என் மலர்
பீகார்
- பிரசாந்த் கிஷோர் மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கினார்.
- தனது கட்சி 150 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறிவந்தார்.
பீகார் தேர்தலுக்கு முன்பு வரை ஆளும்கட்சி, எதிர்க் கட்சிகளுக்கு மாற்றான அரசியல் சக்தியாகவும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது யார்? என்பதை முடிவு செய்யும் கட்சியாகவும் பிரசாந்த் கிஷோரின் கட்சி இருக்கும் என்று கூறப்பட்டது.
அதற்கு ஏற்ப பா.ஜ.க., ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட ஆளும் கூட்டணியையும், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியையும் தேர்தல் பிரசாரத்தில் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்து வந்தார்.
மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கினார். ஆனால் அவர்களில் 5 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகிவிட்டனர். இதனால் ஜன்சுராஜ் கட்சி 236 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.
இந்த தேர்தலில் முதலில் போட்டியிடப் போவதாக அறிவித்து பின்னர் போட்டியில் இருந்து கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் விலகினார். தனது கட்சி 150 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறிவந்தார்.
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் இப்போது அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்து மீண்டும் மது விற்பனையைத் தொடங்குவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அவரது கட்சிக்கு பீகார் மக்கள் படுதோல்வியைப் பரிசளித்துள்ளனர்.
போட்டியிட்ட 238 தொகுதிகளில் அனைத்திலும் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். அதோடு 236 தொகுதிகளில் டெபாசிட்டும் பறி கொடுத்தனர்.
சில இடங்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை ('நோட்டா') வாக்குகளை விடவும் குறைவாகப் பெற்றனர். இதன் மூலம் பீகார் மக்கள் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை முழுமையாக புறக்கணித்து இருப்பது தெரியவந்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜ.க. தலைவர்கள் யாரும் பிரசாந்த் கிஷோர் பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை. அதுபோல இந்தியா கூட்டணி தலைவர்களும் பிரசாந்த் கிஷோரை கண்டு கொள்ளாமல் தவிர்த்தனர். இதுவும் பிரசாந்த் கிஷோர் கட்சி தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தமிழகத்தில் தி.மு.க., மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றி உள்ளார்.
அப்போது தேர்தல்களில் அக்கட்சிகள் வெற்றி பெற்றதால் தேசிய அளவில் மிகவும் பிரபலமான அரசியல் நிபுணராக பிரசாந்த் கிஷோர் உருவெடுத்தார். ஆனால் அவரது கட்சிக்கு பலன் அளிக்காமல் போய்விட்டது.
- ஓவைசியின் கட்சி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 25 தொகுதிகளில் போட்டியிட்டது.
- முந்தைய சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது.
ஐதராபாத் எம்.பி. அசாது தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி பீகாரில் மீண்டும் 5 இடங்களில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை தக்க வைத்தது.
ஓவைசியின் கட்சி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் அணியில் இணைய மஜ்லீஸ் கட்சி விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதியது. ஆனால் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அதனைப் புறக்கணித்தது. இதையடுத்து அந்த கட்சி தனித்துப் போட்டியிட்டது.
ஓவைசியின் கட்சி முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரித்ததும் எதிர்க்கட்சி கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக எதிர்க்கட்சிகள் கூட்டணியில் சேர்க்காததால் அதிருப்தி அடைந்த ஓவைசி, பீகாரில் 100 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்தார். ஆனால் 32 இடங்களில்தான் அக்கட்சி போட்டியிட்டது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பகுதியைக் குறிவைத்த ஓவைசி அங்கு 5 தொகுதிகளில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார்.
பீகாரில் இதற்கு முந்தைய சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. ஆனால் அதில் 4 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனர்.
- தேசிய ஜனநாய கூட்டணி 202 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.
- இந்தியா கூட்டணி வெறும் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு கடந்த 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், பிற கட்சிகள் இடம்பெற்றன.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், பிற கட்சிகள் இடம்பெற்றன.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாய கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று 202 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.
இந்தியா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பிற கட்சிகள், சுயேட்சைகள் 6 தொகுதிகளை கைப்பற்றின.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து விரைவில் நிதிஷ்குமார் பீகார் முதல் மந்திரியாக மீண்டும் பதவியேற்கிறார்.
- 29 தொகுதிகளில் ஒவைசி கட்சி போட்டியிட்டது.
- சீமாஞ்சல் பிராந்தியத்தில் மட்டும் 24 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மோசமான தோல்வியை சந்தித்தது. பிரசாந்த் கிஷோர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
அதேவேளையில் அசாதுதீன் ஒவைசி கட்சியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 29 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது. சீமாஞ்சல் பிராந்தியத்தல் மட்டும் 24 இடங்களில் போட்டியிட்டது.
இதில் அக்தருல் இமான் அமோர் தொகுதியில் 38,928 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தம் 1,00,836 வாக்குகள் பெற்றார்.
கொச்சதாமன், பைசி, ஜாகிகாத், பஹாதுர்கஞ்ச் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எந்த கட்சியிடனும் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிட்டது.
சீமாஞ்சலில் வளர்ச்சியை கொண்டு வருவதும், குழந்தைகள் இறப்பை குறைப்பதும், பள்ளிக்கூடம், மருத்துவமனை, பாலங்கள், தொழிற்சாலைகள் கட்டுவதிலும் கவனம் செலுத்துவோம் என ஒவைசி தெரிவித்துள்ளார்.
- கடந்த 2020 தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
- தற்போது 61 இடங்களில் போட்டியிட்டு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது. 200 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றது. நேரம் செல்லசெல்ல இது உறுதிப்படுத்தப்பட்டது. ஏறக்குறைய அனைத்து தொதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலை விட நிதிஷ் குமார் கட்சி (ஐக்கிய ஜனத தளம்) இந்த முறை அதிகமான இடங்களை கைப்பற்றுகிறது. கடந்த முறை 43 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. தற்போது 85 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை 61 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை லாலுவின் இந்த கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
- மாநில மக்கள் எங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
- தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தி, பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
243 தொகுதிகளுக்கு நடைபெற்ற பீகார் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் இன்று வெளியாகின.
இரவு 8 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் 202 தொகுதியில் முன்னிலையில் உள்ளன. அதேநேரத்தில் பாஜக 76 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 56 இடங்களிலும் வெற்று தனிப்பெரும்பான்மையைப் பதிவு செய்துள்ளன. இதனால், பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்த வெற்றி குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார், "2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில், மாநில மக்கள் எங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்காக, மாநிலத்தின் அனைத்து மரியாதைக்குரிய வாக்காளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மரியாதைக்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தி, பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
இந்த மகத்தான வெற்றிக்கு, அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டாளிகளான சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கு நன்றி .
உங்கள் ஆதரவுடன், பீகார் மேலும் முன்னேறும். நாட்டின் மிகவும் வளர்ந்த மாநிலங்ககளின் பட்டியலில் பீகார் இடம்பெறும்" என்று தெரிவித்துள்ளார்.
- இளம் பெண்ணுடன் உறவில் இருப்பதாக கூறி அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிா்ந்தாா்.
- சஞ்சய் குமார் சிங் 87,641 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஆர்ஜேடியின் லாலு பிரசாத் உடைய மூத்த மகனும் தேஜஸ்வியின் சகோதரனுமான தேஜ் பிரதாப் பீகார் தேர்தலில் தோல்வியை தழுவி உள்ளார்.
ஏற்கனவே திருமணமான தேஜ் பிரதாப் கடந்த மே மாதம் தனது பேஸ்புக் பக்கத்தில், இளம் பெண்ணுடன் உறவில் இருப்பதாக கூறி அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிா்ந்தாா்.
இதையடுத்து அவரை ஆர்ஜேடி கட்சியில் இருந்து லாலு பிரசாத் நீக்கினார். இதை தொடர்ந்து ஜனசக்தி ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கிய தேஜ் பிரதாப் பீகார் தேர்தலில் மஹுவா தொகுதியில் போட்டியிட்டார்.
இந்நிலையில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், 35,703 வாக்குகளைப் பெற்று 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
அந்த தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் சார்பில் போட்டியிட்ட சஞ்சய் குமார் சிங் 87,641 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆர்ஜேடியின் முகேஷ் ரோஷன் 42,644 வாக்குகளுடன் 2ஆம் இடம் பிடித்தார்.
- 11,730 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
- தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்டார்.
பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக-ஜேடியுவின் என்டிஏ கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் - ஆர்ஜேடியின் மகபந்தன் கூட்டணி 17 இடங்களில் வென்றுள்ளது.
இதைத்தொடர்ந்து ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகர் மைதிலி தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்துள்ளார்.
கடந்த மாதம் பாஜகவில் இணைந்த அடுத்த நாளே இவருக்கு வேட்பாளர் சீட் வழங்கப்பட்ட நிலையில் அரசியலில் பிரவேசித்த ஒரே மாதத்தில் எம்எல்ஏவாகவும் ஆகி கவனம் பெற்று வருகிறார். 84,915 வாக்குகள் பெற்ற இவர் எதிர்த்து போட்டியிட்ட மகாபந்தன் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வினோத் மிஸ்ராவை 11,730 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
மைதிலி தாக்கூர், சிறுவர்களுக்கான பாட்டும் பாடும் ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பரிச்சயமாகி ஊடக வெளிச்சத்திலேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் முன்னிலை வகித்த தேஜஸ்வி யாதவ், ஒரு கட்டத்தில் பின்தங்கினார்.
- 2020 சட்டமன்றத் தேர்தலில், அவர் இந்தத் தொகுதியில் இருந்து 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
இதற்கிடையே ஆர்ஜேடியின் கோட்டையாகக் கருதப்படும் ரகோபூர் சட்டமன்றத் தொகுதியில் இறுதிக் கட்டம் வரை நடந்த பரபரப்பான போட்டியில், ஆர்ஜேடி தலைவரும் மகாகத்பந்தன் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் சுமார் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் முன்னிலை வகித்த தேஜஸ்வி யாதவ், ஒரு கட்டத்தில் பின்தங்கினார். கடைசி கட்டம் வரை பரபரப்பான போட்டியைக் கண்ட ரகோபூர், இறுதியாக தேஜஸ்வி யாதவை வெற்றியாளராக முடிசூட்டியது.
முன்னதாக, இந்த சட்டமன்றத் தொகுதியை அவரது தந்தை லாலு பிரசாத் யாதவ் மற்றும் தாய் ராப்ரி தேவி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
அதன் பிறகு, தேஜஸ்வி யாதவ் 2015 முதல் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். 2020 சட்டமன்றத் தேர்தலில், அவர் இந்தத் தொகுதியில் இருந்து 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆனால், இந்த முறை பாஜக தனது வேட்பாளராக சதீஷ் குமார் யாதவை நிறுத்தியது. முன்னதாக 2010 ஆம் ஆண்டு ஜேடியு வேட்பாளராகப் போட்டியிட்ட சதீஷ் குமார் யாதவ், ராப்ரி தேவியை தோற்கடித்திருந்தார்.
- பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
- ஏனென்றால் இந்தத் தேர்தல் சதி இப்போது அதிகமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியின் மிகப்பெரிய தோல்விக்கு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மற்றும் பாஜக தான் காரணம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகாரில் எஸ்.ஐ.ஆர் ஒரு பெரிய தேர்தல் சதி என்றும், பாஜக அதைப் பயன்படுத்தி ஒரு பெரிய அரசியல் மோசடியைச் செய்ததாகவும் அகிலேஷ் குற்றம் சாட்டினார்.
மேலும், பீகாரில் செயல்படுத்தப்பட்ட SIR விளையாட்டை மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் தொடங்கி வேறு எந்த மாநிலத்திற்கும் கொண்டு வர முடியாது.
ஏனென்றால் இந்தத் தேர்தல் சதி இப்போது அதிகமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல், அவர்கள் இந்த விளையாட்டை மீண்டும் விளையாட நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
CCTV போல நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பாஜகவின் நோக்கங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு மோசடி" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- மொகமா தொகுதியில் வாக்கு சேகரித்த ஜன் சுராஜ் கட்சி தொண்டர் கொலை செய்யப்பட்டார்.
- விசாரணையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.
ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த பிரியதர்ஷி பியூஷ் மொகமா தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இவருக்காக வாக்குகள் சேகரிக்க பிரசாரத்தில் ஈடுபடும் பணியில் துலார்சந்த் யாதவ் (75) ஈடுபட்டார். இவர் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தொண்டர் மற்றும் உள்ளூர் தலைவராகவும் இருந்துள்ளார்.
அரசியல் குழுக்கள் இடையே நடந்த மோதலில் துலார்சந்த் படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
பீகார் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. கொலை வழக்கு பதியப்பட்டாலும் ஆனந்த் குமார் சிங் 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
- களத்தில் தெளிவாக தெரிந்தபோதும் தலைமை அதைக் கண்டுகொள்ளவில்லை
- காங்கிரஸ் போட்டியிட்ட 61 சீட்களில் 10 தொகுதிகளில் கட்சி தாவியவர்களுக்கு சீட் வழங்கப்பட்டது.
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்துக்கு கடந்த நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் மதிய நிலவரப்படி முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு இடம்பெற்ற பாஜகவின் என்டிஏ கூட்டணி அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
அதேநேரம் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் தருவாயில் உள்ளது.
குறிப்பாக 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மதியம் 1 மணி நிலவரப்படி, 4-5 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் 19 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை தேர்தல் படுதோல்வியாக அமைந்துள்ளது.
வாக்காளர் அதிகார யாத்திரை, வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள், வாக்காளர் பட்டியல் திருத்த எதிர்ப்பு என பல விஷயங்களை பீகாரில் ராகுல் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் முன்னெடுத்தபோதும் அது அக்கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
வாக்கு திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் களத்தில் சிறிதும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.
இந்த விவகாரங்கள் எடுபடவில்லை என்று களத்தில் தெளிவாக தெரிந்தபோதும் தலைமை அதைக் கண்டுகொள்ளவில்லை என்று அக்கட்சியினரே தெரிவிக்கின்றனர்.
அதுவும் ராகுல் காந்தி மக்கள் அதிகார பயணம் மூலம் பிரசாரம் மேற்கொண்ட அனைத்து தொகுத்திகளிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி காட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன.

காங்கிரசின் இந்த தோல்வி குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளனர். குறிப்பாக கட்சித் தலைவர்கள் இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணங்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (EBS) மற்றும் சிறுபான்மையினர் நோக்கி தனது கவனத்தை திருப்பி கையில் எடுத்த சமூக நீதிக் கொள்கை காங்கிரசின் பாரம்பரியமான உயர் வகுப்பு வாக்குகளை மேலும் விலக்கி உள்ளது.
பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (EBS) பிரிவினர், மற்றும் பீகார் பெண்களின் வாக்குகளும் காங்கிரசுக்கு கிடைக்காதது, அம்மக்கள் முதல்வர் நிதிஷ் குமாரின் கண்கவர் திட்டங்களில் திருப்தியடைந்ததையே காட்டுகிறது.
பாஜக, ஜேடியு மற்றும் லோக் ஜனசக்தி கட்சி போன்ற என்டிஏ கூட்டணி கட்சிகளில் இருந்து காங்கிரசுக்கு தாவிய பலரை உடனடியாக வேட்பாளராக்கியது கட்சிக்கு பின்னடைவைவாக அமைந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் போட்டியிட்ட 61 சீட்களில் 10 தொகுதிகளில் கட்சி தாவியவர்களுக்கு சீட் வழங்கப்பட்டது. ஒருபுறம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஐ கடுமையாக எதிர்த்துப் போராடும் காங்கிரஸ், அதனுடன் தொடர்புடைய தலைவர்களுக்கு சீட் வழங்கியது காங்கிரஸின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியது என கூறப்படுகிறது.
அதேநேரம் பிரசார களத்தை பொறுத்தவரை ராகுலும் தேஜஸ்வியும் ஒரே மேடையில் ஓரிரு முறை மட்டுமே தோன்றினர். இது இரண்டு கட்சியின் இணக்கம் மற்றும் நிலைத்தன்மை குறித்த பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை.

அதேநேரம் மாநிலத்தின் நீண்ட கால முதல்வரான நிதிஷ் குமார் மற்றும் ஸ்திரமான தேசியா தலைமை பிம்பம் கொண்ட பிரதமர் மோடி பீகார் மக்களுக்கு பாதுகாப்பான தேர்வாக அமைத்துள்ளனர்.
வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பிரமாண்டமான திட்டங்களை தேஜஸ்வி அறிவித்தபோதும் அவற்றின் சாத்தியம் குறித்த சந்தேகங்களும் நிலவின.
ஆர்ஜேடிக்கு இந்த தேர்தல் மாநில அளவில் தோல்வியை தந்திருந்தாலும், தேசிய கட்சியான காங்கிரசுக்கு இந்த ஒற்றை இலக்க வெற்றி முன்னெப்போதும் இல்லாத பின்னடைவியாகவே பார்க்கப்படுகிறது.
மொத்ததில் காங்கிரஸ் தலைவர்கள் பல பல சிக்கல்களை அடையாளம் கண்டாலும், இந்த படுதோல்வி யாரும் எதிர்ப்பாராத அடியாகவே அமைந்துள்ளது.






