என் மலர்tooltip icon

    அரியலூர்

    • வாகனம் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.
    • மொபட்டில் வி.கைகாட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த கோரைக்குழி காலனி தெருவை சேர்ந்தவர் மருதமுத்து மகன் வடிவரசன் (வயது 28). இவர் சம்பவத்தன்று மாலை தனது ஊரில் இருந்து மொபட்டில் வி.கைகாட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தேளூர் துணை மின் நிலையம் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வடிவரசனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நூலக நண்பர்கள் திட்டத்தில் சேர தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட நூலக அலுவலர் தெரிவித்துள்ளார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் செயல்படவுள்ள நூலக நண்பர்கள் திட்டத்தில் சேர விருப்பமுள்ள தன்னார்வலர்கள் இணையலாம் என்று மாவட்ட நூலக அலுவலர் சண்முகநாதன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வீடுகளுக்கே நேரடியாக சென்று புத்தகங்கள் விநியோகிக்கும் நூலக நண்பர்கள் திட்டத்துக்கு தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

    அதன்படி அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 65 நூலகங்களில் 40 நூலகங்களில் நூலக நண்பர்கள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாசிப்பில் ஆர்வம் உள்ள 200 தன்னார்வலர்களை கண்டறிவது தொடர்பாக அந்தந்த நூலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் தன்னார்வலர்களாக இணைவோருக்கு அடையாள அட்டை புத்தகங்களை எடுத்து செல்ல பை ஆகியவை வழங்கப்படும். முதலில் 25 நூல்கள் வழங்கப்பட்டு அவற்றை விநியோகித்த பிறகு மீண்டும் நூல்கள் வழங்கப்படும். இவ்வாறு மாதத்திற்கு 2 முறை நூல்கள் வழங்கப்படும்.

    நூலகத்திலிருந்து நூல்களை பெற்றுச்சென்று நூல்களை விநியோகிப்பது. விநியோகித்த நூல்களை திரும்ப பெற்று வந்து நூலகத்தில் ஒப்படைப்பது ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொள்வர். எனவே இந்த திட்டத்திலே சேர ஆர்வமுள்ள தன்னார்லர்கள் இணையலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
    • நாய் அடகு கடையின் பின்புறமாக சென்று முன்பக்கமாக வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி கடைவீதியில் ராஜஸ்தானை சேர்ந்த சங்கர் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 28-ந் தேதி இரவு 7 மணியளவில் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சங்கர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் சங்கர் மற்றும் அவரது கடையில் வேலை பார்த்து வரும் தில்கேஷ், அஜித் ஆகியோர் கடையை திறக்க வந்தனர்.

    அப்போது கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடையின் பின்பக்க சுவற்றை மர்ம நபர்கள் துளையிட்டு லாக்கரில் வைத்திருந்த 209 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, போலீஸ் மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் அடகு கடையின் பின்புறமாக சென்று முன்பக்கமாக வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனைதொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாதாந்திர குறுவள மைய அளவிலான கலந்தாலோசனை கூட்டம், ஜெயங்கொண்டம் ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பாட வாரியாக நடைபெற்றது.
    • அடுத்த மாதத்திற்கான பாடத்திட்டம் குறித்த கலந்தாலோசனை பாடவாரியாக நடத்தப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில், 6-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாதாந்திர குறுவள மைய அளவிலான கலந்தாலோசனை கூட்டம், ஜெயங்கொண்டம் ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பாட வாரியாக நடைபெற்றது.

    பயிற்சியினை வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) கண்ணதாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு கருத்துகளை வழங்கினர். 286 பட்டதாரி ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனர்களும் கலந்து கொண்டனர்.

    அடுத்த மாதத்திற்கான பாடத்திட்டம் குறித்த கலந்தாலோசனை பாடவாரியாக நடத்தப்பட்டது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜ்குமார், வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி லூர்து சேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

    • ஞ்சாவூர் பூச்சந்தை பூக்கார விலா ரோடு தெருவை சேர்ந்தவர் பாரிவள்ளல்(வயது 60).
    • மீன்சுருட்டி அருகே உள்ள அணைக்கரை என்ற இடத்தில் அந்த பஸ் வந்தபோது பாரிவள்ளலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

    அரியலூர் ;

    தஞ்சாவூர் பூச்சந்தை பூக்கார விலா ரோடு தெருவை சேர்ந்தவர் பாரிவள்ளல்(வயது 60). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    இதில் 2 மகள்களை தஞ்சாவூரிலேயே திருமணம் செய்து கொடுத்ததாக தெரிகிறது. இளைய மகள் தனது கணவருடன் சென்னையில் உள்ளார். அவர்களை பார்ப்பதற்காக தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் அவர் பயணம் செய்ததாக தெரிகிறது.

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அணைக்கரை என்ற இடத்தில் அந்த பஸ் வந்தபோது பாரிவள்ளலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து பஸ் டிரைவர் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து, பாரிவள்ளலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வி.கைகாட்டி பஸ் நிறுத்த நிழற்குடை அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதைத் தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலீசார் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வி.கைகாட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வி.கைகாட்டி பஸ் நிறுத்த நிழற்குடை அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள், வி.கைகாட்டியை சேர்ந்த அருள்மணி(வயது 28), வைப்பம் கிராமத்தை சேர்ந்த நித்தியானந்தம்(26), விக்கிரமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த சவுந்தர்ராஜன்(24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களை சோதனை செய்தபோது, விற்பனைக்காக அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தலா மூன்று பொட்டலங்களில் இருந்த மொத்தம் 45 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
    • மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும். அவர்களின் தொடர்ச்சியான வருகையை கண்காணிக்க வேண்டும்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மேலாண்மை குழு தலைவர் கவிதா தலைமை தாங்கினார்.

    தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வட்டார கல்வி அலுவலர் ராஜாத்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    அவர் பேசுகையில், மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும். அவர்களின் தொடர்ச்சியான வருகையை கண்காணிக்க வேண்டும், என்றார். கூட்டத்தில், மாணவர்கள் திருக்குறள் மற்றும் வாய்ப்பாடுகள் ஆகியவற்றை ஒப்பித்து பாராட்டு பெற்றனர்.

    • மாற்று திறனாளிகள் கிரிக்கெட் போட்டி நவம்பர் 2 முதல் 6 ம் தேதிவரை மும்பையில் நடக்கவுள்ளது.
    • மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில தமிழக அணிக்காக விளையாட அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அரியலூர்

    மும்பையில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில தமிழக அணிக்காக விளையாட அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மாற்று திறனாளிகள் கிரிக்கெட் போட்டி நவம்பர் 2 முதல் 6 ம் தேதிவரை மும்பையில் நடக்கவுள்ளது. இதற்கான தமிழக அணியின் கேப்டனாக அரியலூர் மாவட்டம், திருமழபாடியைச் சேர்ந்த ராஜ் மகேஷ்வரன் என்பவர் தேர்வு செய்யபட்டுள்ளார்.

    இவருடன் அரியலூரை சேர்ந்த சன்மேக்கர் மற்றும் செல்வகணேஷ் என்ற மாற்று திறனாளி வீரர்களும் தேர்வு செய்யபட்டுள்ளனர்.

    ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மாற்று திறனாளி வீரர்கள் தமிழக அணிக்காக மும்பையில் விளையாட உள்ளது அரியலூர் மாவட்டத்திற்கு பெருமையை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் சனிக்கிழமை அரியலூர் ரயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளது குறிப்பிடதக்கது.

    • சோழர் பாசன திட்டத்தை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும்.
    • அரியலூர் வாரணவாசியில் உள்ள பழமையான தொல்பொருள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.

    திருமானூர்:

    சோழர்கால பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அரியலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபயணத்தை நேற்று கீழப்பழுவூரில் தொடங்கினார்.

    அப்போது, சோழர் பாசன திட்டத்தை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும், பொன்னேரியில் இருந்தும், பொன்னாற்றில் இருந்தும் நீர் வரும். ஒவ்வொரு ஆறுகளும் நீரினால் நிரம்பியிருக்க வேண்டும். அதற்கு ஏரிகளை தூர்வாரியிருக்க வேண்டும். அவ்வாறு தூர்வாரியிருந்தால் அரியலூர் மாவட்டம் வளம் பெற்று, பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கும். கரைவெட்டி சரணாலயம் சுற்றுலாத்தலமாக மாறும். நான் வந்தால் அனைத்தையும் முடித்துவிட்டு செல்வேன் என்றார்.

    இன்று 2-ம் நாளாக அரியலூரில் அவர் நடைபயணத்தை தொடங்கினார், அரியலூர், வாலாஜாநகரம், அஸ்தினாபுரம், வி.கைகாட்டி, தத்தனூர், உடையார்பாளையம், கச்சிபெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், ஜெயங்கொண்டம், ஆமநத்தம் தோண்டி, கங்கைகொண்டசோழபுரம், மீன்சுருட்டி, கண்டமங்கலம் வழியாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நிறைவு பெறுகிறது.

    முன்னதாக அவர் அரியலூர் வாரணவாசியில் உள்ள பழமையான தொல்பொருள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது 242 உயிரினங்களின் படிமங்களில் 10 மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருவது குறித்த கேட்டார். அதற்கு புவியியல் ஆய்வாளர் சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்க அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

    • ஓட்டல் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.
    • நீண்ட நேரமாகியும் ஓட்டலுக்கு சாப்பிட செல்லவில்லை

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள உஞ்சினி கிராமத்தை சேர்ந்த முருகேசனின் மகன் ராஜதுரை(வயது 22). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு, உடையார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று விடுப்பு எடுப்பதாக ஓட்டலுக்கு தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் உடையார்பாளையம் கடைவீதியில் உள்ள வாடகை வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் தங்கி இருந்துள்ளார்.

    நீண்ட நேரமாகியும் அவர் ஓட்டலுக்கு சாப்பிட செல்லவில்லை. இதனால் ஓட்டல் ஊழியர்கள் நேற்று மாலை அவர் தங்கியிருந்த அறைக்கு வந்து, கதவை திறந்து பார்த்தனர். அப்போது ராஜதுரை பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார்.
    • அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்

    அரியலூர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 5-ந் தேதி அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 4-ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு கட்சியினர், பொதுமக்கள் வரவேற்பு கொடுக்கின்றனர்.

    பின்னர் மதியம் அவர் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் பெரம்பலூருக்கு மாலையில் வருகை தந்து, மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    பின்னர் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் திறந்தவெளியில் தி.மு.க. சார்பில் நடைபெறும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இரவில் கூட்டம் முடிந்த பின்னர் அவர் பெரம்பலூர் கட்சி அலுவலகத்தில் தங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து 5-ந்தேதி காலை 10.30 மணியளவில் அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் 2 மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பெரம்பலூரில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் அங்கு சென்றடைகிறார். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் சென்னை செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர்-அரியலூர் வருகையை முன்னிட்டு அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

    • பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • தொழிற்சங்க மையத்தின் 15-வது மாநில மாநாடு,

    அரியலூர்

    தமிழ்நாடு இந்திய தொழிற்சங்க மையத்தின் 15-வது மாநில மாநாடு, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி சி.கோவிந்தராஜன் நினைவு ஜோதி பிரசார பயண வாகனத்திற்கு ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் தமிழ்நாடு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை பாதியாக குறைக்க வேண்டும். முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தக் கூடாது. நேரடியாக உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாகுபாடு இன்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கட்டுமானம், ஆட்டோ, தையல் உள்ளிட்ட அனைத்து நலவாரிய பணப் பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்கக்கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் தெரிவித்து இந்திய தொழிற்சங்க மைய நிர்வாகிகள் பேசினர். இதில் மாநிலத் துணைத் தலைவர் கருப்பையா, விழுப்புரம் மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்."

    ×