் திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மது விற்ற பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணகெதி கிராமத்தை சேர்ந்த துரைசாமி(வயது 45), தத்தனூர்குடிகாடு கிராமத்தை சேர்ந்த வளர்மதி(40), அதே ஊரை சேர்ந்த உலகநாதன்(44), தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்த அன்பழகன்(53), தத்தனூர் கீழவெளியை சேர்ந்த சுப்பிரமணியன்(61) ஆகிய 5 பேரும் அப்பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    அரியலூரில் உள்ள செட்டி ஏரிக்கான நீர்வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் நகரின் மைய பகுதியில் செட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி ஒரு கிலோ மீட்டர் தூர கரைப்பகுதியும், 10 ஏக்கர் பரப்பளவும் கொண்டது. நிலத்தடி நீருக்கு ஆதாரமாக உள்ள இந்த ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. ஏரிக்கு நீர் வரும் வாய்க்கால் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரும் பணி நடந்தது.

    அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கரைகளில் சிமெண்டு கற்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. பின்னர் அந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதையடுத்து வாய்க்கால் தூர்ந்து முட்புதர்கள் போன்று காட்சி அளிக்கிறது.

    தற்போது அரியலூர் பகுதியில் அதிக அளவில் மழை பெய்தும், ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. எனவே மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்கும் வகையில் வாய்க்காலை உடனடியாக தூர்வாரி ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
    தா.பழூர் அருகே நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 50). கூலித்தொழிலாளியான இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. 

    கடந்த 26-ந் தேதி வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார். 

    இது குறித்து அவரது மகன் சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    தா.பழூர் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதியதில் கொத்தனார் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வேனாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 35). கொத்தனாரான இவர் கான்கிரீட் கலவை எந்திரத்தை வாடகைக்கு கொடுத்து வந்தார். நேற்று இரவு கோட்டியால் பாண்டிபஜாரில் இருந்து பூவந்தி கொள்ளை வழியாக வேணாநல்லூர் செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    இதேபோல் பூவந்திகொல்லை கிராமத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் தனது மனைவி கமலாவுடன் மொபட்டில் கோட்டியால் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக முருகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், துரைசாமி ஓட்டி மொபட்டும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து சிறிதுநேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த துரைசாமி, கமலா ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி க்கைபபட்டது. இந்த விபத்து குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பங்குழியில் அரசு ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பங்குழி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையன் (வயது 37). இவர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்று, கடந்த ஒரு வார காலமாக அவரது சொந்த ஊரான ஆங்கியனூரில் குடும்பத்துடன் தங்கி, வயல் வேலைகளை கவனித்து வந்தார்.

    நேற்று வேலைகளை முடித்து விட்டு வேப்பங்குழியில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் உள்ள பீரோவின் கதவு திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் கீழே சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பீரோவில் பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து அவர், கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவருடைய வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், வீட்டு கதவின் பூட்டு மற்றும் பீரோ கதவை உடைக்காமலேயே மர்மநபர்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது.

    இதனால் கருப்பையன் சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டோ அல்லது மாற்றுச்சாவியை பயன்படுத்தியோ மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 2 குழந்தைகளின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 33). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த மணிகண்டன், கொரோனா ஊரடங்கால் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் அவரது வயலில் கடலை பறிக்கும் பணியில் குடும்பத்தினர் அனைவரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 வயது சிறுமி அங்கு விளையாடிக் கொண்டிருந்தாள். அவளிடம் மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு செல்வதாக கூறி உள்ளார். அப்போது சிறுமி தானும் வருவதாக கூறினாள். இதையடுத்து சிறுமியை அழைத்துச் சென்ற மணிகண்டன் தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து, அவளை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். கடலை பறிக்கும் பணி நடைபெறுவதால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர். அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
    விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் மெயின் ரோடு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி விக்கிரமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த மாதவி(வயது 36) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவருடைய வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மது விற்பனை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவியை கைது செய்தனர்.
    வி.கைகாட்டி அருகே தார்சாலை சேறும், சகதியுமாக மாறியதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே ரெட்டிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மு.புத்தூர் கிராமத்தில் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதையொட்டி அந்த பகுதி வழியாக டிப்பர் லாரிகளில் சுண்ணாம்பு கற்கள் ஏற்றிச்செல்லப்படுவது வழக்கம். அப்போது லாரிகளில் இருந்து கீழே விழும் சுண்ணாம்பு கற்கள் சாலையில் சிதறி கிடந்தன.

    இந்நிலையில் நேற்று மாலை பெய்த மழையினால் சுண்ணாம்பு கற்கள் கரைந்து மணலுடன் கலந்து அப்பகுதி தார் சாலை சேறும், சகதியுமாக காட்சியளித்தது. மு.புத்தூர் முதல் மங்கட்டான் ஏரி வரை சாலை மிக மோசமாக இருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி சாலையில் வழுக்கி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாய சூழ்நிலை உள்ளது.

    மழை காலங்களில் இந்த சாலையில் டிப்பர் லாரிகளை இயக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் இருந்தும், லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே சாலை சேறும், சகதியுமாக மாறி விபத்துகள் ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மழைக்காலத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயத்தை தவிர்க்க வெட்டாறு வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதி டெல்டா பாசன பகுதியாக உள்ளது. இதில் வாழைக்குறிச்சி, அடிக்காமலை, பாலசுந்தரபுரம், மேலகுடிகாடு, தென்கச்சிபெருமாள்நத்தம், கீழகுடிகாடு, இடங்கண்ணி, அண்ணங்காரம்பேட்டை ஆகிய கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. வாழைக்குறிச்சி கிராமத்தில் தொடங்கி அண்ணங்காரம்பேட்டை கிராமம் வரை உள்ள அனைத்து வயல்களுக்கும் வெட்டாறு வாய்க்கால் பிரதான வடிகால் வாய்க்காலாக உள்ளது.

    வாழைக்குறிச்சி 1-ம் எண் பாசன வாய்க்கால் அருகில் இருந்து தொடங்கும் இந்த வடிகால் வாய்க்கால் அண்ணங்காரம்பேட்டை பகுதியில் பூவோடையில் கலக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த வடிகால் வாய்க்கால் தூர் வராப்படாததால் வாய்க்கால் முழுவதும் புதர்கள் மண்டி வாய்க்கால் இருக்குமிடம் தெரியாமல் காணப்படுகிறது. தற்போது சரியான நேரத்தில் சம்பா பருவ விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

    தற்போது நல்ல நிலையில் விளைந்து வரும் நெற்பயிர்கள் பருவ மழைக்காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. மழைக்காலம் தொடங்கி விட்டால் குறைந்தது ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வெள்ள நீர் வடிவதற்கு வழி இல்லாமல் போகலாம் என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

    எனவே வெட்டாறு வடிகால் வாய்க்கால் உடனடியாக தூர்வாரப்பட்டால் மழைநீர் வயல்களில் வெள்ளக்காடாக தேங்காமல் உடனடியாக வடிந்து சம்பா பருவ விவசாயத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இதைப்போலவே 1-ம் எண் பாசன வாய்க்காலில் அடிக்காமலை பகுதியில் இருந்து பிரிந்து வரும் சந்தன வாய்க்கால் என்கிற இதே பகுதிக்கான பாசன வாய்க்கால் நன்கு அகலமான நீளமான வாய்க்காலாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது வாய்க்காலை ஒட்டிய பகுதியில் விவசாயிகள் சிறிது சிறிதாக வாய்க்காலை ஆக்கிரமித்ததால் வாய்க்கால் ஒற்றையடிப்பாதை போல் குறுகி காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். எனவே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள வெட்டாறு வடிகால் வாய்க்கால் மற்றும் சந்தன வாய்க்கால் ஆகியவற்றை உடனடியாக தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி இப்பகுதி விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி முத்துவாஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்த சகுந்தலா(வயது 40) வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சகுந்தலாவை கைது செய்தனர்.
    அரியலூரில் நள்ளிரவில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 50 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    திருப்பூரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவர் அரியலூர் சின்னக்கடை வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். இதனால் அரியலூரில் சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் சவுந்தர்ராஜன் மற்றும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை கடைக்கு சென்று பார்த்த போது உள்ளே பல்வேறு பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும் ஷோகேஸ்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் சவுந்தர்ராஜன் மற்றும் கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் கடையின் பின்புறம் சென்று பார்த்த போது கிரில்கேட் உடைக்கப்பட்டு இருந்ததுடன், நகை கடைக்கும் அருகில் உள்ள தேங்காய் கடைக்கும் பொதுவான சுவரில் ஒரு ஆள் செல்லும் அளவிற்கு துளையிடப்பட்டு இருந்தது. இதனால் நேற்றிரவு கடையை பூட்டி விட்டு சென்றதும் மர்மநபர்கள் கடையின் சுவரில் துளையிட்டு கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பது தெரியவில்லை. சுமார் 50 பவுன் நகைகள் வரை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என தெரிகிறது. கொள்ளை போன நகைகளை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனிடையே இந்த கொள்ளை சம்பவம் குறித்து அரியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நகைக்கடைக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    கைரேகை நிபுணர்கள் கடையின் பல்வேறு இடங்களில் பதிந்திருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் கடையில் இருந்து மோப்ப பிடித்தப்படி சிறிது தூரம் வரை சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    கொள்ளை போன நகைக் கடையில் ஒரு லாக்கரில் ரூ.1.50 லட்சம் பணமும், மற்றொரு லாக்கரில் தங்கம், வெள்ளி நகைகளும் இருந்துள்ளது. அதனை மர்ம நபர்களால் உடைக்க முடியாததால் அதில் இருந்த நகை, பணம் தப்பியது.

    அரியலூர் சின்னக்கடை வீதியானது கடைகள், தனியார் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். எப்போதும் பரபரப்பாக இயங்கும் பகுதியாகும். இந்த நிலையில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் உள்ள நகைக்கடையில் மர்ம நபர்கள் சுவரில் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சம்பவ இடத்திற்கு எஸ்.பி. சீனிவாசன், டி.எஸ்.பி. மதன், இன்ஸ்பெக்டர் செந்தில் நாதன், சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

    இதேபோல் அரியலூர் மாவட்டம் செந்துறை மெயின் ரோட்டில் ரவிக்குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார்.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் அங்குள்ள ஓடை வழியாக கடையின் பின்புறம் சென்று சுவரில் துளையிட்டு கடைக்குள் புகுந்து கொள்ளையடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த கடையின் அருகே மருந்துகடை நடத்தி வருபவர் இரவு நேரங்களில் கடையின் மேல் உள்ள அறையில் தங்குவது உண்டு.

    நள்ளிரவில் மர்மநபர்கள் கடையின் சுவரில் துளையிடும்போது சத்தம் கேட்கவே, அந்த மருந்து கடை உரிமையாளர் எழுந்து ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சுவரில் துளையிடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் சத்தம் போடவே, மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி சென்றனர்.

    ரவிக்குமார் கடையில் மொத்தம் 100 பவுன் நகைகள் வரை விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் சுவரில் துளையிட்டு கடைக்குள் சென்றிருந்தால் அந்த நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்றிருப்பார்கள்.

    மருந்து கடை உரிமையாளர் பார்த்து சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் தப்பி சென்றதுடன், கடையில் இருந்த 100 பவுன் நகைகள் தப்பியது. இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே செந்துறை சோமங்களம் திருமண மண்டபம் அருகில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். அரசு பள்ளி ஆசிரியரான இவர் மட்டும் நேற்றிரவு வீட்டில் இருந்தார். அவரது மனைவி வெளியூர் சென்று விட்டார்.

    இந்தநிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பது தெரியவில்லை. ரவிக்குமார் நகைக்கடையில் கொள்ளை அடிக்க முயன்ற மர்மநபர்களே இந்த வீட்டிலும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 நகைக்கடைகள் மற்றும் ஆசிரியர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×