என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் நாளை எந்த ஒரு விளையாட்டுப் போட்டிகளும் நடத்த அனுமதி இல்லை என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, செய்தியாளர்களுக்கு    பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாளை (16&ந் தேதி)தமிழக அரசின் சார்பில் முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் என்பதால் அன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் வழக்கம் உள்ளது. ஆனால் ஊரடங்கு என்பதால் அரியலூர் மாவட்டத்தில் எந்த விதமான போட்டிகளும் நடத்த அனுமதி இல்லை.

    மற்ற நாட்களில் நடத்தப்படும் போட்டிகளுக்கு கடந்த ஆண்டை போலவே காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட துறைகளில் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி உரிய அனுமதி பெற்று போட்டிகள் நடத்துவதுடன், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

    அரியலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி சுமார் 86 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப் பூசியையும் பொதுமக்களுக்கு முழுமையாக செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றி பொது இடங்களில் எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடைபெறுவது உறுதி செய்யப்படும். எனவே, பொது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழி முறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

    கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரம் இது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
    கோல்டன் கேட்ஸ் குளோபல் ஸ்கூல் சார்பில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    அரியலூர் ஏ.கே.எம். ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    அரியலூரில் வட்டார அளவில் சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கான சமையல் போட்டி நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர்  மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தில்   2021-& 2022 ஆம் ஆண்டிற்கு வட்டார அளவிலான சமையல் போட்டிகள் நடைபெற்றன. 

    இப்போட்டிகளின்போது தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட சமையலர் மற் றும் சமையல் உதவியாளர்களுக்கு மாவட்ட அளவிலான சமையல் போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

    இப்போட்டியினை கலெக்டர்  பார்வையிட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுகள் குறித்தும், செயல்முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    மேலும், சமையல் போட்டியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சமையல் பணியாளர்களின் சீருடை, தோற்றம், உணவு தயாரிக்கும் முறைகள், உணவின் சுவை மணம், தரம், சத்துக்கள் மற்றும் சமையல் போட்டியில் காட்சிப்படுத்தப்பட்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்து சமையலர் மற்றும் சமையல் உதவியாளரை தேர்வு செய்தனர். 

    தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது மற்றும் சான்றுகள் 26.01.2022 குடியரசு தினத்தன்று மாவட்ட கலெக்டரால் வழங்கப்படவுள்ளது.
    காவல் துறையிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    காவல் துறையின் சீரிய நடவடிக்கையின் காரணமாக 2020 ஆம் ஆண்டை விட,  கடந்த  2021 ஆம் ஆண்டில் கொலை வழக்குகள் பெருமளவில் குறைந்துள்ளன.  

    மாவட்டத்தில் 150 திருட்டு வழக்குகளில், 143 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.44 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    சைபர் கிரைம் குற்றங்களை பொறுத்தவரை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் காவல்துறை சார்பில் 1,436 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 

    பெண்களுக்கு எதிரான பாலியலில் ஈடுபட்டதாக 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 126 நபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    மது மற்றும் போதைக்கு எதிராக 2,460 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக 2,86,756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

    கஞ்சா, லாட்டரி, மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 52 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

    மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை குறைக்கும் வகையில் அனைத்து காவல் துறை நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    பொங்கல் விளையாட்டு போட்டிகளை கிராமங்களில் நடத்த சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் இருந்து அனுமதி பெற்று நடத்திட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
    அரியலூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரியை இன்று காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    அரியலூர்:

    அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என மாவட்ட மக்கள் தொர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அப்போதைய முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

    அதைத்தொடர்ந்து 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.347 கோடி மதிப்பில்  அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டுமானப்பணிகள் தொடங்கின.

    இங்கு, தரைத்தளம் மற்றும் 2 மாடிகளுடன் கூடிய நிர்வாக அலுவலகம், தரைத்தளம் மற்றும் 6 மாடிகளுடன் கூடிய கல்லூரி, வங்கி, அஞ்சல் நிலையம், மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தரைத்தளம் மற்றும் முதல் மாடியுடன் கூடிய கட்டிடம்,

    மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தரைத்தளம் மற்றும் 5 மாடிகள் கொண்ட கட்டிடம், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

    இதனிடையே, மருத்துவ கல்லூரிகளுக்கான மத்தியக்குழு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாட்டை தொடங்க அனுமதி அளித்தது.

    இதன்படி, இந்த மருத்துவக்கல்லூரி உட்பட தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை, பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைக்கிறார்.

    நீண்டகால கோரிக்கை நிறைவேறியதால் அரியலூர் மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம் அருகே உயிரோடு இருந்தவரை இறந்தவர் பட்டியலுக்கு மாற்றியதால் தான் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வாங்க 72 வயதுடைய முதியவர் தாசில்தார் அலுவலகத்திற்கும் வங்கிக்கும் அலைந்து வருகிறார்.
    ஜெயகொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 72). வயது மூப்பின் காரணமாக அரசு வழங்கும் ரூ.1,000 உதவித்தொகையினை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்

    இந்த நிலையில் இம்மாதத்திற்கான உதவித் தொகை பணத்தை எடுக்க வங்கியின் சேவை மையத்திற்கு அவர் சென்றார். அவரது வங்கி கணக்கில் போதிய அளவில் பணம் இருந்தும் நிலையில் கைரேகை பதிவு ஆகாததால் பணம் எடுக்க முடியவில்லை.

    இதனால் அடுத்த கட்டமாக ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு கோவிந்தன் நேரில் சென்றார். அங்கு காசோலை எழுதிக் கொடுத்து பணம் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரி நீங்கள் இறந்து விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தன், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு நீங்கள் உயிருடன் இருப்பதற்காக சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்கி வருமாறு கூறியுள்ளனர்.

    பின்னர் கோவிந்தன் கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து வாழ்நாள் சான்றிதழ் வழங்குமாறு கேட்டார். அவர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழையும் வழங்கினார். அதனை கொண்டு சென்று வங்கி நிர்வாகத்திடம் அளித்தபோது வங்கி நிர்வாகம் ஏற்க மறுத்து மீண்டும் தாசில்தாரிடம் சான்றிதழ் வாங்க அறிவுறுத்தியுள்ளனர்.

    இதனையடுத்து தான் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வாங்க 72 வயதுடைய முதியவர் கோவிந்தன் அலைந்து வருகிறார்.

    ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் தான் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வழங்க மனு அளித்துள்ளார். அவருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் முதியவரை அனுப்பி வைத்தார்.


    அரியலூர் அருகே முந்திரி தோப்பில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

     அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் அருகே உள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில் ஒரு தனியார் முந்திரி தோப்பு உள்ளது.

    இப்பகுதியை சுற்றியிருப்பவர்கள் தங்கள் வளர்க்கும் கால்நடைகளை இங்கு மேய்ச்சலுக்க விடுவது வழக்கம்.

    இதே போல், இன்று காலை, தங்கள் கால்நடைகளை முந்திரி தோப்பில் மேய்ச்சலுக்கு விடும்போது, தோப்பிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அப்போது ஆடு மேய்க்க சென்றவர்கள் ஏதேனும் இறந்து கிடக்கும் என இருந்துள்ளனர்.

    துர்நாற்றம் அதிகரித்ததால், நாற்றம் அடித்த இடத்தை நோக்கிச் சென்று அவர்கள் பார்த்தனர். அப்போது, அங்கு முந்திரி மரத்தில் ஆண் ஒருவர் பிணமாக தூக்கில் தொங்கியவாறு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அவர்கள், உடனடியாக ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார், மரத்தில் தூக்கில் தொங்கியவர் உடலை கீழே இறக்கினர்.

    பிணமாக இருந்தவருக்கு சுமார் 40 வயதுக்கு மேல் இருக்கும் என்றும், அவர் அணிந்திருந்த வேஷ்டியை மரத்தில் சுருக்குப் போட்டு தொங்கிய நிலையிலும், முகக்கவசம் அணிந்த நிலையிலும் இருந்துள்ளார். பிறகு உடலை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    தூக்கில் பிணமாக கிடந்தவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு இருப்பார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    அடையாளம் தெரியாத ஆண் பிணம் முந்திரிக்காட்டில் தொங்கியவாறு இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், மணக்கால் கிராமத்தை சார்ந்த கருணாநிதி முத்துலெட்சுமி  தம்பதியினரின் மூன்றாவது மகன் கருப்பசாமி கடந்த ஏப்ரல் மாதம் விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் மாற்றியில் கைப்பட்டதில் பலத்த காயம் அடைந்தார்.

    பல மாத மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் கருப்பசாமியின் வலது கை அகற்றப்பட வேண்டும் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து கருப்பசாமியின் தந்தை கருணாநிதி கலெக்டரின் பொதுமக்கள் குறைதீற்கும் கூட்ட நாளில் தன் மகனுக்கு செயற்கை கை பொருத்த வேண்டி மனு அளித்தார்.

    இதனையடுத்து சென்னை யில் உள்ள செயற்கை கை செய்யும் நிறுவனமான சன் ஆர்த்தோடிக்ஸ்  மற்றும் ரிஹாப் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரும் முடநீக்கு வல்லுனரான ஜெயவேலால் கருப்பசாமிக்கு பரிசோதித்து செயற்கை கை அளவீடு முதலிய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் கருப்பசாமிக்கு வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ரூ.65,000- மதிப்பிலான அதிநவீன செயற்கை கை வரவைக்கப்பட்டு அரியலூர் மாவட்ட கலெக்டரால் கருப்பசாமிக்கு வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் கருப்பசாமியும் அவரது தந்தையும் கலெக்டருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர். மேலும் இந்நிகழ்வின்போது 25 காது கேளாத மாற்றுத்திறனாளிக்கு ரூ.40,750- மதிப்பிலான காதொலி கருவியும் மற்றும் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வமான பாதுகாவலர் நியமன சான்றிதழ் கலெக்டரால் வழங்கப்பட்டது.
    போதை விழிப்புணர்வு குறித்த மாநில அளவிலான குறும்பட போட்டியில் அரியலூர் போலீசார் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.

    அரியலூர்:

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட போலீசார் போதை தடுப்பு விழிப்புணர்வு குறித்து குறும்படம் தயாரித்து வழங்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்படி அனைத்து மாவட்ட போலீசாரும் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான குறும்படங்களை நடித்து தயாரித்து போட்டியில் கலந்து கொண்டனர்.

    கடந்த வாரம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு முன்னிலையில் குறும்படங்கள் திரையிடப்பட்டன. அதில் அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்ட போலீஸ்       சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட இணைய குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் நடித்த குறும்படம் தயாரிக்கப்பட்டது.

    இதில் சிறப்பாக எதார்த்தமான கிராம மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கிரா மத்து பாணியில் எளிய முறையில் நிஜ போலீசாரை கொண்டு சிறப்பாக  நடித்து வழங்கப்பட்டது.

    இந்த குறும்படம் மாநில அளவில் இரண்டாம் பரிசை தட்டிச்சென்றது. நடிகர் ஜெயம் ரவி காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் நடித்து கொடுத்த குறும்படம் முதல்  பரிசை தட்டிச் சென்றது.

    இதனை தமிழக காவல் துறை உயரதிகாரிகளும், அரியலூமாவட்ட பொதுமக்களும்  மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணியை பாராட்டி வருகின்றனர்.   

    இந்தநிலையில் சிறப்பாக நடித்து 2 ஆம் பரிசை பெற்ற போலீசார் மற்றும் படத்தின் குழுவினருக்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா        சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
    ஜெயங்கொண்டம் பகுதியில் முழு ஊரடங்கில் தேவையின்றி வெளியில் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
    அரியலூர்:

    கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக தமிழக அரசு அறிவிப்பின்படி நேற்று அரியலூர் மாவட்டத்தில் முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதி முழுவதும் உள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள், வணிக வளாகங்கள், ஜவுளிகடைகள், நகைகடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

    வீதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே சோதனைச்சாவடிகளை அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    மேலும் வாகனங்களில் வருபவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளை மறித்து அத்தியாவசிய தேவையின்றி அனாவசியமாக சுற்றியவர்களிடம் 50&க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    நகர் முழுவதும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷகிராபானு, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள், பாலகிருஷ்ணன், சுபா, இளங்கோவன், கல்யாணராமன் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தேவையின்றி வந்தவர்களுக்கு அபராதம் விதித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
    அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.
    அரியலூர்:
    அரியலூர் மாவட்டத்தில் ஓட்டக்கோவில், சாலையகுறிச்சி, இலுப்பையூர் பகுதிகளில் நடைபெற்ற 18 ஆவது கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் தெரிவிக்கையில், அரியலூர் மாவட்டத்தில் 17 ஆவது கட்டமாக நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் இது வரை முதல் தவணை தடுப்பூசி 6,38,231 நபர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 4,30,756 நபர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்துப்பட்டுள்ளது.

    18 ஆவது கட்டமாக மாபெரும் கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்குட்பட்ட 254 இடங்களிலும், 2 பேரூராட்சிகளுக்குட்பட்ட 7 இடங்களிலும், 2 நகராட்சிகளுக்குட்பட்ட 13 இடங்களிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 69 இடங்களிலும் என மொத்தம் 343 இடங்களில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது.

    எனவே முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை மாற்றிட அனைத்து பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
    ×