என் மலர்
அரியலூர்
- கோவிலை வாலிபர் சூறையாடினார்.
- கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் கிராம மக்களால் சமீபத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலுக்கு தேர் செய்யும் பணிக்காக பொருட்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் வாங்கி, அதனை பெயிண்டு அடித்து வைத்திருந்தனர். அதேபோல் சாமியை ஊர்வலமாக கொண்டு செல்லும் சகடையும் இருந்தது. கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை கோவில் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே சென்ற ஒரு வாலிபர், சகடை மற்றும் தேர் கட்டுவதற்காக வைத்திருந்த விலை உயர்ந்த மரங்கள் ஆகியவற்றையும், சாமிக்கு பயன்படுத்தும் சேலைகளையும் தீ வைத்து கொளுத்தியுள்ளார். பின்னர் கோவில் சுவற்றில் இருந்த கேமராக்களை அடித்து உடைத்ததோடு, மின்சாதன பொருளையும் அடித்து உடைத்தார்.
இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அவரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் சுற்றுச்சுவரை ஏறி குதித்து அருகில் இருந்த டாஸ்மாக் கடை பகுதிக்கு தப்பி ஓடினார். ஆனால் விரட்டிச்சென்ற கிராம மக்கள், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் கஞ்சா மற்றும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இது பற்றி செந்துறை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி, அந்த வாலிபரை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த வாலிபர் கஞ்சா மற்றும் குடிபோதையில் இந்த செயலை செய்தாரா? அல்லது மனநிலை பாதிக்கப்பட்டு இந்த செயலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசித்தி பெற்ற கோவிலை வாலிபர் சூறையாடிய சம்பவத்தை அறிந்து கிராம மக்கள் அங்கு திரண்டு வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தந்தையின் 2-வது மனைவியை கத்தியால் கீறியவர் கைது செய்யப்பட்டார்.
- சொத்து பிரச்சனையில் சம்பவம்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பொற்பொதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். அவர்களுக்கு தலா ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீரமுத்து இறந்துவிட்டார். அவரது சொத்துக்களை பிரித்துக் கொள்வது தொடர்பாக வீரமுத்துவின் 2 மனைவிகளுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வீரமுத்துவின் 2-வது மனைவி கொளஞ்சி(42) வீட்டு வாசலில் சமைத்துக் கொண்டிருந்தபோது, வீரமுத்துவின் முதல் மனைவியின் மகன் சோலைமுத்து(22), கொளஞ்சியை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த கத்தியால் கையில் கீறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கொளஞ்சி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து சோலைமுத்துவை கைது செய்தார்.
- தமிழகத்தில் 2026-ம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சிதான் நடைபெறும் என்று மாநில பொதுச் செயலர் தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
அரியலூர்:
அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் பேசுகையில், அரசியலில் தகுதியுள்ள கட்சி என்றால் அது பா.ஜ.க. மட்டுமே. இக்கட்சியில் ஊழல் கிடையாது, வாரிசு அரசியல் கிடையாது. தமிழகத்தில் எதிர்ப்புகளை கடந்து பா.ஜ.க. வளர்ச்சி பெற்று வருகிறது.
எனவே இக்கட்சியை வலுவாக இயக்கமாக மாற்ற வேண்டும் என்றால் அனைத்து கிளைகளிலும் இளைஞர்களை சேர்க்க கட்சியினர் பாடுபட வேண்டும். அப்படி பாடுபட்டால் தமிழகத்தில் 2026-ம் ஆண்டில் பா.ஜ.க. தான் ஆட்சி புரியும் என்றார். மு ன்னதாக அவர் கட்சியின் செயல்பாடுகள், உறுப்பினர்களை சேர்ப்பது, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் சந்திரசேகர், மாநில செயற் குழு உறுப்பினர்கள் அய்யாரப்பன், நடராஜன், மாவட்ட பொது செயலாளர்கள் அருன்பிரசாத், மகாலிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் நகரத் தலைவர் மணிவண்ணன் நன்றி தெரிவித்தார்.
- அரசு கல்லூரி மாணவர்களுக்கு போட்டி தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- 8 மணி நேரம் படிப்பிற்காக செலவிட வேண்டும்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் திருவனந்தபுரம் மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் பழனிச்சாமி, இந்திய தனித்துவ அடையாள ஆணைய துணை பொது இயக்குனர் கோபாலன், தொல்பொருட்கள் ஏற்றுமதி கழக செயல் இயக்குனர் செல்வம், திருச்சி மண்டல அஞ்சல் தலைவர் கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்தும், வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை மூலதனமாக கொண்டு தங்கள் இலக்கை நோக்கி செல்லும் போது வெற்றி பெறுவது எளிதான செயலாகும். தோல்வியை வெற்றிக்கான முதல் படி என நினைத்து தங்கள் இலக்கை தொடர வேண்டும் என அறிவுரை கூறினர். நிகழ்ச்சியில் போட்டி தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது? அதற்கான வழிகாட்டுதல் குறித்து திருவனந்தபுரம் பத்திரிகை தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் பழனிச்சாமி பட காட்சியுடன் விளக்க உரையாற்றினார்.
மத்திய, மாநில அரசு பணிகள் அனைத்தும் போட்டி தேர்வுகளை அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்யப்படுகிறது. போட்டி தேர்வுகளை எதிர் கொள்ள கல்லூரி பருவத்திலிருந்து மாணவர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள், பொது அறிவு, பொருளாதாரம், வரலாறு, அறிவியல் என அனைத்து விவரங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும். போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் போது ஒவ்வொரு நாளும் நாம் கண்டிப்பாக 8 மணி நேரம் படிப்பிற்காக செலவிட வேண்டும். போட்டி தேர்வு என்பது கல்லூரி தேர்வு போன்றது அல்ல. ஓட்டப்பந்தயம் போன்றது. முதலில் வருபவர்களுக்கே வெற்றி என்ற அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. போட்டித் தேர்வுகளை எவ்வித தயக்கமும் இன்றி தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
- காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
- போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேசினர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியை சேர்ந்தவர் நடராஜன் (வயது25). இவரும், நெல்லித்தோப்பு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ரம்யா (22) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில், நடராஜன் திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடராஜனை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ரம்யா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேசினர். பின்னர் அவர்கள் ஜெயங்கொண்டத்தில் ஒரு கோவிலில் திருமணம் செய்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு திரும்பி வந்தனர். அவர்களுக்கு இன்ஸ்பெக்டர் சுமதி அறிவுரை கூறி ஒற்றுமையாக இருக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.
- தா. பழூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது
- 6 பேர் மீது வழக்குப்பதிவு
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தில் ஆண்டிமடம் தாலுகா குவாகம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் (வயது 45) என்பவர் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார். அந்த நிலம் உள்ள பகுதியில் கொளஞ்சிநாதனுக்கும், கோடாலி கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கொளஞ்சிநாதனுக்கு சொந்தமான இடத்தில் போடப்பட்டிருந்த பைப் லைனை ரங்கநாதன் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதுபோல் ரங்கநாதன் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை கொளஞ்சிநாதன் மற்றும் அவரது தரப்பினர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ரங்கநாதன், கொளஞ்சிநாதன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த பவளக்கொடி, மயில் கண்ணன், சித்ரா, மல்லிகா ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்."
- மதுவிற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 60 மதுபாட்டில்கள் பறிமுதல்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் காந்திஜெயந்தி தினத்தன்று மதுவிற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது தா.பழூர் அருகே உள்ள சோழங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த சின்னதுரை (வயது52) என்பவர் மதுபாட்டில்களை பதுங்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதுபோல் தா.பழூர் காலனி தெருவை சேர்ந்த செல்வம் (48), அதே பகுதியை சேர்ந்த முத்து (53), தா.பழூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரஸ்வதி (48), அதே பகுதியை சேர்ந்த செல்வி (45) ஆகியோர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன."
- அரியலூர் மாவட்டம் கல்லக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
- பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் கல்லக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி புரட்டாசி 2-வது சனிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலியுக வரதராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சொக்கலிங்கபுரம், பாப்பாக்குடி, காடுவெட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 பேரை கைது செய்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சொக்கலிங்கபுரம், பாப்பாக்குடி, காடுவெட்டி ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காடுவெட்டி அருகே உள்ள மாரியம்மன் கோவில் வழியாக சென்ற 2 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தினர். விசாரணையில் காடுவெட்டி செங்கால் ஓடையில் இருந்து திருட்டு தனமாக மணல் ஏற்றிக்கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, காடுவெட்டி மெயின்ரோடு தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 56), வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
- காந்தி ஜெயந்தி தினத்தன்று கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் சரத்குமார், ராஜா தலைமையிலான போலீசார் தா.பழூர் கடைவீதி பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.
- அப்போது அனுமதியன்றி மது விற்ற 4 பேரை கைது செய்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தன்று கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் சரத்குமார், ராஜா தலைமையிலான போலீசார் தா.பழூர் கடைவீதி பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது தா.பழூர் அருகே உள்ள பொற்பொதிந்தநல்லூரை சேர்ந்த ராம்குமார் (வயது 17) என்பவரிடமிருந்து 17 மது பாட்டில்களும், அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (21) என்பவரிடமிருந்து 17 மது பாட்டில்களும், தா.பழூர் காலனி தெருவை சேர்ந்த வைகுண்டன் (43) என்பவரிடமிருந்து 5 மது பாட்டில்களும், நாயகனைபிரியாள் வடக்கு தெருவை சேர்ந்த சின்னதுரை (58) என்பவரிடம் இருந்து 5 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்க முயன்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- லதா தனது குழந்தைகளுடன் வீட்டின் பின்பக்க கதவுகளை திறந்து வைத்து கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார்.
- அதிகாலை 3 மணியளவில் மர்ம ஆசாமி ஒருவர் வீட்டிற்குள் புகுந்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே என்.ஏ.ஜி. காலனி தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 38). இவர் தனியார் கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது மனைவி லதா (30) மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் பின்பக்க கதவுகளை திறந்து வைத்து கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 3 மணியளவில் மர்ம ஆசாமி ஒருவர் வீட்டிற்குள் புகுந்தார். பின்னர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த லதாவின் கழுத்தில் அணிந்திருந்த 7¼ பவுன் சங்கிலியை பறித்தான்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லதா சத்தமிடவே ராஜன் அந்த ஆசாமியை துரத்தி சென்றார். ஆனால் அந்த ஆசாமி கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலம்பூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் நந்தினி ( வயது 21).
- புகழேந்திக்கும் நந்தினிக்கும் இடையே வரதட்சனை தகராறு இருந்து வந்தது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலம்பூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் நந்தினி ( வயது 21).
இவருக்கும் அதை ஊரைச் சேர்ந்த புகழேந்தி என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது நந்தினி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். புகழேந்திக்கும் நந்தினிக்கும் இடையே வரதட்சனை தகராறு இருந்து வந்தது.
இந்தநிலையில் நந்தினி தனது வீட்டின் மாடியில் உடலில் மண்எண்ணைய் ஊற்றி தீக்குளித்து இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நந்தினியின் பெற்றோர் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கணவர் புகழேந்தி மற்றும் மாமியாரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






