என் மலர்tooltip icon

    அரியலூர்

    • 740 மாணவிகளுக்கு உயர் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • வங்கி பற்று அட்டையை வழங்கும் நிகழ்ச்சி

    அரியலூர்:

    சென்னையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியினை காணொலி வாயிலாக காணும் வகையில், அரியலூர் வாலாஜாநகரத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், புதுமை பெண் திட்டத்தில் முதற்கட்டமாக 740 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, சட்டப் பேரவை உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி, துணை தலைவர் கலியமூர்த்தி, வாலாஜாநகரம் ஊராட்சி தலைவர் அம்பிகா இளையராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லியோனல் பெனிடிக் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • ஒரே நாளில் 15,607 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    • 35-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது.

    அரியலூர்:

    தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 35-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். நேற்று அரியலூர் மாவட்டத்தில் 15,607 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது."

    • கொட்டும் மழையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
    • 11 சிலைகள் கரைக்கப்பட்டன.

    அரியலூர்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 31-ந் தேதி அரியலூர் நகரில் பெரிய அரண்மனை தெரு, சின்னக்கடை தெரு, பட்டுநூல்கார தெரு, எத்திராஜ் நகர், அண்ணா நகர், பொன்னுசாமி அரண்மனை தெரு ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து 5-ம் நாளான நேற்று சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதற்காக சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது பலத்த மழை பெய்தது. இதனால் விநாயகர் சிலைகள் கரையாமல் இருப்பதற்காக, சிலைகளுக்கு மேல் பக்தர்கள் குடைபிடித்து வந்தனர். தேரடி அருகே ஊர்வலம் வந்தபோது அங்கிருந்து பஸ் நிலையம் வரை செல்ல வேண்டும் என்று பக்தர்கள் கூறினார்கள்.

    இது பற்றி விசுவ இந்து பரிஷத்தின் மாவட்ட தலைவர் முத்துவேல், போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சிலைகள் அண்ணா சிலை வரை சென்று வர போலீசார் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து தேரடியில் இருந்து மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் பக்தர்கள் நடனமாடியபடி விநாயகர் சிலைகளுடன் கொட்டும் மழையில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் மருதையாற்றில் மொத்தம் 11 சிலைகள் கரைக்கப்பட்டன.

    ஊர்வலத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்."


    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடந்தது.
    • அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்றது

    அரியலூர்:

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவும், நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க அனுமதி வழங்கியுள்ளது. அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை வழங்குவதற்காக படிவம் 6-பி என்ற புதிய படிவம் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் படிவம் 6-பி-யில் தங்கள் ஆதார் எண்ணை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கொடுத்து வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொண்டனர்.

    • பாரம்பரிய நெல் விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
    • ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதைகள் போதுமானதாகும்

    அரியலூர்:

    தமிழக அரசின் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்திட உற்பத்தி செய்யப்பட்ட தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, சீரக சம்பா போன்ற நெல் ரகங்களின் விதைகள் 2.5 மெட்ரிக் டன் அளவு அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு வினியோகத்திற்கு தயார் நிலையில் உள்ளது. மேற்கண்ட பாரம்பரிய நெல் விதைகளானது வருகிற சம்பா பருவத்திற்கு, கிலோ ஒன்றுக்கு ரூ.25 வீதம் நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வினியோகம் செய்யப்பட உள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதைகள் போதுமானதாகும். மொத்த விதையளவில் 80 சதவீதம் பொது பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் பட்டியல் இன, பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். விவசாயி ஒருவருக்கு ஒரு ஏக்கருக்கு உரிய விதைகள் மட்டுமே வழங்கப்படும். குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சியை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலுக்கு வலிமை சேர்க்கும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பாரம்பரிய நெல் ரக அரிசியை உண்ணும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே அரியலூர் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • வீட்டில் இருந்த பெண் மாயமானார்
    • நாகராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் கள்ளர் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி செல்வி. நாகராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் ரேஷ்மா(வயது 23) பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர், சம்பவத்தன்று உடல்நிலை சரியில்லை என்று கூறி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்று வருவதாக கூறிச்சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தா.பழூர் போலீசில், செல்வி கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    "

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தா.பழூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தனர்.

    அவர்கள் மருத்துவ சீட்டுகளை பெற்று, டாக்டரிடம் சென்றனர். அப்போது அங்கிருந்த டாக்டர், பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்காமல், வேறு டாக்டர் வந்ததும் காண்பித்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள் பொறுமை இழந்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தின் முன்பு திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த வட்டார மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி, போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த டாக்டர், அவசர நோயாளிக்கு சிகிச்சை அளித்துவிட்டு, அப்போதுதான் வந்த சூழ்நிலையில் திடீர் மன அயற்சி காரணமாக நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க தயங்கியதாகவும், இது பற்றி உடனடியாக தன்னிடம் சொன்னதால், தான் மருத்துவம் அளிக்க வந்துவிட்டதாகவும் டாக்டர் தட்சிணாமூர்த்தி, நோயாளிகளிடம் தெரிவித்தார்.

    இதனால் சமாதானம் அடைந்த நோயாளிகள், டாக்டரிடம் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் நிக்கோலஸ், ரவிச்சந்திரன், பாலச்சந்திரன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தினர்"

    • ஆகாய வீரன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வீரபோகம் கிராமத்தில் உள்ள ஆகாய வீரன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 1-ந் தேதி முதல் தொடர்ந்து விநாயகர் வழிபாடு, முதற் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜை நேற்று காலை தொடங்கி நடந்தது. இதைத்தொடர்ந்து கடகங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்திருந்த கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் பரிவார தெய்வங்களான பதினெட்டு கருப்பு, ஆகாய வீரன், பச்சைவாழியம்மன் மூலஸ்தான விமானத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது."

    • ஆடு திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • ஆட்டின் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்தது

    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் ஜோதிபுரத்தை சேர்ந்த கண்ணனின் மனைவி அம்சவல்லி(வயது 45). சம்பவத்தன்று மதியம் வீட்டின் எதிரில் மேய்ந்து கொண்டிருந்த அவருடைய ஆட்டை காணவில்லை. இது பற்றி அவர், அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்களிடம் விசாரித்ததில் கிடைத்த தகவலின்படி, அம்சவல்லியும், கண்ணனும் அன்புச்செல்வன் என்பவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, இறைச்சியாக்கி விற்கும் நோக்கத்தில் அந்த ஆட்டின் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்ததாகவும், எனவே அன்புச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அம்சவல்லி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கீழத்தெருவை சேர்ந்த அண்ணாதுரையின் மகன் அன்புச்செல்வனை(28) கைது செய்து விசாரித்து வருகின்றனர்."

    • இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • 8 இடைநின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், இடைநின்ற மாணவர்களின் இருப்பிடங்களில் சென்று சந்தித்து கள ஆய்வுக்குழு மூலம் மீண்டும் பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி மகிமைபுரம் பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் குடியிருப்புகளுக்கு சென்று கள ஆய்வு நடத்தப்பட்டதில், 8 இடைநின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேகலா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன், வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தில், ஆசிரியர் பயிற்றுனர் அந்தோணிலூர்துசேவியர் மற்றும் அப்பகுதிக்கு உட்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய குழு மூலமாக அவர்களுக்கு கல்வி சார்ந்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர ஆலோசனை வழங்கப்பட்டது."

    • பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இட பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலூர் கிராமத்தில் உள்ள ரோட்டுத்தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி ராணி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராசுவுக்கும் இட பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராணிக்கு சொந்தமான நிலத்தில் கோவிந்தராசு குடும்பத்தினர் ஆடு, மாடுகளை மேய்த்ததாகவும், அதனை தட்டிக்கேட்ட ராணியை திட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து போலீஸ் நிலையத்தில் ராணி புகார் அளித்தும், யாரும் வராததால் மன உளைச்சலில் இருந்த ராணி வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ராணியை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • சம்பவத்தன்று மழவராயநல்லூர் பஸ் நிழற்குடையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பிரபாகரனுக்கும், வல்லரசுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மழவராயநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை மகன் பிரபாகரன்(வயது 19). டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் வல்லரசு(20). நண்பர்களான இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாட்டின் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மழவராயநல்லூர் பஸ் நிழற்குடையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பிரபாகரனுக்கும், வல்லரசுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பின்பு வல்லரசு, பிரபாகரனை பார்த்து திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரபாகரன் தனது வீட்டிற்கு வந்து வீட்டில் விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர் பிரபாகரனை உடனடியாக மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பிரபாகரனின் தாய் மங்கையர்கரசி விக்கிரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×