என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியில் இருந்த வடமாநில தொழிலாளி தவறி விழுந்து இறந்தார்.
    அரியலூர்:
    அரியலூர் ராஜாஜி நகர் பகுதியில், அரசு கலைக்கல்லூரி அருகில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளில் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் சுமார் 500&க்கும் மேலான நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மேற்கு வங்காள மாநிலம் பட்டுகானா புதூரை சேர்ந்த மிந்து  மண்டல் (வயது 22) என்பவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த  அடிபட்டு  சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். தகவலறிந்த அரியலூர் போலீசார் விரைந்து சென்று, மிந்து மண்டல் உடலை கைப்பற்றி  மருத்துவ பரிசோத னைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து பல தொழிலாளர்களிடம் அரியலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வெளிமாநில தொழிலாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தொழிலாளி மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் த £க்கி மூதாட்டி பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி அம்சவள்ளி (வயது 70).  இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சமையலராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது கணவர் கலியபெருமாள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். 

    கணவர் உயிருடன் இருக்கும்போது தொடங்கிய வீடுகட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் மாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுவற்றிற்கு அம்சவள்ளி தண்ணீர் தெளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்கம்பி உரசியதில், மின்கம்பியின் மீது தூக்கி வீசப்பட்ட அம்சவள்ளி, பரிதாபமாக உயிரிழந்தார். 

    இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில், விரைந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார்,  அம்சவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரசு டவுன் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 13 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    அரியலூர்: 

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அணிகுதிச்சான் கிராமத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி அரசு நகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சென்னை, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிமடம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி, கருக்கை கிராமங்களுக்கு இடையே பேருந்து வந்து கொண்டிருந்தது. 

    அப்போது எதிரே சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த லாரி, அரசு நகரப் பேருந்து மீது மோதுவது போல் வேகமாக வருவதை பார்த்த, அரசு நகரப் பேருந்து ஓட்டுனர் பிரகாஷ் பஸ்சை இடதுபக்கத்தில் திருப்பினார். 

    அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ், சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணிகள் 13 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

    காயமடைந்த அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டத்தில் போட்டித்தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு அனுமதி கடிதம் வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    அரியலூர்:
    அரியலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள கோவிட்- கட்டுப்பாடுகளை அரசு ஆணையின்படி 10.01.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.

    ஊரடங்கு நாளன்று போட்டித்தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.- 

    கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக் கிழமையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகள், 

    மற்ற போட்டித் தேர்வுகள் நிறுவனங்களில் நடைபெறும் வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்க செல்லும் இளைஞர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதம் ஆகியற்றை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

    மேலும், இது போன்ற முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும்போது அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
    அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர்: அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு மெழுவர்த்தி ஏந்தி சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், நெடுஞ்சாலைகளை பராமரிக்க 5 கி.மீட்டருக்கு 2 சாலைப் பணியாளர்கள் என இட ஒப்புதல் வழங்கி கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும். 
    சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணி காலமாக முறைப்படுத்தி பணப் பலன்களை வழங்கிட வேண்டும். சாலைப்பணியாளர்களின் பணி நீக்க காலத்திலும், பணிக்காலத்திலும் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம் ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
    ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் அரியலூர் மாவட்டத் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் சிவக்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
    அரியலூர் அரசு கல்லூரி மாணவிகளுக்கு காவல் துறை சார்பில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
    அரியலூர்: அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட காவல் துறை சார்பில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி கல்லூரி முதல்வர் மலர்விழி தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார்.
    அப்போது அவர் பேசுகையில், பெண்களின் முன்னேற்றம் பற்றி பேசினால் மட்டும் போதாது. ஏனென்றால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே போகிறது. முதலில் பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் திடமாக இருக்க வேண்டும். எனவே மாணவிகள் தங்களது நேரத்தை தேவையற்ற முறையில் செலவிடாமல், தங்களுக்கு தேவையான தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டு தங்களைக் காத்துக்கொள்ளலாம். 
    இந்த பயிற்சியானது பெண்கள் தன்னைத்தானே எப்படி பாதுகாத்து கொள்வது என்று மட்டும் சொல்லித்தரப்படுவதில்லை. மனரீதியாக பெண்கள் தயாராக வேண்டும்   என்பதையும் சேர்த்தே கற்றுத்தரப்படுகிறது சிலம்பம், கராத்தே உள்ளிட்ட பயிற்சிகள் மாணவிகளுக்கு அளிக்கப்படுகிறது என்றார்.
    அரியலூர் மாவட்டத்தில் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
    அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒமைக்ரான் தொற்று குறித்த முன்னெச்சரிக்க நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    கூட்டத்துக்கு தலைமை தாங்கிய கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, அனைத்துத் துறை அலுவலர்களுக்கு வழங்கிய அறிவுரைகள் விபரம் வருமாறு: 
    பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையினரால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான சிகிச்சைகள் அளிக்க ஏதுவாக பல்வேறு புதிய படுக்கை வசதிகள் மற்றும் கோவிட் கேர் மையங்கள், நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
    கொரோனா தொடர்பான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையில் கூடுதலாக மருத்துவப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.
    நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றான தடுப்பூசி பணியும் முழுவீச்சில் மாவட்டம் முழுவதும் செயல்படுத்திடவேண்டும். ஒமைக்ரான் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
    மாவட்டத்தில் உள்ள அனைவரும், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியினை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் அரியலூர் ஏழுமலை, உடையார்பாளையம் அமர்நாத், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் முத்துகிருஷ்ணன் மற்றும் வட்டாட்சியர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ஆண்டிமடம் பகுதியில் ஆர்வமுடன் தாமாக முன்வந்து மாணவ, மாணவிகள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.
    அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதியில் அரசு பள்ளிகளில் பயிலும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. ஆண்டிமடம், விளந்தை, மருதூர், பூவாணிபட்டு அரசு மேல்நிலைப்பள்ளிகள், இலையூர், கவரப்பாளையம் உயர்நிலை பள்ளிகளில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட 9, 10, 11, 12&ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆண்டிமடம் விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமிற்கு ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் அசோக சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவாஜி, அருளப்பன் முன்னிலை வகித்தனர். கொரோனா தடுப்பூசி முகாமில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தாமாகவே முன்வந்து ஆண்டிமடம் வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் நடைபெற்ற முகாமில் 573 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமில் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தமிழ் முருகன் மற்றும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    ஜெயங்கொண்டம் அருகே புத்தாண்டு கொண்டாட சென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் இன்று காலை பிணமாக மீட்கப்பட்டார்.
    அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக மூன்று இளைஞர்கள் குளித்துவிட்டு ஆற்றை கடந்து சென்றனர். அப்போது துறையூரைச் சேர்ந்த  வள்ளுவர்&சித்ரா தம்பதியின் மகன் கௌதம் (வயது 25) என்ற வாலிபர் கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.   ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள கோழிப்பண் ணையில் அவர் வேலை பார்த்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வேலையை முடித்து நண்பர்களுடன் மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்கு சென்றிருந்தார்.
    தற்போது கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்த காரணமாக ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் நீச்சல் தெரியாத காரணத்தினாலும் நண்பர்கள் கண் முன்னே தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
    கடந்த 2 நாட்களாக தீயணைப்பு துறை அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தா.பழூர் காவல் துறையினர் கொள்ளிடம் ஆற்றில் காணாமல் போன கௌதமை ரப்பர் படகு மூலமும், பாதுகாப்பு உடை அணிந்து கரை ஓரங்களிலும் தீவிரமாக இரண்டாவதாக நாளாக தேடி வந்தனர்.
    இந்தநிலையில் இரவு போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. மூன்றாவது நாளாக   இன்று காலை அவரது உடல் கொள்ளிடம் கூட்டு குடிநீர் நீரேற்று நிலையம் அருகே சுமார் 100 மீட்டர் தொலைவில் ஆற்றில் மிதந்த நிலையில் கௌதம் உடலை மீட்டனர்.
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
    அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மைக்கேல்பட்டி கிராமத்தில், கூழாட்டுகுப்பம் கிராமத்தை சேர்ந்த மரியபாக்கியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் தா.பழூர் தனியார் மருந்து கடையில் வேலை செய்யும் மேலணிக்குழி கிராமத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் விஜய் ஆனந்த் (வயது 29) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். 
    இவர் வழக்கம் போல், இரவு 10 மணி அளவில் மருந்துக் கடையில் வேலை முடிந்து, வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அறைகளின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் வைத்திருந்த சம்பள பணம் ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது. 
    இதேபோல் தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (65). திருச்சி பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் திருச்சியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு கடந்த ஜனவரி 1&ந்தேதி சென்றுவிட்டு, சம்பவத்தன்று வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 
    இந்த இரு கொள்ளை சம்பவவங்கள் குறித்து, தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில், தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கிவைத்தார்.
    அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 34 ஆயிரத்து 800 சிறார்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 118 அரசு பள்ளிகள், 15 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 32 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் பயிலும் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் மூலம் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது. முதற்கட்டமாக இன்று 6 ஒன்றியங்களுக்குட்பட்ட 23 பள்ளிகளில் 4,545 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இம்முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் 34,800 பேருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக இன்று முதற்கட்டமாக 31 பள்ளிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.
    அரியலூர்:

    மத்திய அரசின் உத்தரவின்பேரில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த பணியை சென்னையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள 118 அரசு பள்ளிகள், 15 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 32 தனியார் பள்ளிகள் என மொத்தம் 165 பள்ளிகளில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 34,800 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதில் முதற்கட்டமாக இன்று 31 பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. தடுப்பூசி போட தகுதிவாய்ந்த மாணவ-மாணவிகள் கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. பதிவு செய்யவில்லை என்றாலும் சுகாதாரத்துறை பணியாளர்கள் பதிவு செய்து தடுப்பூசி செலுத்த உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் போதுமான அளவில் கோவேக்சின் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது. எனவே மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் மற்றும் ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்தும் பணியினை செயல்படுத்திட சுகாதாரத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அரியலூரை கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றும் வண்ணம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
    ×