என் மலர்tooltip icon

    அரியலூர்

    விக்கிரமங்கலம் அருகே கடையில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். இதில் ஸ்ரீபுரந்தான் மெயின் ரோட்டில் உள்ள சிராஜ்தீன்(வயது 42) என்பவரது மளிகை கடையில் சோதனை செய்தபோது, அங்கு புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிராஜ்தீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அரியலூர் அருகே பெண் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
    அரியலூர்:

    அரியலூர் வட்டம், கடுகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட கலெக்டர் ரத்னா, சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தமான நிலம் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள், கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

    இது குறித்து வருவாய்த்துறையினர் மூலம் உரிய விசாரணை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அந்த நிலத்தை காவனூர் கிராம நிர்வாக அலுவலர் ராணி, தனது சகோதரரான தனவேல் என்பவருக்கு தன்னிச்சையாக பட்டா வழங்க பரிந்துரை செய்தது, கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து காவனூர் கிராம நிர்வாக அலுவலர் ராணியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் ரத்னா உத்தரவிட்டுள்ளார்.
    ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் அறிவுறுத்தலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொரோனா தொற்று பரவல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் அறிவுறுத்தலின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பாபு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் ஆகியோர் கொரோனா தொற்று பரவல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள் மற்றும் கடைவீதியில் உள்ள கடைக்காரர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இலவசமாக முக கவசம் வழங்கி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், வெளியில் செல்லும்போது முக கவசம் அணியவும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும். இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது. சரக்கு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றக்கூடாது. பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது. காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி செல்லக்கூடாது என்று சாலை விதிமுறைகளை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    உடையார்பாளையம் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள பருக்கல் காலனித் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 70). விவசாயி. இவரது காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் நீண்ட நாட்களாக காயம் ஆறாமல் வலி இருந்து வந்தது. இந்நிலையில் மனமுடைந்த தர்மராஜ் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் தர்மராஜை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தர்மராஜ், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். பெரம்பலூரில் புதிதாக 7 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களில் தலா 3 பேருக்கும், திருமானூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் தலா 5 பேருக்கும், அரியலூர் நகராட்சி பகுதிகளிலும், செந்துறை, தா.பழூர் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் தலா 2 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 9 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும் என மொத்தம் 35 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,991 ஆக உயர்ந்துள்ளது.

    ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவிற்கு சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 774 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 3,175 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 963 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

    பெரம்பலூர் வட்டாரத்தில் நேற்று 3 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 2 பேரும், ஆலத்தூர், வேப்பூர் ஆகிய வட்டாரங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1, 936 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே 20 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 1, 821 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 341 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டத்தில் பணம் எடுத்து தர உதவுவது போல் நடித்து, மூதாட்டியிடம் ஏ.டி.எம். கார்டை பெற்று ரூ.30 ஆயிரத்தை எடுத்து மர்ம நபர் மோசடி செய்தார்.
    ஜெயங்கொண்டம்:

    கடலூர் மாவட்டம் கீழக்கஞ்சங்கொல்லை கிராமம் அக்ரகாரத்தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி அறிவளர்செல்வி(வயது 63). இவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வைக்கப்பட்டுள்ள நகைகளை மீட்பதற்காக சென்னையில் உள்ள தனது மகள் மூலம் ரூ.31 ஆயிரத்தை அவரது பேரன் உறவுமுறையான ராமானுஜம் என்பவரது வங்கிக் கணக்கில் போடச்செய்துள்ளார்.

    இதையடுத்து ராமானுஜத்தின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி, அந்த பணத்தை எடுப்பதற்காக ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு அறிவளர்செல்வி சென்றார். அவருக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுக்க தெரியாததால், அருகில் இருந்த ஒருவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.30 ஆயிரம் எடுத்து தரும்படி கூறியுள்ளார். பின்னர் அந்த நபரிடம் ரகசிய எண்ணையும் கொடுத்துள்ளார்.

    அப்போது அந்த நபர் தான் ஏற்கனவே வைத்திருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பார்த்து, பணம் வரவில்லை என அறிவளர்செல்வியிடம் தெரிவித்து, கார்டை மாற்றிக் கொடுத்துவிட்டு, அறிவளர்செல்வி கொடுத்த ஏ.டி.எம். கார்டை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். மேலும் அந்த வங்கி கணக்கில் இருந்து நிமிடத்திற்கு ஒரு முறை ரூ.10 ஆயிரம் வீதம் 3 முறையாக ரூ.30 ஆயிரத்தை அந்த நபர் எடுத்து விட்டார்.

    இது பற்றி அறியாத அறிவளர்செல்வி சம்பந்தப்பட்ட வங்கியில் விசாரித்தபோது, அந்த நபர் உதவுவதுபோல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்ததும், வங்கிக்கணக்கில் இருந்த ரூ.30 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வீராக்கன் கிராமத்தில் அலமேலு(வயது 85). இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றியும், ஆதரவற்ற நிலையிலும் இருப்பதை அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேற்று முன்தினம் நள்ளிரவில் மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்து, அவருக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்.

    அதே போன்று கடந்த மாதம் பொன்பரப்பி கிராமத்திற்கு நேரில் சென்று 110 வயது மூதாட்டியான பொன்னி என்பவருக்கு உதவி செய்தார். அதனை தொடர்ந்து இந்த மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பரம சாந்தி என்ற அமைப்பின் உதவியுடன், செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று மூதாட்டி பொன்னியை நலம் விசாரித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
    உடையார்பாளையம் அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார், ஏந்தல்- கல்லாங்குளம் செல்லும் சாலை அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த சாலையில் நாள் தோறும் 500-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதி பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்போது இந்த சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கான மூலப்பொருட்களை இந்த சாலை வழியாக கொண்டு செல்லும்போது மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்குகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தடுமாறி விழுந்து படுகாயமடைந்து செல்லும் நிலை உள்ளது.

    பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவமனை செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிகள் என அனைவரும் குண்டும், குழியுமான சாலையில் செல்லும் போது சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தா.பழூர் அருகே மாட்டு வண்டிக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மணல் அள்ள பணம் வாங்கிக்கொண்டு, வண்டிகளை பறிமுதல் செய்வதாக வருவாய்த்துறையினர், போலீசார் மீது குற்றம்சாட்டினர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அண்ணங்காரம்பேட்டை ஜூப்லி ரோட்டில் இடங்கண்ணி கிராம நிர்வாக அதிகாரி தினேஷ் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது நேற்று அதிகாலை 5 மணி அளவில் தேவமங்கலம் கிராமத்தை சேர்ந்த அறிவழகன்(வயது 35), ராஜேந்திரன்(55), சதீஷ்குமார்(22), பன்னீர்செல்வம்(40), உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி(50) ஆகியோர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. கிராம நிர்வாக அதிகாரியை பார்த்ததும், அவர்கள் மாடுகளை அவிழ்த்து கொண்டு மாட்டு வண்டியை மணலுடன் அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி தினேஷ், தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மாட்டு வண்டி ஓட்டி வந்த அறிவழகன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து சிலால் கிராமத்தில் தா.பழூர் - ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் - அணைக்கரை சாலைகள் சந்திக்கும் நால்ரோடு பகுதியில் மாட்டு வண்டிக்காரர்கள் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பணம் வாங்கிக்கொண்டு ஆற்று மணல் எடுக்க அனுமதிப்பதாகவும், பின்னர் வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்வது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் மாட்டு வண்டிக்காரர்கள் கூறி, அதனை கண்டித்து இந்த மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். மேலும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தமிழக அரசு மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. கும்பகோணத்தில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு தேவராஜ், தாசில்தார் கலைவாணன் ஆகியோர் மாட்டுவண்டிக்காரர்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்.

    மேலும் சிலால் கிராமத்தில் சட்டவிரோதமாக சாலை மறியலில் ஈடுபட்டதாக தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்த மாட்டு வண்டிக்காரர்கள் இளையராஜா(33), அறிவழகன்(35), ராஜேந்திரன்(55), சதீஷ்குமார், பன்னீர்செல்வம்(40) ஆகியோர் மீது அணைகுடம் கிராம நிர்வாக அதிகாரி அனிதா, தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நோய்த்தொற்று ஏற்படுத்தும் வகையில் கூட்டமாக கூடியதாகவும், 144 தடையை மீறி சட்டவிரோதமாக கூடியதாகவும் 5 பேர் மீதும், தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மீன்சுருட்டி அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள புதுத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு மீன்சுருட்டி கடைவீதியில் ஒரு தனியார் மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது, சென்னை நோக்கி சென்ற கார், அவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஏரிக்கரையில் ஒரு லட்சம் பனை விதைகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா விதைத்து, அந்த பணியை தொடங்கி வைத்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராவுத்தன்பட்டி சந்தன ஏரியின் கரை பகுதிகளை சுற்றிலும் ஒரு தன்னார்வ அமைப்பினர் சார்பில் ஒரு நாள் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா பனை விதைகளை விதைத்து, அந்த பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், பொதுமக்கள் தங்களது கிராமங்களிலும் ஏரி, குளம், குட்டை ஆகியவற்றில் இதுபோன்ற பனை விதைகள், மரக்கன்றுகள் வளர்த்து, சுற்றுச்சூழல் பெருக பராமரித்து பேணிக்காக்க வேண்டும், என்றார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், தாசில்தார் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புகையிலை- பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்கவட்டாங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உணவு பொருள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கடைகளில் கொரோனா நேரங்களில் சரியான முறையில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து விற்பனை செய்கிறார்களா? என்பது குறித்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவற்றை விற்பனை செய்து வந்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற ஆய்வு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்தார். ஆய்வின்போது திருமானூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெஸ்டின் அமல்ராஜ் உள்ளிட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
    ×