என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    உலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
    புகையிலையில் நிகோட்டின் என்கிற போதை ரசாயனம் இருக்கிறது. சிகரெட் புகை உங்கள் உடம்பில் எந்த உறுப்பையும் விட்டு வைக்காமல் எல்லாத் திசுக்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொசுக்கிவிடும். அதிலும் குறிப்பாக இனப்பெருக்கத் திசுக்களை. உலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மூளை சிறுத்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும். புகைப்பழக்கம் பல்லோப்பியன் குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.

    புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் சீக்கிரமே துவங்கி விடும்.

    கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் செல்லும் சிகரெட்டிலுள்ள போதைப் பொருளான நிக்கொட்டின் குழந்தையின் நுரையீரலை நேரடியாகத் தாக்கி சிறு வயதிலேயே அக்குழந்தை ஆஸ்துமாவால் பீடிக்கப் பட காரணமாகின்றது.
    நாற்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் சில பெண்களுக்கு வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.
    ‘இருபத்தைந்து வயதில் திருமணமாகி - முப்பது வயதுக்குள் குழந்தை பெற்ற பெண்கள் - நாற்பது வயதுக்குள் இல்லற வாழ்க்கையில் பக்குவமிக்கவர்களாக மணதொத்த தம்பதிகளாக வாழ்வார்கள்’ என்ற கணிப்பு சில நேரங்களில் தவறாகிவிடுகிறது. ஏனென்றால் நாற்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் சில பெண்களுக்கு வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.

    ‘15 வருட மணவாழ்க்கையில், தான் விரும்பியது கிடைக்கவில்லை’ என்ற எண்ணமோ, ‘தனக்கு சரியான அங்கீகாரத்தை கணவர் தரவில்லை’ என்ற கவலையோ அவர் களுக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் மனைவிக்கு ஏற்பட்டால், கணவர் உடனே விழிப்படைந்து, மனைவியை புரிந்துகொண்டு தீர்வு காண முன்வரவேண்டும். தீர்வு காணாவிட்டால் அது சபலமாக மாறி குடும்பத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கி விடும் சூழ்நிலை ஏற்படலாம். அப்படி இரண்டு குடும்பங்களின் இல்லற வாழ்க்கையை தலை கீழாக புரட்டிப்போட்ட சம்பவங்களை பற்றி சொல்கிறேன்.

    40 வயதுகளில் பெண்களில் சிலருக்கு ஒருவித சலிப்பு ஏற்படுவது ஏன்? அந்த சலிப்பு, சபலமாக மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு கணவரின் அலட்சிய மனோபாவமே விடையாக அமைந்திருக்கிறது. திருமணத்திற்கு முன்னால் ஒவ்வொரு இளைஞரும், பெண்களைப்போல் தங்கள் தோற்றத்திலும், ஸ்டைலிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். திருமணத்திற்கு பின்பு அவர்களுக்கு தங்கள் அழகு சார்ந்த விஷயங்களில் அலட்சியம் வந்துவிடுகிறது.

    முறையற்ற உணவுப் பழக்கம், மதுப்பழக்கம் போன்றவைகளால் அவர்கள் உடல் அமைப்பும் மாறுகிறது. ஆனால் மனைவியோ எல்லா காலங்களிலும் தன் அழகுமீது அதிக கவனம் செலுத்துகிறாள். அதனால் 40 வயதுகளிலும் மனைவி அழகாகவே தோன்றுகிறாள். ஆனால் கணவரோ அந்த கால கட்டத்தில் தன் தோற்றத்தில் அலட்சியம் காட்டுவதால், அழகில் கணவன்-மனைவி இடையே தோற்ற பொலிவில் மாறுபாடு ஏற்பட்டுவிடுகிறது.

    திருமணமான புதிதில் கணவர், மனைவி மீது முழு கவனமும், அன்பும் செலுத்துவார். மனைவியும், கணவரிடம் அதுபோல் அன்பு செலுத்துவார். குழந்தை பிறந்த பின்பு அவளது கவனம் குழந்தையை நோக்கி அதிகம் திரும்பும். அந்த காலகட்டத்தில் ஆண்கள் வெளிவட்டார நட்புகளை மேம்படுத்திக்கொள்கிறார்கள். பெண்களும் அதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை.



    வீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டு, குழந்தையையும் வளர்ப்பதிலே அவர்கள் மூழ்கிவிடுவார்கள். அவர்களுக்கு 40 வயதாகும்போது மகனோ, மகளோ 15 வயதை அடைந்து, அவர்களும் தங்கள் நட்பு வட்டத்தை மேம்படுத்திக்கொள்வார்கள். கணவரும், குழந்தைகளும் அவரவர் நட்பு வட்டத்தோடு பொழுதை கழிக்கும் அந்த தருணத்தில் 40 வயது தாய்க்கு தனிமை ஏற்பட்டுவிடுகிறது. அந்த தனிமையை இனிமையாக்கும் விதத்தில் ஆண் நட்புகள் தலைதூக்குவதுண்டு.

    பெண்கள் கலை ரசனைமிக்கவர்கள். வாழ்க்கையில் எல்லாவிதத்திலும் அழகை ஆராதிப்பவர்கள். அதோடு மாற்றங்களையும், வித்தியாசங்களையும் எல்லாவிதத்திலும் எதிர்பார்ப்பார்கள். பெண்களின் அத்தகைய எதிர்பார்ப்புகளை ஆண்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம். மனைவியின் அத்தகைய எதிர்பார்ப்புகளை கவனிக்காததுபோல் நடிப்பது, அலட்சியப்படுத்துவது எல்லாமுமே அவர்களை எரிச்சலுக்குள்ளாக்கும். அப்போது தங்கள் எதிர்பார்ப்புகளை நிறை வேற்றுபவர்கள் மீது அவர்கள் கவனம் செல்லக்கூடும்.

    25 வயதில் திருமணமாகி, 15 வருட தாம்பத்ய வாழ்க்கை வாழ்ந்து 40 வயதை தொடும்போது ஆண்கள் பொதுவாகவே சலிப்படைந்துவிடுகிறார்கள். அந்த காலகட்டத்தில் பெண்கள் சலிப்படையாமல் புதிய எழுச்சியுடன் செயல்பட விரும்புகிறார்கள். மனைவி 40 வயதை எட்டும் போது கணவரும் புத்துணர்ச் சியடைய வேண்டும். மனைவி விரும்பும் மாற்றங்களை தங்களிடம் உருவாக்கிக்கொண்டு ஈடுகொடுத்து வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும்.

    மனைவியின் திறமைகளை அங்கீகரித்து அவர் களுக்கு வெளி உலக வாய்ப்பு களையும் நல்லமுறையில் உருவாக்கிக்கொடுக்கவேண்டும். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், பெண்கள் எல்லா வயதிலும், எல்லா பருவத்திலும் பெண்மையின் புனிதத்தை காக்க தயாராக இருக்க வேண்டும். அதுதான் நமது கலாசாரத்தின் ஜீவநாடி.

    -விஜயலட்சுமி பந்தையன்.
    ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்லலாம்… ‘Alcohol may increase your desire, but it takes away the performance’. இதில் பாதிதான் உண்மை. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.

    மது அருந்துவதால் மனத்தடை ஒருவிதத்தில் குறைகிறது என்பது உண்மையே. என்ன செய்கிறோம் என்பது கூட சில நேரங்களில் தெரியாது. அது, மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்களை கட்டுப்படுத்தி விடுகிறது. மது அருந்தி இருந்தால், உடலுறவு கொள்ளும்போது நேரத்தின் மீது கவனம் இருக்காது. அதிக நேரம் ஈடுபட்டது போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கும். ஆனால், அது உண்மை இல்லை. தொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும்.

    ஆணுக்கு செக்ஸ் ஹார்மோன் சுரக்கும்போது, கல்லீரல்தான் அதைப் பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பி வைக்கிறது. கல்லீரல் பாதிப்படைவதால், ஹார்மோன் சுரப்பு சரியாக இருந்தாலும், உடலால் அதன் வேலைகளை சரியாக செய்ய இயலாது. இதனால்தான் ஆணுக்கு விறைப்புத்தன்மை குறைகிறது… பெண்ணுக்கு செக்ஸில் ஈடுபாடு வராமல் போகிறது. சிலர், ‘மன அழுத்தத்தைக் குறைக்க, பப்பில் ஆடுகிறோம்’ என்பார்கள்.



    மது அருந்திவிட்டு ஆடினால் மன அழுத்தம் குறையாது. இரைச்சலான இசைக்கு ஆடுவதால், மன அழுத்தத்தை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து உடல்நலனைக் கெடுக்கும். அளவுக்கு மிஞ்சிய போதை, நண்பர்களோடு கண்மண் தெரியாமல் டான்ஸ் ஆடுவதையும் சண்டை போடுவதையும் சகஜமாக்கிவிடும். இதை நாகரிகம் என்று சொல்ல முடியாது. மது அருந்துவதால் வாயில் ஒரு வகை துர்நாற்றம் ஏற்படும்.

    கணவனோ, மனைவியோ ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும்போது துர்நாற்றம் அடிக்கும்… பார்ட்னர் மீது அருவெறுப்பு ஏற்படும். செக்ஸ் தூண்டுதல் ஏற்படும் என்பதற்காக குடிக்கும் மது, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்பதே உண்மை. மது தாம்பத்திய வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. நம்மை அதற்கு அடிமையாக்கி, பொருளாதாரத்தையும் உடல் நலத்தையும் சேர்த்தே அழித்துவிடும். ஆமாம்… மது செயல்திறனை மட்டுமல்ல… செக்ஸ் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்!
    இரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு 30 சதவீதமும், பிரசவத்தின் போது 50 சதவீதமும், தாய்ப்பால் கொடுக்கும்போது 15 சதவீதமும் குழந்தையை பாதிக்கும்.
    சாத்தூரைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ள நபரின் ரத்தத்தைச் செலுத்தியதால் அந்த அப்பாவி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான சம்பவம் தமிழகம் முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    எச்.ஐ.வி. என்ற வைரஸ் தொற்றுநோய் அமெரிக்காவில் 1981-ம் ஆண்டிலும், இந்தியாவில் அதுவும் சென்னையில் 1986-ம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனை செய்யப்படாத ரத்தம், சுத்தம் செய்யப்படாத ஊசி, பாதுகாப்பற்ற உடலுறவு, கவனிக்கப்படாத கருவுற்ற தாயிடம் இருந்து பிறக்கும் குழந்தை ஆகிய நான்கு வழிகளில் எச்.ஐ.வி. தொற்று பரவும்.

    பொதுவாக ரத்தம் கொடுக்க தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களிடமிருந்து மட்டும்தான் ரத்தம் எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் எடுக்கப்படும் அனைத்து ரத்ததான பைகளை மற்றவர்களுக்கு ஏற்றுவதற்கு முன்பு கட்டாயமான பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

    பரிசோதிக்கப்பட்ட ரத்தத்தில் பாதிப்பு இல்லை என்று அச்சிடப்பட்ட சான்றிதழ் ரத்தம் சேகரிக்கப்பட்ட பையில் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பயன்படுத்துவதால் விளையக்கூடிய தொற்றை உடனடியாக தடுக்க முடியும்.

    சாத்தூர் பெண்ணுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வு ரத்த வங்கி ஊழியர்களின் கவனக்குறைவே காரணமாக இருக்க வேண்டும். ரத்ததானம் அளித்த அந்த இளம் நபர் சமீபத்தில் எச்.ஐ.வி. கிருமி தொற்றுக்கு ஆட்பட்டு, ரத்தக்கூறு மாற்று கண்டுபிடிக்கக்கூடிய கால அவகாசத்திற்கு முன்னரே தனது உறவினருக்காக ரத்ததானம் அளித்திருக்கக்கூடும்.

    பாதுகாப்பற்ற உடல் உறவினால் சிறுதுளியில் வரக்கூடிய எய்ட்ஸ் தொற்றை எலிசா முறையில் கண்டுபிடிக்க மூன்று வாரம் முதல் மூன்று மாதம் வரை ஆகலாம்.

    250 மில்லி லிட்டர் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட, ரத்தத்தை பெறும் மற்றவருக்கு ஒருசில நாட்களிலேயே எச்.ஐ.வி. முதல் நிலையான குறுகிய கால ரத்தக்கூறு மாற்று நிலை ஏற்படக்கூடும். சாத்தூர் பெண்ணுக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் ஏற்றப்பட்டு உள்ளது. வீட்டுக்குச் சென்ற சில நாட்களிலேயே அவர் கடுமையான காய்ச்சலுடன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காய்ச்சல் எச்.ஐ.வி.யின் அறிகுறி. பரிசோதனையின் போது எச்.ஐ.வி. தொற்று இந்த பெண்ணுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவனமான உரிய சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ரத்தம்தான் பாலாக சுரக்கிறது. எச்.ஐ.வி. கிருமி தொற்றுக்கு ஆளாகி இருக்கும் அந்தப் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு 30 சதவீதமும், பிரசவத்தின் போது 50 சதவீதமும், தாய்ப்பால் கொடுக்கும்போது 15 சதவீதமும் குழந்தையை பாதிக்கும்.

    அந்த பெண்ணுக்கு நிச்சயமாக தொற்றுக்கு பின் தர வேண்டிய தடுப்புபடி எச்.ஐ.வி. கூட்டு மருந்து ஆரம்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். பொதுவாக இது நான்கு வாரங்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால் ஆபத்தான நிகழ்வுக்கு பின் மூன்று நாட்களுக்குள் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனவே இந்த பெண்ணுக்கு மற்ற எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்துள்ள கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பிரவச காலம் வரை நீடிக்கப்பட வேண்டும்.



    இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் பிறக்க இருக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. தொற்று முழுவதுமாக தடுக்கப்படுவது சாத்தியமாகும். அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் பார்க்கப்பட வேண்டும். பிறந்த உடனே குழந்தைக்கு நிவரம்பின் சிரப் அளிப்பதன் மூலம் எஞ்சிய வாய்ப்பும் முற்றிலுமாக தடுக்கப்படும்.

    என்றாலும் தொடர்ந்து தாய்பாலின் மூலம் எச்.ஐ.வி. தொற்று வரும் வாய்ப்பு 10 சதவீதம் இருப்பதால், இதனைக் கருத்தில் கொண்டு தாய்க்கு வைரஸ் எண்ணிக்கை செய்யப்பட்டு ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும். தாயும், குழந்தையும் தொடர்ந்து ஆறு மாதம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியதிருக்கும். எச்.ஐ.வி. நோய் தொடக்க காலத்தில் மருந்து எதுவும் இல்லாததால் கொடிய உயிர்கொல்லி நோயாக கருதப்பட்டது. தற்போது ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்று எச்.ஐ.வி.யையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். எச்.ஐ.வி. தொற்றுக் கிருமிகள் பாதிக்கப்பட்டவர்கள் முறையான கூட்டு மருந்துகளை உட்கொள்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்க முடியும்

    மன உளைச்சலுடன் இருக்கும் சாத்தூர் பெண்ணுக்கு நம்பிக்கை தரக்கூடிய உளவியல் ஆலோசனைகளை கூற வேண்டும். எச்.ஐ.வி. நோயை கட்டுப்படுத்த மருந்து இருக்கிறது என்று அவரை நம்பும்படி செய்ய வேண்டும்.

    இன்று கிராம மக்களும், படித்தவர்களும், அறியாமையால் ரத்த சோகையாக இருந்தால் ரத்தம் ஏற்றுங்கள் என்று சொல்கிறார்கள். இது தவறு. மருத்துவர்கள் ரத்த சோகையை நீக்க தேவையான சத்துணவு உணவுகளையும், மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்தும்படி பரிந்துரை செய்கின்றனர். ஆனால் சிலர் ரத்தம் ஏற்றிக்கொள்கின்றனர். இவ்வாறு ரத்தம் ஏற்றிக்கொள்வதால் பல நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன.

    தேவையான போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை, சாலை விபத்து, அதிக உதிரப் போக்கு, அணுக்கள் குறைபாடு உள்ள நிலையில் தங்களுக்கு தேவையான அளவு ரத்தத்தை முன்கூட்டியே முறையாக பரிசோதனை செய்து கொடுக்கப்பட்ட ரத்தத்தையே பயன்படுத்துவார்கள்.

    பெண்கள் கருவுற்றவுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் ரத்த சோதனை மறுக்காமல் முறையாக செய்துகொள்ள வேண்டும்.

    ரத்த சோதனையின் போது இரும்பு சத்து மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன. அதை அவர்கள் முறையாக சாப்பிடுகிறார்களா என்று ஊழியர்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று கண்காணித்து உரிய ஆலோசனைகள் வழங்குகிறார்கள். இதனால் ரத்தம் ஏற்றப்படுவது குறைவாகவே உள்ளது. இன்று பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எச்.ஐ.வி. தொற்று பாதிக்கப்பட்டவர்களை அழைத்து மருத்துவ உதவிகளையும் மன நல ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

    சாத்தூர் பெண்ணுக்கு நேர்ந்த நிகழ்வு அனைவரின் மனதையும் நெகிழச் செய்யும் நிகழ்வு. இது மருத்துவத்துறைக்கும், பொதுமக்களுக்கும் பாடமாக அமைந்து, மற்றொரு இதுமாதிரியான நிகழ்வு நடக்காதிருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

    அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் தங்களுக்கு ஒரு பெரிய சமுதாய பொறுப்பு இருக்கிறது என்பதை முதலில் உணர வேண்டும். சிறந்த உயிர் காப்பு மருந்தாக திகழும் ரத்தமேற்றுதல் பக்க விளைவுகள் கொண்ட ஒரு அபாயகரமான மருந்தாகவும் நிகழக்கூடும் என்பதை மறக்கக்கூடாது. இதில் மனித தவறுகளுக்கு துளியளவும் இடமில்லை என்பதை ரத்த வங்கிகளில் பணிபுரியும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். ரத்த வங்கியில் தானம் செய்ய வரும் உன்னத கொடையாளி நுழையும் தருணத்தில் இருந்து, ரத்தப்பை வெளியே செல்லும் வரை கடைபிடிக்க வேண்டிய முறைகள் அனைவராலும், அனைத்து நேரங்களிலும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். பிறர் நலனுக்காக தன் நலனை பேணி காக்கும் தன்னார்வ ரத்த கொடையாளிகள் ஊக்குவித்து அதிகரிக்க வேண்டும்.

    ரத்தம் ஏற்றுவது கடைசி ஆயுதமாக அனைத்து மருத்துவர்களும் பயன்படுத்த வேண்டும். மாற்று வழிகளை முதலில் செய்ய வேண்டும். அவசியமாக தேவைப்படும் போது, முழு ரத்தம் கேட்காது அந்தந்த ரத்த கூறுகளை மட்டும் கேட்க வேண்டும். ரத்தம் செலுத்தும்போது ஒரு மருத்துவ உதவியாளர் அருகில் இருக்க வேண்டும்.

    ரத்த வங்கி ஒழுங்கு முறைகள் எழுத்திலும், செயலிலும் நடைமுறைப்படுத்தப்படுவதே இம்மாதிரியான நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உதவும்.

    டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன்,
    முன்னாள் துணை இயக்குனர்,
    தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்.
    கர்ப்பப்பை இல்லாதவர்கள் அல்லது குழந்தையைச் சுமக்கும் உடற்தகுதி இல்லாதவர்கள் தங்களது கருவை இன்னொருவரின் கர்ப்பப்பைக்குள் வளர்த்தெடுக்கும் முறைதான் வாடகைத்தாய் முறை.
    கர்ப்பப்பை இல்லாதவர்கள் அல்லது குழந்தையைச் சுமக்கும் உடற்தகுதி இல்லாதவர்கள் தங்களது கருவை இன்னொருவரின் கர்ப்பப்பைக்குள் வளர்த்தெடுக்கும் முறைதான் வாடகைத்தாய் முறை. வாடகைத்தாய் முறையின் மருத்துவத் தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

    ‘‘வாடகைத்தாய் முறை மூன்று வகையான பெண்களுக்குத் தேவைப்படுகிறது. உடல்நலப் பிரச்சனை காரணமாக கர்ப்பப்பை அகற்றப்பட்டோ அல்லது வேறு பிற காரணங்களாலோ கர்ப்பப்பை இல்லாத பெண்கள் முதல் வகை. இவர்களுக்கு கர்ப்பப்பை மட்டும்தான் தேவைப்படும். அவர்கள் கருமுட்டையைக் கொண்டிருப்பார்கள். கருமுட்டையும் இல்லாத பெண்கள் இரண்டாவது வகை.

    இச்சூழலில் கருமுட்டையை தானமாகப் பெற்றுதான் கருவை உருவாக்க முடியும். கர்ப்பப்பை, கருமுட்டை இருந்தும் குழந்தை பெறுவதற்கான உடல் வலு இல்லாத பெண்கள் மூன்றாவது வகை. 40 வயதைக் கடந்த பெண்களில் பெரும்பாலானோர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பர். அவர்கள் இந்த வகைக்குள் அடங்குவர். மேற்சொன்ன காரணங்களால் குழந்தைப் பேறு அடைய முடியாத பெண்களுக்கு வாடகைத்தாய் முறை ஒரு வரப்பிரசாதம்.

    பெண்ணின் கருமுட்டையையும், ஆணின் உயிரணுக்களையும் கொண்டு சோதனைக்குழாய் மூலம் கருவை உருவாக்கி அதை வாடகைத்தாயின் கர்ப்பப்பையில் பொருத்தி விடுவதுதான் இத்தொழில்நுட்பம். பெண்ணின் கருமுட்டைகளையும், ஆணின் விந்தணுக்களையும் தானமாகப் பெற்றும் கருவை உருவாக்கலாம். இது போன்று கருமுட்டை, விந்தணுக்களை தானமாகப் பெற்று உருவாக்கப்படும் கருவுக்கும் குழந்தை வேண்டும் தம்பதிக்கும் மரபியல் ரீதியில் எந்தத் தொடர்பும் இருக்காது.



    அத்தம்பதியில் ஆணின் விந்தணு குழந்தைப் பேறுக்குத் தகுதியுடையதாக இருந்தும் பெண்ணிடம் கருமுட்டை இல்லை என்று வைத்துக் கொள்வோம். கருமுட்டையை தானமாகப் பெற்று கருவை உருவாக்கும்போது அந்தக் கருவுக்கும் ஆணுக்கும் மட்டுமே மரபியல் ரீதியிலான தொடர்பு இருக்கும். வாடகைத்தாய் முறை காலத்துக்குத் தேவையான தொழில்நுட்பம் என்றாலும் இதனை உதவி மனப்பான்மையோடுதான் மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் மசோதா பல விதங்களிலும் வரவேற்கத்தக்கதாய் இருக்கிறது. வாடகைத்தாய்க்கும் கருவுக்கும் மரபியல் ரீதியிலாக எந்தத் தொடர்பும் இல்லையே தவிர பிரசவ வலி தொடங்கி தாய்ப்பால் சுரப்பு வரை தாய்மைக்கான எல்லாமும் அவர்களுக்கும் உள்ளது. அவர்கள் சுமக்கும் குழந்தை மீது அவர்களுக்கு பற்றுதல் இருக்கலாம் என்கிற ஐயப்பாடும் உள்ளது.

    இதனால்தான் இதுவரையிலும் குழந்தை வேண்டும் தம்பதிக்கும் வாடகைத்தாய்மார்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லாத படியிலான அமைப்பு இருந்து வருகிறது. தங்கள் கருவைச் சுமந்த வாடகைத்தாய் யார் எனத் தெரிந்தாலோ அல்லது தான் சுமந்த கரு யாரிடம் வளர்கிறது என்று தெரிந்தாலோ எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்னைகள் வர வாய்ப்பிருப்பதாகக் கருதுகின்றனர். எனவே குழந்தை பிறந்தவுடன் வாடகைத்தாயிடமிருந்து, கருவுக்கு சொந்தமான தம்பதிக்கு குழந்தையைக் கொடுத்து விடுவர்.

    கருவைச் சுமக்காத தாய்க்கு தாய்மைக்கான மாற்றங்கள் எதுவும் இருக்காது. ஆகவே அவருக்கு இயற்கையாகவே தாய்ப்பால் சுரப்பு இருக்காது. மருத்துவ ரீதியில் சுரப்பை ஏற்படுத்தலாம் அல்லது தாய்ப்பால் வங்கிகளிலிருந்து தாய்ப்பால் பெற்றுக்கொடுக்கலாம். குறைந்தது 6 மாதங்களுக்காகவாவது தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையானது.
    ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.
    ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.

    மாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.

    நடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.

    ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.

    இளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் இணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது. 
    தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
    பெண்களுக்கு ஆண்களை விட அதிகத் தூக்கம் தேவை. ஆனால், உண்மையில் அவசியமான அளவு தூக்கம் கூட அவர்களுக்குச் சாத்தியப்படுவதில்லை என்றும், தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

    வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் தூக்கம் என்பது கனவுதான். இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பெண்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை குறித்தும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்க்கலாம்.

    இப்போது மட்டுமல்ல… பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்கள் தூங்கும் நேரம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. கணவன் வரும் வரை சாப்பிடாமலும், தூங்காமலும் இருப்பது போன்ற வழக்கங்களால், பெண்கள் தாங்களாகவே தூங்கும் நேரத்தைக் குறைத்து விட்டார்கள். 70 சதவிகித பெண்கள் தங்களுக்குத் தூக்கமின்மை பிரச்சனை இருப்பதையே அறியாமல் இருப்பது தான் வேதனை.

    இன்றைய கால கட்டத்திலோ, பெண்கள் நினைத்தால் கூட தூங்குவதற்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் சூழலில், காலை முதல் இரவு வரை பெண்களுக்கு வேலை ஓய்வதில்லை. என்னதான் கணவர் வீட்டு வேலை களைப் பகிர்ந்து கொண்டாலும், பெண்களுக்குத் தான் கூடுதல் வேலைகள் இருக்கும் என்பது மறுக்க முடியாத நிஜம்.



    வேலைகளை முடித்து விட்டுத் தாமதமாகச் சாப்பிடுவதும், உடனே படுத்து விடுவதும் கூட உடலுக்கு நாம் இழைக்கும் தீங்கு தான். இரவு நேரப் பணி என்பதும் நம் உடலுக்கு ஒவ்வாத விஷயமே. பகலில் உழைப்பதும், இரவில் உறங்குவதுமே இயற்கையின் நியதி. இந்தச் சக்கரத்தை மாற்றி, பகலில் உறங்கி, இரவில் வேலை செய்வதை நம் மனமும் உடலும் ஏற்றுக் கொள்ளாது.

    மேலும், நம்மைத் தூங்க வைக்கும் ’மெலட்டோனின்’ என்கிற ஹார்மோன் இரவில் அதிகம் சுரக்கும். பகலில் நாம் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கான காரணம், இது குறைவாக சுரப்பது தான்! இந்தச் செயல்பாட்டைத் தலை கீழாக மாற்றும் போது, உடல் நலமும் பாதிப்படையும். குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது, அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

    சரியான தூக்கம் கிடைக்காத பெண்கள் காரணமில்லாமல் எரிச்சல் அடைவார்கள். அதன் தொடர்ச்சியாக கோபம், மனச்சோர்வு, நாள் முழுவதும் மந்தமாக உணர்வது, சிறிய பிரச்சனையைக் கூட பெரியதாக நினைத்து கவலைப்படுவது என மனரீதியான சிக்கலுக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை காரணமாக ஆரம்ப கால கட்டத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள்.

    இவை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் மாதவிடாய் குழப்பங்கள் உண்டாகும். குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக அமைந்து விடும். கண்டு கொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டுகளிலேயே ரத்த அழுத்தம், இதய நோய், பக்க வாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும். ஆண்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுகிறார்கள்.

    பெண்களோ, ‘இதெல்லாம் ஒரு விஷயமா’ என்று சர்வ சாதாரணமாகக் கடந்து விடுகிறார்கள். ‘நான் ஆறு மாசமா தலைவலியால அவதிப்படுறேன். அதுக்கு டேப்லெட் எடுத்துகிறேன் டாக்டர்’ என்பவர்களை ஆராய்ந்தால், தூக்கம் தான் பெரும் பிரச்சனையாக இருக்கும். தூக்கமின்மை என்பது, நம் உடல் நலனில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்த வழி.
    ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். தொடக்கத்திலே வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெற வேண்டும்.
    நம் உடலில் பல பகுதிகளுக்கு பிசுபிசுப்புத்தன்மை தேவைப்படுகிறது. பெண்களின் பிறப்பு உறுப்பு எப்போதும் ஈரப்பசை மற்றும் வழவழப்புடன் இருக்க வேண்டும். அதற்காக இந்த பிசுபிசுப்பான வெள்ளைத் திரவம் சுரக்கிறது. இது, பிறப்பு உறுப்பின் தசைப் பகுதி மற்றும் கருப்பையின் வாய் மற்றும் அதன் உட்சுவர்களில் இருந்தும் சிறிதளவு சுரக்கிறது. இதன் சுரப்பு அதிகமாகி விடும்போது அதை வெள்ளைப்படுதல் என்று கூறுகிறோம்.

    சினைப்பையில் இருந்து சினை முட்டை வெளியாகி, கருப்பைக்கு வரும் காலத்திலும், மாத விலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பும், பின்பும், கர்ப்ப காலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். தாம்பத்திய உறவின் போது, பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.

    அறிகுறிகள்…

    நிறம், வாசனை, அளவு போன்றவை மாறுபடுவது முதல் அறிகுறி. பிறப்புறுப்பில் அரிப்பும், உள்ளாடை நனையும் அளவிற்கும், கால்களில் வழியும் அளவிற்கு இருந்தால் அது உடனடியாக கவனிக்கத் தகுந்த அறிகுறியாகும்.

    அதிகரிக்க காரணங்கள்…

    யோனிக் குழாயில் கிருமித் தொற்றே இதற்கு முக்கிய காரணம். ஆண் உறுப்பின் நுனித் தோல், சிறுநீர்துளை, ஆண்மை சுரப்பி ஆகிய இடங்களில், ‘டிரைக் கோமோனஸ் வெஜைனாலிஸ்’ என்ற கிருமிகள் காணப்படுகின்றன. இது ஆண்களிடமிருந்து பெண்களுக்கு தொற்றுகிறது. கிருமிகள் உள்ள ஆண்கள் பயன்படுத்தும் கழிப்பிடம், குளியல் அறை போன்றவைகளை பயன்படுத்தும் திருமணமாகாத பெண்களுக்கும், சிறுமிகளுக்கும்கூட வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.



    கிருமித் தொற்றால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால், சுரப்பு மஞ்சள், இளம் பச்சை நிறத்திலோ காணப்படும். அரிப்பு தோன்றும். சிறுநீர் கழிக்கையில் எரிச்சலும், கடுப்பும் தோன்றும். தாம்பத்திய தொடர்பின் போது எரிச்சல், வலி ஏற்படும். மாத விலக்கின்போது கிருமிகள் அதிகம் பெருகுவதால், யோனிக் குழாயில் நுரைத்த வெண் திரவம் தெரியும். அந்த குழாய் சிவந்து, கருப்பையின் வாய்ப் பகுதியில் செம்புள்ளிகளும் காணப்படும். வெள்ளைப்படுதலை ஏற்படுத்தும் கிருமிகள் பெண்ணிடம் இருந்து ஆணுக்கும் வரும். கருத்தடை மருந்துகள், நுண்ணுயிர் கொல்லி மருந்துகள், ஸ்டீராய்டு மருந்துகள் போன்றவைகளை நீண்ட காலம் பயன்படுத்தி வந்தாலும் வெள்ளைப்படுதல் அதிகமாகும்.

    கண்களுக்கு தெரியாத நுண் கிருமிகள் கருப்பையில் தொற்றிக் கொண்டாலும் வெள்ளைப்படுதல் அதிகரிக்கும். அதனால், பெண்கள் உடலையும், உள்ளாடையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிறுநீர் கழித்த ஒவ்வொரு முறையும் தண்ணீரால் கழுவுவது அவசியம். நுண்கிருமிகளின் வகை மற்றும் தாக்குதலின் தன்மையை பொறுத்து, வெள்ளைப்படுதலின் அளவு அதிகரிக்கும். பால்வினை நோய்களாலும் இந்த பாதிப்பு ஏற்படும்.

    கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அரிப்பு தோன்றாது. ஆனால், அடிக்கடி அடிவயிறு வலிக்கும். கருப்பை புற்றுநோயால் அதிக வெள்ளைப்படுதல் ஏற்பட்டால், அது இளஞ்சிவப்பாக இருக்கும். உள்ளாடையில் திட்டாக கறைபோல் படியும். சில வேளைகளில் உள்ளாடை முழுதும் நனைந்து விடும். அப்போது நாற்றமும் அதிகமாக இருக்கும். ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் அதிக வெள்ளைபடுதல் ஏற்படுவதுண்டு. கருத்தடைக்கு பயன்படுத்தும் சாதனங்கள், அப்பகுதியில் பயன்படுத்தும் களிம்பு போன்றவைகளால் அலர்ஜி ஏற்பட்டு வெள்ளைப்படுவதும் உண்டு. அத்தகைய பொருட்களின் பயன்பாட்டை நிறுத்திவிட்டாலே வெள்ளைப்படுதல் சரியாகி விடும்.

    சாதாரண நிலையிலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அதனால், தொடக்கத்திலே வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெற வேண்டும். நவீன சிகிச்சைகளும், மருந்துகளும் இதற்காக உள்ளன.
    மாடலிங் பெண்களை போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, தீவிரமான உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால், ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவது நிச்சயம்.
    "மாடலிங் பெண்களைப் போல, "ஸ்லிம்’மாகவும், "ட்ரிம்’மாகவும் இருக்க, நான் என்ன செய்யணும்…’ என்று நிறைய, "டீன் ஏஜ்’ பெண்கள், அழகுக் கலைஞர்களிடம் ஆலோசனை கேட்கின்றனர். அவர்களது முதல் தேவை, தன் உடலை மெலிய வைக்க வேண்டும் என்பது தான். "உடல் எடையை குறைக்க, என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன்…’ என்று, சில "டீன் ஏஜ்’ பெண்கள், வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

    அதிக எடை உள்ளவர்கள், கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்ப்பதால், நீரிழிவு, மாரடைப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படாது. மேலும், மாடலிங் பெண்களை போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, தீவிரமான உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால், ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவது நிச்சயம். உயரத்துக்கு பொருத்தம் இல்லாத அளவுக்கு, உடல் எடை அதிகரித்தால் மட்டுமே, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

    உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதற்கு முன், டாக்டரை சந்தித்து, உடல் குண்டாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை அறிய வேண்டும். நிபுணத்துவம் பெற்ற ஒருவரது ஆலோசனையின் பேரில், உணவுக் கட்டுப்பாட்டை துவக்க வேண்டும்.

    ஒருவரது உடல் குண்டாக இருக்கிறது என்றால், அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகமாக சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்யாமை போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கும். இதனை, உணவுக் கட்டுபாடு மூலம் நிவர்த்தி செய்யலாம். ஆனால், பரம்பரை ரீதியாக உடல் குண்டாக இருப்பவர்கள், மெலிவது எளிதான காரியம் அல்ல. தைராய்டு சுரப்பி, அட்ரினல் சுரப்பிகளில், நோய் இருந்தாலும், உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைத்து, கவர்ச்சியான உடல்வாகு பெற வேண்டும் என்று, உணவின் பெரும் பகுதியை வெட்டி, குறைத்து விடக் கூடாது.



    அதுபோல, திடீரென்று உடலை அதிகமாக வருத்தும் உடற்பயிற்சியை துவங்கி விடக்கூடாது. மிதமான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதாலும், கலோரி குறைந்த உணவை சாப்பிடுவதாலும், உடல் எடையை குறைய வைக்கலாம். மூன்று வேளை ஆகாரத்தை என்ன காரணம் கொண்டும் குறைத்து விடக் கூடாது. சத்து நிறைந்த உணவு, காலை நேரத்துக்கு மிகவும் தேவை.

    உணவுக் கட்டுப்பாடு என்றாலே, முழுமையாக உணவை தவிர்ப்பது என்று அர்த்தமல்ல. அதனால், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம். அதே நேரம் பால், மீன், முட்டை போன்றவைகளை உணவில் சேர்க்காதவர்கள், விட்டமின், தாது சத்துகள் நிறைந்த காய்கறி, பழ வகைகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

    உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சாப்பிடும் உணவு, சமச்சீர் சத்துக்கள் நிறைந்ததாக இருப்பது அவசியம். கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், விட்டமின், மினரல் சத்துகள், போதுமான அளவு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சாலட், பழ வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். பழங்களை ஜூஸ் ஆக்காமல், அப்படியே சாப்பிட்டால், நார்ச்சத்து முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.

    மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர், சாப்பிடுவதற்கு முன், சாலட் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தண்ணீர் தன்மை அதிகமுள்ள சாலட்டை, முதலிலேயே சாப்பிட்டால், வயிறு சீக்கிரமாக நிறையும்.

    இதனால், அதிகமான அளவு சாதம் சாப்பிட முடியாது. பாஸ்ட் புட் உணவுகள், குளிர்பானங்கள், இனிப்புகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, சரியான நேரத்திற்கு, சரியான உணவுகளை சரியான முறையில் சாப்பிட வேண்டும்.
    மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை உபயோகிப்பதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய காலகட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை பெண்கள் ஏனோ விரும்புவதில்லை.

    ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் உங்கள் சருமத்தில் காயங்களையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். சிலருக்கு இதனால் இன்பெக்சன் கூட ஏற்பட்டு விடும். இந்த பகுதியில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காணலாம்.

    ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்களில் பிளாஸ்டிக் மெட்டிரியல் உள்ளது.

    இது உராய்வின் போது காயங்களையும், அரிப்பையும் உண்டாக்கும், மேலும் இது பெண் உறுப்பிற்கு செல்லும் காற்றை தடுத்து நிறுத்தி விடும்.

    ரேயான் மெட்டிரியல் மூலம் செய்யப்பட்ட நாப்கின்கள், பெண் உறுப்பின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.

    இதனால் தொற்றுக்களும், புண்களும் உண்டாகும். ஆனால் துணி நாப்கின்களில் இயற்கையான பஞ்சு உபயோகப்படுத்துவதால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.


    கோப்பு படம்

    ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் பஞ்சு, பிளாஸ்டிக் என எந்த மெட்டிரியல்களால் செய்யப்பட்டிருந்தாலும் கூட இதில் சில கெமிக்கல்கள் கலக்கப்பட்டிருக்கும்.

    ஆனால் துணி நெப்கின்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுபவையாகும்.

    துணி நாப்கின்களை நீங்கள் சுகாதாரமாக பயன்படுத்தினால், பல தடவைகள் பயன்படுத்தலாம். பலமுறை உபயோகப்படுத்துவதால் இது சுத்தமாக இருக்குமா என்ற கேள்வி அனைவருக்கு இருப்பது தான்.

    ஆனால் இதனை சுத்தம் செய்வது நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமானதல்ல. நீங்கள் இதனை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, டீ ட்ரீ ஆயில் அல்லது, ஏதேனும் கிருமி நாசினியை கொண்டு சூடான நீரில் சுத்தம் செய்தாலே போதும். இதில் கசிவுகளும் இருக்காது.

    இது உங்களுக்கு தேவையான வண்ணங்கள், டிசைன்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன. எனவே இவற்றை கண்டு நீங்கள் முகம் சுழிக்கமாட்டீர்கள் என்பது மட்டும் உறுதி.

    இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாமல் சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனை அவசியம்.
    மாதவிலக்கு நிற்க சராசரி வயது 52. இதற்கு மேல் நிற்காவிட்டால் அசாதாரணம். அதே மாதிரி 40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல. இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி விரிவாக பார்க்கலாம்.

    ஒரு பெண் அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும். அந்தக்குழந்தை வயதுக்கு வர்றப்ப லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி குறைஞ்சுகிட்டே வரும். பிரசவத்தின் போது இன்னும் குறையும். இப்படி குறைஞ்சிக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க முட்டைகளே இல்லாம போகிறப்ப மாதவிலக்கு வராது.

    அதை தான் மெனோபாஸ்னு சொல்கிறோம். சிலருக்கு சராசரியை விட சீக்கிரமே, அதாவது 40 வயசுக்குள்ளேயே மெனோபாஸ் வரலாம். பரம்பரைத் தன்மை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபியோட விளைவுனு இளவயசு மெனோபாஸூக்கான காரணங்கள் பல இருக்கிறது. இவை தவிர ப்ரீ மெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் பிரச்சனையாலையும் சீக்கிரமே மெனோபாஸ் வரலாம்.

    அதாவது சினைப்பைல சுரக்கிற ஹாமோனுக்கு மூளையிலேர்ந்து சிக்னல் கிடைக்காவிட்டால், 25 வயசுல கூட மெனோபாஸ் வரலாம். மாதவிலக்கு சுழற்சி சரியா இருக்கிறவங்களுக்கு (20 முதல் 25 நாட்கள்) மெனோபாஸ் சீக்கிரமே வரும் 2, 3 மாதத்துக்கு ஒரு முறை வர்றவங்களுக்கு மாதவிலக்கு மூலமா இழக்கப்படற முட்டைகள் குறையறதால, மெனோபாஸூம் லேட் ஆகும்.

    சீக்கிரமே வயசுக்கு வர்றவங்களுக்கு மெனோபாஸ் சீக்கிரமாகவும், வயசு கடந்து வாற்வங்களுக்கு அது தாமதமாகவும் வரும். 50வயசுல மெனோபாஸ் வர்றவங்களுக்கு சரியான கவனிப்பு அவசியம். அப்படியிருக்கிறப்ப இளவயசு மாதவிலக்கு நிற்கும் போது கூடுதல் அக்கறை அவசியம். ஈஸ்ரோஜென் ஹார்மோன் இல்லாம, எலும்புகள் பாதிக்கப்படும்.

    கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்க வேண்டியிருக்கும். பால், தயிர்னு உணவு மூலமா கிடைக்கிற கால்சியம் மட்டும் போதாது. வைட்டமின் கூட கால்சியமும் சேர்த்து எடுத்துக்கணும். இல்லாட்டி எலும்புகள் பஞ்சு மாதிரி மாறி ஆஸ்டியோபொரோசிஸ் வரும். மெனோபாஸ்ல இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படுங்கிறதால அதுக்கான பரிசோதனையும் அவசியம். இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாம சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனையும் அவசியம்.

    கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏன் வருகிறது? அதன் அறிகுறிகள் என்ன?சிகிச்சைகள்? இவை எல்லாவற்றையும் பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்களை பயமுறுத்தும் ஆட்கொல்லி நோய்களில் சமீபகாலமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கே முதலிடம். வயதான பெண்களை அதிகம் பாதித்த இந்த நோய், இப்போது, இளம் பெண்களையும் விட்டு வைப்பதில்லை. கர்ப்பப்பை புற்றுநோயையும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயையும் பல பெண்கள் ஒன்றென நினைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள். இரண்டும் வேறு வேறு. கர்ப்பப்பை புற்றுநோய் என்பது மாதவிடாய் நின்று போன பெண்களையே அதிகம் தாக்குவது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எல்லா வயதுப் பெண்களையும் தாக்கும். இது இந்தியாவில் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.

    எப்படி வருகிறது?

    ஹியூமன் பாப்பிலோமா (சுருக்கமாக ஹெச்.பி.வி.) என்கிற வைரஸின் தாக்குதலே நோய்க்கான காரணம். இந்த வைரஸால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வர, 100 சதவிகிதமும், வல்வர் எனப்படுகிற பிறப்புறுப்பின் வெளியிலுள்ள பகுதியில் புற்றுநோய் வர 40 சதவிகிதமும், பிறப்புறுப்பில் புற்றுநோய் தாக்க 60 முதல் 90 சதவிகிதமும், ஆசனவாய் புற்றுநோய் வர 80 சதவிகிதமும், அந்தரங்க உறுப்பில் மரு தோன்ற 100 சதவிகிதமும், தலை மற்றும் கழுத்தில் புற்றுநோய் வர 12 முதல் 70 சதவிகிதமும் அபாய வாய்ப்புகள் உள்ளன.

    எப்படிப் பார்த்தாலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கே முதலிடம். உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், இந்த வைரஸ் தாக்கும்போது, அது அழிக்கப்பட்டு விடும். எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு, வைரஸ், செல்களை தாக்கி, அதன் விளைவாக புற்றுநோய் உருவெடுக்கிறது.

    யாருக்கு அபாயம் அதிகம்?

    திருமணத்துக்கு முன்பே உடலுறவில் ஈடுபடுவோருக்கு. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் செக்ஸ் உறவு கொள்வோருக்கு. பல பெண்களுடனும் உறவு வைத்திருக்கும் கணவர்களால், மனைவிகளுக்கு.

    அறிகுறிகள்?


    அசாதாரணமான நாற்றத்துடன் வெள்ளைப்படுதல். அது பச்சை நிறம் கலந்தும், அரிப்புடனும் வெளிப்படுதல். அப்படி இருந்தால் அந்தத் தொற்றுக்கு உடனடியாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். அலட்சியப்படுத்தினால், அது பெரிதாகி, நாளடைவில் செல்களை பாதித்து, புற்றுநோய்க்குக் காரணமாகலாம். உறவின் போது ரத்தப்போக்கு உண்டாவது. இரண்டு மாதவிடாய்க்கு இடையில் திடீரென ரத்தப்போக்கு தென்படுதல். அசாதாரணமான வயிற்று வலி.



    என்ன சோதனை?

    திருமணமான எல்லா பெண்களும் கர்ப்பப்பைவாய் புற்றுநோயின் பாதிப்பைக் கண்டறிய ‘பாப் ஸ்மியர்’ சோதனையைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கு முடிந்து 3 நாள்கள் கழித்து இந்தச் சோதனையை மேற்கொள்ளலாம். தட்டையான சிறிய கருவியின் மூலம், கர்ப்பப்பை வாயில் உள்ள செல்களைச் சுரண்டி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி, மைக்ரோஸ்கோப் கருவி மூலம் பார்த்து, புற்றுநோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா எனக் கண்டுபிடிக்கிற சோதனை இது. வலியில்லா சோதனை. 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை கட்டணம்.

    கர்ப்பப்பையின் உடல் பகுதிக்கும், அதன் வாய்க்கும் இடையில் உள்ள பகுதியில்தான் புற்றுநோய்க்குக் காரணமான செல்களில் மாற்றங்கள் தெரியும். அதை ‘லிக்யுட் பேஸ்ட் சைட்டாலஜி’ என்கிற அட்வான்ஸ்டு சோதனையின் மூலம் பாப் ஸ்மியரைவிட துல்லியமாகக் கண்டறியலாம். இதுவும் வலியில்லாதது. இதற்கான செலவு 1,000 முதல் 1,200 ரூபாய் வரை. இந்த இரு சோதனைகளுமே மருத்துவமனையில் தங்க வேண்டிய தேவையின்றி, உடனே வீட்டுக்குத் திரும்பும் அளவுக்கு எளிமையானவை. வருடம் தவறாமல் செய்ய வேண்டியது அவசியம்.

    மெனோபாஸை நெருங்கும் பெண்களுக்கு இந்த நோய்க்கான அபாயம் அதிகம் என்பதால், அவர்கள் வருடாந்திர உடல் பரிசோதனையின் போது இதையும் தவறாமல் செய்ய வேண்டும். தடுக்க முடியுமா? கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வராமலே காக்கக்கூடிய தடுப்பூசி இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, 10 வயது சிறுமிகளுக்கே இந்த ஊசியை போடலாம். அந்தச் சிறுமி பூப்பெய்தியிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

    திருமணமாகாத பெண்களுக்கு, அதாவது, உடலுறவில் ஈடுபடாத பெண்களுக்கு இந்த ஊசியைப் போட்டால், கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் தாக்கத்திலிருந்து 100 சதவிகித பாதுகாப்பு கிடைக்கும். ஒருவேளை அந்த வயதில் போடவில்லை என்றாலும் பிரச்னையில்லை. திருமணமாகி, உறவில் ஈடுபட்ட பெண்களுக்கும், 45 வயது வரை இந்த ஊசியைப் போடலாம். ஆனால், அது 100 சதவிகித பாதுகாப்பைத் தரும் எனச் சொல்வதற்கில்லை. 
    ×