என் மலர்
நீங்கள் தேடியது "4 INJURED IN CAR ACCIDENT"
- வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
- காரின் முன் பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தில் தா.பழூர்-ஜெயங்கொண்டம் சாலை ஓரத்தில் உள்ள மரப்பட்டறை அருகே தைலமரக் கட்டைகள் ஏற்றப்பட்ட நிலையில் சரக்கு வேன் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கார், சரக்கு வேன் பின்புறம் மோதியது. இதில் சரக்கு வேன் சிறிது தூரம் முன்னோக்கி சென்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. காரின் முன் பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது.
அந்த காரில் பயணம் செய்த கர்நாடக மாநிலம் பங்காரபேட்டை, கேசரவல்லி பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா(வயது 32), லட்சுமி(30), சரக்கு வேனில் தைல மரக்கட்டைகளை சரியாக அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உத்திரக்குடி கிராமத்தை சேர்ந்த வீரசைவப் பிள்ளை(45), அங்கராயநல்லூர் கிழக்கு தெருவை சேர்ந்த சதீஷ் (40) ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை, அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






