என் மலர்
ஆந்திர பிரதேசம்
- வெங்கடேசப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்பு.
- புறப்படும் முன்பு, கோவில் யானைகளுக்கு உணவு வழங்கினார்.
திருமலை:
ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இன்று அதிகாலை திருப்பதிக்கு வந்தார். மலையடிவாரத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்கிய பிறகு, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வெங்கடேசப் பெருமானுக்கு நடைபெற்ற ஒரு மணி நேர சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார். அவருடன் ரிலையன்ஸ் நிறுவன உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர்.
வழிபாட்டிற்குப் பிறகு, சன்னதியில் வைத்து காணிக்கையாக ஒன்றரை கோடி ரூபாய்க்கான காசோலையை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கட தர்ம ரெட்டியிடம் முகேஷ் அம்பானி வழங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்படும் முன்பு, கோவில் யானைகளுக்கு அவர் உணவு வழங்கியதாக தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
- 26-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
- 27-ந்தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட அழைப்பிதழ் வெளியிடும் நிகழ்ச்சி திருப்பதியில் உள்ள சுவேத பவனில் நடந்தது.
நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட அழைப்பிதழை வெளியிட்டார். அழைப்பிதழில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:-
வருகிற 20-ந்தேதி காலை 6 மணியில் இருந்து பகல் 11 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலய சுத்தி நடக்கிறது. 26-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அங்குரார்ப்பணம் நடக்கிறது. 27-ந்தேதி மாலை 5.45 மணியில் இருந்து மாலை 6.15 மணி வரை மீன லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது.
அதில் முக்கிய நிகழ்ச்சியாக அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருட வாகன வீதிஉலா, 2-ந்தேதி தங்கத்தேரோட்டம், 4-ந்தேதி தேர் திருவிழா, 5-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது.
இதர வாகன சேவைகள்
முதல் நாளான வருகிற (செப்டம்பர்) 27-ந்தேதி மாலை 5.45 மணியில் இருந்து மாலை 6.15 மணி வரை கொடியேற்றம், இரவு 9 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பெரிய சேஷ வாகன வீதி உலா, 28-ந்தேதி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஹம்ச வாகன வீதிஉலா.
29-ந்தேதி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சிம்ம வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை முத்துப் பந்தல் வாகன வீதிஉலா, 30-ந்தேதி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.
கருட சேவை
அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகனத்தில் வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து கருட வாகன வீதிஉலா, 2-ந்தேதி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை ஹனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தங்கத் தேரோட்டம், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கஜ வாகன வீதிஉலா.
3-ந்தேதி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா, 4-ந்தேதி காலை 7 மணியளவில் தேர் திருவிழா, இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை குதிரை வாகன வீதிஉலா, 5-ந்தேதி காலை 6 மணியில் இருந்து காலை 9 மணி வரை சக்கர ஸ்நானம், இரவு 9 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கொடியிறக்கம் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் இணை அதிகாரிகள் வீரபிரம்மன், சதாபார்கவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மனைவியை ஊருக்கு வரவழைத்து விட வேண்டும் என எண்ணிய தாவித் தனது பிள்ளைகளை அடித்து கொடுமைப்படுத்துவதை செல்போனில் வீடியோ எடுத்து தனது மனைவிக்கு அனுப்பி வைத்தார்.
- வீடியோவை பார்த்தும் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்றால் தொடர்ந்து சித்ரவதை செய்வேன் என தகவல் அனுப்பினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பெண்டபாடு மண்டலம், வீரபாளையத்தை சேர்ந்தவர் தாவித். கூலி தொழிலாளி. இவரது மனைவி நிர்மலா. தம்பதிக்கு ஆகாஷ் (வயது 13), அம்ருதா (12), அலைக்கியா (11) என 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.
தாவித் தினமும் குடித்துவிட்டு வந்து நிர்மலாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார். கணவரின் சித்ரவதையிலிருந்து விடுபட முடிவு செய்த நிர்மலா வெளிநாடு செல்ல தீர்மானித்தார். இதையடுத்து உறவினர்கள், நண்பர்களிடம் கடனை பெற்றுக்கொண்டு கடந்த ஆண்டு குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.
குழந்தைகள் 3 பேரும் கணவரின் பாதுகாப்பில் இருந்தனர்.
வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட தாவீத் மீண்டும் இந்தியாவுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு நிர்மலா சம்மதிக்கவில்லை.
எப்படியாவது மனைவியை ஊருக்கு வரவழைத்து விட வேண்டும் என எண்ணிய தாவித் தனது பிள்ளைகளை அடித்து கொடுமைப்படுத்துவதை செல்போனில் வீடியோ எடுத்து தனது மனைவிக்கு அனுப்பி வைத்தார். வீடியோவை பார்த்தும் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்றால் தொடர்ந்து சித்ரவதை செய்வேன் என தகவல் அனுப்பினார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிர்மலா இது குறித்து பஞ்சாயத்து தலைவர் சூரியகலாவிற்கு தகவல் தெரிவித்தார். மேலும் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் சத்திய நாராயணாவுக்கும் வீடியோவை அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவர் தாடேபள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்து தாவித்தை உடனடியாக கைது செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.
போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்த தாவித் தனது குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு தப்பி ஓடினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தாவித்தை தேடி வருகின்றனர்.
- 27-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
- ஆண்டுக்கு 4 முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது.
இதனையொட்டி கோவிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் 20-ந்தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதனால் அன்றைய தினம் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதால் 19-ம்தேதி எந்தவித முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களும் பெறுவதில்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 4 முறை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.
உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய செவ்வாய்கிழமையன்று கோவில் சுத்தம் செய்யப்படுகிறது.
அவ்வாறு 20-ந்தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவிலில் சுத்தம் செய்து மூலிகை கலவை கோவில் சுவர்களில் தெளிக்கப்படும்.
இதனால் அன்று 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டு காலை 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அன்றைய தினம் அஷ்ட தல பாதமாராதனை சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- கடப்பா மாவட்டம், ஜம்மலமடுகு பகுதியை சேர்ந்தவர் குலையப்பா.
- குசேனம்மாவின் மகள்கள் 3 பேரும் நேற்று காலை பெரிய குலையப்பா வீட்டிற்கு சென்று தந்தை கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு வற்புறுத்தினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், ஜம்மலமடுகு பகுதியை சேர்ந்தவர் குலையப்பா. இவரது மனைவி குசேனம்மா (வயது 60). தம்பதிக்கு தஸ்தகீரம்மா, காதரம்மா, சின்ன தஸ்தகீரம்மா என 3 மகள்கள் உள்ளனர். குலையப்பா தனது உறவினரான பெரிய குலைப்பாவுக்கு ரூ.50 லட்சம் கடன் கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு குலையப்பா உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார். கணவர் இறந்த பிறகு குசேனம்மா, பெரிய குலையப்பாவிடம் தனது கணவர் கொடுத்த ரூ.50 லட்சத்தை திரும்ப கேட்டு வந்தார். அவரும் பணத்தை தருவதாக நாட்களை கடத்தி வந்தார்.
இந்த நிலையில் குசேனம்மா நேற்று காலை இறந்து விட்டார். இதையடுத்து குசேனம்மாவின் மகள்கள் 3 பேரும் நேற்று காலை பெரிய குலையப்பா வீட்டிற்கு சென்று தந்தை கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு வற்புறுத்தினர்.
அதற்கு கடன் கொடுத்த உங்களுடைய தந்தை வந்தால் மட்டுமே பணத்தை திருப்பி தர முடியும் என பதிலளித்தார். அப்போது பெரிய குலையாப்பாவிடம் பணத்தை எப்படி பெறுவது என 3 பேரும் யோசனை செய்தனர்.
அதில் தனது தாயின் பிணத்தை பெரிய குலையப்பா வீட்டின் முன்பாக வைத்து போராட்டம் நடத்தினால் பணத்தை வாங்கி விடலாம் என முடிவு செய்தனர். இதையடுத்து தனது தாயின் பிணத்தை எடுத்துச் சென்று பெரிய குலையப்பா வீட்டு வாசலில் வைத்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெரிய குலையப்பா குடும்பத்தினர் பிணத்தை எடுத்துச் செல்லுமாறு கூறினர். வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்தால் தான் பிணத்தை எடுத்துச் செல்வோம் என பிடிவாதமாக இருந்தனர்.
இதனை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் கூடினர். இதையடுத்து ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி தற்சமயம் வாங்கிய கடனில் பாதியை இப்போது தருவதாகவும், மீதியை பின்னர் தருவதாகவும் ஒப்புக்கொண்டனர்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட மகள்கள் தாயின் பிணத்தை எடுத்துச் சென்றனர். தந்தை கொடுத்த பணத்தை பெற மகள்கள் நூதன முறையில் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் பரபரப்பதையும் ஏற்படுத்தி உள்ளது.
- 27-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது.
- இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா மிகப் பிரமாண்டமாக நடத்தப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதை முன்னிட்டு திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நேற்று காலை கோவிலின் நான்கு மாடவீதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 27-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஏற்பாடு செய்யப்படும் கேலரிகளில் பக்தர்கள் உள்ளே செல்லும் பாதைகள், வெளியேறும் பாதைகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா மிகப் பிரமாண்டமாக நடத்தப்படும்.
அக்டோபர் மாதம் 1-ந்தேதி நடக்கும் கருட சேவை மற்றும் அனைத்து வகையான வாகனச் சேவைகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலால் கோவில் உள்ளேயே பிரம்மோற்சவ விழாவை தனிமையில் நடத்தினோம்.
2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவ விழாவையொட்டி நான்கு மாடவீதிகளில் வாகனச் சேவை நடக்கிறது. வாகனச் சேவையை காண வரும் பக்தர்களுக்கு விரிவான ஏற்பாடுகளை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவ விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை, மாவட்ட கலெக்டர், போலீசார், பொறியியல் துறை அதிகாரிகளுடன் இணைந்து நான்கு மாட வீதிகள் மற்றும் கேலரிகளில் ஏற்கனவே இரண்டு முறை ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இந்த ஆண்டு பக்தர்கள் அதிகளவில் திருமலைக்கு வர வாய்ப்புள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
- வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட்டது.
- 2018-ம் ஆண்டு ஜன ஜாக்ருதி என்ற புதிய கட்சியை தொடங்கினார் கொத்தபள்ளி கீதா
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராம கோடீஸ்வர ராவ் (வயது55). இவரது மனைவி கொத்தபள்ளி கீதா (50). இவருக்கு 27 வயது இருக்கும்போது அங்குள்ள கிராம வங்கியில் வேலை கிடைத்தது. 2 ஆண்டுகள் வங்கியில் வேலை செய்த கீதா குரூப்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.
இதையடுத்து பல்வேறு இடங்களில் உதவி கலெக்டராக வேலை செய்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.பி பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.பி. ஆக இருந்தபோது தனியார் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதன் பேரில் வங்கியில் ரூ.42 கோடி கடன் வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த வில்லை.
இந்த நிலையில் 2018-ம் ஆண்டு ஜன ஜாக்ருதி என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதன் பின்னர் பா.ஜ.க.வில் இணைந்து அப்பகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட்டது. முன்னாள் எம்.பி. கீதா, அவரது கணவர் ராம கோடீஸ்வரராவ், வங்கி அதிகாரிகள் ஜெயப்பிரகாஷ், அரவிந்த் ஆகியோர் மீது ஆந்திர மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கீதா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதில் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்தது நிரூபணமானதால் முன்னாள் எம்.பி.கீதா, அவரது கணவர் ராம கோடீஸ்வரராவ், வங்கி அதிகாரிகள் ஜெய பிரகாஷ், அரவிந்த் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து 4 பேரும் உஸ்மானிய ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். உடல் பரிசோதனை முடிந்து 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- பக்தர்கள் பஸ்சில் கூட்டமாக ஏறுவதை பயன்படுத்தி 3 பெண்கள், பெண் பயணி ஒருவரின் பையில் இருந்து ரூ.5 ஆயிரத்தை திருடியதை கண்டுபிடித்தனர்.
- திருட்டில் ஈடுபட்ட 3 பெண்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் இருந்து நகை, பணம், செல்போன் அடிக்கடி திருட்டு போனது. இதுகுறித்து பக்தர்கள் அங்குள்ள போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருமலை பஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சாய்நாத் சவுத்ரி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பக்தர்கள் பஸ்சில் கூட்டமாக ஏறுவதை பயன்படுத்தி 3 பெண்கள், பெண் பயணி ஒருவரின் பையில் இருந்து ரூ.5 ஆயிரத்தை திருடியதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட 3 பெண்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த வசந்தா, கவுரம்மா, மஞ்சுளா என தெரியவந்தது.
இவர்கள் பாலாஜி பஸ் நிலையம், அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து நகை, பணம், செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளை அடித்ததாக ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 93 கிராம் தங்கம், 32 கிராம் வெள்ளி, செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- நவரத்திரி விழா 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
- 9 நாட்களும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.
திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் நவராத்திரி உற்சவ விழா வெகு விமரிசையாக நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டும், நவரத்திரி விழா வரும் 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில், செப்டம்பர் 30-ம்தேதி லட்சுமி பூஜை, அக்டோபர் 5-ந்தேதி அஷ்டோத்ர சத கலசாபிஷேகம் போன்றவை முக்கிய நிகழ்வுகளாகும்.
9 நாட்களும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். திரளான பக்தர்கள் இதில் கலந்துக்கொள்வார்கள் அனைத்து சேவைகளையும், ஆர்ஜித சிறப்பு தரிசனங்களையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
நவராத்திரி நெருங்குவதையொட்டி பத்மாவதி தாயாருக்கு ஹைதராபாத்தை சேர்ந்த சத்யநாராயணா தம்பதியினர் 85 கிராம் எடையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்க பாதங்களை நேற்று காணிக்கையாக வழங்கினர்.
- திருமலை திருப்பதி தேவஸ்தானம் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது.
- இயற்கை விவசாயம் மூலம் காய்கறிகளை சாகுபடி செய்வதில் இயற்கை விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும்.
திருமலை:
திருப்பதியில் உள்ள அன்னமய்யா பவனில் ராயலசீமா மாவட்டங்களை சேர்ந்த இயற்கை விவசாயிகளுடனான சந்திப்பு கூட்டம் நடந்தது.
தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமை தாங்கினார்.
நோய் இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை இலக்காக கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது.
இயற்கை விவசாயம் மூலம் காய்கறிகளை சாகுபடி செய்வதில் இயற்கை விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும்.
கடந்தாண்டு ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரத்தை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட பொருட்களை கொண்டு ஏழுமலையானுக்கு நெய்வேத்தியம் தயாரிக்க தொடங்கினோம்.
இதேபோல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னப்பிரசாதம் தயாரிப்பிலும் இதை விரிவுபடுத்த விரும்புகிறோம்.
இயற்கை விவசாய பொருட்கள் மற்றும் காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட சுவையான மற்றும் சுகாதாரமான உணவுகளை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளோம். இது இயற்கை விவசாயிகளின் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
- 26-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 2 மணிவரை கருடசேவை நடக்கிறது, என முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறினார்.
திருமலை அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி 20-ந்தேதி காலை 6 மணியில் இருந்து பகல் 11 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலய சுத்தி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
26-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அங்குரார்ப்பணம் நடக்கிறது. 27-ந்தேதி மாலை 5.45 மணியில் இருந்து மாலை 6.15 மணி வரை மீன லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது. இரவு 9 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.
கொடியேற்றம் அன்று ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி, மாநில அரசின் சார்பில் மூலவர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம் செய்கிறார்.
அதைத்தொடர்ந்து தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் வாகன சேவை நடக்கிறது. ஆனால் கருட வாகன சேவை மட்டும் இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரை நடக்கிறது.
அக்டோபர் மாதம் 5-ந்தேதி காலை 6 மணிக்கு சக்கர ஸ்தானம், இரவு 9 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கொடியிறக்கம் நடக்கிறது. பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தர்களை கவனத்தில் கொண்டு, இலவச தரிசனத்தை மட்டும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோர், என்.ஆர்.ஐ. பக்தர்கள், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான சிறப்பு தரிசனங்களை ரத்து செய்துள்ளோம்.
சேவைகளுடன், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்கள், பிற அறக்கட்டளைகளுக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசனம், ரூ.300 தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. 50 சதவீத அறைகள் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் அறைகள் குறைவாக இருப்பதால், பக்தர்கள் அறைகள் பெற்று, திருப்பதியில் தங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சாதாரண நாட்களில் தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத கட்டிடத்தில் காலை 9 மணியில் இருந்து இரவு 11 மணி வரை அன்னப்பிரசாத வினியோகம் நடக்கிறது.
பிரம்மோற்சவ நாட்களில் காலை 8 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை அன்னப்பிரசாதம் வழங்கப்படும். கருட சேவை அன்று இரவு 2 மணி வரை பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படும்.
வாகன சேவை முன்பு ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்களில் இருந்து ஆன்மிக உணர்வைத் தூண்டும் வகையில் நம்பமுடியாத கலை வடிவங்களை ஏற்பாடு செய்வோம்.
இதேபோல் திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கம், ராமச்சந்திரா புஷ்கரணி, அன்னமாச்சாரியார் கலையரங்கம், திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபம் ஆகிய இடங்களில் இசை, நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
ஆச்சாரமான இந்து மதத்தை பரப்பும் நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் மொத்தம் 1342 கோவில்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். சமர சதாசேவா அறக்கட்டளையோடு இணைந்து எஸ்.சி, எஸ்.டி, பி.சி. மற்றும் மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஸ்ரீவாணி அறக்கட்டளை திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 502 கோவில்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இங்கு பக்தர்களுக்கு தரிசன பாக்கியம் கிடைக்கும்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தயாரிக்கும் 15 வகையான பஞ்சகவ்ய பொருட்கள் பக்தர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதேபோல், தூபக் குச்சிகள் பக்தர்களால் பிரத்யேகமாக வாங்கப்படுகின்றன. பஞ்சகவ்ய பொருட்கள், ஊதுபத்தி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை மாடுகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறோம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பயன்படுத்தப்படும் மலர்களைப் பயன்படுத்தி உலர் மலர் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்ரீவாரி உருவப் படங்கள், கீ செயின்கள் மற்றும் பிற பொருட்களை பக்தர்கள் பெருமளவில் வாங்கி செல்கின்றனர்.
குழந்தைகளின் பல நோய்களுக்கு இலவச அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்க பக்தர்களின் காணிக்கையில் ஸ்ரீபத்மாவதி குழந்தைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விரைவில் கட்டப்படும். தற்போதுள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இதுவரை 652 இதய அறுவை சிகிச்சை செய்து ஏழை குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளோம். ஏழுமலையானின் அருளால் வங்கதேசம் போன்ற தொலைதூர நாடுகளில் இருந்து பெற்றோர் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்தனர்.
பசுவை அடிப்படையாகக் கொண்ட இயற்கை விவசாயப் பொருட்களுடன் திருமலை வெங்கடாசலபதிக்கு பிரசாதம் மற்றும் பிற பிரசாதங்கள் தயாரிக்க 12 வகையான பொருட்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க குறைந்த பட்ச ஆதரவு விலையை விட சற்றே கூடுதல் விலை கொடுத்து வருகிறோம்.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 17 காணிக்கையாளர்கள் திருமலையில் அன்னப்பிரசாதம் தயாரிப்பதற்காக 2004-ம் ஆண்டு முதல் ரூ.200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள காய்கறிகளை இலவசமாக வழங்கி உள்ளனர். இயற்கை விவசாயத்துடன் காய்கறிகளை பயிரிட விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஒவ்வொரு பஸ்சும் 50 சீட்டுகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக மின்சார பஸ்கள் மட்டுமே இருக்கும்.
திருமலை:
மாவட்ட பொது போக்குவரத்து அலுவலர் டி.செங்கல் ரெட்டி கூறியதாவது:-
புதிய மின்சார பஸ்கள் 11-ந் தேதி நள்ளிரவு அலிபிரி பணிமனைக்கு வந்தடைந்தது. மொத்தம் 100 பஸ்கள் வரும். மின்சார பஸ்கள் திருமலை-திருப்பதி, திருப்பதியிலிருந்து விமான நிலையத்திற்கு இடையே 64 பஸ்கள், திருப்பதியில் இருந்து நெல்லூர், மதனப்பள்ளி, கடப்பா பகுதிக்கு 12 பஸ்கள் இயக்கப்படும்.
ஒவ்வொரு பஸ்சும் 50 சீட்டுகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மலைச் சாலையில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக மின்சார பஸ்கள் மட்டுமே இருக்கும். வருகிற 27-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இதில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொள்கிறார். அப்போது அவர் மின்சார பஸ்களை தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






