search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராடினர்
    X

    சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

    கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராடினர்

    • கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டது.
    • பிரம்மோற்சவத்துக்காக 10 டன் மலர்கள் அலங்காரத்துக்காக பயன்படுத்தப்பட்டன

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் காலை, இரவில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் வெவ்வேறு வாகனங்களில் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் 9-வது நாளான நேற்று காலை 6.30 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை கல்யாண வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இதையடுத்து புஷ்கரணி எதிரில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாணவெங்கடேஸ்வரர், சுதர்சன சக்கரத்தாழ்வார் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு காலை 8.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை கங்கணப்பட்டர் பாலாஜி ரங்காச்சாரியார் உற்சவர்களுக்கு விஷ்வக்சேனர் ஆராதனை, புண்யாஹவச்சனம், முக சுத்தம், தூப தீப நெய்வேத்தியம், ராஜோபசாரம் செய்தார். மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்வித்தாா்.

    அப்போது புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், விஷ்ணுசூக்தம், வேத மந்திரங்கள், பஞ்சசூக்த மந்திரங்கள் வேத பாராயணர்களால் ஓதப்பட்டது. சாமிக்கும், தாயார்களுக்கும் பல வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.

    திருமஞ்சனம் முடிந்ததும் காலை 9.40 மணியளவில் கோவில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. சுதர்சன சக்கரத்தாழ்வாரை அர்ச்சகர்கள் 3 முறை நீரில் மூழ்கியெடுத்து ஸ்நானம் செய்வித்தனர்.

    அப்போது கோவில் அதிகாரிகள், பக்தர்கள் புஷ்கரணியில் மூழ்கி புனித நீராடினர். அதைத்தொடர்ந்து புஷ்கரணியில் இருந்து உற்சவர்கள் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டனர். இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பிரம்ேமாற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. இதோடு வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

    பானு சுவாமி, வம்சி சுவாமி ஆகியோர் போட்டுவில் சுவையான பிரசாதங்களை தயாரித்து ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கினர். கருட சேவை மற்றும் தேரோட்டத்தின்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர். பக்தர்களும் தினமும் 100 ஸ்ரீவாரி சேவா சங்கத்தினர் சேவை செய்தனர். சுமார் 1500 பக்தர்கள் மருத்துவ வசதிகளை பெற்றனர்.

    பிரம்மோற்சவத்துக்காக 10 டன் மலர்கள் அலங்காரத்துக்காக பயன்படுத்தப்பட்டன. மலர் அலங்காரத்துக்காக 50 தோட்ட ஊழியர்கள் இரவும் பகலும் பாடுபட்டனர். அவர்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து வந்த பூக்களை அலங்காரத்துக்கு பயன்படுத்தினர்.

    கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் 75 துப்புரவுப் பணியாளர்களும், முக்கியமான நாட்களில் கூடுதலாக 25 பணியாளர்களும் கோவில் வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்தனர்.

    Next Story
    ×