என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • இன்று பிற்பகல் 2 மணியளவில் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • உற்சவ சேவைக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அடுத்த மாதத்துக்கான (மார்ச்) ரூ.300 தரிசன டிக்கெட் ஒதுக்கீடு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது.

    ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று பிற்பகல் 2 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    அதேபோல் மார்ச் மாதத்துக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, உற்சவ சேவைக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் கவனத்தில் கொண்டு தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 28-ந்தேதி வரை ஒரு நாளைக்கு 150 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
    • தரிசன டிக்கெட்டுகள் ஆதார் அட்டையுடன் நேரடியாகச் சென்றால் மட்டுமே வழங்கப்படும்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஏழுமலையானை எளிதாக தரிசிக்க திருமலையில் உள்ள கோகுலம் அலுவலகத்தில் நேற்று முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட்டுகளை நேரில் (ஆப் லைன்) வழங்குவதை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் தொடங்கி உள்ளது.

    இந்த மாதத்துக்கு (பிப்ரவரி) ஏற்கனவே 750 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. எனவே திருமலையில் வருகிற 28-ந்தேதி வரை ஒரு நாளைக்கு 150 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

    அடுத்த மாதம் (மார்ச்) முதல் 1000 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளில் 500 ஆன்லைனில், 400 திருமலையில் உள்ள கோகுலம் அலுவலகத்தில், 100 ரேணிகுண்டா விமான நிலையத்தில் வழங்கப்படும். தரிசன டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் தங்களின் ஆதார் அட்டையுடன் நேரடியாகச் சென்றால் மட்டுமே வழங்கப்படும். பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு நேரில் வந்து ஸ்ரீவாணி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பதி நகரம் தனது 893-வது பிறந்தநாளை இம்மாதம் 24-ந் தேதி கொண்டாடத் தயாராகி வருகிறது.
    • திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 4 மாட வீதிகளில் பிரமாண்டமான நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    கலியுகத்தின் வெளிப்பாடாக திருமலை மலையில் அவதரித்த ஏழுமலையான் சாமியின் பாத பீடம் என அழைக்கப்படும் திருப்பதிக்கு பல நூற்றாண்டுகளின் வரலாறு உண்டு.

    திருமலையின் ஆகமத்தின் பணிகளை இயக்கிய ராமானுஜாச்சாரியார் கிட்டத்தட்ட 8 நூற்றாண்டுகளுக்கு முன்பு திருப்பதி நகரத்தை தோற்றுவித்தார் என்று வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, திருப்பதி நகரம் தனது 893-வது பிறந்தநாளை இம்மாதம் 24-ந் தேதி கொண்டாடத் தயாராகி வருகிறது.

    ஸ்ரீ லக்ஷ்மி தேவியைத் தேடி வைகுண்டத்தை விட்டு பூமியை அடைந்த ஸ்ரீ மஹாவிஷ்ணு, ஸ்ரீநிவாஸர் என்ற பெயரில் ஆதிவராஹ ஸ்தலமான திருமலை மலைக்குச் சென்று ஸ்ரீ ஏழுமலையானை வழிபட்டார் என்பது அனைவரும் அறிந்த புராணங்கள். கலியுகத்தின் ஆரம்பம் முதல் இன்று வரை அனைத்து நித்ய சேவை கைங்கர்யங்களும் பரம்பரை வைகானச ஆகமத்தின்படி நடந்து வருகின்றன.

    ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருமலையில் பல்வேறு வகையான திருவிழாக்கள் தெளிவற்ற நடைமுறைகளுடன் நடந்தது.

    அந்தந்த வம்சங்கள் ராமானுஜச்சாரியார் 11-ம் நூற்றாண்டில் தனது வாழ்நாளில் 3 முறை திருமலைக்கு வந்து கருவறையில் காணப்படும் அசல் தன்மை குறித்த சந்தேகங்களைப் போக்கினார். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் திருமலை மூலமூர்த்திக்கு சங்குச்சக்கரங்களைக் காணிக்கையாகக் கொடுத்து, ஸ்தல லட்சுமியை பிரதிஷ்டை செய்து, ஸ்ரீ மஹாவிஷ்ணு தசாவதார ரூபம் என்று அறிவித்தார். திருமலை கோவிலின் நித்ய பூஜைகள், கைங்கர்ய நடைமுறைகளை பரம்பரையாக ஆகம விதிகளின்படி மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த வழக்கமான பூஜைகளின் பொறுப்புகளை கண்காணிக்க பஞ்சராத்ர துணை ஜீயர் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த நேரத்தில், ஏழுமலையான் கோவில் பகுதி வனப்பகுதியாக இருந்தது, அங்கு வழக்கமான சேவைகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெற்றன. கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.

    அதன்பின், கோவிலின் நான்கு புறமும் மாடவீதிகள், அர்ச்சகர்கள் குடியிருப்புகள், ஜீயரைக் கொண்டு கட்டப்பட்டது. கோவிந்தப்பட்டினம் என்ற பெயரில் மடங்கள் மற்றும் மக்கள்தொகை விரிவாக்கம் தொடங்கியது.

    அவ்வாறு உருவான கோவிந்தப்பட்டினம், திருமலை அடிவாரத்தில் உள்ள கபிலதீர்த்தம் அருகே ஏற்கனவே மறைந்துவிட்ட கோத்தூர் என்ற கிராமப் பகுதி வரை நீண்டு, தற்போதைய திருப்பதி நகரம் உருவாகக் காரணமாக இருந்தது.

    கோவிந்தராஜர் கோவில் வளாகத்தில் காணப்படும் பல கல்வெட்டுகள் மூலம் இந்த வரலாறு வெளிப்படுகிறது. தற்போதைய திருப்பதி நகரத்தை ராமானுஜாச்சாரியார் 1130-ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று நிறுவினார் என்பதை அந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

    இதற்கு சாட்சியாக கோவிந்தராஜசுவாமி கோவிலில் பரம்பரை பரம்பரையாக நடைபெறும் நித்ய பூஜை நடவடிக்கைகளில் அன்றைய தேதி தொடர்பான வருட, திதி, வார, நட்சத்திரங்களை வைத்து அர்ச்சகர்கள் தீர்மானம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    உலகப் புகழ் பெற்ற திருப்பதி நகரம் திருமலையின் பாத பீடமாகத் திகழ்கிறது. அதன் தோற்றத்தின் விழாவின் ஒரு பகுதியாக, நகர மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 4 மாட வீதிகளில் பிரமாண்டமான நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் திருப்பதி மாநகராட்சி சார்பில் வண்ண மின் விளக்குகள் மற்றும் தோரணங்கள் மூலம் அழகுபடுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • மாலை 4 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடுகிறது.
    • ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மூலமாக தரிசிக்க மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத ஒதுக்கீட்டை இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடுகிறது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை அதில் அடங்கும்.

    அதேபோல் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீதமுள்ள ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் லக்கி டிப் (குலுக்கல் முறை) பதிவு செயல்முறை இன்று காலை 10 மணியில் இருந்து 24-ந்தேதி காலை 10 மணி வரை இருக்கும். லக்கி டிப்பில் டிக்கெட் பெற்றவர்கள் பணம் செலுத்தி உறுதிப்படுத்த வேண்டும். பக்தர்கள் இந்த நடைமுறைகளை கவனித்து ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த முறை சோதனை அடிப்படையில் மார்ச் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
    • கவுண்ட்டர்களில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன், லட்டுப்பிரசாதம், அறை ஒதுக்கீடு, பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு பக்தரின் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி முதல் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட உள்ளது.

    தனிநபர் அதிக லட்டு டோக்கன்களை பெறுவதைத் தவிர்க்கவும், இலவச தரிசன வளாகத்திலும், அறை ஒதுக்கீடு மையங்கள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் கவுண்ட்டர்களிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காயம் அடைந்த போலீசார் மற்றும் தெலுங்கு தேசம் தொண்டர்ளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • தாக்குதல் நடந்த இடத்தில் பொருட்கள் சிதறியும், கார் பைக் அடித்து நொறுக்கப்பட்டு போர்க்களம் போல் காட்சி அளித்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா கன்னவரம் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வம்சி. இவர் ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சென்று எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    வம்சி எம்.எல்.ஏ. அடிக்கடி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாராலோகேஷ் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்து பேசி வந்தார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் அவதூறு பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரெட்டி பட்டாபி, மாநில செயலாளர் சின்னா ஆகியோர் வம்சி எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து நேற்று காலை கன்னவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கடுமையாக விமர்சித்து பேசினார்.

    மேலும் தேர்தல் பார்வையாளர் ஹரிபாபு மற்றும் பெண் தலைவர்களும் விமர்சனம் செய்து பேசியதால் ஆத்திரம் அடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சின்னாவின் வீட்டிற்கு போன் செய்து மிரட்டல் விடுத்தனர். மேலும் அவரது வீட்டிற்கு சென்று நேரில் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    தெலுங்கு தேசம் கட்சியினரிடம் இந்த தகவல் பரவியதால் 4 மண்டலங்களை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியினர் கன்னவரம் அலுவலகத்தில் குவிய தொடங்கினர். இந்த தகவல் வம்சி எம்.எல்.ஏ.வுக்கு தெரிவிக்கப்பட்டது. மாலை 4.30 மணியளவில் தெலுங்கு தேசம் கட்சியினர் போலீசில் புகார் அளிக்க ஊர்வலமாக அலுவலகத்தில் இருந்து கிளம்பினர்.

    அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அந்த வழியாக வந்த வம்சி எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது தடிகளாலும் கற்களாலும் தாக்குதல் நடத்தினர். மேலும் கட்சி அலுவலகத்தில் புகுந்து மேசை, நாற்காலி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர்.

    அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த கார்கள், பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டு இளைஞர் அணி செயலாளர் ஒருவரின் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

    சுமார் ஒரு மணி நேரம் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்தாமல் போலீசார் தங்களது செல்போனில் நடந்த சம்பவங்களை போட்டோ வீடியோவாக பதிவு செய்தனர். கலவரம் முடியும் தருவாயில் போலீசார் ஒரு சிலரை பிடிக்க முயன்றனர். அவர்கள் போலீசாரை தாக்கியதில் சில போலீசாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    காயம் அடைந்த போலீசார் மற்றும் தெலுங்கு தேசம் தொண்டர்ளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நடந்த இடத்தில் பொருட்கள் சிதறியும், கார் பைக் அடித்து நொறுக்கப்பட்டு போர்க்களம் போல் காட்சி அளித்தது.

    இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியினர் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த தாக்குதலுக்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் முன்கூட்டியே சதி செய்து கலவரத்தில் ஈடுபட்டதாக தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • ராமானுஜர் காலத்தில், திருமலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது.
    • பக்தர்கள் மற்றும் அனந்தாழ்வார் பரம்பரையினருக்கு அருளாசி வழங்கினர்.

    ஸ்ரீரங்கத்தில் இருந்து திருமலைக்கு வந்து, முதன் முதலில் குளம் வெட்டி, மலர் செடிகளை பயிரிட்டு, ஏழுமலையானுக்கு மலர் மாலைகளை சூட்டி கைங்கர்ய சேவை செய்த அனந்தாழ்வாரின் 969-வது அவதார தின உற்சவம், திருப்பதியில் நேற்று கோலாகலமாக நடந்தது.

    ராமானுஜர் காலத்தில், திருமலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இதனால், கோவிலுக்கு மிகக்குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். மேலும், கோவிலில் கைங்கர்யம் செய்பவர்களும், காலையில் திருமலைக்கு சென்றுவிட்டு மாலையில் திருப்பதிக்கு திரும்பி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதோடு, வாகன போக்குவரத்து வசதி இல்லாத அந்த கால கட்டத்தில், நடந்து சென்றே ஏழுமலையானை வழிபட்டனர்.

    அதேபோல், கைங்கர்யத்துக்கு தேவையான பொருட்கள் தலைச் சுமையாகவும், மாட்டு வண்டி மூலமாகவும் மட்டுமே திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், ராமானுஜர் வேண்டுகோளை ஏற்று, ஸ்ரீரங்கத்தில் இருந்து அனந்தாழ்வார் எனும் வைணவர், தனது மனைவியுடன் ஏழுமலையானுக்கு சேவை செய்ய திருமலைக்கு வந்தார்.

    தொடர்ந்து, திருமலையில் தங்கிய அவர், இப்போது ஏழுமலையான் கோவிலுக்கு பின்பக்கம் அனந்தாழ்வான் தோட்டத்தில் உள்ள குளத்தை வெட்டி, அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி, மலர் தோட்டங்களை ஏற்பாடு செய்து, ஏழுமலையானுக்கு சேவை செய்து வந்தார்.

    இதற்கிடையே, மலர் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, தனது 5 மாத கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து அனந்தாழ்வார் குளம் வெட்டிக் கொண்டிருந்தார். அவருடைய பக்தி சிரத்தையை உலகுக்கு எடுத்துக்காட்ட விரும்பிய ஏழுமலையான், சிறுவனாக அவதாரம் பூண்டு அனந்தாழ்வான் மனைவிக்கு குளம் வெட்டும் பணியில் உதவி செய்து வந்தார்.

    அதேநேரம், இறை சேவையில் வேறு நபர் குறுக்கிடுவதை விரும்பாத அனந்தாழ்வார், கையில் கடப்பாரையுடன் சிறுவனை விரட்டிச் சென்றார்.

    ஆனால், அந்த சிறுவன் வேகமாக ஓடினான். இதனால், அவன் மீது அந்த கடப்பாரையை அனந்தாழ்வார் வீசி எறிந்தார். அது, சிறுவனின் தாடையில் பட்டு ரத்தம் வழிந்தது.

    ஆனால் அந்த சிறுவன் அதையும் பொருட்படுத் தாமல் கோவிலுக்குள் ஓடி மறைந்து விட்டான்.

    பின்னர், அனந்தாழ்வார் மலர்களை மாலையாக தொடுத்து எடுத்துக் கொண்டு, ஏழுமலையானுக்கு சமர்ப்பிப்பதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது, ஏழுமலையான் தாடையில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்ட அவர் பதறினார்.

    மேலும், தன்னை சோதிப்பதற்காக ஏழுமலையானே சிறுவனாக உருவெடுத்து வந்ததை உணர்ந்தார். பின்னர், ஏழுமலையான் தாடையில் நாமக்கட்டியைபொடி செய்து பூசினார். அதன்பிறகு, ரத்தம் வழிவது நின்றுவிட்டது.

    இதன் அடையாளமாகவே, இப்போதும் ஏழுமலையானின் தாடையில் நாமக்கட்டி பூசப்படுகிறது. மேலும், அனந்தாழ்வார் வீசிய கடப்பாரை இப்போதும் ஏழுமலையான் கோவில் முன்பக்க வாசலில் தொங்கவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அனந்தாழ்வாரின் கைங்கர்ய 4 சேவைகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய அவதாரத் திருநாளன்று, அனந்தாழ்வார் அமைத்த-தோட்டத்தில் கோவில் ஜீயர்கள் அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதன் அடிப்படையில், அவருடைய 969-வது அவதாரத் திருநாளான நேற்று, ஏழுமலையான் கோவில் ஜீயர்கள்-இணைந்து, பக்தர்கள் மற்றும் அனந்தாழ்வார் பரம்பரையினருக்கு அருளாசி வழங்கினர்.

    • சாமி வேடமிட்ட பக்தர்கள் நடனம் ஆடினர்.
    • நாதர் புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை தேேராட்டம் நடந்தது.

    இதனையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களான சிவன்-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க பெரிய தேரில் கங்காபவானி சமேத சோமசுந்தரமூர்த்தியும் சிறிய தேரில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளினர்.

    தேரோட்டத்தை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.பியப்பு.மதுசூதன்ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கோவிலின் நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில்காலை 11.30 மணியில் இருந்து மாலை 3.30 மணிவரை தேர்கள் பவனி வந்தன. தேரோட்டத்தின்போது பக்தர்கள் ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா, ஜெய் ஜெய் காளி ஜெய் பத்ர காளி எனப் பக்தி கோஷம் எழுப்பினர்.

    தேர்களுக்கு முன்னால் கேரள செண்டைமேளம், மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. சாமி வேடமிட்ட பக்தர்கள் நடனம் ஆடினர். பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டமும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    தேரோட்டத்தின்போது கோவிலின் நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் உப்பு, மிளகினை தேர்கள் மீது வீசி தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    நிறைவாக இரவு நிகழ்ச்சியாக 8 மணியளவில் நாதர் புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது. தெப்பத்தேரில் எழுந்தருளிய உற்சவர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டது.
    • பிரம்மோற்சவத்துக்காக 10 டன் மலர்கள் அலங்காரத்துக்காக பயன்படுத்தப்பட்டன

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் காலை, இரவில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் வெவ்வேறு வாகனங்களில் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் 9-வது நாளான நேற்று காலை 6.30 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை கல்யாண வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இதையடுத்து புஷ்கரணி எதிரில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாணவெங்கடேஸ்வரர், சுதர்சன சக்கரத்தாழ்வார் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு காலை 8.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை கங்கணப்பட்டர் பாலாஜி ரங்காச்சாரியார் உற்சவர்களுக்கு விஷ்வக்சேனர் ஆராதனை, புண்யாஹவச்சனம், முக சுத்தம், தூப தீப நெய்வேத்தியம், ராஜோபசாரம் செய்தார். மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்வித்தாா்.

    அப்போது புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், விஷ்ணுசூக்தம், வேத மந்திரங்கள், பஞ்சசூக்த மந்திரங்கள் வேத பாராயணர்களால் ஓதப்பட்டது. சாமிக்கும், தாயார்களுக்கும் பல வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.

    திருமஞ்சனம் முடிந்ததும் காலை 9.40 மணியளவில் கோவில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. சுதர்சன சக்கரத்தாழ்வாரை அர்ச்சகர்கள் 3 முறை நீரில் மூழ்கியெடுத்து ஸ்நானம் செய்வித்தனர்.

    அப்போது கோவில் அதிகாரிகள், பக்தர்கள் புஷ்கரணியில் மூழ்கி புனித நீராடினர். அதைத்தொடர்ந்து புஷ்கரணியில் இருந்து உற்சவர்கள் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டனர். இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பிரம்ேமாற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. இதோடு வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

    பானு சுவாமி, வம்சி சுவாமி ஆகியோர் போட்டுவில் சுவையான பிரசாதங்களை தயாரித்து ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கினர். கருட சேவை மற்றும் தேரோட்டத்தின்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர். பக்தர்களும் தினமும் 100 ஸ்ரீவாரி சேவா சங்கத்தினர் சேவை செய்தனர். சுமார் 1500 பக்தர்கள் மருத்துவ வசதிகளை பெற்றனர்.

    பிரம்மோற்சவத்துக்காக 10 டன் மலர்கள் அலங்காரத்துக்காக பயன்படுத்தப்பட்டன. மலர் அலங்காரத்துக்காக 50 தோட்ட ஊழியர்கள் இரவும் பகலும் பாடுபட்டனர். அவர்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து வந்த பூக்களை அலங்காரத்துக்கு பயன்படுத்தினர்.

    கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் 75 துப்புரவுப் பணியாளர்களும், முக்கியமான நாட்களில் கூடுதலாக 25 பணியாளர்களும் கோவில் வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்தனர்.

    • பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து அலறி அடித்துக் கொண்டு சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
    • ஆந்திரா, தெலுங்கானாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் பீதி அடைந்து உள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கிருஷ்ணா நதி ஆற்றங்கரையோரம் உள்ள சிந்தல பாலம், மேலச்செருவு உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று காலை 7.25 மணிக்கு 10 வினாடிகள் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அப்போது பூமி அதிக சத்தத்துடன் குலுங்கியதால் சத்தம் எங்கிருந்து வருகிறது என தெரியாமல் பீதி அடைந்தனர். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கீழே விழுந்தன.

    இதையடுத்து பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து அலறி அடித்துக் கொண்டு சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

    இதேபோல் ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் பல்நாடு மாவட்டங்களில் நிலநடுக்கம் நந்திகிராம், கஞ்சிக செர்லா, சந்தர்ல பாடு, வீரபாடு மண்டலங்களிலும், பல்நாடு மாவட்டத்தில் அச்சம்பேட்டை, மாபாடு, சல்லக்கா கிஞ்ச பள்ளி, பளி சந்தலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் காலை 7.25 மணிக்கு சுமார் 12 வினாடிகள் நிலநடுக்கம் நீடித்தது. ரிக்டர் அளவுகோலில் 3. 2 ஆக பதிவாகி இருந்தது.

    சமீபகாலமாக ஆந்திரா, தெலுங்கானாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் பீதி அடைந்து உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிரியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

    அதுபோன்ற நிலைமை ஆந்திரா, தெலுங்கானாவில் நடந்து விடுமோ என்ற அச்சம் பொது மக்களிடையே பரவியுள்ளது.

    எனவே புவியியல் துறையை சேர்ந்த வல்லுனர்கள் அடிக்கடி ஏன் நிலநடுக்கம் ஏற்படுகிறது இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சத்தை போக்கும் வழியில் ஆராய்ச்சி செய்து தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மகா சிவராத்திரியை முன்னிட்டு அவர்கள் 5 பேரும் சைனாகஞ்சம் மண்டலத்தின் சோபிராலில் உள்ள சிவன் கோவிலில் வழிபாடுக்கு சென்றனர்.
    • விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள மேடராமெட்லா என்ற பகுதியில் நேற்று இரவு லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 9 வயது சிறுமி உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு அவர்கள் 5 பேரும் சைனாகஞ்சம் மண்டலத்தின் சோபிராலில் உள்ள சிவன் கோவிலில் வழிபாடுக்கு சென்றனர்.

    பின்னர் இரவு 11.30 மணியளவில் குண்டூரில் உள்ள தங்கள் வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணத்திற்காக யாரேனும் பெண்களின் போட்டோக்களுடன் அரட்டை அடித்தால், அவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
    • புகார்களைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கும்பல் ராஜஸ்தானில் இருந்தபடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    திருமலை:

    ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் வாட்ஸ் அப் பிரபலமாக இருக்கிறது. இதன் மூலம் கும்பல் சில மோசடி செயல்களில் ஈடுபட்டு பணத்தை பறிக்கின்றனர்.

    லிங்க் அனுப்புவது, வங்கி தகவல்களை கேட்பது என பல மோசடிகளை செய்து வருகின்றனர், தெரியாதவர்களுக்கு வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்வது அந்த அழைப்பை ஆண் எடுத்தால், அந்த வீடியோ அழைப்பில் மோசடி கும்பலின் அருகில் நிர்வாணமாக பெண் தோன்றுவது, அதுவே ஒரு பெண் அழைப்பை எடுத்தால் அதில் ஆண் நிர்வாணமாக தோன்றுவது என்பது போன்ற மோசடிகள் நடைபெற்று வருகிறது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவருக்கு பெண் ஒருவரிடமிருந்து செல்போன் மூலம் அழைப்பு வந்துள்ளது.

    அதில் பேச தொடங்கிய அந்த பெண் அவருக்கு காதல் வலை விரித்தார். இதில் அவர் அந்தப் பெண் கேட்ட கேள்வி அனைத்திற்கும் பதில் அளித்தார்.

    சில நிமிடங்களில் வாட்ஸ் அப் வீடியோ கால் வந்துள்ளது. அவரிடம் பேசிய இளம்பெண் ஆடை இல்லாமல் தனது உடல் அந்தரங்க பகுதிகளை காண்பித்துள்ளார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரையும் அதே போன்று காண்பிக்கும்படி இளம்பெண் கூறியுள்ளார்.

    பெண் மீது இருந்த மோகத்தால் அவரும் ஆடையின்றி நிர்வாணமாக நின்றார். இதனை அந்த இளம்பெண் வீடியோ பதிவு செய்துள்ளார்.

    சில நிமிடங்களில் மோசடி கும்பல் வாய்ஸ் மெசேஜுடன் போன் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆடை இல்லாமல் வீடியோ கால் செய்ததாக கூறி போலீசில் பாதிக்கப்பட்ட பெண்னை வைத்து புகார் அளிப்போம் என்றும், உங்கள் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவோம் என்றும் மிரட்டினர்.

    இதனால் பயந்து போன அந்த ஊழியர் மோசடி கும்பல் கேட்டபடி பல்வேறு வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.75 லட்சம் வரை கொடுத்துள்ளார். மேலும் பணம் கேட்டு தொல்லை செய்வார்கள் என்ற அச்சத்தில் தான் ஏமாந்தது குறித்து போலீசில் புகார் அளித்தார். இதேபோன்று ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இந்த மோசடி கும்பலில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.

    காமாரெட்டியை சேர்ந்த வாலிபர் ரூ.60 ஆயிரம் அனுப்பியதாகவும் மேலும் ஒருவர் ரூ.1 லட்சம் அனுப்பியதும் தெரிய வந்தது.

    பலர் தங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் புகார் அளிக்க முன்வராமல் இருந்த நிலையில் தற்போது விஷயம் வெளியே வந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக புகார் அளித்து வருகின்றனர். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் முதலில் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இளைஞர்கள் அல்லது யாரேனும் இதுபோன்ற செயல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணத்திற்காக யாரேனும் பெண்களின் போட்டோக்களுடன் அரட்டை அடித்தால், அவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

    புகார்களைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கும்பல் ராஜஸ்தானில் இருந்தபடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×