என் மலர்
கர்நாடகா தேர்தல்
- கர்நாடக மாநிலத்தில் 2023 சட்டபேரவை தேர்தல் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
- 12 டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று 8-ந்தேதி மாலை 6 மணி முதல் 10-ந்தேதி அன்று நள்ளிரவு வரை மூடப்படும் என கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி:
கர்நாடக மாநிலத்தில் 2023 சட்டபேரவை தேர்தல் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா ஒட்டியுள்ள நாச்சிக்குப்பம், கர்னூர், கோட்டயூர், தளி, ஜவளகிரி, சொக்காபுரம், பேரிகை, முகலப்பள்ளி, பாகலூர் மற்றும் கக்கனூர் கிராமங்களில் அமைந்துள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவில் 12 டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று மாலை 6 மணி முதல் 10-ந்தேதி அன்று நள்ளிரவு வரை மூடப்படும் என கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டார்.
- கர்நாடகத்தை முதல் மாநிலமாக மாற்றுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
- இரட்டை என்ஜின் அரசால் மாநிலத்தின் வளர்ச்சியும் இரட்டிப்பாகும்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெலகாவி தெற்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நேற்று அமித்ஷா திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தார். தெற்கு தொகுதியில் திறந்த வாகனத்தில் நின்றபடி அமித்ஷா பேசியதை தொலைக்காட்சி சேனல்கள் வீடியோ எடுத்தனர். ஆனால் வீடியோ எடுக்க கூடாது என்று மத்திய ஆயுதப்படை வீரர்கள் கூறினார்கள்.
இதனால் கோபம் அடைந்த அமித்ஷா, வீடியோ எடுக்க அனுமதிக்கும்படி மத்திய ஆயுதப்படை வீரர்களிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அமித்ஷா பேசியதாவது:-
இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் கர்நாடகத்தை முதல் மாநிலமாக மாற்றுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். கர்நாடகத்தில் சாதி மற்றும் மதங்களுக்கு இடையே காங்கிரஸ் தலைவர்கள் சண்டையை ஏற்படுத்தி வருகிறார்கள். தேர்தலுக்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதே காங்கிரசின் வேலையாகும். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் இரட்டை என்ஜின் அரசுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இரட்டை என்ஜின் அரசால் மாநிலத்தின் வளர்ச்சியும் இரட்டிப்பாகும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது. மக்களை ஏமாற்றுவதற்காக தான் உத்தரவாத அட்டையே கொடுக்கின்றனர். வருகிற 10-ந் தேதி அனைத்து மக்களும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று பா.ஜனதாவுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் மோடி 32 கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் ஊர்வலம் சென்றிருந்தார்.
- 2 நாட்கள் பெங்களூருவில் பிரதமர் மோடி ஊர்வலம் நடத்தி இருந்தார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலில் 2 நாட்கள் பெங்களூருவில் பிரதமர் மோடி ஊர்வலம் நடத்தி இருந்தார். குறிப்பாக 32 கிலோ மீட்டர் தூரம் அவர் திறந்த காரில் ஊர்வலம் சென்றிருந்தார். அவர் செல்லும் பாதை முழுவதும் இருபுறங்களிலும் பாதுகாப்பாக இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருந்தது. அதற்கு மேல் காவி துணிகள் கட்டப்பட்டு, கொடிகளாக பறந்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் 2 நாட்கள் பிரசாரத்திற்காக சராசரியாக ரூ.1.60 கோடி செலவாகி இருக்கலாம் என்று பா.ஜனதா பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு கிலோ மீட்டருக்கு இரும்பு தடுப்புகள், கொடிகள், பூக்களுக்கு மட்டும் ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவாவதாகவும், ஒட்டு மொத்தமாக ரூ.1.60 கோடி செலவாகி இருக்கலாம் என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இது வேட்பாளர்கள் மற்றும் பா.ஜனதா கட்சியின் செலவாக தேர்தல் ஆணையம் எடுத்து கொள்ளலாம், அந்தந்த பகுதியில் இருக்கும் பா.ஜனதா பிரமுகர்களுக்கான செலவாகவே பார்க்கப்படுகிறது.
பொதுக்கூட்டங்களில் தன்னை தூரத்தில் இருந்து தான் மக்கள் பார்ப்பதால், ஊர்வலத்தின் மீது தன்னை அருகில் இருந்து மக்கள் பார்ப்பார்கள் என்பதால், பிரதமர் மோடியின் ஊர்வலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அந்த பிரமுகர் தெரிவித்துள்ளார்.
- கர்நாடக சட்டசபைக்கு 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
- இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
பெங்களூரு :
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் நேற்று கர்நாடகத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்கள்.
பிரதமர் மோடி பெங்களூருவில் 6½ கிலோ மீட்டர் தூரத்திற்கு திறந்த காரில் சென்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அதன்பிறகு, சிவமொக்கா, மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரதமர் பேசி இருந்தார். பிரதமர் மோடி கர்நாடகத்தில் 7 நாட்கள் சூறாவளி பிரசாரத்தை முடித்துவிட்டு நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது சொந்த ஊரான ஹாவேரியிலும், கனகபுரா தொகுதியிலும் பிரசாரம் செய்தார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பெலகாவி, சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா, ஆனேக்கல்லிலும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூரு பசவனகுடி தொகுதியிலும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மைசூருவிலும் நேற்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்கள். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தாவணகெரே மற்றும் பல்லாரி மாவட்டத்தில் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பெங்களூருவில் நடைபெற்ற பிரதமர் மோடியின் ஊர்வலத்தில் பங்கேற்று இருந்தார். பா.ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் மைசூரு மற்றும் சாம்ராஜ்நகரிலும், மராட்டிய மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பெங்களூரு காந்திநகர் மற்றும் மங்களூருவிலும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கொப்பல் மாவட்டத்திலும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்கு திரட்டினார்கள்.
பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று நடிகர் சுதீப், நடிகைகள் ஸ்ருதி, தாரா ஆகியோரும் திறந்த வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்தார்கள். காங்கிரஸ் தலைவர்களும் நேற்று தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்தார்கள். தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி அருகே முல்கியில் பிரியங்கா காந்தி திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்றும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று இருந்தார். மாலையில் அவர் பெங்களூரு மகாதேவபுராவிலும், பெங்களூரு தெற்கு தொகுதியிலும் பிரசாரம் மேற்கொண்டார்.
அதன்பிறகு, நேற்று இரவு பெங்களூரு சிவாஜிநகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் ஒரே மேடையில் தோன்றி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்கள். அதற்கு முன்பாக பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல், பெங்களூரு புலிகேசிநகர் தொகுதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் செய்திருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தனது சொந்த மாவட்டமான கலபுரகியில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதுதவிர மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் மாவட்டம் மாகடி, துமகூரு, தொட்டபள்ளாப்புரா, சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர், கோலார், மங்களூருவில் சூறாவளி பிரசாரம் செய்து ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
கர்நாடகத்தில் நேற்று அனைத்து கட்சி தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பதை பார்க்க முடிந்தது. சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது. 6 மணிக்கு பின்பு தொகுதியில் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல், நட்சத்திர பேச்சாளர்களும் 6 மணியுடன் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து, 3 கட்சிகளின் தலைவர்களும் இன்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். அதன்பிறகு, நாளை (செவ்வாய்க்கிழமை) வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரசாரம் நிறைவு பெறுவதால், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
பிரசாரம் ஓய்ந்ததையொட்டி இன்று(திங்கட்கிழமை) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் நாளான 10-ந் தேதி மாலை 6 மணி வரை மாநிலத்தில் எந்தவொரு இடத்திலும் ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மாநிலத்தில் எங்கும் எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது எனவும் கூறப்பட்டு இருக்கிறது.
தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
- பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா என பலரும் பிரசாரம் செய்தனர்.
- நாளை மாலையுடன் பிரசாரம் முடிய உள்ளதால் காங்கிரஸ் கட்சியினரும் அங்கு முகாமிட்டுள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்துக் கட்சி தலைவர்களும் கடைசி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜேபி நட்டா, மந்திரிகள் என பலரும் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதேபோல், நாளை மாலையுடன் பிரசாரம் முடிய உள்ளதால் காங்கிரஸ் கட்சியினரும் அங்கு முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திடீரென டெலிவரி பாய் ஒருவரின் பைக்கில் அமர்ந்து கொண்டு பயணித்தார்.
அதன்பின் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், வெறுப்பு அரசியலால் மணிப்பூர் பற்றி எரிகிறது. இந்த வெறுப்பு அரசியலுக்கு எதிராகத்தான் ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டேன் என தெரிவித்தார்.
- கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. இதனால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
- பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் இன்று 2-வது நாளாக ரோடு ஷோவில் ஈடுபட்டார்.
பெங்களூர்:
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதனால் இரு கட்சி தலைவர்களும் அங்கு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. இதனால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று 2 மெகா ரோடு ஷோ நடத்தினார். 2½ மணி நேரத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் பேரணியாக சென்றார். 13 தொகுதி மக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் இன்று 2-வது நாளாக ரோடு ஷோவில் ஈடுபட்டார்.
திப்சந்தரை சாலையில் உள்ள கெம்போகவுடா சாலையில் இருந்து அவர் ரோடு ஷோவை தொடங்கினார். வழி நெடுகிலும் அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. ½ மணி நேரத்தில் அவர் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாக்கு சேகரித்தார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பெல்காலி தெற்கு சட்டசபை தொகுதியில் ரோடு ஷோவில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கர்நாடகாவில் இன்று தீவிர பிரசாரம் செய்தார். முல்பி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
- 8-ந்தேதி மாலை 6 மணி முதல் 10-ந்தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது.
- கருத்துக்கணிப்பு தொடர்பாக வீடியோ, விவாதம், உரையாடல் ஆகியவற்றை டி.வி சேனல்கள், ஊடகங்கள், ஆன்லைன் சேனல்கள், சமூகவலைத்தளங்களில் வெளியிடக் கூடாது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. 10-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர் வாக்களிக்க உள்ளனர். 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு இருந்து சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதாவது வருகிற 10-ந்தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அதாவது 8-ந்தேதி மாலை 6 மணி முதல் 10-ந்தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. கருத்துக்கணிப்பு தொடர்பாக வீடியோ, விவாதம், உரையாடல் ஆகியவற்றை டி.வி சேனல்கள், ஊடகங்கள், ஆன்லைன் சேனல்கள், சமூகவலைத்தளங்களில் வெளியிடக் கூடாது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 125-ன் கீழ் கருத்துக்கணிப்புகளை வெளியிடுவது தடை செய்யப்படுகிறது. இதை மீறி தேர்தல் முடிவை பாதிக்கும் வகையில் கருத்துக்கணிப்புகளை வெளியிடுவோர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126-வது பிரிவின் படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- கர்நாடக காங்கிரஸ் பா.ஜ.க.வின் ஊழல் பட்டியல் என விளம்பரம் வெளியிட்டது.
- இதுதொடர்பாக கர்நாடக காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
புதுடெல்லி:
கர்நாடகா மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவில் 2019 முதல் 2023 வரையிலான ஊழல் விகிதங்கள் என பட்டியலிடப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களை வெளியிட்டது. மேலும் பா.ஜ.க. அரசாங்கத்தை சிக்கல் இயந்திரம் என குறிப்பிட்டது.
இந்நிலையில், இந்த விளம்பரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், அதற்கான ஆதாரங்களைத் தெரிவிக்கவும். நீங்கள் வழங்கிய விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள், வேலைகள் மற்றும் கமிஷன் வகைகள் ஆகியவற்றின் விகிதங்களுக்கான சான்றுகள் மற்றும் ஏதேனும் விளக்கம் இருந்தால் அதனை நாளை (மே 7) மாலை 7 மணிக்குள் பொது வெளியில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் வாகனத்தில் சென்றபடி பிரசாரம் செய்தார்.
- கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நாள் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் விறுவிறுப்பான பிரசாரம் செய்து வருகின்றன. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இரு கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் வாகனத்தில் சென்றபடி பிரசாரம் செய்தார். பிரதமர் வாகன பிரசாரத்திற்கு சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியதோடு, அவருக்கு ஆரவாரமான வரவேற்பை அளித்தனர். பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது..,

"இதுபோன்ற அன்பை இதுவரை எங்கும் பார்த்ததில்லை. பெங்களூருவில் கிடைத்த வரவேற்புக்கு இணையில்லை. இன்று காலை நான் பொது மக்கள் தரிசனத்தை பெங்களூருவில் பெற்றேன். பெங்களூருவில் நான் பார்த்ததை வைத்து ஒன்றை தெரிந்து கொண்டேன்."
"இந்த தேர்தலில் மோடியோ அல்லது பாஜக தலைவர்களோ அல்லது நம் வேட்பாளர்களோ போட்டியிடவில்லை. மாறாக இங்கு கர்நாடக மக்கள் தான் பாஜக வெற்றிக்காக போட்டியிடுகின்றனர். ஒட்டுமொத்த தேர்தல் கட்டுப்பாடு முழுமையாக மக்கள் கையில் இருப்பதை என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது."
"இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக பாகல்கோட் மக்களுக்கு மூன்று லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பகல்கோட்டை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்தமாக கான்கிரீட் வீடு பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்ட பலன்கள் பாகல்கோட் மக்களுக்கு சென்றடைந்துள்ளது," என்று தெரிவித்து இருக்கிறார்.
- ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார்.
- காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலும், பா.ஜனதா தலைவர்களின் புகைப்படங்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூரு
முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதா சீட் கொடுக்காத காரணத்தால், அக்கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்துள்ளார். ஆனாலும் உப்பள்ளியில் உள்ள ஜெகதீஷ் ஷெட்டரின் அலுவலகத்தில் பிரதமர் மோடி, அமித்ஷாவின் புகைப்படங்களும், மோடி, அமித்ஷாவுடன் ஜெகதீஷ் ஷெட்டர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அகற்றப்படாமல், அப்படியே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலும், பா.ஜனதா தலைவர்களின் புகைப்படங்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றி ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், 'ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் சேர்ந்ததும், உடனடியாக முந்தைய கட்சி தலைவர்களின் புகைப்படங்களை அகற்றுவது சரியானது இல்லை. நான் அப்படி முந்தைய கட்சியின் தலைவர்களின் புகைப்படங்களை மாற்ற மாட்டேன்' என்றார். அதே நேரத்தில் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் வெற்றி பெறுவதற்காக பா.ஜனதா தலைவர்களின் புகைப்படங்களை ஜெகதீஷ் ஷெட்டர் அகற்றாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- இதுவரை 92.12 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது.
- வீட்டில் இருந்து வாக்களிக்க விண்ணப்பித்த 100-க்கும் மேற்பட்ட முதியவர்கள் இறந்துள்ளனர்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலில் 80 வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து, வீட்டில் இருந்தவாறு வாக்களிக்க 99 ஆயிரத்து 529 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ந் தேதியில் இருந்து வீட்டில் இருந்தே மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் வாக்களித்து வருகிறார்கள். நேற்றும் பல்வேறு மாவட்டங்களில் வீட்டில் இருந்தபடியே வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களித்தனர். கர்நாடகத்தில் நேற்று வரை ஆயிரத்து 386 பேர் வாக்களித்துள்ளனர். இதன்மூலம் வீட்டில் இருந்தவாறு இந்த சட்டசபை தேர்தலில் 92.12 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது.
வயதானவர்கள் வீட்டில் இருந்து வாக்களிக்க இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும். இன்று நூறு சதவீத ஓட்டுகள் பதிவாகும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்து வாக்களிக்க விண்ணப்பித்த 100-க்கும் மேற்பட்ட முதியவர்கள் இறந்துள்ளனர். சில வயதானவர்கள் வாக்களித்து விட்டு உயிர் இழக்கும் சம்பவங்களும் நடக்கிறது. அதன்படி, உடுப்பி மாவட்டத்தில் வீட்டில் இருந்து வாக்களித்திருந்த 2 முதியவர்கள் உயிர் இழந்துள்ளனர். உடுப்பி மாவட்டம் பாண்டேஷ்வரா கிராமத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணா (வயது 84), ஓய்வு பெற்ற ஆசிரியர் குருராஜா பட் (94) ஆகிய 2 பேரும் ஜனநாயக கடமைாற்றிவிட்டு உயிர் இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- சுமார் 5 ஆயிரம் போலீசார் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பிரதமரின் ஊர்வலத்தின் போது ‘நீட்’ தேர்வு நடைபெறுவதால், ஊர்வல திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பெங்களூருவில் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றால் அது பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு பலம் சேர்க்கும் என்று பா.ஜனதா தலைவர்கள் கருதுகின்றனர்.
இதையடுத்து, பெங்களூருவில் 17 சட்டசபை தொகுதிகளில் வேட்பாளர்களை கவரும் விதமாக இன்றும் (சனிக் கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்களில் ஒட்டு மொத்தமாக 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலம் செல்ல உள்ளார். இந்த நிலையில், பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற உள்ள பிரதமர் மோடியின் ஊர்வலத்திற்கு தடை விதிக்க கோரி வக்கீல் அம்ருதேஷ் என்பவர், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணை நேற்று ஐகோட்டு நீதிபதிகள் கிருஷ்ணா எஸ்.தீக்சித் மற்றும் விஜய்குமார் எஸ்.பட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. இந்த விசாரணைக்காக பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி பிரதமர் மோடியின் ஊர்வலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி, பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பிரதமரின் ஊர்வலத்தின் போது 'நீட்' தேர்வு நடைபெறுவதால், ஊர்வல திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
'நீட்' தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளுக்கு எந்த விதமான தொந்தரவும் ஏற்படாத வண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமரின் ஊர்வலத்தின் போது ஆம்புலன்ஸ் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதாப் ரெட்டி கூறினார்.
அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், சட்டசபை தேர்தலை ஒரு திருவிழா போன்று நடத்தி கொண்டாடி வருகிறோம். 19 சட்ட விதிகளின்படி அமைதியான முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது, பொதுக்கூட்டங்கள், ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி உள்ளது. இந்த ஆண்டு 2,517 ஊர்வலங்கள் நடந்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் சட்டசபை தேர்தலின் போது மாநிலத்தில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
வருகிற 7-ந் தேதி (நாளை) ஊர்வலத்தின் போது 'நீட்' தேர்வு நடைபெற இருப்பதால் பிரதமரின் ஊர்வலத்தில் 4 கிலோ மீட்டர் தூரம் குறைக்கப்பட்டுள்ளது. 'நீட்' தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிவரை நடக்கிறது. அன்றைய தினம் பிரதமரின் ஊர்வலம் 11.30 மணியளவிலேயே முடிந்து விடும். அதனால் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் பிரதமரின் ஊர்வலத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது, என்றார்.
இதையடுத்து, பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற உள்ள பிரதமர் மோடியின் ஊர்வலத்திற்கு கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் ஊர்வலத்தின் போது எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் முன் எச்சரிக்கையாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். பிரதமர் மோடியின் ஊர்வலத்திற்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கி இருப்பதால் பா.ஜனதாவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதையொட்டி மாநகர் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். சுமார் 5 ஆயிரம் போலீசார் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரதமர் மோடி ஊர்வல பாதையில் உள்ள கடைகளை மூட போலீசார் கெடுபிடி செய்ததாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் ஊர்வலம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டின் உத்தரவு காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று நேற்று முன்தினம் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் மனு கொடுத்திருந்தனர்.
தற்போது ஐகோர்ட்டு அனுமதி வழங்கி இருப்பதுடன், தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி ஊர்லத்திற்கு அனுமதி கொடுத்திருப்பது காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.






