என் மலர்
அரியலூர்
- ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
- தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது
அரியலூர்:
அரியலூர் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற மாநாடு நிதியளிப்பு மற்றும் பொதுக்கூட்டம் நிகழச்சியில் கலந்து கொள்ள வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசும் போது:-
தமிழகத்தில் ஆளுநர் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வினர் தங்களை பாதுகாத்துக் கொள்ளவே சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், ஊழல் தடுப்பு போலீசார் சோதனை செய்தும், அந்த அமைச்சர்கள் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என தெரியவில்லை. ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் ஊழலை குறைக்க முடியும். பிரதமர் மீது எந்த குற்றச்சாட்டு வந்தாலும், அதைப் பற்றி கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார் என்றார்.
- மக்கள் தொடர்பு முகாமிற்கு கலெக்டர் அரசு பேருந்தில் சென்றார்
- ரூ.41.63 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த சன்னாசிநல்லூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மை துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு 213 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.41.63 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரமணசரஸ்வதி வழங்கினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன்,த மிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திட்ட அலுவலர் சிவக்குமார், கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.
முன்னதாக இந்த முகாமுக்கு கலெக்டர் அலுவலகத்திலிருந்து கலெக்டர் ரமணசரஸ்வதி உட்பட அனைத்து துறை அலுவலர்களும் ஒரே அரசுப் பேருந்தில் சென்றனர். கடந்த மாதம் கடம்பூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமுக்கும்,ஒரே அரசுப் பேருந்தில் கலெக்டர் உட்பட அரசு அலுவலர்கள் சென்று வந்தனர். டீசல் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகைில் மாதந்தோறும் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு, ஒரே வாகனத்தில் செல்ல ஏற்பாடுசெய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- காவலர் பணி சந்தேகங்களுக்கு எஸ்பி அலுவலக உதவி மையத்தில் விளக்கம் பெறலாம் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல் முறை கடந்த 7-ந் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கிவரும் உதவி மையத்தை நேரில் அணுகி அல்லது 7305984100 என்ற செல்போன் எண் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இந்த உதவி மையம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
- ஈச்சங்காடு பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஈச்சங்காடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான ஆர்.எஸ்.மாத்தூர், அசாவீரன்குடிக்காடு, குறிச்சிகுளம், பூமுடையான்குடிக்காடு, துளார், ஆதனக்குறிச்சி, கோட்டைக்காடு, முதுகுளம், குவாகம், கொடுக்கூர், இடையக்குறிச்சி, வல்லம், முள்ளுக்குறிச்சி, தாமரைப்பூண்டி, ஆலத்தியூர், இருங்களாகுறிச்சி, மணக்குடையான், மாறாகுறிச்சி, சோழன்பட்டி, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என செந்துறை உதவி செயற்பொறியாளர் பொன்சங்கர் தெரிவித்துள்ளார்.
- அனுமதி பெறாத டாஸ்மாக் கூடங்களுக்கு `சீல்’ வைக்கப்பட்டது.
- மண்டல மேலாளர் உத்தரவின் பேரில் நடந்தது
அரியலூர்:
திருச்சி முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவின் பேரில், பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அரசுக்கு மாதாந்திர தொகை செலுத்தாத அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கூடங்களையும் (பார்), அரசு அனுமதி பெறாமல் நடைபெறும் டாஸ்மாக் கூடங்களையும் பூட்டி சீல் வைக்குமாறு ஒருங்கிணைந்த பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்பேரில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கூடமும், குன்னம், பெருமத்தூர் ஆகிய கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கூடங்களும், அரியலூர் மாவட்டத்தில், அரியலூர், செந்துறை, சிறுகளத்தூர், ஆனந்தவாடி, கட்டையங்குடி காடு ஆகிய கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கூடங்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
- 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் 17 பேர் நேற்று குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 98 ஆக உள்ளது. மேலும் மாவட்டத்தில் இன்னும் 125 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்த 8 பேர் குணமாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 326 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
- உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்
- வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள்
அரியலூர்:
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு வாகனம் தொடக்கி வைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
முன்னதாக அவர், மக்கள் தொகை குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். தொடர்ந்து அவர், பொதுமக்களுக்கு மரக்கன்றுடன், மஞ்சப்பைகள் வழங்கினார். இதில் அன்னை தெரசா செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட குடும்ப நல துணை இயக்குநர் குருநாதன் கந்தையா, மாவட்ட தொழுநோய் துணை இயக்குநர் சுதாகர், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் இளவரசன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் அசோகன் மற்றும் மாவட்ட குடும்ப நலச் செயலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- வருகிற 15-ந்தேதி மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது
- கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி பங்கேற்பு
அரியலூர்:
அரியலூர் பேருந்து நிலையம் செட்டி ஏரி பூங்கா திடலில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை திறப்பு விழா நிகழ்ச்சி 15-ந்தேதி மாலையில் நடைபெற உள்ளது. விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். அரியலூர் மாவட்ட வளர்ச்சி குழு தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசுகிறார்.
விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு காந்தி சிலையை திறந்து வைத்து சிறப்பு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.எல்.ஏ.க்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் கண்ணன், காங்கிரஸ் கட்சி மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன்,
மற்றும் காங்கிரஸ், தி.க., தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், எம்.ஜி.ஆர். கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, அரியலூர் மாவட்ட வளர்ச்சி குழு அமைப்பினர், உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள். விழா முடிவில் அரியலூர் எம்.எல்.ஏ. வக்கீல் கு.சின்னப்பா நன்றி கூறுகிறார்.
- வீட்டில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது
அரியலூர்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகேசனின் மகன் உலகு கண்ணன்(வயது 34). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகாத நிலையில் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பத்தன்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உலகு கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர எஸ்.சி., எஸ்.டி,. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- இருப்பிடம் 5 கிேலா மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர மாணவ,மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் 13 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 7 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியும், 1 ஆதிதிராவிடர் நல ஐ.டி.ஐ மாணவர் விடுதியும் உள்ளன. பள்ளி விடுதிகளுக்கு விண்ணப்பம் பதிவு வரும் 27ந் தேதி வரையிலும், கல்லூரி விடுதிகளுக்கு வரும் 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.மாணவ, மாணவிகள் தெரிவு செய்யப்பட வேண்டிய நாள் அடுத்த மாதம் 10-ந் தேதியாகும். மாணவ,மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
4-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
மாணவர் இருப்பிடத்திற்கும், பள்ளிக்கும் இடைவெளி 5 கிேலா மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த விதி பொருந்தாது. எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திரௌபதி அம்மன் கோவில் தீமிதி விழா நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் 2019ல் கும்பாபிஷேகம் நடைபெற்று அதன் பிறகு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக கோவிலில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. அதன் பிறகு தற்போது ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருவிழா நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டு, துரோபதி அம்மனுக்கு கொடியேற்றி காப்பு கட்டி விழாவை தொடங்கினர்.
அதன் பின் 3 மாதம் காலமாக மகாபாரதம் பாடி அதைச் சுற்றியுள்ள 8 கிராம பொதுமக்கள் அவர்களுடைய குடும்ப வழிபாடான மண்டாபிடி என்னும் நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். மேலும் அரவான் களபலி நிகழ்ச்சி நடத்தி மேலும் இறுதி நாளான திரௌபதி அம்மனை பல வண்ண மலர்களால் அலங்கரித்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து அம்மனின் அருளால் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து அவர்களுடைய வேண்டுதலை நிறைவேற்றி அம்மனின் அருளை பெற்று சென்றனர். மேலும் இந்த திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் தங்களுடைய குடும்பத்தோடு அம்மனை வழிபட்டு அருளை பெற்று சென்றனர்.
- உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம் நடைபெற்றது.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பரப்ரம்மம் பவுண்டேஷன் சார்பில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம் மற்றும் கட்டுரை ஓவியப் போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பரப்ரம்மம் பவுண்டேஷன் மற்றும் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பரப்ரம்மம் த.முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.ஜெயங்கொண்டம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை குடும்ப நல இயக்க உறுதிமொழி வாசித்து கருத்தரங்கில் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
நமது தாய் நாட்டிற்கும் மொத்த மேம்பாட்டிற்கும் தாய்மார்களின் நல்வாழ்விற்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துதல் முதன்மை யானதும், முக்கியமானதும் ஆகும். ஆணும், பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல், பெண் சிசுக்கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல், சிக்கனத்தை கடைப்பிடித்தல், சுற்றுச்சூழல் பாதிப்பை தடுத்தல், குடும்பக் கட்டுப்பாடு முறைகளை ஏற்போம் நம் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போம் போன்ற தலைப்பில் விவரித்து பேசினார்.
மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் விமல் ராஜ், விக்ரமன், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.நிகழ்ச்சி முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள் வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். இறுதியில் நர்சிங் கல்லூரி முதல்வர்சுருதி நன்றி கூறினார்.






