என் மலர்
ஆந்திர பிரதேசம்
- பலத்த மழை பெய்து வருவதால் ஏரியிலிருந்து தரைப்பாலம் வழியாக மழை வெள்ளம் சென்று கொண்டு இருந்தது.
- தரைப்பாலத்தில் சிறிதளவு வெள்ளம் செல்வதாக நினைத்த அவர்கள் காரில் கடந்து விடலாம் என சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நந்தியால் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் ஆச்சாரி (வயது 26).
இவரது நண்பர் ஒருவருக்கு கர்னூரில் நேற்று திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தினேஷ் ஆச்சாரி தனது நண்பர்களான சஞ்சய், சங்கர் மற்றும் விக்னேஷ் ஆகியோருடன் காரில் சென்றார். திருமணம் முடிந்து நேற்று காலை மீண்டும் ஊருக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள ஏரியிலிருந்து தரைப்பாலம் வழியாக மழை வெள்ளம் சென்று கொண்டு இருந்தது. தரைப்பாலத்தில் சிறிதளவு வெள்ளம் செல்வதாக நினைத்த அவர்கள் காரில் கடந்து விடலாம் என சென்றனர்.
பாலத்தில் வந்தபோது கார் திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காரில் இருந்த 4 பேரும் கத்தி கூச்சலிட்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது கார் வெள்ளத்தில் அடித்துச் சென்றதை கண்ட அவர்கள் இது குறித்து உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளத்தில் அடித்துச் சென்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சஞ்சய், சங்கர், விக்னேஷ் ஆகியோரை உயிருடன் மீட்டனர். தினேஷ் ஆசாரியின் பிணம் அங்குள்ள முள்புதரில் சிக்கி இருந்ததை கண்டுபிடித்து அவரது பிணத்தை மீட்டனர்.
- தகவல் இழப்புக்கான காரணத்தை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் நீண்ட நேரம் போராடினார்கள்.
- செயற்கைக் கோள்களை இனி பயன்படுத்த முடியாது என இஸ்ரோ அறிவித்துள்ளது.
சென்னை:
பூமியை கண்காணிக்கும் இ.ஒ.எஸ்-02 செயற்கை கோள் மற்றும் இந்தியாவில் உள்ள 750 மாணவர்கள் உருவாக்கிய ஆசாடிசாட் என்னும் சிறிய செயற்கை கோள் ஆகிய 2 செயற்கை கோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட்டை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது.
ராக்கெட்டில் இருந்து செயற்கை கோள்களை பிரிக்கும் பணிகளை மேற்கொண்டபோது, செயற்கை கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. கடைசி நிலையில் ஏற்பட்ட தகவல் இழப்புதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. தகவல் இழப்புக்கான காரணத்தை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் நீண்ட நேரம் போராடினார்கள். ஆனால் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.
இதையடுத்து எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'இந்த ராக்கெட், செயற்கைக்கோள்களை 356 கிமீ வட்ட சுற்றுப்பாதைக்கு பதிலாக 356 கிமீ x 76 கிமீ நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. அந்த செயற்கைக்கோள்களை இனி பயன்படுத்த முடியாது. சென்சார் செயலிழப்பே தோல்விக்கு காரணம். சென்சார் செயலிழப்பைக் கண்டறிந்து, செயற்கைக் கோள்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. குழு அமைக்கப்படடு தோல்வி குறித்து ஆராயப்படும். விரைவில் எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட் உருவாக்கப்படும்' என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போல் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
- இன்று காலை 9.18 மணிக்கு எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
ஸ்ரீஹரிகோட்டா:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இதற்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கியது.
அதன்படி, இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த எஸ்எஸ்எல்வி- டி1 ராக்கெட்டில் இஓஎஸ் 02, ஆசாதி-சாட் என்கிற 2 எடை குறைந்த செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. எடை குறைந்த சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் வகையில் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
120 டன் எடை கொண்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் என்பது இதன் சிறப்பம்சம்.
பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போல் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் சிக்னல் கிடைக்கவில்லை. இ.ஓ.எஸ். 2 மற்றும் ஆசாதி-சாட் செயற்கைக்கோள்களின் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோளாரை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
- ராக்கெட்டுக்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு துவங்கியது.
- இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.
இதற்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு துவங்கிய நிலையில், இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..
இந்த எஸ்எஸ்எல்வி- டி1 ராக்கெட்டில் இஓஎஸ் 02, ஆசாதிசாட் என்கிற இரண்டு எடை குறைந்த செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. எடை குறைந்த சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் வகையில் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. 120 டன் எடை கொண்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் என்பது இதன் சிறப்பம்சம்.
பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போல் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். மேலும், இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்று 25 மணிநேரம் இல்லாமல் குறைந்த கவுன்ட்டவுன் நேரத்தில் பாய உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆந்திர பெண் ஹர்ஷவி அமெரிக்காவில் வேலை செய்தபோது, உடன் பணியாற்றும் அமெரிக்கரை காதலித்துள்ளார்
- திருப்பதியில் உள்ள விடுதி ஒன்றில் ஹர்ஷவி - டொமியன் பிராங்க் திருமணம் நடைபெற்றது.
திருப்பதி:
திருப்பதியைச் சேர்ந்த ஹர்ஷவி என்ற பெண், அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு பொது மேலாளராக பணியாற்றும் அமெரிக்காவை சேர்ந்த டொமியன் பிராங்க் என்பவருடன் உண்டான நட்பு பின்னாளில் காதலாக மாறியுள்ளது.
இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து அமெரிக்காவிலேயே திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், அமெரிக்க மாப்பிள்ளை தான் இந்து முறைப்படி தான் திருமணம் முடிப்பேன் என்று திட்டவட்டமாக கூறி உள்ளார். அவரது விருப்பப்படியே நேற்று இரவு திருப்பதியில் உள்ள விடுதி ஒன்றில் ஹர்ஷவி - டொமியன் பிராங்க் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இரு வீட்டாரும் மணமக்களை வாழ்த்தினர்.
- சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- கியாஸ் சிலிண்டர் மானியம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா:
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டில் 13 லட்சம் குடும்பத்தினர் ஒரு முறை கூட புதிதாக கியாஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிக்கவில்லை.
கடந்த 3 ஆண்டுகளில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ஒரே குடும்பத்தில் பல இணைப்புகளை வைத்திருப்பது, குடும்பங்களின் இடம்பெயர்வு காரணமாக புதியதாக கியாஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிக்காமல் உள்ளனர்.
ஐதராபாத்தில் கடந்த 2014-ம் ஆண்டு கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு மேல் இருந்தது. தற்போது 1,105-க்கு மேல் வினியோகம் செய்யப்படுகிறது.
ஆந்திரா தெலுங்கானாவில் சமையல் கியாஸ் விலை உயர்வால் விறகுக்கான தேவை அதிகரித்துள்ளது. நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் பெரும்பாலும் மீண்டும் விறகு அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து சமையல் கியாஸ் விநியோகஸ்தர்கள் கூறுகையில்:-
ஆந்திராவில் கொரோனா தொற்று காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் ஏழைகள் அடிக்கடி கியாஸ் வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.
கியாஸ் சிலிண்டர் மானியம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களின் மீது இரட்டை அடியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் 6.5 லட்சம் மற்றும் ஆந்திராவில் 6.2 லட்சம் இணைப்புகளுக்கு புதிய சிலிண்டர் பெற விண்ணப்பிக்கவில்லை.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் தீபம் திட்டம் மற்றும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் கியாஸ் பெற்ற கிராமப்புற மக்கள் ஒரு முறை கூட மீண்டும் சமையல் கியாஸ் பெற விண்ணப்பிக்கவில்லை.
அவர்களால் 1100-க்கு மேல் பணம் செலுத்தி சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியாது. இதனால் மாற்று எரிபொருளை பயன்படுத்துகின்றனர்.
உணவு பழக்க வழக்கம் வேலைவாய்ப்பு மற்றும் மற்ற எரி பொருட்கள் எளிதில் கிடைப்பதாலும் சமையல் கியாஸை புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். கியாஸ் பயன்பாட்டை விட்டுவிட்டு மற்ற எரிபொருட்களை அதிகளவில் பயன்படுத்துவது சுற்று சூழலுக்கு நல்ல அறிகுறி அல்ல என என்றனர்.
- இந்த திருவிழா 10-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
- 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம் ரத்து.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 8-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 7-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. கோவிலில் ஆண்டு முழுவதும் நடந்த அர்ச்சனைகள், திருவிழாவின்போது பக்தர்கள், கோவில் ஊழியர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த சில தவறுகளால் ஏற்படுகின்ற தோஷத்தால், கோவிலின் புனிதம் பாதிக்கப்படாமல் இருக்க பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
திருமலையில் 15-16-ம் நூற்றாண்டுகளில் பவித்ரோற்சவம் நடந்ததற்கான சான்றுகள் உள்ளது. விழாவின் ஒரு பகுதியாக கோவிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணி வரை 3 நாட்கள் திருமஞ்சனம் நடக்கிறது. மாலை கோவிலின் நான்கு மாட வீதிகளில் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 8-ந்தேதி பவித்ர பிரதிஷ்டை, 9-ந்தேதி பவித்ர சமர்ப்பணம், 10-ந்தேதி பூர்ணாஹுதி நிகழ்ச்சிகள் நடக்கிறது.
பவித்ரோற்சவத்தையொட்டி 7-ந்தேதி அங்குரார்ப்பணம் நடப்பதால் சஹஸ்ர தீபலங்கார சேவை, 9-ந்தேதி அஷ்டதள பாத பத்மாராதன சேவை, 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஏரியில் வளர்த்து வந்த மீன்களை பிடிப்பதற்காக அதிலிருந்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு சிறிதளவு தண்ணீரில் மீன் பிடித்து உள்ளனர்.
- ஏரியிலிருந்த தண்ணீரில் மர்ம நபர்கள் விஷத்தை கலந்து உள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த கப்ப கூடகம் பகுதியை சேர்ந்தவர் முனி ராஜா. இவர் 3 ஆயிரம் வாத்துக்களை வளர்த்து வந்தார். நேற்று காலை பக்கத்து கிராமமான ராவுல பாடு ஏரியில் 3 ஆயிரம் வாத்துக்களையும் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.
அப்போது ஏரியில் இருந்த தண்ணீரை குடித்த 3 ஆயிரம் வாத்துகளும் திடீரென துள்ளி விழுந்து பரிதாபமாக இறந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஏரியில் வளர்த்து வந்த மீன்களை பிடிப்பதற்காக அதிலிருந்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு சிறிதளவு தண்ணீரில் மீன் பிடித்து உள்ளனர்.
ஏரியிலிருந்த தண்ணீரில் மர்ம நபர்கள் விஷத்தை கலந்து உள்ளனர். விஷம் கலந்த தண்ணீரை குடித்த வாத்துக்கள் இறந்தது தெரிய வந்தது.
தண்ணீரை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த வாரம் கோரன்ட்லா மாதவ் இளம்பெண் ஒருவருக்கு நிர்வாண நிலையில் வீடியோ காலில் போன் செய்து 30 நிமிடம் வந்து சென்றால் உடற்பயிற்சி செய்து அனுப்புகிறேன் என கூறியுள்ளார்.
- எம்பி பேசிய வீடியோ கால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் இந்துபுரம் எம்.பி.யாக இருப்பவர் கோரன்ட்லா மாதவ் (வயது 45). இவர் கடந்த 2019-ம் ஆண்டு வரை போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார்.
அப்போது தெலுங்கு தேசம் கட்சி அமைச்சராக இருந்த ஜே.சி.பி பிரபாகர் ரெட்டி போலீசார் குறித்து விமர்சனம் செய்து பேசினார்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய கோரன்ட்லா மாதவ், இனி போலீசார் குறித்து விமர்சனம் செய்து பேசினால் போலீசார் உங்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என பதிலடி கொடுத்தார்.
இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி கோரண்ட்லா மாதவை தன்னுடைய கட்சியில் சேர்த்து எம்பி சீட்டு கொடுத்தார். தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கடந்த வாரம் கோரன்ட்லா மாதவ் இளம்பெண் ஒருவருக்கு நிர்வாண நிலையில் வீடியோ காலில் போன் செய்து 30 நிமிடம் வந்து சென்றால் உடற்பயிற்சி செய்து அனுப்புகிறேன் என கூறியுள்ளார். எம்பி பேசிய வீடியோ கால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இதனைக் கண்ட அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர்.
இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியினர், மற்றும் எதிர்க்கட்சியினர் எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் கூறுகையில்:-
கோரண்ட்லா மாதவ் இன்ஸ்பெக்டராக இருந்தபோது அவர் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு, இளம்பெண் பலாத்கார வழக்கு நிலுவையில் உள்ளது.
பதவியை தற்போது ராஜினாமா செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆந்திரா முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நெருக்கடி நிலவி வருகிறது.
முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எம்.பி.யை அழைத்து இளம்பெண்ணுடன் வீடியோ காலில் பேசியது சம்பந்தமாக விசாரணை நடத்தினார்.
அப்போது கோரண்ட்லா மாதவ் அந்த வீடியோ காலில் இருப்பது என்னுடைய தலை மட்டுமே உடல் வேறு ஒருவருடையது. தெலுங்கு தேசம் கட்சியினர், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்று வீடியோவை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர் என தெரிவித்தார்.
இது சம்பந்தமாக ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆலோசகர் ராமகிருஷ்ணா ரெட்டியிடம் 2 முறை ஆலோசனை நடத்தினார். வீடியோ கால் பேசியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கோரண்ட்லா மாதவை கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அதிகாலை மூலவர் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
- மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வரலட்சுமி விரதம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் வேண்டி விரதம் இருந்து வரலட்சுமி அம்மனுக்கு பூஜை செய்து வழிபடுகின்றனர்.
திருப்பதி திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி கோவில் வளாகம் விழா கோலம் பூண்டுள்ளது. கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்களைக் கொண்டு கோவில் வளாகம் மற்றும் ஆஸ்தான மண்டபம் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களை ஒழுங்குபடுத்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அதிகாலை மூலவர் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
காலை 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தி பத்மாவதி தாயார் ஆஸ்தான மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு மதியம் 2 மணி வரை சிறப்பு பூஜைகள் மலர் அபிஷேகம் நடந்தது.
இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.
மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
- குளிர் காற்று வீசி வருவதால் நடுங்கியபடி தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர்.
திருப்பதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. தற்போது திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றனர்.
வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
தொடர்ந்துமழை பெய்து வருவதால் பக்தர்கள் மழையில் நனைந்தவாறு தரிசனத்திற்கு சென்றனர். அதேபோல் தரிசனம் முடித்து வெளியே வந்த பக்தர்களும் மழையில் நனைந்தவாறு சென்றனர்.
மேலும் குளிர் காற்று வீசி வருவதால் நடுங்கியபடி தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர்.
இதனால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.
திருப்பதியில் நேற்று 62,351 பேர் தரிசனம் செய்தனர். 31,473 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.99 கோடி உண்டியலில் காணிக்கை வசூலானது.
- தமிழக பதிவு எண் கொண்ட கார் ஒன்று சிலுவை ஸ்டிக்கர் ஒட்டி அலிபிரி சோதனை சாவடிக்கு வந்தது.
- அலிபிரி சோதனை சாவடியில் பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், கார், வேன் மூலம் வருகின்றனர்.
தரிசனத்திற்கு வரும் வாகனங்களில் மாற்று மதத்தினர் சின்னம் பொருத்திய வாகனங்கள் திருமலைக்கு செல்ல அனுமதி இல்லை. இதற்காக அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் முழுமையாக பரிசோதனை செய்த பிறகு திருமலைக்கு அனுமதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று தமிழக பதிவு எண் கொண்ட கார் ஒன்று சிலுவை ஸ்டிக்கர் ஒட்டி அலிபிரி சோதனை சாவடிக்கு வந்தது.
அங்கிருந்த திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் காரை முழுமையாக சோதனை செய்யாமல் திருமலைக்கு அனுமதித்தனர்.
அந்த கார் திருமலையில் உள்ள எஸ்.எம்.சி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனைக்கண்ட தேவஸ்தான அதிகாரிகள் கார் உரிமையாளரை அழைத்து காரில் ஒட்டப்பட்டு இருந்த சிலுவை ஸ்டிக்கரை அகற்றினர். மேலும் மாற்று மதத்தினரின் சின்னங்களை ஒட்டிய வாகனங்களுக்கு திருமலையில் அனுமதி இல்லை. இனிமேல் இதுபோன்று வரக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
மேலும் அலிபிரி சோதனை சாவடியில் பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சிலுவை ஸ்டிக்கர் ஒட்டி திருமலைக்கு வந்த காரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






