என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - 2 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 2 குழந்தைகளின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 33). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த மணிகண்டன், கொரோனா ஊரடங்கால் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் அவரது வயலில் கடலை பறிக்கும் பணியில் குடும்பத்தினர் அனைவரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 வயது சிறுமி அங்கு விளையாடிக் கொண்டிருந்தாள். அவளிடம் மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு செல்வதாக கூறி உள்ளார். அப்போது சிறுமி தானும் வருவதாக கூறினாள். இதையடுத்து சிறுமியை அழைத்துச் சென்ற மணிகண்டன் தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து, அவளை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். கடலை பறிக்கும் பணி நடைபெறுவதால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர். அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
    Next Story
    ×