என் மலர்
ஆந்திர பிரதேசம்
- வாசனை பொருட்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது.
- புதன்கிழமை மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் வருகிற 4-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து காலை 9 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. அதில் கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது.
அதன் பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலி கட்டை ஆகிய வாசனை பொருட்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது.
இதையடுத்து காலை 9 மணியில் இருந்து பக்தர்கள் பத்மாவதி தாயாரை தரிசிக்க கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் நடக்கிறது.
- சாமி-தாயார் திருக்கல்யாணம் ஆகிய வைபவங்கள் கோலாகலமாக நடந்தன.
- புது வஸ்திரம் அணிதல், ஊஞ்சல் சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் பத்மாவதி பரிணயோற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று மாலை 5 மணியளவில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மலையப்பசாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தனர்.
மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க நாராயணகிரி தோட்டத்தை அடைந்த உற்சவர்களுக்கு முதல் நாள் போலவே மாலைகள் மாற்றுதல், பூப்பந்தல் ஆடுதல், புது வஸ்திரம் அணிதல், ஊஞ்சல் சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
நிகழ்ச்சியில் சதுர்வேத பாராயணம், சவுராஷ்ட்ர ராகம், தேசிகா, மலஹரி, யமுனா கல்யாணி, ஆனந்த பைரவி நீலாம்பரி ராகங்கள், சாமி-தாயார் திருக்கல்யாணம் ஆகிய வைபவங்கள் கோலாகலமாக நடந்தன.
மேலும் அன்னமாச்சாரியாரின் பக்தி கீர்த்தனைகள் பாடப்பட்டது. புகழ்பெற்ற ஹரிகத பாகவதர் வெங்கடேஸ்வரலு பத்மாவதி-சீனிவாசர் பரிணயம் குறித்த ஹரிகதா பாராயணம் செய்தார். 2-வது நாள் நிகழ்ச்சியையொட்டி நேற்று கோவிலில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டன.
- தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
- வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் நிரம்பியது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வந்தனர்.
தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் நிரம்பியது. அதற்கு பிறகு சுமார் 1 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தனர்.
தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்க ளுக்கு குடிநீர், மோர், பால், உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
சிறிய குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பதி ரெயில் நிலையம் அருகே உள்ள வைகுண்டம் காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள சீனிவாசம், அலிபிரி ஆகிய இடங்களில் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
இலவச தரிசன டோக்கன் இல்லாத பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரத்துக்கும் மேலாகிறது.
ஏழுமலையான் கோவிலில் நேற்று 82 ஆயிரத்து 582 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 43,526 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி மலையில் இதமான தட்ப வெப்ப நிலை நிலவியது. மலையில் ஜல்லென காற்று வீசியது.
இதனால் பக்தர்கள் அதிகளவில் தங்கியுள்ளனர். அங்குள்ள தங்கும் அறைகள் நிரம்பியது.
- 4-ந்தேதி நரசிம்ம ஜெயந்தி நடக்கிறது.
- 5-ந்தேதி பவுர்ணமி கருட சேவை நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (மே) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
மே 1-ந்தேதி சர்வ ஏகாதசி, பத்மாவதி பரிணயோற்சவம் நிறைவு, 4-ந்தேதி நரசிம்ம ஜெயந்தி. தரிகொண்டா வெங்கமாம்பா ஜெயந்தி, அனந்தாழ்வார் சாத்துமுறை, 5-ந்தேதி பவுர்ணமி கருட சேவை, 6-ந்தேதி அன்னமாச்சாரியார் ஜெயந்தி, 7-ந்தேதி பராசரபட்டர் வருட திருநட்சத்திரம், 14-அனுமன் ஜெயந்தி, 24-ந்தேதி நம்மாழ்வார் ஜெயந்தி உற்சவம் தொடக்கம், 28-ந்தேதி போக சீனிவாசமூர்த்திக்கு சிறப்பு சஹஸ்ர கலசாபிஷேகம், 30-ந்தேதி வரதராஜசாமி ஜெயந்தி.
மேற்கண்ட விழாக்கள் நடக்கின்றன.
- 3 இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
- இன்று முதல் ஜூன்15-ந் தேதி வரை 24 மணி நேரமும் பணியில் இருக்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
வாரவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ஏற்கனவே ரூ.300 மற்றும் கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை உள்ளிட்ட பல்வேறுகட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர திருப்பதியில் சீனிவாச காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் என 3 இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த டோக்கன்களை பெறுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதனால் இலவச டோக்கன்களை பெறுவதற்கு சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவிலில் நேற்று 75,625 பேர் சாமி தரிசனம் செய்தனர். 37,027 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். உண்டியன் காணிக்கை ரூ.3.21 கோடி வசூலானது.
இலவச தரிசனத்தில் வைகுண்டம் கியு காம்ப்ளக்ஸ்சில் அறைகள் நிரம்பி வழிந்தன. இன்று காலை முதல் சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனது.
கோடை விடுமுறையொட்டி பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் இன்று முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 24 மணி நேரமும் பணியில் இருக்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- திருப்பதியில் சீனிவாச காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் என 3 இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
- ஏழுமலையான் கோவிலில் நேற்று 75,625 பேர் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ஏற்கனவே ரூ.300 மற்றும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட பல்வேறு கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர திருப்பதியில் சீனிவாச காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் என 3 இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த டோக்கன்களை பெறுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் இலவச டோக்கன்களை பெறுவதற்கு சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவிலில் நேற்று 75,625 பேர் சாமி தரிசனம் செய்தனர். 37,027 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை ரூ.3.21 கோடி வசூலானது.
இலவச தரிசனத்தில் வைகுண்டம் கியு காம்ப்ளக்சில் அறைகள் நிரம்பி வழிந்தன. இன்று காலை முதல் சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனது.
கோடை விடுமுறையொட்டி பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் இன்று முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 24 மணி நேரமும் பணியில் இருக்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- 8-ந்தேதி கருட சேவை நடக்கிறது.
- 11-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் வேத நாராயணசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மே மாதம் 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 8-ந்தேதி கருட சேவை, 11-ந்தேதி தேரோட்டம் மற்றும் கல்யாணோற்சவம் நடக்கிறது.
அதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். ஒரு டிக்கெட்டுக்கு 2 பக்தர்கள் வீதம் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். நிறைவாக 12-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது.
அதையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலய வளாக தூய்மைப் பணி மே 2-ந்தேதி நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உற்சவர் மலையப்பசாமி யானை வாகனத்தில் எழுந்தருளினார்.
- உபயநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி பல்லக்கில் எழுந்தருளினர்.
திருமலையில் உள்ள நாராயணகிரி பூந்தோட்டத்தில் கலைநயத்துடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அஷ்டலட்சுமி, தசாவதார மண்டபங்களில் நேற்று பத்மாவதி பரிணயோற்சவம் கோலாகலமாக தொடங்கியது.
அதையொட்டி உற்சவர் மலையப்பசாமி யானை வாகனத்தில் எழுந்தருளினார். உபயநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி பல்லக்கில் எழுந்தருளினர். மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஏழுமலையான் கோவிலில் இருந்து உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு நான்கு மாடவீதிகள் வழியாக மாலை 5.30 மணியளவில் ஊர்வலமாக வந்து பரிணயோற்சவ மண்டபத்தை அடைந்தனர்.
மண்டபத்தில் புதுமணத் தம்பதிகளான சாமி, தாயார்களை எதிர் எதிரே வைத்து மாலைகள், புது வஸ்திரங்களை அணிவித்து பரிணயோற்சவம் நடத்தப்பட்டது. அதன்பின் சாமிக்கு கொலு ஆஸ்தானம் மற்றும் ஊஞ்சல் சேவை நடந்தது.
பத்மாவதி பரிணயோற்சவ மண்டபம் ஆப்பிள், அன்னாசி, சோளக்கதிர்கள், ஆஸ்திரேலிய ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் மற்றும் மாம்பழங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சாமந்தி, வெட்டி வேர், வாடாமல்லி, நான்கு வண்ண ரோஜாக்கள் உள்பட பல்வேறு மலர்கள் மண்டபத்தை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டன. ஆக மொத்தம் 3 டன் பழங்கள், 1.5 டன் பாரம்பரிய மலர்கள், 30 ஆயிரம் கட் பிளவர்ஸ் பயன்படுத்தப்பட்டன.
கிறிஸ்டல் பந்துகளும் சர விளக்குகளும் இடை இடையே தொங்க விடப்பட்டு இருந்தன. சிறிய அளவிலான கிருஷ்ணா சிலைகள், வெண்ணெய் பானைகள், தாமரைகள் மற்றும் மயில்கள் ஆகிய கலை உருவங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
சென்னையைச் சேர்ந்த 30 நிபுணர்கள் 15 நாட்களும், திருப்பதி தேவஸ்தான பூங்கா இலாகா ஊழியர்கள் 100 பேர் 2 நாட்களும் பூங்கா இலாகா துணை இயக்குனர் சீனிவாசுலுவின் வழிகாட்டுதல் படி வசீகரமான முறையில் மண்டபத்தை அலங்கரித்தனர். உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புனே ஸ்ரீவெங்கடேஸ்வரா அறக்கட்டளை சார்பாக பரிணயோற்சவ மண்டபத்தின் அலங்காரத்துக்காக ரூ.24 லட்சம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.
- ஹீரோவாக உள்ள நிலையில் அவர் உண்மை தெரிந்து பேசினாரா என்பது தெரியவில்லை.
- என்.டி.ஆரின் மரணத்துக்கு காரணமே சந்திரபாபு நாயுடுதான் என்பது அனைவருக்கும் தெரியும்.
திருப்பதி:
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் நுாறாவது பிறந்த நாள் நிகழ்ச்சி, விஜயவாடாவில் நேற்று முன்தினம் நடந்தது. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு என்.டி.ஆர் மகன் நடிகர் பாலகிருஷ்ணா கலந்துகொண்டனர்.
இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது "சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்கு பார்வைகொண்ட அரசியல் தலைவர். அவரது தொலைநோக்கு பார்வையால், ஐதராபாத் இப்போது ஹைடெக் நகராக மாறியுள்ளது. ஐதராபாத், நியூயார்க் போன்று வளர்ந்துள்ளது" என்றார்.
இந்த பேச்சுக்கு ஆந்திராவில் உள்ள மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா கூறியதாவது:-
ரஜினிகாந்த்தின் பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது.
ரஜினிகாந்த் உண்மை அறிந்து பேசினாரா என்று தெரியவில்லை. ரஜினிகாந்த் அனைவரும் விரும்பக்கூடியவர். ஹீரோவாக உள்ள நிலையில் அவர் உண்மை தெரிந்து பேசினாரா என்பது தெரியவில்லை.
தெலுங்கு தேசம் கட்சியின் பஜனைக் கூட்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் சந்திரபாபு எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டை படித்தாரா.
ரஜினிகாந்த் தன் உரையில் "விண்ணுலகில் இருந்து சந்திரபாபு நாயுடு மீது என்.டி.ஆர் ஆசிகளை பொழிகிறார்' என்று குறிப்பிட்டார். என்.டி.ஆரின் மரணத்துக்கு காரணமே சந்திரபாபு நாயுடுதான் என்பது அனைவருக்கும் தெரியும்.
பிரதமராக கூடிய தகுதி கொண்ட என்.டி.ராமராவை சூழ்ச்சி செய்து அவரது பலத்தால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை அவருக்கு எதிராக திசை திருப்பி சட்டப்பேரவையில் இருந்து அழுது கொண்டு என்.டி.ராமராவ் வெளியே வர காரணமாக இருந்தவர் சந்திரபாபு நாயுடு.
அப்போது என்.டி. ராமராவ் பேசுகையில், சந்திரபாபு ஒரு திருடன். ஈரத் துணியை கழுத்தில் போட்டு இறுக்கக்கூடியவன் என பேசினார்.
சந்திரபாபு நாயுடு துரோகம் குறித்து என்.டி. ராமராவ் பேசியது ரஜினிகாந்துக்கு தெரியாதா. அவருக்கு தெரியவில்லை என்றால் என்.டி. ராமராவ் பேசிய சிடி என்னிடம் உள்ளது. அதை அனுப்பி வைக்கிறேன். பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.
ஐதராபாத் நியூயார்க் நகரை போன்று மாறி இருப்பதற்கு சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு விஷன் காரணம் என கூறியுள்ளார்.
2003-வது ஆண்டுடன் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது. அதன்பின்னர், இப்போது 20 ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது ஐதராபாத் நகரம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஐதராபாத் பகுதியை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடு, அந்த நகரின் வளர்ச்சிக்கு எப்படி காரணமாக இருக்கமுடியும் என்பதை ரஜினிகாந்த் நினைத்து பார்க்க வேண்டும்.
விஷன் 2047 என சந்திரபாபு அறிவித்து உள்ளார். அதுவரை அவருடைய நிலைமை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோடாலி ஸ்ரீவெங்கடேஸ்வரராவ் எம்.எல்.ஏ. ரஜினி காந்தின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஹீரோவாகவும், இங்கு ஜீரோவாகவும் இருக்கும் ரஜினிகாந்தின் வார்த்தைகளை ஆந்திர மாநில மக்கள் பொருட்படுத்தமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
- இன்று முதல் 3 நாட்களுக்கு பத்மாவதி பரிணயோற்சவம் நடக்கிறது.
- இந்த விழா 1992-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவ முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்தன.
திருமலையில் உள்ள நாராயணகிரி கார்டனில் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு பத்மாவதி பரிணயோற்சவம் நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் முடித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறையின் மேற்பார்வையில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த 30 பேர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 50 அலங்கார நிபுணர்கள் பரிணயோற்சவ மண்டபத்தை அலங்கரித்ததாக, தோட்டக்கலைத்துறை மேற்பார்வையாளர் சீனிவாசுலு தெரிவித்தார்.
புனேவைச் சேர்ந்த காணிக்கையாளர் ரூ.24 லட்சத்துடன் அரங்கை பிரமாண்டமாக அமைக்க முன்வந்தார். 3 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் முதல் நாள் கஜ வாகனத்திலும், 2-வது நாள் குதிரை வாகனத்திலும், கடைசி நாள் கருட வாகனத்திலும் உற்சவர் மலையப்பசாமி வீதிஉலா வருகிறார். அவருடன் பரிணயோற்சவ மண்டபத்துக்கு உபய நாச்சியார்கள் தனித்தனி பல்லக்குகளில் வலம் வருகின்றனர். அதன் பிறகு கல்யாண மஹோற்சவம் நடக்கிறது.
புராணங்களின்படி சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கலியுகத்தின் ஆரம்ப நாட்களில் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் இருந்து வெங்கடேஸ்வரராக பூமிக்கு வந்தார். அப்போது நாராயணவனத்தை ஆண்ட ஆகாசராஜன் தனது மகள் பத்மாவதியை வெங்கடேஸ்வரருக்கு திருமணம் செய்து கொடுத்தார். ஆகாசராஜன் வைஷாக சுத்த தசமி அன்று பால்குனி நட்சத்திரத்தில் நாராயணவனத்தில் தனது கன்யாதானம் நிகழ்த்தியதாக வெங்கடாசல மஹாத்யம் கிரந்தம் கூறுகிறது.
பத்மாவதி சீனிவாசரின் மங்களகரமான நிகழ்வை குறிக்கும் வகையில் ஒவ்வொரு வைஷாக சுத்த தசமிக்கு ஒரு நாள் முன்பும் ஒரு நாள் பின்பும் மொத்தம் 3 நாட்களுக்கு பத்மாவதி பரிணயோற்சவம் நடக்கிறது.
இந்த விழா 1992-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அன்றைய நாராயணவனத்தின் அடையாளமாக, திருமலை நாராயணகிரி பூங்காவில் பத்மாவதியின் பரிணயோற்சவம் நடப்பது குறிப்பிடத்தக்கது.
- மகேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
திருப்பதி:
தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 24). இவரும், இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர்.
இருவரும், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதனை மகேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
இந்நிலையில், மகேஷுக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இளம்பெண் தொடர்பை துண்டித்துக் கொண்டார். ஆனால், அதனை ஒத்துக்கொள்ளாத மகேஷ், தன்னை காதலிக்க வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுத்தார்.
இதற்கிடையே, இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொரு வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர்.
இதனால் மகேஷ் கடும் கோபம் அடைந்தார். காதலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை, அவரது கணவருக்கு அனுப்பி வைத்தார்.
மனைவி காதலனுடன் இருந்த வீடியோவை பார்த்த வாலிபர் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வளவு கொடூர சம்பவங்கள் நடந்த பின்னரும் மகேஷ் இளம்பெண்ணை விடவில்லை. தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என மீண்டும் தொல்லை கொடுத்து வந்தார்.
இது குறித்து இளம்பெண் அவரது பெற்றோரிடம் கூறினர். அவரது குடும்பத்தினர் மகேஷுக்கு போன் செய்து குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்தனர்.
அவர் வந்தவுடன் இளம் பெண்ணின் பெற்றோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தகராறு ஏற்பட்டது. இதனால் இளம்பெண்ணின் பெற்றோர் நடுரோட்டிலேயே மகேசை வெட்டி சாய்த்தனர்.இதில் மகேஷ் துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மகேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
- திருப்பாதம்மா வேகமாக ஓடிவந்து ரெயிலில் ஏற முயன்றார். அப்போது தவறி கீழே விழுந்தவர் பிளாட்பாரத்துக்கும் ரெயிலுக்கும் இடையே சிக்கினார்.
- படுகாயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீராலா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், கரேடு பகுதியை சேர்ந்தவர் திருப்பாதம்மா. இவர் தனது கணவருடன் உலவபாடு செல்வதற்காக தெனாலி ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
விஜயவாடாவில் இருந்து கூடூர் செல்லும் மெமோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். ரெயில் பாபட்லா அடுத்த சீராலா ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது.
அப்போது திருப்பாதம்மா கழிவறைக்கு செல்ல ரெயிலில் இருந்து கிழே இறங்கினார். அவர் மீண்டும் வருவதற்குள் ரெயில் புறப்பட்டது.
இதனைக் கண்ட திருப்பாதம்மா வேகமாக ஓடிவந்து ரெயிலில் ஏற முயன்றார். அப்போது தவறி கீழே விழுந்தவர் பிளாட்பாரத்துக்கும் ரெயிலுக்கும் இடையே சிக்கினார்.
இதனைக் கண்ட ரெயில் பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். மேலும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
ரெயில்வே போலீசார் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்கு பிறகு திருப்பாதம்மாவை மீட்டனர்.
படுகாயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீராலா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓங்கோல் ட்ரீம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பிளாட்பாரத்திற்கும், ரெயிலுக்கும் இடையே பெண் சிக்கியதால் ஒரு மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.






