என் மலர்
இந்தியா

பீகாரில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வி.. ராகுல் காந்தி சறுக்கியது ஏன்? - அடுக்கடுக்கான காரணங்கள்!
- களத்தில் தெளிவாக தெரிந்தபோதும் தலைமை அதைக் கண்டுகொள்ளவில்லை
- காங்கிரஸ் போட்டியிட்ட 61 சீட்களில் 10 தொகுதிகளில் கட்சி தாவியவர்களுக்கு சீட் வழங்கப்பட்டது.
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்துக்கு கடந்த நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் மதிய நிலவரப்படி முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு இடம்பெற்ற பாஜகவின் என்டிஏ கூட்டணி அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
அதேநேரம் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் தருவாயில் உள்ளது.
குறிப்பாக 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மதியம் 1 மணி நிலவரப்படி, 4-5 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் 19 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை தேர்தல் படுதோல்வியாக அமைந்துள்ளது.
வாக்காளர் அதிகார யாத்திரை, வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள், வாக்காளர் பட்டியல் திருத்த எதிர்ப்பு என பல விஷயங்களை பீகாரில் ராகுல் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் முன்னெடுத்தபோதும் அது அக்கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
வாக்கு திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் களத்தில் சிறிதும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.
இந்த விவகாரங்கள் எடுபடவில்லை என்று களத்தில் தெளிவாக தெரிந்தபோதும் தலைமை அதைக் கண்டுகொள்ளவில்லை என்று அக்கட்சியினரே தெரிவிக்கின்றனர்.
அதுவும் ராகுல் காந்தி மக்கள் அதிகார பயணம் மூலம் பிரசாரம் மேற்கொண்ட அனைத்து தொகுத்திகளிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி காட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன.
காங்கிரசின் இந்த தோல்வி குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளனர். குறிப்பாக கட்சித் தலைவர்கள் இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணங்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (EBS) மற்றும் சிறுபான்மையினர் நோக்கி தனது கவனத்தை திருப்பி கையில் எடுத்த சமூக நீதிக் கொள்கை காங்கிரசின் பாரம்பரியமான உயர் வகுப்பு வாக்குகளை மேலும் விலக்கி உள்ளது.
பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (EBS) பிரிவினர், மற்றும் பீகார் பெண்களின் வாக்குகளும் காங்கிரசுக்கு கிடைக்காதது, அம்மக்கள் முதல்வர் நிதிஷ் குமாரின் கண்கவர் திட்டங்களில் திருப்தியடைந்ததையே காட்டுகிறது.
பாஜக, ஜேடியு மற்றும் லோக் ஜனசக்தி கட்சி போன்ற என்டிஏ கூட்டணி கட்சிகளில் இருந்து காங்கிரசுக்கு தாவிய பலரை உடனடியாக வேட்பாளராக்கியது கட்சிக்கு பின்னடைவைவாக அமைந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் போட்டியிட்ட 61 சீட்களில் 10 தொகுதிகளில் கட்சி தாவியவர்களுக்கு சீட் வழங்கப்பட்டது. ஒருபுறம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஐ கடுமையாக எதிர்த்துப் போராடும் காங்கிரஸ், அதனுடன் தொடர்புடைய தலைவர்களுக்கு சீட் வழங்கியது காங்கிரஸின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியது என கூறப்படுகிறது.
அதேநேரம் பிரசார களத்தை பொறுத்தவரை ராகுலும் தேஜஸ்வியும் ஒரே மேடையில் ஓரிரு முறை மட்டுமே தோன்றினர். இது இரண்டு கட்சியின் இணக்கம் மற்றும் நிலைத்தன்மை குறித்த பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை.
அதேநேரம் மாநிலத்தின் நீண்ட கால முதல்வரான நிதிஷ் குமார் மற்றும் ஸ்திரமான தேசியா தலைமை பிம்பம் கொண்ட பிரதமர் மோடி பீகார் மக்களுக்கு பாதுகாப்பான தேர்வாக அமைத்துள்ளனர்.
வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பிரமாண்டமான திட்டங்களை தேஜஸ்வி அறிவித்தபோதும் அவற்றின் சாத்தியம் குறித்த சந்தேகங்களும் நிலவின.
ஆர்ஜேடிக்கு இந்த தேர்தல் மாநில அளவில் தோல்வியை தந்திருந்தாலும், தேசிய கட்சியான காங்கிரசுக்கு இந்த ஒற்றை இலக்க வெற்றி முன்னெப்போதும் இல்லாத பின்னடைவியாகவே பார்க்கப்படுகிறது.
மொத்ததில் காங்கிரஸ் தலைவர்கள் பல பல சிக்கல்களை அடையாளம் கண்டாலும், இந்த படுதோல்வி யாரும் எதிர்ப்பாராத அடியாகவே அமைந்துள்ளது.






