என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    • பஜ்ரங்தளம் என்பது, கலாசாரத்தை காக்கும் அமைப்பு.
    • தேசியவாதிகளுக்கும், தேசவிரோதிகளுக்கும் இடையிலான தேர்தல் இது.

    உப்பள்ளி :

    கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான கே.எஸ்.ஈசுவரப்பா நேற்று உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவதூறாக பேசினார். இது கார்கேவின் மரியாதையை தூள் தூளாக்கிவிட்டது. யானை அளவு பலம் கொண்ட பிரதமர்மோடியை, மூட்டைப்பூச்சி அளவிலான பிரியங்க் கார்கே விமர்சிப்பது சரியல்ல.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அறிக்கை. பஜ்ரங்தள தடை விவகாரத்தில் காங்கிரஸ்தலைவர்கள் இடையே குழப்பம் உள்ளது. பஜ்ரங்தளம் என்பது, கலாசாரத்தை காக்கும் அமைப்பு. அதனை பி.எப்.ஐ. அமைப்புடன் ஒப்பிடுவது தவறு. இந்துக்களை ஓரங்கட்டும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது. இது அக்கட்சிக்கு பேரழிவாகும்.

    ஜெகதீஷ் ஷெட்டரின் நிலைமை பரிதாபமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா பற்றி பேசிய ஜெகதீஷ் ஷெட்டரிடம் சுயமரியாதையை எதிர்பார்த்தேன். ஆனால் அவர் தனது சுயமரியாதையை தேர்தல் போட்டியிடுவதற்காக விற்றுவிட்டார். ஜெகதீஷ் ஷெட்டர் இன்னும் பா.ஜனதாவின் கோட்பாட்டை கைவிடவில்லை. அவரது வீட்டில் பிரதமர் மோடியின் புகைப்படம் உள்ளது. யாரோ ஒருவரின் நடத்தையால் தான் பா.ஜனதாவில் இருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார். தேசியவாதிகளுக்கும், தேசவிரோதிகளுக்கும் இடையிலான தேர்தல் இது.

    டி.கே.சிவக்குமார் என் பின்னால் ஒக்கலிக சமுதாய மக்கள் இருப்பதாக கூறுகிறார். இவரை விட இனவெறி பிடித்த இன்னொருவர் இல்லை. சாதியின் பெயரால் தீ மூட்டும் வேலையில் ஈடுபடுகிறீர்கள். இந்த தேர்தலுடன் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிடும். பஜ்ரங்தள அமைப்பை தடை செய்ய கூடாது என கூறி வீரப்பமொய்லியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன். பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்போம் என்ற அறிவிப்பை காங்கிரஸ் திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காங்கிரசின் தேர்தல் அறிக்கை பொய்களை உள்ளடக்கியது.
    • பாலுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும்.

    பெங்களூரு

    மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் பலமான கர்நாடகத்தை நிா்மாணிக்கும் வகையில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. இதில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தினமும் அரை லிட்டர் பால், ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளோம். அத்துடன் ரேஷன் அட்டைகளுக்கு மாதம் 5 கிலோ சிறு தானியங்கள் வழங்கப்படும்.

    கர்நாடகத்தில் 54 லட்சம் விவசாயிகள் கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை பெறுகிறார்கள். சிறுதானியம் சாகுபடி செய்யும் நிலங்களுக்கு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விவசாய விளைபொருட்களை அரசு பஸ்களில் 50 கிலோ வரை இலவசமாக எடுத்து செல்ல அனுமதி, ஏழைகளுக்கு வீடுகட்ட ரூ.5 லட்சம் மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம்.

    பாலுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும். மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி பெண்களை சமமாக பார்க்கும் நிலையை ஏற்படுத்துவோம். காங்கிரசின் தேர்தல் அறிக்கை பொய்களை உள்ளடக்கியது. தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர். காங்கிரஸ் எப்போதும் இந்து மக்களுக்கு எதிராக செயல்படுகிறது.

    இவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.

    • பிரதமர் மோடி கர்நாடகத்தில் 3 நாட்கள் முகாமிட்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
    • பிரதமர் மோடியின் தொடர் பிரசாரத்தால் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை மக்களிடையே வீசுவதாக கூறப்படுகிறது.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் 8-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. பிரசாரத்துக்கு 3 நாட்களே இருப்பதால், தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பா.ஜனதா தேசிய தலைவர்கள், மத்திய மந்திரிகள், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடி முதல் கட்டமாக கடந்த மாதம் (ஏப்ரல்) 29, 30-ந் தேதிகளிலும், 2-ம் கட்டமாக, கடந்த, 3-ந் தேதிகளிலும் சூறாவளி பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சி இந்தமுறை ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக பல்வேறு இலவச திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை வெளியிட்டதோடு ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதசார்பற்ற ஜனதா தளம்(ஜே.டி.எஸ்.) கட்சியும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கட்சி தலைவர் எச்.டி.குமாரசாமி ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், பிரதமர் மோடி கர்நாடகத்தில் 3 நாட்கள் முகாமிட்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) கர்நாடகம் வருகிறார். இன்று மதியம் 2 மணிக்கு பல்லாரியிலும், 4.30 மணிக்கு துமகூரு புறநகர் தொகுதியிலும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

    நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலம் செல்ல உள்ளார். பெங்களூரு திப்பசந்திராவில் உள்ள கெம்பேகவுடா சிலையில் இருந்து பிரிகேட் ரோடு வரை இந்த ஊர்வலம் நடைபெற இருக்கிறது.

    ஊர்வலத்தை முடித்து விட்டு அன்றைய தினம் மாலை 4 மணிக்கு பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியிலும், இரவு 7 மணிக்கு ஹாவேரி மாவட்டத்தில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்திலும் பிரதமர் பேச உள்ளார்.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியில் இருந்து மதியம் 1.30 மணிவரை பெங்களூருவில் பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலம் செல்ல இருக்கிறார். பிரிகேட் ரோட்டில் இருந்து மல்லேசுவரம் சாங்கி டாங்கி ஏரி வரை இந்த ஊர்வலம் நடைபெற உள்ளது.

    மாலை 4 மணிக்கு சிவமொக்காவிலும், இரவு 7 மணிக்கு மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். பெங்களூருவில் 17 தொகுதிகளுக்கு பிரதமர் மோடி ஊர்வலம் செல்ல உள்ளார். தொடர்ந்து நஞ்சன்கூடில் இருக்கும் நஞ்சுண்டெஸ்வரா கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தபிறகு தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு மைசூருவில் இருந்து டெல்லி புறப்படுகிறார்.

    சமீபகாலமாக தேர்தல் பிரசாரம், கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கர்நாடக தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளார். நாளை ஹுப்பள்ளியில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

    ஹுப்பள்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சோனியா காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக சோனியாகாந்தி மதியம் 12.30 மணிக்கு ஹூப்பள்ளி வருகிறார். பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு 3.30 மணிக்குத் டெல்லி திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    தொடர்ந்து கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் 3 நாட்கள் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.

    கர்நாடகாவில் ஒரே நாளில் பிரதமர் மோடியும், சோனியா காந்தியும் பிரசாரம் செய்வதால் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரு கட்சி தொண்டர்களுடமே தங்களது ஆதரவாளர்களை திரட்டி பலத்தை காட்ட திட்டமிட்டு உள்ளனர்.

    பிரதமர் மோடியின் தொடர் பிரசாரத்தால் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை மக்களிடையே வீசுவதாக கூறப்படுகிறது. அதே வேளையில் சோனியாவின் பிரசாரம் தங்களுக்கு புதிய உத்வேகத்தை தரும் என்று காங்கிரசார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    • கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
    • கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

    பெங்களூரு:

    கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க.வும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளதால் தற்போது கடைசி கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

    கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க ஒரு கட்சி 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

    காங்கிரஸ் கட்சிக்கு பல கருத்து கணிப்புகள் சாதகமாக இருந்தன. குறிப்பாக கர்நாடகாவின் தனியார் தொலைக்காட்சி, சி வோட்டருடன் சேர்ந்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை நடத்தியது. இந்த கருத்து கணிப்பின்படி கர்நாடகாவில் 106 முதல் 116 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    தனி மெஜாரிட்டிக்கு 113 இடங்கள் தான் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி கூடுதலாக 3 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இந்த கருத்து கணிப்பு தெரிவித்தது. பா.ஜ.க. 79 முதல் 89 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும், ஜே.டி.எஸ். கட்சி 24 முதல் 34 இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் தற்போது புதிய சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வேயின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி கடந்த முறை கருத்துக்கணிப்பின் முடிவுகள் முற்றிலுமாக மாறி உள்ளன. அதன்படி பா.ஜ.க. 105 முதல் 110 இடங்களில் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டிக்கு 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் பாஜக 110 இடங்களில் ஜெயிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருப்ப பா.ஜ.க.வினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி 90 முதல் 97 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் கட்சி 116 இடங்களில் வெற்றி பெறும் என கூறியிருந்தது. அதனை ஒப்பிடும்போது தற்போது காங்கிரஸ் கட்சி பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது.

    அதேபோல் ஜே.டி.எஸ். கட்சி 19 முதல் 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 44 சதவீதம் பேர் பா.ஜ.க.வுக்கு ஓட்டளிக்க உள்ளதாகவு்ம, 33 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சிக்கும், 14 சதவீதம் பேர் ஜேடிஎஸ் கட்சிக்கும், 5 சதவீதம் பேர் மற்றவர்களுக்கு ஓட்டளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம் வரை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்த மக்கள் தற்போது பா.ஜ.க.வின் பக்கம் சாய்ந்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோரின் பிரசாரம் முக்கிய காரணமாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

    காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் பஜ்ரங்க் தள் அமைப்புக்கு தடை குறித்து கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் அது பா.ஜ.க.வுக்கு சாதகமாக திரும்பியுள்ளது என்று அரசியல் வட்டா ரங்கள் கூறுகின்றன. இந்த சூழலில் பிரதமர் மோடி தொடர்ந்து 3 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது, குஜராத்தை போல அவர் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்திப்பது பா.ஜ.க.வுக்கு ஆதரவான அலையை உருவாக்கி உள்ளது.

    • கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல் முறையாக 80 வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
    • கர்நாடகத்தில் நேற்று வரை 87 ஆயிரத்து 501 பேர் வீட்டில் இருந்தவாறு வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல் முறையாக 80 வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க மாநிலம் முழுவதும் 99 ஆயிரத்து 529 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, கடந்த ஏப்ரல் 29-ந் தேதியில் தொடங்கி நாளை வரை வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கபப்ட்டிருந்தது.

    இதுவரை கர்நாடகத்தில் நேற்று வரை 87 ஆயிரத்து 501 பேர் வீட்டில் இருந்தவாறு வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்களிக்க விண்ணப்பித்த முதியவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் மட்டும் நேற்று முன்தினம் வரை 54 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். வீட்டில் இருந்தபடியே வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க நாளை (சனிக்கிழமை) கடைசி நாளாகும்.

    • கர்நாடக சட்டசபை தேர்தலில் பெலகாவி மாவட்டம் அரபாவி சட்டசபை தொகுதியில் குருபுத்ர கெம்பண்ணா குல்லூர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
    • ஜனதாதளம்(எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளை திருமணம் செய்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பெலகாவி மாவட்டம் அரபாவி சட்டசபை தொகுதியில் குருபுத்ர கெம்பண்ணா குல்லூர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதேபோல், அவரது சகோதரர் புந்தலிக்க கல்லூர் என்பவர் கோகாக் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

    இவர்கள் 2 பேரும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், 'நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால்...' அரபாவி, கோகாக் தொகுதிகளில் திருமணத்துக்கு பெண்கள் கிடைக்காமல் திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பெண் பார்த்து மணம் முடித்து வைப்போம் என்று அறிவித்துள்ளனர்.

    அவர்களின் இந்த தேர்தல் அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விவசாயம் செய்து வரும் வாலிபர்களை பெண்கள் திருமணம் செய்ய மறுப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஜனதாதளம்(எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில், விவசாயிகளை திருமணம் செய்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடக சட்டசபைக்கு 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
    • 122 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள் ஆவர்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றிருந்தது. வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் பிரமாண பத்திரமும் தாக்கல் செய்திருந்தார்கள். அதில் தங்களது சொத்து விவரங்கள், தங்கள் மீது இருக்கும் கிரிமினல் வழக்குகள் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

    அதன்படி, கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் 2,613 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் 29 பேர் மட்டும் வேட்பு மனுக்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, 2,586 வேட்பாளர்கள் மீது இருக்கும் கிரிமினல் வழக்குகள் பற்றி டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ஏ.டி.ஆர்) ஆய்வு செய்து, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் கிரிமினல் வழக்குகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 2,613 பேரில் 581 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 2,560 பேரில், 391 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தது. அதாவது தற்போது 22 சதவீதம் வேட்பாளர்கள் மீதும், கடந்த 2018-ம் ஆண்டு 15 சதவீத வேட்பாளர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

    இவற்றில் 404 வேட்பாளர்கள் மீது பயங்கர கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதாவது கொலை, கொலை முயற்சி, கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகள் ஆகும். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் இதுபோன்று 254 வேட்பாளர்கள் மீது பயங்கர கிரிமினல் வழக்குகள் இருந்திருந்தது. அதுபோல், தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், சுயேச்சைகள் மீது இருக்கும் வழக்குகள் பற்றிய தகவல்களையும் அந்த அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.

    அதன்படி, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 223 வேட்பாளர்களில், 122 பேர் மீதும், பா.ஜனதா கட்சியில் 224 வேட்பாளர்களில் 96 பேர் மீதும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 208 வேட்பாளர்களில் 70 பேர் மீதும், ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் 208 வேட்பாளர்களில் 48 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. மேலும் காங்கிரசில் 69 பேர் மீதும், பா.ஜனதாவில் 66 பேர் மீதும், ஜனதாதளம் (எஸ்) கட்சியில் 52 பேர் மீதும் பயங்கர கிரிமினல் வழக்குகள் உள்ளன.

    சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் மீது மட்டும் கற்பழிப்பு வழக்கு உள்ளது. 49 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபட்ட வழக்குகளும், 8 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகளும், 35 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்குகள் இருப்பதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

    • சோனியா காந்தி ஒரே ஒரு பொதுக்கூட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டு பேசுகிறார்.
    • உடல்நிலை காரணமாக இந்த முறை சோனியா காந்தி இதுவரை பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். உடல்நிலை காரணமாக இந்த முறை சோனியா காந்தி இதுவரை பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

    இந்த நிலையில் சோனியா காந்தி நாளை (சனிக்கிழமை) கர்நாடக தேர்தல் பிரசார களத்தில் குதிக்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் உப்பள்ளிக்கு வருகை தரும் அவர், அங்கு நடைபெறும் காங்கிரசின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், "6-ந் தேதி (நாளை) பகல் 12.30 மணிக்கு சோனியா காந்தி உப்பள்ளிக்கு வருகிறார். இங்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு அவர் 3.30 மணிக்கு மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்" என்றனர்.

    சோனியா காந்தி ஒரே ஒரு பொதுக்கூட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டு பேசுகிறார். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் களத்தில் உள்ளார். பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காததால் அவர் கட்சி மாறி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது.
    • இளைஞர்கள் கல்விக்காக அதிகளவில் செலவு செய்கிறார்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கர்நாடகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கொப்பல் மாவட்டம் கனககிரியில் நேற்று நடைபெற்ற கட்சியின் பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு பேசியதாவது:-

    கர்நாடகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர், அரிசி, பருப்புகள், மாவுகள் போன்றவற்றின் விலை உயர்ந்துவிட்டது. பா.ஜனதா ஊழல் அரசின் ஊழல் கொள்கைகளால் விலைவாசி உயர்ந்துள்ளது. 40 சதவீத கமிஷன் பா.ஜனதா அரசு என்று நாம் சொல்லவில்லை. இந்த பெயரை ஒப்பந்ததாரர்கள் சங்கமே வழங்கியுள்ளது.

    அரசுக்கு பெரிய அளவில் கமிஷன் கொடுக்க முடியாத ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இங்குள்ள இளைஞர்கள் கல்விக்காக அதிகளவில் செலவு செய்கிறார்கள். கல்வி பயின்று போட்டி தேர்வுக்கு செலவு செய்து படிக்கிறார்கள். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலர் அந்த பணிக்காக லஞ்சம் வாங்கியுள்ளனர். இதனால் தேர்வான பட்டியலையே இந்த அரசு ரத்து செய்துவிட்டது. பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகன் வீட்டில் ரூ.8 கோடி சிக்கியது.

    இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

    முன்னதாக பிரியங்கா காந்தி, கனககிரி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கனகாசலபதி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டார்.

    • அது எப்படி பஜ்ரங் தளம் அமைப்பு தடை செய்யப்படும் என்று காங்கிரஸ் கூற முடியும்?
    • வெறுப்பு கருத்து பரப்பும் தனிநபர் மற்றும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மூத்த பாஜக தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சியமைத்தால் பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்ததை அடுத்து கேஎஸ் ஈஸ்வரப்பா இவ்வாறு செய்தார்.

    பஜ்ரங் தள் கட்சியை தேசப்பற்று கொண்ட அமைப்பு ஆகும், அது எப்படி பஜ்ரங் தளம் அமைப்பு தடை செய்யப்படும் என்று காங்கிரஸ் கூற முடியும்? என்று கர்நாடக முன்னாள் துணை முதல்வர் கேஎஸ் ஈஸ்வரப்பா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தேர்தல் அறிக்கையில் பொது மக்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிராக மதம் மற்றும் சாதி அடிப்படையில் வெறுப்பு கருத்து பரப்பும் தனிநபர் மற்றும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

     

    "சட்டம் மற்றும் அரசியலமைப்பை புனிதமான ஒன்றாக நாங்கள் கருதுகிறோம். பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பும் பஜ்ரங் தளம், பிஎஃப்ஐ போன்ற அமைப்புகள் மீறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சட்டத்தின் படி இதுபோன்ற அமைப்புகளை தடை செய்வது உள்பட கடுமையான நடவடிக்கை எடுப்பபோம், " என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கேஎஸ் ஈஸ்வரப்பா அது முஸ்லீம் லீக் தேர்தல் அறிக்கை என்று குறிப்பிட்டார்.

    "ஒட்டுமொத்த ஒக்கலிகா சமூகமும் தனக்கு ஆதரவாக உள்ளது, இதனால் நான் தான் முதல்வராவேன் என்று டாக்டர் கே சிவகுமார் கூறுகிறார். பிற்படுத்தப்பட்டோர் சமூகம் தனக்கு ஆதவராக இருப்பதால், நான் முதல்வர் ஆவேன் என்று சித்தராமையா கூறுகிறார். இதில் இருந்தே இரு தலைவர்களும் சமூகங்கள் இடையே மோதலை ஏற்படுத்த திட்டமிடுவது அப்பட்டமாக தெரிகிறது," என்று கேஎஸ் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

    • ஹுப்பள்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுகிறார்.
    • இதற்காக சோனியாகாந்தி மதியம் 12.30 மணிக்கு ஹூப்பள்ளி வருகிறார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வருகிற 10-ந்தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் வருகிற 8-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜனதாதளம்(எஸ்) சார்பாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அந்த கட்சி தலைவர் எச்.டி.குமாரசாமி போன்றோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நாளை மறுநாள்(சனிக்கிழமை) ஹுப்பள்ளியில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் . ஹுப்பள்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து சோனியாகாந்தி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக சோனியாகாந்தி மதியம் 12.30 மணிக்கு ஹூப்பள்ளி வருகிறார். பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு 3.30 மணிக்குத் டெல்லி திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சோனியாகாந்தி பிரசாரம் செய்யும் அதேநாளில் பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி 36.6 கி.மீ. ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடக சட்டசபை தேர்தல் 10-ந் தேதி நடக்கிறது.
    • காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகமாக நடைபெற்றது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ஹாவேரி மாவட்டம் ஹானகல் தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. இரட்டை என்ஜின் அரசு கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. பிரதமர் அவாஸ் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன.

    கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் ஆண்டுக்கு 13 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர்கள் சமூக நீதி குறித்து பேசியே மக்களை கிணற்றில் தள்ளியுள்ளனர். ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். ஆனால் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்துவதாக கூறியுள்ளது. நாங்கள் கடந்த 3 ஆண்டுகளில் 40 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளோம். இந்தியா தற்போது பாதுகாப்பான நாடாக திகழ்கிறது. சித்தராமையா ஆட்சியில் அதிகளவில் மதக்கலவரங்கள் நடைபெற்றன. கற்பழிப்புகள், விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெற்றன. நமது பிரதமர் நாட்டை பாதுகாப்பாக வைத்துள்ளார்.

    அமெரிக்காவில் இப்போதும் கொரானா பயத்தால் முககவசம் அணிகிறார்கள். பிரதமர் மோடி இங்கு கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்தி அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகமாக நடைபெற்றது. காங்கிரசார் தற்போது உத்தரவாத அட்டையை வழங்குகிறார்கள். முதலில் காங்கிரசுக்கு உத்தரவாதம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    ×