என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி பேசிய காட்சி.
ஒமைக்ரான் தொற்று: அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வுக்கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒமைக்ரான் தொற்று குறித்த முன்னெச்சரிக்க நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை தாங்கிய கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, அனைத்துத் துறை அலுவலர்களுக்கு வழங்கிய அறிவுரைகள் விபரம் வருமாறு:
பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையினரால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான சிகிச்சைகள் அளிக்க ஏதுவாக பல்வேறு புதிய படுக்கை வசதிகள் மற்றும் கோவிட் கேர் மையங்கள், நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கொரோனா தொடர்பான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையில் கூடுதலாக மருத்துவப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.
நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றான தடுப்பூசி பணியும் முழுவீச்சில் மாவட்டம் முழுவதும் செயல்படுத்திடவேண்டும். ஒமைக்ரான் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைவரும், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியினை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் அரியலூர் ஏழுமலை, உடையார்பாளையம் அமர்நாத், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் முத்துகிருஷ்ணன் மற்றும் வட்டாட்சியர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






