search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமர்
    X
    ராமர்

    செந்துறை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது

    செந்துறை அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று கிராம மக்கள் பிடித்தனர். அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ராயம்புரம் கிராமத்தில் உள்ள புதிய ஏரிக்கரையில் மருதையன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மருதையன் கோவில் கதவின் பூட்டை உடைத்து உண்டியலில் உள்ள பணத்தை ஒருவர் திருடிக்கொண்டு வெளியே வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர், உண்டியல் உடைக்கப்படும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது, அந்த நபர் அங்கிருந்து ஓடினார்.

    இதனால் அந்த வாலிபர் சத்தம் போட்டதால், அங்கு வந்த கிராம மக்கள் சுமார் 2 கி.மீ. தூரம் விரட்டிச்சென்று, உண்டியலில் பணம் திருடிய நபரை பிடித்தனர். மேலும் இது பற்றி செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோரிடம் அந்த நபரை கிராம மக்கள் ஒப்படைத்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமர்(வயது 25) என்றும், அவர் கோவிலின் பூட்டை உடைத்து சாமி கும்பிட்டுவிட்டு உண்டியலில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு வெளியே வந்தபோது, கிராம மக்களிடம் பிடிபட்டதும், தெரியவந்தது. இதையடுத்து செந்துறை போலீசார், அந்த வாலிபரை செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    செந்துறை பகுதிகளில் வீடுகள் மற்றும் கோவில்களில் ஏற்கனவே நடந்த பல்வேறு திருட்டு சம்பவங்களில் இந்த வாலிபர் ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் செந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோவில் பூசாரி ஆரான் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, ராமரை கைது செய்து செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், ஏற்கனவே வெங்கட்டரமணபுரம் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற வாலிபரை கிராம மக்கள் பிடித்து, தர்ம அடி கொடுத்து அரியலூர் போலீசில் ஒப்படைத்தனர். 

    இந்நிலையில் செந்துறை பகுதியில் உள்ள கோவிலில் திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×