என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • ஆண்கள் முகத்திற்கு ஷேவிங் செய்யும்போது தவறாமல் கிரீம் பயன்படுத்த வேண்டும்.
    • ஆண்கள் பெண்களை போல் முறையான சரும பராமரிப்பு வழிமுறைகளை கையாள்வதில்லை.

    பெண்களுக்கு இணையாக ஆண்கள் பலரும் சரும அழகை பராமரிக்கும் விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் பெண்களை போல் முறையான பராமரிப்பு வழிமுறைகளை கையாள்வதில்லை. ஒருசில விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்து வந்தாலே சரும அழகை மெருகேற்றிக்கொள்ளலாம். முதுமை எட்டிப்பார்ப்பதையும் தள்ளிப்போட்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    * பொதுவாகவே ஆண்கள் எந்தவொரு கிரீமையும் சருமத்தில் தடவுவதற்கு விரும்பமாட்டார்கள். இதனால் சருமம் எளிதில் வறட்சி அடைந்துவிடும். மென்மை தன்மை நீங்கி கடினமானதாகவும் மாறிவிடும். மென்மை அழகை பேணுவதற்கு மாய்ஸ்சுரைசரை தினமும் தடவி வரலாம். இது சரும வறட்சியை போக்கக்கூடியது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்டது.

    * சன்ஸ்கிரின் கிரீம்களை பெண்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. ஆண்களும் பயன்படுத்தலாம். அது சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கக்கூடியது என்பதால் இருபாலரும் தாராளமாக உபயோகிக்கலாம். சன்ஸ்கிரினையும் முறையாக உபயோகிக்க வேண்டும். வெளியே புறப்பட்டு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு சருமத்தில் தடவிக்கொள்வது நல்லது.

    * சன்ஸ்கிரின் போலவே முதுமை தோற்றத்தை தள்ளிப்போடும் 'ஆன்டி ஏஜிங் கிரீம்'களை ஆண்களும் அவசியம் பயன்படுத்த வேண்டும். வைட்டமின் ஏ, சி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட கிரீம்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவாகவே முதுமை தோற்றத்தை எதிர்கொள்வதை தடுத்துவிடலாம்.

    * ஆண்கள் முகத்திற்கு ஷேவிங் செய்யும்போது தவறாமல் கிரீம் பயன்படுத்த வேண்டும். அது சருமத்திற்கு இதமளிக்கும். ஈரப்பதத்தையும் தக்கவைத்துக்கொள்ளும். சிலரோ கிரீம் பயன்படுத்தாமல் ஷேவிங் செய்வார்கள். அது சரும வறட்சிக்கு வழிவகுத்துவிடும். அதனால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். வெட்டு காயங்களை எதிர்கொள்ளவும் நேரிடும். அதனை தவிர்க்க ஷேவிங் கிரீமை தவறாமல் பயன்படுத்த வேண்டும். ஷேவிங் செய்த பிறகு லோஷனையும் தவறாமல் தடவ வேண்டும்.

    * ஆண்களில் பலர் குளிக்கும்போது உடலுக்கு பயன்படுத்தும் சோப்பை முகத்திற்கும் உபயோகிப்பார்கள். அப்படி சோப்பை பயன்படுத்துவது சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கையான எண்ணெய் தன்மையை நீக்கிவிடக்கூடும். அதனால் சருமம் வறட்சியடையும். சரும செல்களும் பாதிப்பை எதிர்கொள்ளும். அதனை தவிர்க்க சோப்புக்கு பதிலாக 'பேஸ் வாஷ்' பயன்படுத்துவது சிறந்தது.

    * பெண்களின் சருமத்தில் மட்டுமே அழுக்குகள், இறந்த செல்கள் படிவதில்லை. ஆண்களின் சருமத்திலும் இத்தகைய பாதிப்புகள் நேரும். அதனால் ஆண்களும் அவ்வப்போது 'ஸ்கரப்' செய்ய வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி முகம் புதுப்பொலிவோடு காட்சியளிக்கும். பால்-பாதாம், தயிர்-லவங்கப்பட்டை, தேங்காய் எண்ணெய்-புரவுன் சுகர், ஓட்ஸ்-கற்றாழை ஜெல் போன்ற பொருட்களை பயன்படுத்தி எளிதாக 'ஸ்கிரப்' செய்யலாம்.

    • சாப்பிடும் உணவுகள் மூலமே சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க முடியும்.
    • சரும துளைகள் பெரியதாக இருப்பவர்கள் சரும பராமரிப்புக்கு தக்காளி உபயோகிக்கலாம்.

    சருமத்தை அழகுபடுத்துவதற்கு பேஷியல், பேஸ் கிரீம்கள், மாய்ஸ் சுரைசர் போன்றவற்றையே அதிகம் பேர் நாடுகிறார்கள். சாப்பிடும் உணவுகள் மூலமே சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க முடியும். அப்படிப்பட்ட உணவுகள் சிலவற்றை பார்ப்போம்.

    வால்நட்: இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், துத்தநாகம், வைட்டமின் ஈ, செலினியம், புரதம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை வால் நட்டை ஆரோக்கியமான உணவு பொருளாக மட்டுமின்றி சருமத்திற்கு அழகு சேர்க்கும் பொருளாக மாற்றுகின்றன. அடிக்கடி பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கு இது சிறந்த சிற்றுண்டியாக கருதப்படுகிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கொலோஜன் உற்பத்திக்கு உதவுகின்றன. மன அழுத்தத்தையும், அதன் அறிகுறிகளையும் கட்டுப்படுத்தி சரும நலனை பேணுவதற்கு உதவுகின்றன. வால்நட்டில் இருக்கும் துத்த நாகம் சருமத்தில் ஏற்படும் வீக்கம், காயங்களை கட்டுப்படுத்த துணை புரிகின்றன.

    அவகேடோ: இதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகின்றன. அவகேடோவில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் பி தொற்றுநோயை எதிர்த்து போராடும் வலிமையை அளிக்கக்கூடியது. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஈ, சருமத்திற்கு பாதுகாவலனாக செயல்படக்கூடியது. இது தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களிடம் இருந்து சருமம் சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் சரும செல்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியவை. சரும சுருக்கங்கள், புள்ளிகள், வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் நுண்ணிய கோடுகள் போன்றவற்றிற்கு எதிராக செயல்பட்டு சருமத்திற்கு புத்துணர்ச்சி தரக்கூடியவை.

    கருப்பு சாக்லேட்: பொதுவாக சாக்லேட் சாப்பிடுவது உடலில் கொழுப்பு சேர வழி வகுக்கும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் ஆரோக்கியமான உணவுகளை பொறுத்தவரை, டார்க் சாக்லேட் இதயத்திற்கும், சருமத்திற்கும் நலம் சேர்க்கக்கூடியது. அதில் கார்டியோபிராக்டிவ் பண்புகள் உள்ளன. அவை பல வகையான நோய்களில் இருந்து இதயத்தை பாதுகாக்கக்கூடியவை. மேலும் டார்க் சாக்லேட், பயோ ஆக்டிவ் சேர்மங்களால் நிரம்பியுள்ளது. இது சருமத்திற்கு உகந்த உணவாக அமைகிறது.மேலும் அதில் உள்ள பிளவோனால்கள் சூரிய கதிர்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் அறிகுறிகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும். சருமத்தின் அடர்த்தியை அதிகரிக்க உதவும்.

    தக்காளி: சரும துளைகள் பெரியதாக இருப்பவர்கள் சரும பராமரிப்புக்கு தக்காளி உபயோகிக்கலாம். இது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். மேலும் தக்காளியில் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அவை சருமத்திற்கு தேவையான சத்துக்களையும், பளபளப்பையும் தரும். தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்வதோடு 'ஸ்க்ரப்பாக' சருமத்திற்கு பயன்படுத்தலாம். தக்காளி, சருமத்திற்கு மேலும் பல நன்மைகளை தரக்கூடியது.

    • மேக்கப் என்பது ஒரு படிப்படியான செய்முறை.
    • மேக்கப்பில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன.

    அழகுக்கு அழகு சேர்ப்பதுதான் 'மேக்கப்'. இதில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன. ஆனாலும், 'மேக்கப்' என்றதும் பவுண்டேஷன் போட்டு, அதற்கு மேல் ரோஸ் பவுடர் போடுவது என்ற தவறான கருத்து பலரிடம் இருக்கிறது. மேக்கப் என்பது ஒரு படிப்படியான செய்முறை. அதன் விளக்கங்களை கீழே காணலாம்:

    1. முதலில் மேக்கப் செட்டிங் ஸ்பிரே அடித்து, சருமத்தை மேக்கப்பிற்குத் தயார் செய்ய வேண்டும்.

    2. அடுத்ததாக மேக்கப்பின் அடிப்படையாக செயல்படும், பிரைமரை (primer) சருமத்தில் பூச வேண்டும். எண்ணெய்பசை கொண்ட சருமத்திற்கு, ஜெல் வடிவிலான பிரைமரையும், உலர்ந்த சருமத்திற்கு, கிரீம் வடிவிலுள்ள பிரைமரையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    3. அதைத் தொடர்ந்து முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், திட்டுகள் உள்ள இடத்தில் கலர் கரெக்டரை பூசி, அதை சருமத்துடன் ஒன்றுமாறு செய்ய வேண்டும்.

    4. பின்பு, கண்ணுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மற்றும் உதட்டை சுற்றியுள்ள கருமை நிறத்தை மறைக்க, கன்சீலரைப் (concealer) பயன்படுத்த வேண்டும். இதையும் பிளண்டர் வைத்து பிளண்ட் செய்வது அவசியம்.

    5. உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷனைத் தேர்வு செய்ய வேண்டும். அதை முகத்தில் புள்ளி புள்ளியாக ஆங்காங்கே வைத்து பூச வேண்டும். முகத்தோடு சேர்த்துக் கழுத்திலும் பூசுவது அவசியம். அப்பொழுதுதான் முகம் தனியாக வித்தியாசமாகத் தெரியாமல் இருக்கும். பவுண்டேஷனைக் கீழ் நோக்கி தடவும் முறையே சரியானது.

    6. இதற்கு அடுத்து, காம்பேக்ட் பவுடரை முகத்தில் பூச வேண்டும். முகத்திலுள்ள சிறுசிறு குழிகள், கோடுகளை மறைக்கவும், சரி செய்து சமன்படுத்தவும் இது உதவும்.

    7. இப்பொழுது கண்களுக்கான மேக்-அப்பில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உடைக்கு ஏற்ற நிறத்தில் 'ஐ ஷேடோ'வைத் தேர்ந்தெடுத்து, அதனுடன் ஒரு தங்க நிற நிறமியைக் கலந்து பூசினால், கண்கள் பளிச்சென இருக்கும்.

    8. காஜலை கண்களுக்குக் கீழேயும், ஐ-லைனரை கண்களுக்கு மேலேயும், கவனமானத் தடவ வேண்டும். அது கரைந்து போகாத மற்றும் வாட்டர் ப்ரூப் ஐ-லைனராக இருந்தால் சிறந்தது.

    9. செயற்கையாக விற்கும் கண் இமை முடிகளை, அதன் பசையுடன் சேர்த்து ஒட்டிக் கொண்டால், கண்களை மேலும் அழகாகக் காட்ட முடியும். இல்லையெனில், மஸ்காரா தடவி இமை முடிகளை அடர்த்தியாக காட்டலாம்.

    10. புருவத்திற்கென தனியாக ஸ்பூலி பிரஷ் (spoolie brush) கிடைக்கிறது. முதலில் அதன் ஒரு பக்கம் இருக்கும் மையை பயன்படுத்தி, புருவத்தின் பார்டரை வரைந்துவிட்டு, மறுபக்கம் உள்ள பிரஷின் மூலம், புருவ முடிகளை ஒழுங்குபடுத்தி பிளண்ட் செய்துகொள்ள வேண்டும்.

    11. முகத்தில் பிளஷ்ஷிற்கு (blush) பதிலாக ஹைலைட்டரை தேவைப்படும் இடங்களில் பூசி மெருகேற்ற வேண்டும்.

    12. கடைசியாக மேக்கப் பிக்ஸர் ஸ்ப்ரே (fixer spray) அடிக்க வேண்டும். இதன் மூலம் பல மணி நேரங்கள் வரை மேக்கப் கலையாமல் பாதுகாக்கலாம்.

    • ஆலிவ் எண்ணெய் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.
    • பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் போன்ற சருமப் பிரச்சினைகள் நீங்கும்.

    சருமத்தின் பொலிவைப் பாதுகாப்பதில் உடலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய்ப்பசை முக்கிய பங்காற்றுகிறது. இதன் ரசாயனத் தன்மையோடு பொருந்தக்கூடியது ஆலிவ் எண்ணெய். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும். பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் போன்ற சருமப் பிரச்சினைகள் நீங்கும்.

    ஆன்டி-ஆக்சிடண்டுகள்:

    ஆலிவ் எண்ணெயில் ஒலிக் அமிலம் மற்றும் ஸ்குவாலீன் போன்ற ஆன்டி-ஆக்சிடண்டுகள் உள்ளன. இவை சருமம் விரைவாக முதிர்ச்சி அடைவதைத் தடுக்கின்றன.

    மாய்ஸ்சுரைசர்: ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் இயற்கையான மாய்ஸ்சுரைசராக செயல்படுகிறது. இது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையைப் பராமரிக்கும். சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும். சருமம் வறண்டுபோகாமல் தடுக்கும்.

    சரும பிரச்சினைகளை நீக்குதல்: ஆலிவ் எண்ணெய் பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஒயிட்ஹெட்ஸ் போன்ற சரும பிரச்சினைகளுக்கு இயற்கையான மருந்தாகும். இதை முகத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்வதன் மூலம், சருமத்துளைகள் திறந்து, மேற்கண்ட பிரச்சினைகள் எளிதில் நீங்கும். வடுக்கள் மற்றும் முகப் பருக்களால் ஏற்படும் அடையாளங்கள் மறையும். சருமம், மாசு மருவின்றி பளபளப்பாகக் காட்சி தரும்.

    ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் வைட்டமின் ஈ, பிளேவனாய்டுகள் மற்றும் பாலிபீனால்கள் சரும செல்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் வைரஸ்கள் போன்ற கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு தோல் பிரச்சினைகளை குணமாக்குகிறது.

    அழற்சியைக் குறைத்தல்: ஆலிவ் எண்ணெய்யின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலின் வெளிப்புற மற்றும் உட்புற அழற்சிகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. அழகு சிகிச்சைக்காக 'எக்ஸ்ட்ரா வெர்ஜின்' ஆலிவ் எண்ணெய் எனும் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் பயன்படுத்துவதே நல்லது.

    • வயது அதிகரிக்கும்போது கொலாஜன் உற்பத்தி குறைந்துவிடும்.
    • முக பயிற்சிகள், உணவு பழக்கத்தை பின்பற்றுவதன் மூலம் சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை தவிர்த்துவிடலாம்.

    30 வயதை கடந்ததுமே சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கக் கூடும். வயதுக்கு ஏற்பவே கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களை சருமம் உற்பத்தி செய்கிறது. அவை சருமத்தை குண்டாகவும், இறுக்கமாகவும், மீள்தன்மையுடனும், இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. வயது அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி குறைந்துவிடும். அதனால் சருமம் மெல்லியதாக மாறிவிடக்கூடும்.

    அதுவே சுருக்கங்கள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடுகிறது. ஒருசில முக பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் விரைவாகவே சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை தவிர்த்துவிடலாம். கண்களைச் சுற்றியுள்ள தோல் முகத்தின் மற்ற பகுதிகளை விட மெல்லியதாக இருப்பதால், முதுமைக்கான அறிகுறிகளான சுருக்கங்களை சட்டென்று வெளிப்படுத்த தொடங்கிவிடும்.

    பயிற்சி 1: தாடை எலும்பை உறுதியாக வைத்துக்கொண்டு, இரு கண்களையும் வலமிருந்து இடமாகவும், பின்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழலவிடவும். கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களைத் தடுக்க உதவும் இந்த பயிற்சியை ஒவ்வொரு திசையிலும் ஐந்து முறை செய்யவும்.

    பயிற்சி 2: இரு விரல்களை கண்களின் உள் மற்றும் வெளிப்புற மூலைகளிலும், மற்ற விரல்களை தாடைப்பகுதியிலும் வைக்கவும். பின்பு கண்களை மூடி இறுக்கமாக அழுத்தவும். இதற்கிடையில், விரல்களை பயன்படுத்தி, கண்களின் வெளிப்புற மூலைகளை வெளிப்புறமாகவும் சற்று மேல்நோக்கியும் அழுத்தி தேய்க்கவும். இந்த நிலையில் சுமார் 5-10 விநாடிகள் வைக்கவும். பின்பு ஓய்வெடுக்கவும். அது போன்று 10 முதல் 25 முறை செய்யவும்.

    மல்லார்ந்த நிலையில் தூங்குவது முக தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க உதவும். சுருக்கங்களும் எட்டிப்பார்க்காது. மென்மையான தலையணையையும் உபயோகிக்கலாம். பட்டு துணியிலான தலையணை சிறந்தது.

    சுருக்கங்களை தடுக்கும் உணவுகள்:

    வெண்ணெய், ஆளிவிதை, சோயாபீன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவு பொருட்கள், கருப்பு எள், பூசணி விதை போன்ற சருமத்தை அழகுபடுத்தும் ஊட்டச்சத்துக்கள், குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் கரும் பச்சை இலை கீரைகள், மிளகுத்தூள், ஆரஞ்சு, பப்பாளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி உள்ளடங்கிய பொருட்கள், ஆலிவ் எண்ணெய், முழு கோதுமை, பாதாம், காலே போன்ற வைட்டமின் ஈ நிரம்பிய பொருட்களை உட்கொள்வதன் மூலம் சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தலாம்.

    சருமத்திற்கான மசாஜ்:

    தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம். கற்றாழை ஜெல்லையும் சருமத்திற்கு உபயோகிக்கலாம். முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் தடவுவதும் சுருக்கங்களை விரட்டக்கூடும். வாழைப்பழத்தை மசித்து சருமத்தில் தடவலாம். வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி 'பேஸ் பேக்'காக பயன் படுத்தலாம். காய்ச்சாத பாலில் பருத்தி பஞ்சுவை முக்கியும் சருமத்தில் பூசி வரலாம்.

    சரும சுருக்கத்தை தடுக்கும் வழிகள்:

    சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள். சருமம் எண்ணெய் பசை தன்மையுடன் இருந்தால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். அது உங்கள் சரும வகைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது குறிப்பாக வெயிலின் ஆதிக்கம் நிலவும் சமயங்களில் மறக்காமல் சன்ஸ்கிரீனை உபயோகியுங்கள். கெட்டுப்போகாத ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை பேணுங்கள். மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தை தவிருங்கள். அடிக்கடி முகம் சுளிப்பது, பற்களை கடிப்பது போன்ற பழக்கங்களை தவிருங்கள்.

    • பாதாம் தோலை கொண்டு இறந்த சரும செல்களை உரித்தெடுக்கலாம்.
    • பாதாம் தோல் வயதான அறிகுறிகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது.

    பாதாம் பருப்பை நிறைய பேர் ஊறவைத்து சாப்பிடுகிறார்கள். ஊறவைத்த பாதாம் ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பது போல அதன் தோலும் சரும பராமரிப்புக்கு பயன்படக்கூடியது.

    பாதாம் தோலை கொண்டு இறந்த சரும செல்களை உரித்தெடுக்கலாம். 10 பாதாம் தோலுடன் மூன்று டீஸ்பூன் பால் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம். சருமத்தின் தன்மையை பொறுத்து தயிரும் கலந்து கொள்ளலாம். இந்த பேஸ்டை முகம் மற்றும் கைகளில் தடவி மசாஜ் செய்யவும். அது சருமத்தில் படர்ந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதுடன், சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவும்.

    பாதாம் தோல் வயதான அறிகுறிகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மையும் கொண்டது. சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. 10 பாதாம் தோலுடன் 2 டீஸ்பூன் பால், சிறிதளவு மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் கலந்து சருமத்தில் பூசலாம். அதனுடன் தேனும் சேர்த்துக்கொள்ளலாம்.

    அது உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவி விடலாம். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் சருமம் பொலிவுடனும், இளமை தோற்றத்துடனும் மிளிரும்.

    உப்பு மற்றும் சர்க்கரை ஸ்கிரப்களில் சருமத்தின் தன்மைக்கேற்பவும், ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும் வகையிலான ‘ஸ்கிரப்’ பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் நன்மையை பெறலாம்.
    கோடை வெயிலின் வெப்பம் காரணமாக வியர்வை அதிகமாக வெளியேறும். இதில் தூசுகள் மற்றும் இறந்த செல்கள் படிவதால் சருமத் துளைகள் அடைத்துக்கொள்ளும். இதனால் சருமம் பொலிவு இழந்து கருத்துப்போகும். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஸ்கிரப்பிங் முறை உதவும்.

    பல வகை ஸ்கிரப்கள் இருந்தாலும், சருமத்தை பளிச்சென வைப்பதற்கு வீட்டிலேயே நாம் செய்யக்கூடிய ‘சர்க்கரை மற்றும் உப்பு கொண்டு தயார் செய்யும் ஸ்கிரப்’ உதவும்.

    சர்க்கரை ஸ்கிரப்:

    சர்க்கரை ஸ்கிரப் சருமம் வறண்டு போவதைத் தடுக்கும். சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தரும். கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, இளமையான தோற்றத்தைக் கொடுக்கும் தன்மை கொண்டது.

    பயன்படுத்தும் முறை:

    சர்க்கரையை, அழகுக்காக பயன்படுத்தும் எந்த வகையான எசன்ஷியல் எண்ணெய்யுடனும் கலந்து பயன்படுத்தலாம். காபித் தூளுடன் கலந்து பயன்படுத்த ஏற்றது. பாதாம் எண்ணெய்யுடன் சர்க்கரை கலந்து பயன்படுத்தும்போது கூடுதல் பலன்களைப் பெற முடியும்.

    அதேசமயம், சர்க்கரை ஸ்கிரப் முகத்திற்கு மட்டுமே பயன்படுத்த ஏற்றது.

    உப்பு ஸ்கிரப்:

    உடம்பு வலியால் தவிப்பவர்கள், குளிக்கும் வெந்நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளிக்கும்போது வலி நீங்கி, உடல் புத்துணர்வு பெறும். இந்த உப்பு ஸ்கிரப்பிங்கை, முகத்திற்கு மட்டுமின்றி உடலின் அனைத்து பாகங்களுக்கும் பயன்படுத்தலாம். உப்பு ஸ்கிரப் வறண்ட சருமத்தின் ஈரப்பதத்தை மீட்டு தருவதுடன், இறந்த செல்களை அகற்றும் தன்மை கொண்டது. இதனால், சருமம் வழுவழுப்பாக மாறும். உடலில், உப்பு ஸ்கிரப்பைப் பயன்படுத்தும் போது, சருமத்தில் ரத்த ஓட்டம் சீராகும்.

    உப்பை காபித் தூளுடன் கலந்து உடலில் ஸ்கிரப்பாகப் பயன்படுத்தும்போது, செல்களுக்கு புத்துயிர் கிடைக்கும். சரும சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றம் பெற முடியும். உப்பு ஸ்கிரப்பிங் செய்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் போது, உடலும், மனதும் புத்துணர்வு பெறும். தக்காளியுடன் கலந்து முகத்தில் தேய்க்கும் போது, முகம் பொலிவுடன் தோற்றமளிக்கும்.

    உப்பு மற்றும் சர்க்கரை ஸ்கிரப்களில் சருமத்தின் தன்மைக்கேற்பவும், ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும் வகையிலான ‘ஸ்கிரப்’ பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் நன்மையை பெறலாம்.
    அன்றாடம் பயன்படுத்தும் எளிமையான பொருட்களை கொண்டு முகப்பொலிவை அதிகரிக்கும் வழிமுறைகளை இங்கு காண்போம்.
    சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் சுற்றுச்சூழல்மாசுபாடு, எதிர்மறையான வாழ்வியல் மாற்றங்கள், முறையற்ற உணவுப்பழக்கம், ஹார்மோன்களின் சீரற்ற சுரப்பு போன்றவை சருமத்தில் பாதிப்பை உண்டாக்குகின்றன. இதன் மூலம் முகத்தில் கரும்புள்ளி, முகப்பரு, தோல் சுருக்கம், சரும நிறம் மாற்றம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவற்றுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண முடியும். அன்றாடம் பயன்படுத்தும் எளிமையான பொருட்களை கொண்டு முகப்பொலிவை அதிகரிக்கும் வழிமுறைகளை இங்கு காண்போம்

    காற்றாழை, புற ஊதாக்கதிர்களை பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாப்பதோடு சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கும் திறன் கொண்டது. ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் சம அளவு தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பொலிவடையும்.

    எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சருமத்தை இளமையாக வைத்திருப்பதற்கு உதவும். இதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் முகத்தில் படர்ந்திருக்கும் கருமையை நீக்கும் திறன் கொண்டது. ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், சம அளவு தயிர் கலநது முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளிச்சிடும். இந்த கலவையை வெயில் பட்டு கருத்த இடங்களில் பூசலாம்.

    2 டீஸ்பூன் முட்டைகோஸ் சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகததில் தடவி சிறிது நேரம் கழித்து நீரால் கழுவி விடலாம். இதன் மூலம் முகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கலாம். மென்மையான பளபளக்கான சருமத்தை பெறலாம்.

    கால் தேக்கரண்டி கசகசா, 3 கிராம்பு, அரை அரை ஜாதிக்காய் இந்த மூன்றையும் சிறிதளவு பால் ஊற்றி அரைக்க வேண்டும். இந்த விழுதை முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் முகப்பருவால் ஏற்பட்ட வடுக்களின் மீது பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 20 நாட்கள் செய்து வந்தால் முகம் பளபளக்கும்.

    குப்பைமேனி இலை சாறு 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி, ரோஜா பன்னீர் அரை தேக்கரண்டி, கற்றாழை சாறு 1 தேக்கரண்டி தேன் கால் தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் ஊறவைத்த பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்கும். முகப்பருக்கள் உண்டாகாது. குப்பைமேனி சருமத்தில் உள்ள சுருக்கத்தை நீக்கி முகத்தை இளமையாக்கும். முகப்பருவால் ஏற்பட்ட தழும்புபளை நீக்கும். குப்பை மேனியை பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திப்பொடி செய்தோ பயன்படுத்தலாம். நாட்டு மருந்து கடைகளிலும் குப்பைமேனி பொடி கிடைக்கும்.
    கோடையில் சூரிய ஒளிக்கதிர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எனவே, உங்கள் தேவைக்கேற்ப நல்ல சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்.
    குளிர் காலத்தில் இருந்து கோடை காலத்திற்கு அடியெடுத்து வைக்கும்போது சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கதகதப்பான கம்பளி போர்வை, துணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு மென்மையான பருத்தி ஆடைகளை தழுவ வேண்டி யிருக்கும். கோடை காலமும்.. சரும அழகும்..!

    சூப்கள் போன்ற சூடான பானங்களுக்கு மாற்றாக பழச்சாறுகள், மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களை அருந்த வேண்டியிருக்கும். ஒரு பருவத்தில் இருந்து மற்றொரு பருவத்திற்கு மாறும்போது சரும பராமரிப்பு முறைகளிலும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் சூரிய ஒளி பல மடங்கு அதிகரித்து, வெப்பநிலை மாறுவது சருமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    குளிர்காலத்தில், கிரீம் கலந்த பேஸ் வாஷ்களை பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்திருக்கலாம். ஆனால் கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வெளிப்படும். அது சருமத்தில் சுரந்து கொண்டே இருக்கும். அதனை போக்குவதற்கு ஜெல் அடிப்படையிலான கிளின்சர்களை தேர்வு செய்யலாம். எனினும் தோல் வகைக்கு ஏற்ப சரும பராமரிப்பு பொருளை தேர்வு செய்ய வேண்டும்.

    தோல் வகை மற்றும் தேவையை பொறுத்தே உபயோகிக்க வேண்டும். கோடைகாலத்தில் கடைப்பிடிக்கக்கூடிய மற்றொரு முக்கியமான விஷயம் முகம் கழுவுவது. சருமத்தில் படிந்திருக்கும் அசுத்தங்களை அகற்றுவதற்கு முகத்தை இரண்டு முறை அவசியம் சுத்தம் செய்ய வேண்டும்.

    குளிர்காலத்தில், ஈரப்பதத்தை சீராக பராமரிக்க கனமான மாய்ஸ்சுரைசர்களை தேர்வு செய்திருப்போம். ஆனால் கோடையில் அது ஒத்துக்கொள்ளாது. ஏனெனில் இந்த சீசனில் அதிகமாக வியர்க்கும். அதனை கவனத்தில் கொள்ளாமல் கிரீம்களை பயன்படுத்தினால் முகப்பருக்கள் ஏற்படலாம். எனவே, கோடை காலத்தில் இலகுவான லோஷன்களுக்கு மாற வேண்டும். இந்த கோடையில் நீங்கள் தேர்வு செய்யக்கூடிய மற்றொரு தோல் பராமரிப்பு பொருள், சீரம் ஆகும். இவை நீர் தன்மை கொண்டவை. சருமத்தில் எண்ணெய் பசை தன்மையையும் உணராதவை. சருமத்துக்குள் நன்றாக ஊடுருவி, தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதற்கு உதவும். மீண்டும், உங்கள் தோல் வகை மற்றும் தேவைக்கு ஏற்ப சீரம்களை தேர்வு செய்ய வேண்டும்.

    கோடை காலம், குளிர் காலம் மட்டுமின்றி அனைத்து பருவங்களிலும் தவறாமல் சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். அதிலும் கோடையில் சூரிய ஒளிக்கதிர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எனவே, உங்கள் தேவைக்கேற்ப நல்ல சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்.

    மேலும் கோடை காலத்தில், மாய்ஸ்சுரைசிங் செய்வதை விட ஜெல் அடிப் படையிலான சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது நல்லது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கோடையில் அதிகமாக வியர்க்கும்போது, சருமத்தில் இருந்து சன்ஸ்கிரீன் அப்புறப்படுத்தப்படலாம். எனவே அதனை அடிக்கடி உபயோகிப்பது நல்லது. அதிலும் வெளி இடங்களுக்கு சென்றால் வழக்கத்தை விட இரண்டு, மூன்று முறை கூடுதலாக தடவலாம்.

    இவை தவிர, உடலில் நீர்ச்சத்தின் அளவை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவற்றுள் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முக்கியமானது. எனவே, சரிவிகித உணவைப் பின்பற்றுங்கள். வானிலைக்கு ஏற்ற லேசான பருத்தி ஆடைகளை அணியுங்கள். மேக்கப்பை பொறுத்தவரை, இந்த பருவத்திற்கு ஏற்ற ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்சுரைசரை தேர்வு செய்யுங்கள்.
    பொடுகு பிரச்சினையை தீர்க்கவும், கூந்தலுக்கு ஊட்டம் கொடுக்கவும் ‘ஹேர் மாஸ்க்’ பயன்படுகிறது. ஒரு சில எளிய ஹேர் மாஸ்க்குகளின் செய்முறை இதோ…
    தலையில் உருவாகும் பூஞ்சைத் தொற்று மற்றும் வறட்சி காரணமாக பொடுகு ஏற்படுகிறது. இது தலையில் அரிப்பு, முகத்தில் பருக்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. எண்ணெய் வடியும் சருமம், வறண்ட சருமம், சுத்தமில்லாத தலைமுடி, தலைக்கு பயன்படுத்தும் தரம் குறைந்த பராமரிப்புப் பொருட்கள், மன இறுக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பல காரணங்களால் பொடுகு ஏற்படும். இந்தப் பிரச்சினையை தீர்க்கவும், கூந்தலுக்கு ஊட்டம் கொடுக்கவும் ‘ஹேர் மாஸ்க்’ பயன்படுகிறது. ஒரு சில எளிய ஹேர் மாஸ்க்குகளின் செய்முறை இதோ…

    செம்பருத்தி ஹேர் மாஸ்க்

    செம்பருத்தி இலை அல்லது பூ - 4
    தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
    தண்ணீர் சேர்த்து செம்பருத்தி இலை அல்லது பூக்களை நன்றாக அரைக்கவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு மசாஜ் செய்யவும். 2 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்கவும்.

    வெந்தயம் மாஸ்க்

    வெந்தயம் - ¼ தேக்கரண்டி
    தயிர் - 1 தேக்கரண்டி
    நெல்லிக்காய் - 1
    கறிவேப்பிலை - 1 கைப்பிடி அளவு
    வெந்தயம், தயிர், நெல்லிக்காய், கறிவேப்பிலை அனைத்தையும் தண்ணீர் சேர்த்து அரைத்து இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் தலையில் தடவி, 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.

    எலுமிச்சை மாஸ்க்

    தேங்காய் எண்ணெய் - ½ கப்
    எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி
    வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு கலந்து, தலையில் தடவ வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்கவும்.

    கொத்தமல்லி மாஸ்க்

    கொத்தமல்லி இலை - 1 கப்
    விளக்கெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
    கொத்தமல்லியை அரைத்து, அதில் விளக்கெண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும். அதைத் தலையில் தடவி 15 நிமிடம் ஊற வைத்துக் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    தயிர் மாஸ்க்

    தயிர் - 1 கப்
    எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி
    தயிரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தலையில் தடவி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்கவும்.

    வேப்பிலை மாஸ்க்

    வேப்பிலை - 1 கைப்பிடி
    மிளகுத் தூள் - 1 சிட்டிகை
    வெந்தயப் பொடி - ¼ தேக்கரண்டி
    கற்பூரம் - ¼ தேக்கரண்டி
    எலுமிச்சம் பழச்சாறு - ¼ தேக்கரண்டி

    வேப்பிலையை அரைத்து அதில் மிளகுத்தூள், வெந்தயப் பொடி, கற்பூரம், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலக்க வேண்டும். இந்தக் கலவையைத் தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டும்.
    இயற்கையான அழகை மேம்படுத்துவதற்கு சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் போதும். அதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள்...
    மணிக்கணக்கில் கண்ணாடி முன் நின்று ஒப்பனை செய்து கொள்ளும் முகங்களை விட, இயல்பான அழகோடு இருக்கும் முகங்கள் பல நேரங்களில் மிக அழகானதாகத் தெரியும். இயற்கையான அழகை மேம்படுத்துவதற்கு சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் போதும். அதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள்...

    நல்ல உணவுப் பழக்கம்: தினசரி உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆளி விதை, அக்ரூட் பருப்பு போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் மற்றும் ஆரஞ்சு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணி போன்ற வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் அவசியம். முட்டை, கோழிக்கறி, கிட்னி பீன்ஸ், பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் பாலாடைக்கட்டி போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது, உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும்.

    நிம்மதியான தூக்கம்: இரவில் நல்ல தூக்கம் முக்கியமானது. தூங்கும்போது தோல் புதிய கொலாஜனை உற்பத்தி செய்கிறது. உங்கள் செல்போனை சார்ஜ் செய்வது போல், உடல் தானாகவே சார்ஜ் செய்ய வேண்டும். இதற்கு நல்ல உறக்கம் அவசியம். இதன் மூலம் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மறையும்.

    பயன்படுத்தும் பொருட்கள்: நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் 60 சதவீதத்தை உங்கள் சருமம் உறிஞ்சிக் கொள்கிறது. எனவே சருமப் பராமரிப்பு, முடிப் பராமரிப்புக்குப் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டவையாக இருப்பது நல்லது. சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய அல்லது தலைமுடியை உலர வைக்கும் பாரபென்கள், பெட்ரோகெமிக்கல்கள் மற்றும் சல்பேட்டுகள் உள்ள பொருட்களில் இருந்து விலகி இருங்கள். இயற்கை பொருட்களைக் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

    உடற்பயிற்சி அவசியம்: ஓட்டப் பயிற்சி, யோகா, நீச்சல் போன்ற ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள். உடற்பயிற்சி சருமத்திற்கு நன்மை செய்வதோடு, உங்கள் மனநிலையை மேம்படுத்தும். வாரம் 3 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், நச்சுகளை அகற்றும், சருமத்திற்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கும், மன அழுத்தத்தைக் குறைக்கும். முழு உடலையும் அமைதிப்படுத்தும் எண்டோர்பின்களைத் தூண்டும்.

    சரும பராமரிப்புப் பழக்கம் சருமத்தை தூய்மையாக்குவது, டோனிங் செய்தல் மற்றும் ஈரப்பதமூட்டுதல் போன்ற பழக்கங்கள் ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியம். இந்த முறையைப் பின்பற்ற நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளை உங்கள் தோலின் தன்மையைப் பொறுத்து, தேர்ந்தெடுக்க வேண்டும். காலை அல்லது இரவில் சருமப் பராமரிப்புப் பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

    இறந்த செல்களை நீக்குங்கள்: இறந்த செல்களை நீக்குவது பளபளப்பான சருமத்திற்கு முக்கியமானதாகும். இது புதிய மற்றும் ஆரோக்கியமான செல்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உளுந்து மாவு அல்லது காபி தூள் ஸ்கிரப் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி சருமத்தில் படியும் இறந்த செல்களை நீக்கலாம்.
    கோடைகாலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளைத் தீர்க்க மாம்பழத்தை பயன்படுத்தலாம். அவ்வாறு, சருமத்துக்கு நன்மை தரும் மாம்பழ பேஸ் மாஸ்க்குகளை வீட்டிலேயே தயாரிப்பதைப் பற்றி இங்கே காணலாம்.
    கோடைகாலத்தின் வரவுகளில் ஒன்று மாம்பழம். இதில் மாம்பழச்சாறு, ஜாம், ஐஸ்கிரீம், அல்வா, பர்பி என்று பலவிதமான உணவுகள் தயாரித்து ருசித்திருப்பீர்கள். சாப்பிடுவதற்கு சுவையான மாம்பழங்கள் உங்கள் சருமத்திற்கும் சிறந்தது. முகப்பருக்கள், சருமம் கருமை அடைதல் என கோடைகாலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளைத் தீர்க்க மாம்பழத்தை பயன்படுத்தலாம். அவ்வாறு, சருமத்துக்கு நன்மை தரும் மாம்பழ பேஸ் மாஸ்க்குகளை வீட்டிலேயே தயாரிப்பதைப் பற்றி இங்கே காணலாம்.

    முகப்பருவை நீக்குவதற்கு: மாம்பழக் கூழ் சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசையினைக் குறைத்து, முகப்பருக்கள் உண்டாகாமல் தடுக்கிறது. மாம்பழ பேஸ் மாஸ்க்கினைத் தயார் செய்வதற்கு ஒரு தேக்கரண்டி அரைத்த மாம்பழத் துடன், சம அளவு தயிர் மற்றும் தேன் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர வைக்கவும். பின்னர் கழுவினால், சருமம் எண்ணெய்ப் பிசுக்கு இல்லாமல் மிருதுவாகவும், பொலிவாகவும் மாறிவிடும். முகக் கருமைக்கான தீர்வுவெயில் காரணமாக சருமத்தில் ஏற்படும் கருமையை போக்குவதற்கு, பலவகையான கிரீம்களை உபயோகித்தும் பலன் அடையாதவர்கள் மாம்பழத்தை பயன்படுத்தலாம்.
    1 தேக்கரண்டி மாம்பழக் கூழ், 2 தேக்கரண்டி கடலை மாவு, 2 தேக்கரண்டி அரைத்த பாதாம் மற்றும் 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கெட்டியாக மாறும் வரை கலந்து கொள்ளவும். பின்னர், இந்தக் கலவையை முகத்திலும், வெயிலால் பாதிப்படைந்த பகுதிகளிலும் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பின்பு, குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவவும். வாரத்திற்கு மூன்று முறை இந்த பேஸ் மாஸ்க்கை உபயோகித்தால் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.

    தோலின் இளமையைப் பாதுகாப்பதற்கு: மாம்பழத்தில் உள்ள வைட்டமின் பி, வயது முதிர்வினால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி, 'கொலாஜென்' உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, தோலின் இளமைத் தன்மையைப் பராமரிக்கிறது. இதற்கான பேஸ் மாஸ்க்கினை தயாரிப்பதற்கு மாம்பழம் மற்றும் முட்டையினை பயன்படுத்தலாம். இவை சருமத்தை இறுக்கமாக்கி வயதான தோற்றத்தைத் தடுக்கும். 2 முட்டையின் வெள்ளைக் கருவினைப் பிரித்தெடுத்து, நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்துக் கிளறவும். இந்தக் கலவையை முகம் முழுவதும் தடவவும். இந்த பேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்தும்போது கண்களுக்கு மிக அருகில் தடவுவதை தவிர்க்கவும். முகத்தில் பேஸ்பேக் உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    சரும வறட்சியினைத் தடுப்பதற்கு: மாம்பழ பேஸ் மாஸ்க் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைப்பதற்கு உதவும். இதற்காக 1 தேக்கரண்டி அவகேடா பழக்கூழுடன், 1 தேக்கரண்டி மாம்பழக்கூழ் மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி, உலர்ந்த பின்பு கழுவவும்.
    ×