search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பேத்கர் நகரில் உள்ள ஒரு வீட்டில் புகுந்ததை மழைநீரை ஒரு பெண் வெளியறே்ற முயன்ற காட்சி.
    X
    அம்பேத்கர் நகரில் உள்ள ஒரு வீட்டில் புகுந்ததை மழைநீரை ஒரு பெண் வெளியறே்ற முயன்ற காட்சி.

    அரியலூர் மாவட்டத்தில் பலத்த மழை - வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

    அரியலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் நகர் முழுவதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் வீடுகளில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டு பட்டாசுகள் வெடித்தனர். சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் முடங்கிப்போய் ஊரே அமைதியானது. ஒருவரை ஒருவர் பார்த்து வாழ்த்து தெரிவிக்க பகல் முழுவதும் பெய்த பலத்த மழை இடையூறாக இருந்தது.

    இது பற்றி வணிகர் சங்க தலைவர் ராமலிங்கம் கூறுகையில், ஆங்கில புத்தாண்டு அன்று ஒரு சில வருடங்களில் தூறல் மழை பெய்துள்ளது. ஆனால் நேற்று பெய்த மழை போல் பெய்ததில்லை அடைமழை காலத்தில் கூட இந்த அளவுக்கு விடாமல் மழை பெய்தது இல்லை, என்றார். தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. பள்ளி விளையாட்டு மைதானங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. பலத்த மழையால் அரியலூர் நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தரைக்கடை வியாபாரிகள் தரையில் அமர்ந்து வியாபாரம் செய்ய முடியாமல் குடைபிடித்தபடி நின்று கொண்டு வியாபாரம் செய்தனர். மழை மற்றும் கடும் குளிரால் பொதுமக்கள் பனிக்குல்லா, ஸ்வெட்டர், சால்வை அணிந்து நடமாடினர். மாவட்ட பகுதி மலைப்பிரதேசத்தில் இருப்பதை போன்ற ஒரு சூழலை ஏற்படுத்தியது.

    இதேபோல் ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று காலை முதல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் கடலை மற்றும் நெல் விவசாயிகள் அச்சத்துக்குள்ளாகினர். காலை முதல் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்தும், விட்டு விட்டும் பலத்த மழை பெய்தது. இதனால் ஜெயங்கொண்டம் கடைவீதி பகுதிகளில் திருச்சி-சிதம்பரம் சாலையில் மழை வெள்ளம் ஓடியது. வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்கினர். இருப்பினும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதேபோல் அண்ணா நகர், காந்தி நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

    இதில் வீடுகளில் புகுந்த மழைநீரை ெபண்கள் வாளி போன்றவற்றால் வெளியில் இரைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காந்திநகர் மெயின்ரோட்டில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை உயர்த்தி கட்டியதாலும், தெருவில் இருந்து சாலை பகுதிக்கு சாக்கடைக்கு வழி இல்லாததாலும் தங்கள் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததாக குற்றம்சாட்டினர்.

    இதேபோல் ஜூப்ளி ரோட்டில் உள்ள பாலத்தின் வழியே நீண்ட நாட்களாக கழிவுநீர் செல்ல முடியாமல் ரோடுகளில் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். எனவே ஜூப்ளி ரோட்டில் உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும். கழிவுநீர் வாய்க்கால் அமைத்து பராமரிக்க வேண்டும் என்று காந்தி நகர், அண்ணா நகர், அம்பேத்கர் நகர், ஜூப்ளி ரோடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழை காரணமாக வியாபாரிகளும், பொதுமக்களும் புத்தாண்டை கொண்டாட முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.
    Next Story
    ×