என் மலர்
அரியலூர்
- அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்
- முதுகலை பட்டபடிப்பு மாணவமாணவிகளுக்கு ரூ.6,000மும் வாசிப்பாளர் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவிகளுக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை ரூ.1,000-மும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ரூ.3,000மும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூ.4,000மும், தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.4,000மும் இளங்கலை பட்ட படிப்பிற்கு ரூ.6,000மும், முதுகலை பட்ட படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு ரூ.7,000மும் வழங்கப்படுகிறது.
மேலும் பார்வையற்ற மாணவ மாணவிகளுக்கு 9 முதல் 12ஆம் வகுப்பு, தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.3,000மும் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு மாணவ மாணவிகளுக்கு ரூ.5,000மும், முதுகலை பட்டபடிப்பு மாணவமாணவிகளுக்கு ரூ.6,000மும் வாசிப்பாளர் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவிகள் வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ}மாணவிகள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மாணவ மாணவிகள் பிறதுறைகளில் கல்வி உதவித்தொகை பெற வில்லை என தலைமையாசிரியர், கல்லூரி முதலமைச்சர் சான்றிதழ், மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கு புத்தக நகல், முகம் மட்டும் தெரியும்படியான தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் உரிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 17-ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
- அரியலூர் மாவட்டத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.1.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்
- விதைப்பு மற்றும் அறுவடை பணிக்கான ஊக்கத் தொகையாக பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.810 வரை வழங்கப்பட உள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நிகழாண்டுக்கான குறுவை தொகுப்பு திட்டம் டெல்டா மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் மற்றும் ெஜயங்கொண்டம் டெல்டா பகுதிகளில் 3,000 ஏக்கரில் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரசாயன உரங்கள் முழு மானியத்திலும், நெல் விதைகள் மற்றும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்வதற்கான விதைகள் மற்றும் பிற பொருள்கள் வழங்குவதற்காக ரூ.1 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 466 மதிப்பிலான ஒரு மூட்டை யூரியா, 1 மூட்டை டி.ஏ.பி. மற்றும் 25 கிலோ பொட்டாஷ் அடங்கிய உரத் தொகுப்பு 100 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளது.
மேலும், விதை கிராம திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.17.50 வீதம் 40 டன் விதைகள் 5,000 ஏக்கருக்கு விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறுவை பருவத்தில் மாற்றுப்பபயிர் சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக சிறுதானிய பயிர்கள் சாகுபடிக்கு 500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரிகள், உயிர் உரங்கள் ஆகிய இடுபொருள்கள், விதைப்பு மற்றும் அறுவடை பணிக்கான ஊக்கத் தொகையாக பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.810 வரையிலும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.930 வரையிலும் மானியம் வழங்கப்பட உள்ளது.
குறுவையில் பயறு வகை சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக 1,000 ஏக்கரில் உளுந்து பயிரிடும் போது விவசாயிகளுக்கு விதைகள், இலை வழி உரச்சத்து மற்றும் அறுவடை ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு 50 சதவீத மானியமாக ரூ.1,250-ம், ஆதிதிராவிட விவசாயிகளுக்க 70 சதவீத மானியத்தில் ரூ.1,570-ம் வழங்கப்பட உள்ளது.
குறுவை பருவத்தில் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரி, நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து ஆகிய இடுபொருட்களுக்காக 400 ஏக்கரில் பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.4000 வரையிலும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.5600 வரையிலும் வழங்கப்பட உள்ளது.
ஒரு விவசாயி அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். திருமானூர், தா.பழூர் மற்றும் ெஜயங்கொண்டம் டெல்டா வட்டார விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி உழவன் செயலி மூலம் தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது.
- ஜாதிக்காய், கடுக்காய், கருமிளகு, ரோஜா இதழ், முக்கனிகள் உள்ளிட்ட பழங்கள், சேலைகள் போன்றவற்றை யாக குண்டத்தில் இட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரியலூர்:
ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது.
யாகத்தில் மூட்டை, மூட்டையாக மிளகாய் வத்தல் போடப்பட்டது. ேமலும் ஜாதிக்காய், கடுக்காய், கருமிளகு, ரோஜா இதழ், முக்கனிகள் உள்ளிட்ட பழங்கள், சேலைகள் போன்றவற்றை யாக குண்டத்தில் இட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
- கூத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 29-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
- வெண்மணி, அல்லிநகரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கூத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 29-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் அரியலூர் மேற்குப்பகுதி, புஜங்கராயநல்லூர்,
பேரையூர், குளத்தூர், மேத்தால், கூடலூர், திம்மூர், மேலமாத்தூர், வெண்மணி, அல்லிநகரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லபாங்கி தெரிவித்துள்ளார்.
- வேளாண் வணிகத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
- சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டுதல் தொழில்நுட்ப கையேட்டினை வெளியிட்டு, வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி அரங்குகளைப் கலெக்டர் பார்வையிட்டார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி கிராமத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டுதல் தொழில்நுட்ப கையேட்டினை வெளியிட்டு, வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார்.
முகாமில், பல்வேறு வேளாண் தொடர்பான பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.
இம்முகாமில், வேளாண் வணிக துணை இயக்குநர் சிங்காரம் மற்றும் வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- விமானங்கள் தாழ்வாக பறந்து பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது செந்துறை அருகே உள்ள குழுமூர், வங்காரம், அயன்தத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெடிச் சத்தம் கேட்டுள்ளது.
- இளைஞர்கள் கொடுத்த தகவலின் பேரில் செந்துறை போலீசார் வந்து விசாரணை நடத்தினர்
அரியலூர்:
அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு வானத்தில் 4 ராணுவ போர் விமானங்கள் தாழ்வாக பறந்து பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது செந்துறை அருகே உள்ள குழுமூர், வங்காரம், அயன்தத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெடிச் சத்தம் கேட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் குழுமூர் மற்றும் வங்காரம் பகுதியில் உள்ள அரசு வனக்காட்டில் பயங்கர வெடிச் சத்தம் எழுந்துள்ளது. இந்த சத்தத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கேட்டுள்ளனர். இதனால் ராணுவ விமானம் விழுந்து வெடித்து விட்டதாக வதந்தி காட்டுத் தீயாக பரவியது.
அதனைத் தொடர்ந்து சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களும் கிராம மக்களும் காட்டை சல்லடை போட்டு தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் வங்காரம் காட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அப்பகுதி இளைஞர்கள் கொடுத்த தகவலின் பேரில் செந்துறை போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மூன்று 108 ஆம்புலன்ஸ்களும் காட்டிற்கு வந்தது. இது வதந்தி என்பதால் அவர்கள் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் மாலையில் ஏற்கனவே உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின் போட்டோவுடன் வங்காரம் காட்டில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் மீட்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வதந்திகளை பரப்பினர்.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கூறுகையில், அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குழுமூர் மற்றும் வங்காரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு வனக்காட்டில் இன்றைய தினம் திடீரென அதிக சத்தம் கேட்டதாகவும், இதனால் அப்பகுதியில் இதனால் அப்பகுதியில் இராணுவ விமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதாக பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் விமான விபத்து ஏற்பட்டதாக சமூக வளைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டம், செந்துறையில் விமான விபத்து ஏற்பட்டதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விசாரணை செய்ததில், மேற்கண்ட தகவல் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துறை உட்பட அரியலூர் மாவட்டத்தின் எந்த பகுதியிலும் விமான விபத்து ஏற்படவில்லை என இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
எனவே, அரியலூர் மாவட்டத்தில் விமான விபத்து ஏற்பட்டதாக தவறாக பரப்பப்படும் தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும், அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், விமான விபத்து ஏற்பட்டதாக தவறான தகவல்களை சமூக வளைதளங்களில் யாரும் பரப்ப வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
- அரியலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானங்களை விரிவாக விளக்க வேண்டும் என்று வலியுறுத்தி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
- பிறப்பு இறப்பு கணக்குகள் தெரிவிக்க வேண்டும், வரவு செலவுகள் பொது நிதியில் எவ்வளவு உள்ளது, வளர்ச்சிப் பணிகள் எந்த அளவுக்கு மேற்கொள்ளலாம் என தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர்
அரியலூர்:
அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் நகர்மன்ற கூட்டம் தலைவர் சாந்தி கலைவாணன் தலைமையில், துணை தலைவர் கலியமூர்த்தி முன்னிலையில், நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் சித்ரா சோனியா, நகராட்சி பொறியாளர் தமயந்தி,
இளநிலை உதவியாளர் செந்தில்குமார், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இளநிலை உதவியாளர் செந்தில்குமார் தீர்மானங்களை வாசிக்க ஆரம்பித்தார். அவர் தீர்மானங்களை 1, 2, 3 என்று படிக்கும்போதே, அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர் வக்கீல் வெங்கடாஜலபதி எழுந்து தீர்மானங்களை முழுமையாக படிக்க வேண்டும் இப்படி படித்தால் எங்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது எனக் கூறினார்.
துணைத் தலைவர் கலியமூர்த்தி 53 தீர்மானங்கள் இருக்கிறது முழுவதுமாகப் படித்தால் கால நேரம் அதிகமாகும் எனக் கூறினார். எவ்வளவு நேரம் ஆனாலும் முழுமையாக படிக்க வேண்டுமென அ.தி.மு.க. வெங்கடாஜலபதி தொடர்ந்து வலியுறுத்தினார்.
நகராட்சி நிர்வாகத்தில் பொது நிதி எவ்வளவு கையிருப்பு உள்ளது எனக் கேட்டதற்கு, திமுக உறுப்பினர் புகழேந்தி பொதுநிதி கணக்கெல்லாம் தெரிவிக்கப்பட மாட்டாது என கூறினார்.
அதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் நகர்மன்ற கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களையும் முழுமையாக வாசிக்கப்பட வேண்டும், பிறப்பு இறப்பு கணக்குகள் தெரிவிக்க வேண்டும், வரவு செலவுகள் பொது நிதியில் எவ்வளவு உள்ளது, வளர்ச்சிப் பணிகள் எந்த அளவுக்கு மேற்கொள்ளலாம் என தெரிவிக்க வேண்டும்.
வார்டு உறுப்பினர்கள் கேள்விக்கு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என கூறினார்கள். அதனால் நகர்மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு காணப்பட்டது, பின்பு அமைதியான முறையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- கலெக்டர் தலைமையில் நடந்தது
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் சார்பில் தென்மேற்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தாவது:
அரியலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருமழையின்போது, நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளாக 29 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளை கண்காணித்திடவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராமப்பகுதிகளையும் ஆய்வு செய்திடவும் துணை ஆட்சியர் தலைமையில் பல்துறை அலுவலர்களைக் கொண்டு மண்டல கண்காணிப்புக்குழு 5 குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளது.
பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நிவாரண மையம் அமைத்து, அம்மையத்தில் தங்க வைக்கும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கிட அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு, பொதுவி நியோகத்திட்டத்தில் உள்ள உணவுப்பொருட்கள் இப்பருவமழை காலங்களில் 3 மாதங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
மேலும், மழை காலங்களில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து போதுமான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, பாம்பு மற்றும் விஷக்கடி மருந்துகள் தயார் நிலையில் அரசு மருத்துவமனைகளில் இருந்திட வேண்டும்.
மீட்பு உபகரணங்களான ஜே.சி.பி., ஜெனரேட்டர், மரம் அறுக்கும் கருவி, டார்ச் லைட், போன்ற உபகரணங்கள் திட்டமிட்டு முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இம்மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஏரி மற்றும் மதகுகள், குளம் மற்றும் வாய்க்கால் தூர்வாரப்பபட வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கழிவுநீர் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும், மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்திட உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் மற்றும் சிறுபாலங்கள், பாலங்கள் தொடர் கண்காணிப்பில் இருந்திட வேண்டும். பேரிடர் மீட்பு பணிக்காக வரும் தேசிய பேரிடர் மீட்புக்குழு, தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழு மற்றும் மத்தியக்குழு ஆகிய குழுக்களுக்கு தேவையான வசதிகளை செய்திட வேண்டும்.
பருவமழை காலங்களில் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் கால்நடை மருந்தகங்களில் தயார் நிலையில் வைத்திட வேண்டும் மற்றும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, தமிழ்நாடு மின்சார வாரியம் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் ஒயர்களை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளை கண்டறிந்து உடனடியாக சரிசெய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளக் காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை வெளியேற்றிட உரிய திட்டத்தை தயார் செய்யவும், பள்ளிக்கூடத்திலுள்ள பள்ளி அறைகளின் மாற்று சாவியினை கிராம நிர்வாக அலுவலர் வைத்திருக்கவும் மற்றும் பேரிடர் காலங்களை எதிர்கொள்ள அனைத்து அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையிடத்தில் இருக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தென்மேற்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவித்திட வேண்டும் என கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
- காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நடந்தது
அரியலூர்:
அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரியலூர் காமராஜர் சிலை முன்பு நகர காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத் துக்கு, அக்கட்சியின் நகரத் தலைவர் எஸ்.எம். சந்திரசேகர் தலைமை தாங்கினார். செய்தித் தொடர்பாளர் மா.மு.சிவக்குமார், வட்டாரத் தலைவர்கள் டி.சீனிவாசன், பாலகிருஷ்ணன், எஸ்.திருவாவுக்கரசு, கங்காதுரை, அழகா–நந்தம், ராகவன், பூண்டி சந்தானம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் புகழ், துணைத் தலைவர் கலைச்செல்வன் ஐஎன்டியுசி தலைவர் தர்மாவிஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
- ஜெயங்கொண்டத்தில் விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- போலீசில் புகார் அனு கொடுத்தனர்
அரியலூர்:
தமிழகம் முழுவதும் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் கொண்டாடுவது குறித்து அக்கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் முழுவதும் விசிகவினர் சுற்றுச்சுவர் மற்றும் பேனர், நோட்டீஸ் சுவரொட்டிகள் (போஸ்டர்கள்) மூலம் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
அதன்படி ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி புறவழிச்சாலை மேம்பால சுற்றுச்சுவரில் திருமாவளவன் பிறந்த நாள் குறித்து விசிக வினர் விளம்பரப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் அந்த விளம்பரத்தை யாரோ மர்ம நபர்கள் சிலர் சாணியை வாரி இறைத்து அதனை அழித்து அவமதிப்பு செய்துள்ளனர். இதனை அறிந்த விசிக - வினர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டு கலைந்து சென்றனர். பின்னர் விசிகவினர் இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
- 302 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மா வட்ட கலெக்டர்பெ.ரமண சரஸ்வதி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 302 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றார்.
இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் ஆரம்ப கால பயிற்சி மையத்தில் 0 முதல் 6 வயது வரையுள்ள செவித்திறன் பாதிக்கப்பட்ட 20 இளஞ்சிறார்களுக்கு ரூ.55,600 மதிப்பில் காதொலிக் கருவிகளை கலெக்டர் வழங்கினார்.
- கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உண்டியலையும் உடைத்துள்ளனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் கூவத்தூர் அருகே உள்ள வடுகர்பாளையம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் அப்பகுதி மக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அம்மனுக்கு தாலி, காசு, குண்டுமணி உள்ளிட்ட தங்கத்திலான அணிகலன்களை அணிவித்து காணிக்கை செலுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கோவில் பூசாரி தினமும் காலை, மாலை வேளைகளில் விளக்கு போடுவது பின்னர் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சாமிக்கு அர்ச்சனை செய்வது உள்ளிட்ட வேலைகள் முடித்து விட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று மாலை கோவில் முன்பக்க கேட்டை 2 பூட்டுகள் போட்டு பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் கோவில் பூசாரிக்கு கோவில் கேட் திறந்து கிடப்பதாகவும், உண்டியலில் இருந்து காசுகள் சிதறி கிடைப்பதாகவும் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சென்று பார்த்ததில் கருவறையிலுள்ள மாரியம்மன் சிலை கழுத்திலிருந்த சுமார் 22 கிராம் மதிப்பிலான தாலி, காசு, குண்டுமணி உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் உண்டியலில் இருந்த சுமார் 30 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருடுபோய் இருந்தது தெரிந்தது.
நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் கோவிலின் முன்பக்க கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே தடயம் ஏதும் தெரியாமல் இருக்க கோவிலில் இருந்த எண்ணையை தடவி கைரேகை பதியா வண்ணம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி விசாரித்து வருகின்றனர்.






