என் மலர்
இந்தியா

வெளிநாட்டிற்கு சென்ற மனைவியை வரவழைக்க குழந்தைகளை அடித்து துன்புறுத்திய வீடியோ அனுப்பி கணவர் மிரட்டல்
- மனைவியை ஊருக்கு வரவழைத்து விட வேண்டும் என எண்ணிய தாவித் தனது பிள்ளைகளை அடித்து கொடுமைப்படுத்துவதை செல்போனில் வீடியோ எடுத்து தனது மனைவிக்கு அனுப்பி வைத்தார்.
- வீடியோவை பார்த்தும் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்றால் தொடர்ந்து சித்ரவதை செய்வேன் என தகவல் அனுப்பினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பெண்டபாடு மண்டலம், வீரபாளையத்தை சேர்ந்தவர் தாவித். கூலி தொழிலாளி. இவரது மனைவி நிர்மலா. தம்பதிக்கு ஆகாஷ் (வயது 13), அம்ருதா (12), அலைக்கியா (11) என 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.
தாவித் தினமும் குடித்துவிட்டு வந்து நிர்மலாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார். கணவரின் சித்ரவதையிலிருந்து விடுபட முடிவு செய்த நிர்மலா வெளிநாடு செல்ல தீர்மானித்தார். இதையடுத்து உறவினர்கள், நண்பர்களிடம் கடனை பெற்றுக்கொண்டு கடந்த ஆண்டு குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.
குழந்தைகள் 3 பேரும் கணவரின் பாதுகாப்பில் இருந்தனர்.
வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட தாவீத் மீண்டும் இந்தியாவுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு நிர்மலா சம்மதிக்கவில்லை.
எப்படியாவது மனைவியை ஊருக்கு வரவழைத்து விட வேண்டும் என எண்ணிய தாவித் தனது பிள்ளைகளை அடித்து கொடுமைப்படுத்துவதை செல்போனில் வீடியோ எடுத்து தனது மனைவிக்கு அனுப்பி வைத்தார். வீடியோவை பார்த்தும் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்றால் தொடர்ந்து சித்ரவதை செய்வேன் என தகவல் அனுப்பினார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிர்மலா இது குறித்து பஞ்சாயத்து தலைவர் சூரியகலாவிற்கு தகவல் தெரிவித்தார். மேலும் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் சத்திய நாராயணாவுக்கும் வீடியோவை அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவர் தாடேபள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்து தாவித்தை உடனடியாக கைது செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.
போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்த தாவித் தனது குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு தப்பி ஓடினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தாவித்தை தேடி வருகின்றனர்.






