search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேறும், சகதியுமாக மாறிய தார் சாலையை படத்தில் காணலாம்.
    X
    சேறும், சகதியுமாக மாறிய தார் சாலையை படத்தில் காணலாம்.

    வி.கைகாட்டி அருகே சேறும், சகதியுமாக மாறிய தார் சாலை

    வி.கைகாட்டி அருகே தார்சாலை சேறும், சகதியுமாக மாறியதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே ரெட்டிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மு.புத்தூர் கிராமத்தில் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதையொட்டி அந்த பகுதி வழியாக டிப்பர் லாரிகளில் சுண்ணாம்பு கற்கள் ஏற்றிச்செல்லப்படுவது வழக்கம். அப்போது லாரிகளில் இருந்து கீழே விழும் சுண்ணாம்பு கற்கள் சாலையில் சிதறி கிடந்தன.

    இந்நிலையில் நேற்று மாலை பெய்த மழையினால் சுண்ணாம்பு கற்கள் கரைந்து மணலுடன் கலந்து அப்பகுதி தார் சாலை சேறும், சகதியுமாக காட்சியளித்தது. மு.புத்தூர் முதல் மங்கட்டான் ஏரி வரை சாலை மிக மோசமாக இருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி சாலையில் வழுக்கி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாய சூழ்நிலை உள்ளது.

    மழை காலங்களில் இந்த சாலையில் டிப்பர் லாரிகளை இயக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் இருந்தும், லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே சாலை சேறும், சகதியுமாக மாறி விபத்துகள் ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×