search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதம்: பக்தர்கள் குவிந்தனர்
    X

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதம்: பக்தர்கள் குவிந்தனர்

    • அதிகாலை மூலவர் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
    • மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வரலட்சுமி விரதம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் வேண்டி விரதம் இருந்து வரலட்சுமி அம்மனுக்கு பூஜை செய்து வழிபடுகின்றனர்.

    திருப்பதி திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி கோவில் வளாகம் விழா கோலம் பூண்டுள்ளது. கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது.

    பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்களைக் கொண்டு கோவில் வளாகம் மற்றும் ஆஸ்தான மண்டபம் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களை ஒழுங்குபடுத்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    அதிகாலை மூலவர் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    காலை 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தி பத்மாவதி தாயார் ஆஸ்தான மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு மதியம் 2 மணி வரை சிறப்பு பூஜைகள் மலர் அபிஷேகம் நடந்தது.

    இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.

    மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    Next Story
    ×