என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் நகர் முழுவதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் வீடுகளில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டு பட்டாசுகள் வெடித்தனர். சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் முடங்கிப்போய் ஊரே அமைதியானது. ஒருவரை ஒருவர் பார்த்து வாழ்த்து தெரிவிக்க பகல் முழுவதும் பெய்த பலத்த மழை இடையூறாக இருந்தது.

    இது பற்றி வணிகர் சங்க தலைவர் ராமலிங்கம் கூறுகையில், ஆங்கில புத்தாண்டு அன்று ஒரு சில வருடங்களில் தூறல் மழை பெய்துள்ளது. ஆனால் நேற்று பெய்த மழை போல் பெய்ததில்லை அடைமழை காலத்தில் கூட இந்த அளவுக்கு விடாமல் மழை பெய்தது இல்லை, என்றார். தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. பள்ளி விளையாட்டு மைதானங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. பலத்த மழையால் அரியலூர் நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தரைக்கடை வியாபாரிகள் தரையில் அமர்ந்து வியாபாரம் செய்ய முடியாமல் குடைபிடித்தபடி நின்று கொண்டு வியாபாரம் செய்தனர். மழை மற்றும் கடும் குளிரால் பொதுமக்கள் பனிக்குல்லா, ஸ்வெட்டர், சால்வை அணிந்து நடமாடினர். மாவட்ட பகுதி மலைப்பிரதேசத்தில் இருப்பதை போன்ற ஒரு சூழலை ஏற்படுத்தியது.

    இதேபோல் ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று காலை முதல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் கடலை மற்றும் நெல் விவசாயிகள் அச்சத்துக்குள்ளாகினர். காலை முதல் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்தும், விட்டு விட்டும் பலத்த மழை பெய்தது. இதனால் ஜெயங்கொண்டம் கடைவீதி பகுதிகளில் திருச்சி-சிதம்பரம் சாலையில் மழை வெள்ளம் ஓடியது. வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்கினர். இருப்பினும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதேபோல் அண்ணா நகர், காந்தி நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

    இதில் வீடுகளில் புகுந்த மழைநீரை ெபண்கள் வாளி போன்றவற்றால் வெளியில் இரைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காந்திநகர் மெயின்ரோட்டில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை உயர்த்தி கட்டியதாலும், தெருவில் இருந்து சாலை பகுதிக்கு சாக்கடைக்கு வழி இல்லாததாலும் தங்கள் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததாக குற்றம்சாட்டினர்.

    இதேபோல் ஜூப்ளி ரோட்டில் உள்ள பாலத்தின் வழியே நீண்ட நாட்களாக கழிவுநீர் செல்ல முடியாமல் ரோடுகளில் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். எனவே ஜூப்ளி ரோட்டில் உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும். கழிவுநீர் வாய்க்கால் அமைத்து பராமரிக்க வேண்டும் என்று காந்தி நகர், அண்ணா நகர், அம்பேத்கர் நகர், ஜூப்ளி ரோடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழை காரணமாக வியாபாரிகளும், பொதுமக்களும் புத்தாண்டை கொண்டாட முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.
    ஆண்டிமடம் அருகே கோவில் பெயர் பலகை அகற்றப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், பா.ஜ.க.வினர், இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சாலைக்கரை கிராமத்தில் இரட்டை பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பெயர் பலகை வைப்பது சம்பந்தமாக அதே ஊரைச் சேர்ந்த இருபிரிவினருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் பெயர் பலகை அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் கல்லால் தாக்கிக் கொண்டனர். இதில் ஒரு தரப்பில் ஒரு பெண், ஒரு ஆண் என 2 பேரும், மற்றொரு தரப்பில் சிலரும் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீஸ் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து கலைந்து போகச்செய்தனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், அகற்றப்பட்ட பெயர் பலகையை வைக்கக்கோரி ஆண்டிமடம் 4 ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகளும் ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஆண்டிமடம் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அகற்றப்பட்ட பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் (த.பழூர்)ஜெகதீசன், (மீன்சுருட்டி) கோபி மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால், கைது செய்து பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளை வேனில் ஏற்றி ஒரு தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.

    இதையடுத்து அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் அய்யப்பன் தலைமையிலான குழுவினர் இந்து முன்னணியினரிடம் பிரச்சினை குறித்து விசாரிக்கவும், அவர்களை சந்திக்கவும் அனுமதி கேட்டபோது, போலீசார் மறுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அகற்றப்பட்ட பெயர் பலகையை அதே இடத்தில் வைக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாலும், போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களை பார்க்க அனுமதிக்காததாலும் மாவட்ட பா.ஜ.க. தலைவர் அய்யப்பன் தலைமையிலான 34 பேர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த இந்து முன்னணியின் திருச்சி கோட்ட பொறுப்பாளர் குணா தலைமையிலான 16 பேர் ஆண்டிமடம் நான்கு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியலால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
    ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் 8 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுமாட்டை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்.ஏ.ஜி. காலனித் தெருவில் சுமார் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் ஒரு பசுமாடு தவறி விழுந்தது. இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் அங்கு வந்து, கிணற்றில் இருந்து மாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் 8 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மற்றொரு பசுமாட்டையும், தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கண்டக்டர் மற்றும் உடந்தையாக செயல்பட்ட தாய் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 41). அரசு பஸ் கண்டக்டர். இவருக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 16 வயதில் மகள் இறக்கிறாள். இந்நிலையில் அந்த பெண் தனது மகளை ராதாகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இது குறித்து அரியலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயன் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிந்து ராதாகிருஷ்ணன், உடந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாய் ஆகியோரை கடந்த மாதம் 11-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த ராதாகிருஷ்ணனின் தாய் ருக்மணியை(59) போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்கும் வகையில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோரின் பரிந்துரையின்பேரில், ராதாகிருஷ்ணன், சிறுமியின் தாய் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள ராதாகிருஷ்ணன், சிறுமியின் தாய் ஆகியோரிடம் நேற்று போலீசார் வழங்கினர்.
    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே காரில் குட்கா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள இலந்தைக் கூடம் கிராமத்தில் ஒரு காரில் குட்கா கடத்திச் செல்வதாககிடைத்த தகவலின் பேரில் கீழப்பழுவூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சகாயஅன்பரசு, வெங்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா ஆகியோர் சம்பவஇடத்துக்குச் சென்று, அங்கு கடைத்தெருவிலுள்ள ஒரு மளிகடை எதிரே நின்று கொண்டிருந்த காரை சோதனைச் செய்தனர். சோதனையில், ரூ.1.82 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து, காரில் குட்கா கடத்தியதாக திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த கீழகண்ணுகுளம், உடையார் தெருவைச்சேர்ந்த குமரவேல் (35), அதே பகுதி பழம்புத்தூர் கிராமம்,வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (20) ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் குட்கா மற்றும் போதைப் பொருள்களை வாங்கி விற்று வந்த செம்பியக்குடியைச் சேர்ந்த கடை உரிமையாளர் பாண்டியன் (36) மற்றும் புகையிலைப் பொருள்களை பதுக்க இடமளித்த வைத்தியநாத புரத்தைச் சேர்ந்த ஹரிகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    திருமானூர் அருகே வேனில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைகூடம் கிராமத்தில் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு உத்தரவின்பேரில் வெங்கனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள மளிகை கடை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற வேன் அருகே சென்று, அங்கிருந்தவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தையடுத்து, வேனை சோதனையிட்டதில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவற்றை கொண்டு வந்த திருச்சி மாவட்டம் கீழ கண்ணுகுளம் கிராமத்தை சேர்ந்த குமரவேல்(வயது 35) மற்றும் பழம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த வைத்திலிங்கத்தின் மகன் விக்னேஷ்(20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் வேன், ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மளிகைக்கடை உரிமையாளர் செம்பியக்குடி கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (36) மற்றும் அந்த கடையில் வேலை பார்க்கும் வைத்தியநாதபுரம் கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆண்டிமடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டப்பட்ட சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள திருக்களப்பூர் கிராமம், பெரிய ஏரி அருகே மன்னார்சாமி கோவில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர் அங்குள்ள சூலாயுதத்தை பிடுங்கி அங்குள்ள உண்டிலையும் உடைத்து அதில் உள்ள பணத்தை திருடி சென்றார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. 

    ஆனால், எவ்வளவு பணம் திருட்டு போனது என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து திருக்களப்பூர் கிராம முக்கியஸ்தர்கள் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

    அதன்பேரில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    உடையார்பாளையம் அருகே முந்திரி தோப்பில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கீரைக்கார தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சாவித்திரி(வயது 55). இவர்களது மகன் கார்த்திகேயன்(27). இவர் திருமணம் செய்து வைக்கக்கோரி தினமும் சாவித்திரியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் சாவித்திரியிடம் சாப்பாடு செய்து வைக்குமாறு கூறிவிட்டு வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் உடையார்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது முந்திரி தோப்பில் உள்ள மரத்தில் கார்த்திகேயன் கைலியால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி வந்து பார்வையிட்டு, கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து சாவித்திரி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பள்ளி மாணவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டதோடு, அவருடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற ஆசிரியை ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குன்னம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மழவராய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அதே மாவட்டம் அம்பாபூர் கிராமத்தை சேர்ந்தவர் வனிதா (வயது 24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியையாக சேர்ந்து வேலை பார்த்து வந்தார்.

    இதையடுத்து மாணவர் வினோத்துக்கு வகுப்பு எடுக்க சென்றபோது, ஆசிரியை வனிதாவுக்கு மாணவர் வினோத் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டு அவரை காதலிக்க தொடங்கினார்.

    ஆசிரியையின் அணுகு முறையால் ஈர்க்கப்பட்ட மாணவரும் மதி மயங்கினார். இவர்களது காதல் வகுப்பறையை தாண்டி வெளியிலும் தொடர்ந்தது. சக மாணவர்கள் இதனை அறிந்து கொண்டாலும், ஆசிரியை என்ற அச்சத்தில் யாரிடமும் கூறவில்லை.

    இந்த நிலையில் அரசல் புரசலாக வந்த தகவலின் பேரில் ஆசிரியை வனிதாவின் பெற்றோர் மாணவருடனான காதல் வி‌ஷயம் பற்றி கேட்டபோது, அவர் சற்றும் மறுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை கடுமையாக கண்டித்தனர். ஆனால் ஆசிரியை அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

    அதேபோல் மாணவர் வீட்டிற்கும் வி‌ஷயம் தெரிந்து அவரையும் பெற்றோர் கண்டித்த நிலையிலும், மாணவர்-ஆசிரியை காதல் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. எந்நாளும் தங்களை சேரவிட மாட்டார்கள் என்பதை உணர்ந்த அவர்கள் காதல் ஈடேற வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்திருந்தனர்.

    இதற்கிடையே மாணவர் வினோத், பள்ளி படிப்பை முடித்து பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டும் சேர்ந்தார். கடந்த அக்டோபர் மாதம் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள மாணவனின் தாய் வழி பாட்டி வீடான தங்கம் என்பவரது வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது வீட்டில் யாருக்கும் தெரியாமல் அதே ஊரில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணமும் செய்து கொண்டனர். ஆனாலும் அவர்களுக்கு மறைமுக எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததால் சேர்ந்து வாழ முடியாமல் மனமுடைந்து தற்கொலை முடிவுக்கு வந்துள்ளனர்.

    அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூங்கில் பாடியில் உள்ள வீட்டில் வைத்து இருவரும் பருத்திக்கு தெளிக்கும் வி‌ஷ மருந்தை குடித்து விட்டு, காதிலும் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

    பின்னர் மாணவர், ஆசிரியை இருவரும் உயிர் பிழைக்கும் ஆசையில் தங்களது இருசக்கர வாகனத்தில் சென்று குன்னம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை பெற்றனர். இதில் வி‌ஷம் ஏறிய ஆசிரியை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இது தொடர்பாக தகவலறிந்த குன்னம் போலீசார் மைனர் சிறுவனான மாணவர் வினோத்தை காதலித்து, திருமணம் செய்ததற்காக ஆசிரியை மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 366 (விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணம்), 309 (தற்கொலைக்கு தூண்டுதல்), 116 (குற்றம் புரிய தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது ஆசிரியை குணமடைந்த நிலையில் அவரை குன்னம் போலீசார் கைது செய்தனர்.

    பள்ளி மாணவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டதோடு, அவருடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற ஆசிரியை ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுவரை மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் அளித்து வந்ததாக ஆசிரியர்கள் பலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் முதன் முதலாக தன்னை விட வயது குறைந்த மாணவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆசிரியை போக்சோவில் கைதாகி இருக்கிறார்.
    விக்கிரமங்கலம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் அரங்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்ய முயன்றனர். இதனால் மாட்டு வண்டியை ஓட்டி வந்த அந்த நபர், சாலையின் ஓரமாக மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் மாட்டு வண்டியை சோதனை செய்தபோது அதில் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து ஸ்ரீபுரந்தான் பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபரை தேடி வருகிறார்கள்.
    சொத்தை எழுதிதர மறுத்த தாயை கொன்று புதைத்து நாடகமாடிய மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அமிர்தராயங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரஹாசன். இவரது மனைவி காமாட்சி (வயது 85). இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள். இதில் மகள்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகி கணவர் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

    2 மகன்களில் ஒரு மகன் இறந்து விட்டார். கடைசி மகன் செல்வம் (40) அமிர்தராயங்கோட்டை பகுதியில் மனைவி குழந்தைகளுடன்  வசித்து வருகிறார். தாய் காமாட்சி தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது பெயரில் இருக்கும் 1 ஏக்கர் விவசாய நிலத்தை தனது மூத்த மகள் சுமதிக்கு எழுதி கொடுக்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மகன் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். 

    மேலும் அந்த நிலத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு தாயிடம் அவ்வப்போது சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனியாக வசித்து வந்த காமாட்சி கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மாயமானார். மகள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

    இந்த நிலையில் மூதாட்டி மாயமான அடுத்த இரு தினங்களில் அவரின் மகன் செல்வம் சிறிதளவு பூச்சிகொல்லி மருந்தை குடித்துவிட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் போய் சேர்ந்து கொண்டார். தாய் மாயமான துக்கத்தில் விஷம் அருந்தியதாக கூறி வந்தார். 

    இதற்கிடையே காமாட்சி மாயமானது தொடர்பாக அவரின் மூத்த மகள் சுமதி தா.பழூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் செல்வத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் சொத்து எழுதிதர மறுத்த காரணத்தால் தாயை கட்டையால் தாக்கி கொன்று வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அணைக்குடம் பாட்டா கோவில் ஓடையில் உடலை புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இன்று அவரை கைது செய்து உடலை தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    உடையார்பாளையம் அருகே மது விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாணதரியன்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த அஞ்சலை(வயது 35), தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்த அன்புமணி(51), நல்லணம் கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜன்(49) ஆகியோர் அப்பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    ×