என் மலர்
அரியலூர்
- கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
- 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையில் கலவரத்தின் போது அமைதியை ஏற்படுத்தும் வகையில் மாபா பயிற்சி ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இருதரப்பினரிடையே ஏற்படும் கலவரத்தின் போது கூட்டத்தை எப்படி கலைப்பது, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அச்சுறுத்தி கூட்டத்தை கலைப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும், லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை எவ்வாறு கலைப்பது, தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைப்பது, ரப்பர் குண்டு பயன்படுத்துவது, சட்ட விதிகளுக்குட்பட்டு துப்பாக்கியை பயன்படுத்துவது, தூரத்தில் உள்ளவர்களை துப்பாக்கி மூலமாக புகை குண்டு வீசி கூட்டத்தை கலைப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியில் இன்ஸ்பெக்டர்கள் ஆண்டிமடம் முத்துக்குமார், உடையார்பாளையம் வேலுச்சாமி, தா.பழூர் கதிவரன், அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் நடேசன், தனஞ்ஜெயன், ரமேஷ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
- ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அரியலூர்:
அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவரும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினருமான பஞ்சாபிகேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில், அரியலூர் நகர கிளை தலைவராக சந்தானம், துணை தலைவராக ஷேக் தாவூத் , செயலாளராக சிவக்குமார், பொருளாளராக செந்தில்முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதே போல், அரியலூர், திருமானூர், ஜயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து மாவட்டத்தில் பணிபுரியும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை வருகை பதிவேட்டில் கையொப்பம் இட அனுமதிக்காதற்கும், ஊதியப்பட்டிலை கருவூலத்திற்கு அனுப்பாதற்கும் கண்டனம் தெரிவிப்பது. மாவட்ட ஆய்வு கூட்டங்களில் வளர்ச்சி துறை ஊழியர்களை ஒருமையிலும், பண்பில்லாமலும் தடித்த வார்த்தைகளில் பேசி, மன உளைச்சலை ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து செப்.30 ஆம் தேதி கலெக்டர் தலைமையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தை புறக்கணிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக மாவட்ட இணைச் செயலர் பழனிவேல் வரவேற்றார். முடிவில் ரத்தினவேல் நன்றி தெரிவித்தார்.
- ஒரு லட்சம் மானியத்துடன் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- வரும் 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
அரியலூர்:
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மானியத்துடன் தொழில் தொடங்க விரும்பும் வேளாண்மை பட்டதாரிகள் வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
அரியலூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தேர்வு செய்யப்பட்ட 42 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஊராட்சிகளில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், இளநிலை பட்டப்பிரிவில் சான்று பெற்ற இளம் தொழில் முனைவோருக்கு, அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு 25 சதவீதம் அதிகபட்ச நிதி உதவியாக ஒரு லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விரும்பும் வேளாண்மை பட்டதாரிகளின் வயது 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் கணினித்திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர் ஆவார். முறைப்படுத்தும் திட்டம், வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் தொடங்கலாம்.
எனவே தகுதியுடைய தொழில் தொடங்கவிருக்கும் வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் விரிவான திட்ட அறிக்கையுடன் கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் வரும் 31-ந் தேதிக்குள் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது
- கலெக்டர் ரமணசரஸ்வதி வேண்டுகோள்
அரியலூர்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை ஏற்கனவே எட்டியுள்ளது. இதை தொடர்ந்து, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் சுமார் 1,20,000 கன அடி அளவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகளை துவைக்கவோ, மீன் பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும், பாதுகாப்பற்ற கரையோர பகுதிகளில் நின்று கொண்டு பொதுமக்கள் செல்போனில் 'செல்பி" எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் கால்வாய்களில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அந்த பகுதிகளுக்கு தங்களது குழந்தைகளை விளையாட செல்ல விடாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், நீர்நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்கவும் வேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு
- டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி நடந்தது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மூர்த்தியான் கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் (வயது 35). இவர் கார் விபத்தில் நேற்று முன்தினம் பலியானார். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 30 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
- காரின் முன் பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தில் தா.பழூர்-ஜெயங்கொண்டம் சாலை ஓரத்தில் உள்ள மரப்பட்டறை அருகே தைலமரக் கட்டைகள் ஏற்றப்பட்ட நிலையில் சரக்கு வேன் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கார், சரக்கு வேன் பின்புறம் மோதியது. இதில் சரக்கு வேன் சிறிது தூரம் முன்னோக்கி சென்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. காரின் முன் பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது.
அந்த காரில் பயணம் செய்த கர்நாடக மாநிலம் பங்காரபேட்டை, கேசரவல்லி பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா(வயது 32), லட்சுமி(30), சரக்கு வேனில் தைல மரக்கட்டைகளை சரியாக அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உத்திரக்குடி கிராமத்தை சேர்ந்த வீரசைவப் பிள்ளை(45), அங்கராயநல்லூர் கிழக்கு தெருவை சேர்ந்த சதீஷ் (40) ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை, அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கிவைத்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடத்திய விசாரணையில், மீன்சுருட்டி அருகே உள்ள கைலாசபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோவன்(வயது 45) என்பவர், விற்பனைக்காக சாக்கு மூட்டையில் 49 குவார்ட்டர் பாட்டில்களை கொண்டு வந்து, குண்டவெளி பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணனின் மனைவி சூர்யா என்ற சிலம்பொலியிடம்(24) கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை மீன்சுருட்டி போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்களுக்கு மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
- உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் தொடங்கி வைத்தார்
அரியலூர்:
ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிமணி தொடங்கி வைத்து, பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அனைவரும் கல்லூரியில் சேர வேண்டும். அந்த மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கல்லூரியில் சேராத மாணவர்களை கல்லூரியில் சேர்வதற்கு வழிகாட்டி, அறிவுரை வழங்கி சேர்க்க வேண்டும். முடிந்தவரை அரசு கல்லூரிகளில் சேர்வதற்கு அறிவுரை வழங்க வேண்டும், என்றார். ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் ஆகியோர் வழிகாட்டுதல் விளக்கங்களை அளித்தனர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.
- பெண்களை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வீட்டில் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர் உலகநாதன்(வயது 32). இவரது மனைவி வேம்பரசி(25). உலகநாதன் மற்றும் அவரது தம்பி தமிழரசன்(28) ஆகியோர் சம்பவத்தன்று வீட்டில் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் வேம்பரசியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற வேம்பரசியின் தங்கை காவியாவை அரிவாள்மனையால் கீறியதோடு, கட்டையால் தாக்கியுள்ளனர். இது குறித்து வேம்பரசி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் உலகநாதன், தமிழரசன் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தார். இதையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
- பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது செய்யப்பட்டார்.
- ஆசை வார்த்தைகள் கூறி, அவரை பலமுறை பலாத்காரம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள செட்டித்திருகோணம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(வயது 60). இவர், மன வளர்ச்சி குன்றிய 35 வயது பெண் ஒருவரிடம், ஆசை வார்த்தைகள் கூறி, அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்தபோது, அந்த பெண் 6 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண்ணின் தாய், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிந்து ராஜமாணிக்கத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்.
- வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க நிறுவனத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்தை சீட்டு நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஓட்டல் நடத்தி வருபவர் வளவன்(வயது 58). இவர் ஜெயங்கொண்டத்தில் ஏலச்சீட்டு நடத்தி வரும் ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் 40 மாத கால தவணை கொண்ட ரூ.20 லட்சத்திற்கான சீட்டில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். இந்த சீட்டின் 6-வது மாதத்தில் வளவன் ஏலம் எடுத்துள்ளார். இதன்படி சீட்டு நடத்தும் நிறுவனம், அவருக்கு ரூ.12 லட்சம் கொடுக்க வேண்டும். ஆனால் சுமார் நான்கு மாதம் தாமதம் செய்து 3 தவணைகளில் ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்தை சீட்டு நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ளது. மீதித்தொகை ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை சீட்டு நிறுவனம் தராததால், அவர் அத்தொகையை கேட்டு அரியலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனம் சார்பில் இந்த வழக்கில் பதில் சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், அந்த நிறுவனம், வாடிக்கையாளருக்கு சீட்டு எடுத்த வகையில் தர வேண்டிய ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை சீட்டு ஏலம் விட்ட நாளில் இருந்து வட்டியுடன் சேர்த்து நான்கு வாரங்களுக்குள் தர வேண்டும். சேவை குறைபாட்டிற்காக அவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் நிதி நிறுவனங்கள் பணம் வழங்கும்போது ஏற்படுத்தக்கூடிய ஆவணங்களுக்கு கட்டணம் மற்றும் சேவை வரி கட்டணம் என்பவை சரியான விகிதாச்சாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார்
- மகன் படுகாயமடைந்தான்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மூர்த்தியான் கிராமத்தைச் சேர்ந்த முருகையனின் மகன் செந்தில்குமார்(வயது 35). விவசாயி. இவர் நேற்று தனது மகன் பாலமுருகனுடன்(6) அருகில் உள்ள நிலத்தில் மேய்ந்து கொண்டு இருந்த மாட்டை ஓட்டுவதற்காக வீட்டில் இருந்து திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த பாலமுருகன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.






