search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    காவல் துறையிடம் உரிய அனுமதி பெற்று பொங்கல் போட்டிகள் நடத்த வேண்டும்

    காவல் துறையிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    காவல் துறையின் சீரிய நடவடிக்கையின் காரணமாக 2020 ஆம் ஆண்டை விட,  கடந்த  2021 ஆம் ஆண்டில் கொலை வழக்குகள் பெருமளவில் குறைந்துள்ளன.  

    மாவட்டத்தில் 150 திருட்டு வழக்குகளில், 143 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.44 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    சைபர் கிரைம் குற்றங்களை பொறுத்தவரை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் காவல்துறை சார்பில் 1,436 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 

    பெண்களுக்கு எதிரான பாலியலில் ஈடுபட்டதாக 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 126 நபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    மது மற்றும் போதைக்கு எதிராக 2,460 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக 2,86,756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

    கஞ்சா, லாட்டரி, மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 52 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

    மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை குறைக்கும் வகையில் அனைத்து காவல் துறை நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    பொங்கல் விளையாட்டு போட்டிகளை கிராமங்களில் நடத்த சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் இருந்து அனுமதி பெற்று நடத்திட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×